பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ரூ.60 கோடி மோசடி... போலி நிதி நிறுவனம் மதுரையில் கைவரிசை! உஷார் மக்களே..!

புகார் அளித்திருப்பவர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
புகார் அளித்திருப்பவர்கள்...

F R A U D C O M P A Y

கடந்த காலங்களில் பி.ஏ.சி.எல், எம்.ஆர்.டி.டி போல பல பெயர்களில் செயல்பட்ட போலி நிதி நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாயை சுருட்டிக்கொண்டு போனபின், பணத்தை இழந்த மக்கள் காவல் துறையில் புகார் தந்துவிட்டு அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த புதிய போலி நிதி நிறுவனம் ஒன்றின் மீது புகார் எழுந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் அதிக வருமானத்துக்காக ரூ.60 கோடிக்குமேல் இந்த மோசடி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமார்ந்தவர்கள், மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் கொடுக்க வந்தனர். தாங்கள் ஏமார்ந்த விதத்தை அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லி அழுதுவிட்டுச் சென்றனர்.

குறைந்தபட்சம் ரூ.2,500 முதல் ரூ.1 லட்சம் வரை டெபாசிட் செய்தால் மாதம்தோறும் 20% வட்டியும் நான்கு மாத முடிவில் கட்டிய தொகை இரட்டிப்பாகவும் தருவதாக அசத்தலான விளம்பரம் செய்தது ‘ப்ளை வேர்ல்ட் ஷேர்ஸ் பிரைவேட் லிமிடெட்.’ ஆனால், ஓரிரு மாதங்களுக்கு மட்டும் வட்டியைத் தந்துவிட்டு, இப்போது திடீரென காணாமல் போய்விட்டது இந்த நிறுவனம்.

புகார் அளித்திருப்பவர்கள்...
புகார் அளித்திருப்பவர்கள்...

இந்த நிறுவனத்தில் பணத்தைப் போட்ட திருச்சியைச் சேர்ந்த கங்காதரனிடம் பேசினோம். “திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆனந்தி, மனோஜ்குமார், மதுரையைச் சேர்ந்த சையது பாரூக் ஆகியோர் சேர்ந்து ‘ப்ளை வேர்ல்ட் ஷேர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை மதுரை காளவாசலில் நடத்திவந்தார்கள். ஆனந்தியும் மனோஜ்குமாரும் எனக்குத் தெரியும் என்பதால், என்னை அணுகி தங்களுடைய ஷேர் டிரேடிங் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் மாதம்தோறும் நல்ல வட்டி தருவதாகவும், நான்கு மாதத்துக்குள் டெபாசிட் செய்த தொகையை இரண்டு மடங்காகத் திருப்பித் தருவதாகவும் பேசி, என்னை ஒப்புக்கொள்ள வைத்தார்கள். அவர்கள் பேசிய விதம், அவர்கள் வைத்திருந்த திட்டம் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது. எல்லாப் பணத்தையும் பங்கு, பத்திரங்களில் முதலீடு செய்கிறோம் என்பதால், அவர்களின் விளம்பரத்தை நம்பி, அவர்களின் பரோடா வங்கிக் கணக்கில் என் டெபாசிட்டை செலுத்தினேன். நான் பணம் செலுத்தியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

மேலும், என் உறவினர், நண்பர் களிடமும் பேசி முதலீடு செய்யவைத்தேன். இப்படி என் மூலம் சங்கிலித்தொடர் போல 2,000 பேர் ரூ.4 கோடி முதலீடு செய்தனர்.

இந்த முதலீட்டைப் பெற்றுக்கொண்டு ஆரம்பத்தில் சில மாதங்கள் மட்டும் வட்டி தந்தவர்கள், அதன்பின் பணம் தருவதை நிறுத்திவிட்டார்கள். இதனால் என் மூலம் பணம் செலுத்தியவர்கள் என்னிடம் கேட்க, வட்டிதான் வரவில்லை. முதலையாவது வாங்கிக் கொடுத்து விடுவோம் என அவர்களின் அலுவலகத்துக்கு நேரில் சென்றபோது பூட்டப் பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட ஆனந்தி, மனோஜ்குமாரை போனில் தொடர்புகொண்டு கேட்டதற்கு விரைவில் பணம் தருவதாகச் சொன்னார்கள்.

ஆனால், பல மாதங்கள் கடந்தும் பணம் தராமல் ஏமாற்று கிறார்கள். இப்போது அவர்களைத் தொடர்புகொள்ளவும் முடிய வில்லை. என்னையும், என் மூலம் முதலீடு செய்தவர்களையும் நன்றாக ஏமாற்றிவிட்டனர். பணம் செலுத்தியவர்கள் என்னை நெருக்குகிறார்கள். பல வகையில் நிம்மதி இழந்து வாழ்கிறேன். காவல் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப பெற்றுத் தர வேண்டும்’’ என்றார்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் பேசினோம். “கடந்த ஜூலை மாதம் இந்த கம்பெனியை ஸ்டார்ட் பணணாங்க. என் போன்றவர்கள் டெபாசிட் கலெக்ட் பண்ணி தந்தோம். டிசம்பர் வரைக்கும் கம்பெனி செயல்பட்டது. அப்புறம் வட்டி தரவில்லை. கேட்டதற்கு, வரிப் பிரச்னை என்றார்கள். அப்புறம் ஆபீஸை மூடிட்டாங்க. போன் செய்தால், ஸ்விட்ச்ஆப்னு வந்தது. இன்ஷியல் பேமன்டை யாவது வாங்கிடலாம்னு பார்த்தோம். கடந்த மே மாதம் கட்டிய பணத்தைத் தந்துவிடு வதாகச் சொன்னார்கள். ஆனால், தரவில்லை. அதனால், மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் கடந்த மே 21-ல் புகார் கொடுத்தோம்” என்றார்.

புகார் கொடுக்க வந்தவர்கள் ஒவ்வொரு வரும் 7 கோடி, 13 கோடி என்று பணம் போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து இந்த போலி நிறுவனத்தில் முதலீடு செய்திருக் கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் ஜேம்ஸ், ராஜ்குமார், “இந்த நிறுவனத்தை நடத்தியவர்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இப்படி ஏமாற்றியிருக்கிறார்கள். அவர்கள் வேறு பகுதிகளில் உள்ள மக்களையும் ஏமாற் றாமல் தடுக்க காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களுக்கு பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்” என்றனர்.

ஏற்கெனவே பல போலி நிதி நிறுவன மோசடிகளை விசாரித்துவரும் மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவினர் தற்போது இந்தப் புகாரையும் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மோசடி யாளர்களைத் தேடி வருகிறார்கள்!

படம்: என்.ஜி.மணிகண்டன்

தொடரும் திருச்சி எல்ஃபின் மோசடி..!

தற்போது, திருச்சி பிராட்டியூரைச் சேர்ந்த பொறியாளர் மிதுன் சமேஷ் என்பவர், திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதில், ‘எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்தால், பத்து மாதத்துக்குள் மூன்று மடங்கு பணம் திருப்பித் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்கள். இதை நம்பி, இந்த நிறுவனத்தில் கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை பல்வேறு கட்டங்களாக ரூ.72,82,500 முதலீடு செய்ததுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் மொத்தம் ரூ.2.18 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதை இரண்டு மடங்காக தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, அதற்குரிய செக்கையும் (காசோலை) கொடுத்திருக்கிறார்கள். அதை வங்கியில் செலுத்தச் சென்றபோது, அந்தக் கணக்கில் பணம் இல்லை என்று சொல்லப்பட்டது. பின்பு, நேரடியாகச் சென்று கேட்டபோது, பலமுறை அலைக்கழித்து, திரும்பத் தராமல் மோசடி செய்துவிட்டனர். கடந்த மாதம் சென்று பணத்தைக் கேட்டபோது, அடியாள்களை வைத்து அடித்ததுடன் கொலைமிரட்டலும் விடுத்தார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், சிவகாசியைச் சேர்ந்த ஜெயலட்சுமி, ரூ.3.75 கோடி பணத்தை மோசடி செய்ததாக எல்ஃபின் அலுவலகத்தின் முன்பு மூன்று நாள்களாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்பு, அந்த நிறுவனத்தின் தரப்பில் சமரசம் பேசியதுடன், ரூ.1 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு, காவல் நிலையத்தில் புகார் தராமல் ஊருக்குச் சென்றிருக்கிறார். இதுவரையிலும் எல்ஃபின் சம்பந்தமாகத் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவுகளில் 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

- எம்.திலீபன்