தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

‘டபுளாகும் முதலீடு... சொந்தமாகும் மனை...’ அன்று பி.ஏ.சி.எல்... இன்று நியோமாக்ஸ்? உஷார் மக்களே உஷார்!

உஷார் மக்களே...
பிரீமியம் ஸ்டோரி
News
உஷார் மக்களே...

கட்டுன பணம் மூணு, நாலு வருஷத்துல வட்டியா திரும்ப வந்துடுது. அதுபோக, நம்ம பேர்ல இருக்கிற மனையை வேணுமின்னா வித்து பணமாக்கலாம் அல்லது நம்மளே வச்சுக்கலாம்.

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குமுன் வெட்டவெளிச்சமானது பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் மோசடி லீலை. ‘‘மாதம்தோறும் ஆயிரம், ரெண்டாயிரம் என்று கட்டுங்கள். உங்களுக்கே உங்களுக்கென ஒரு மனை தருகிறோம்’’ என்று பி.ஏ.சி.எல் நிறுவனம் சொல்ல, தமிழகம் முழுக்க இருக்கும் பல்லா யிரம் ஏஜென்டுகள், ஒன்றுமறியா அப்பாவி மக்களிடம் இருந்து பணம் வாங்கித் தந்தார்கள்.

பாலைவனத்தில் வாங்கிய நிலம்...

ஏஜென்டுகள் தந்த பணத்தில் மனை வாங்கியதா அந்த நிறுவனம்? வாங்கியது, தமிழ் நாட்டில் அல்ல. சஹாரா பாலைவனத்தில்..! அங்கே மனை தந்தால், யார் போய் வீடு கட்டி வசிப்பார்கள்?

இப்படி பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் தகிடுதத் தங்கள் அம்பலமாக, நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் ‘எஸ்கேப்’ ஆனார்கள். இந்த நிறுவனத்தில் போட்ட பணம் அத்தனையும் அப்படியே ‘லாக்’-ஆனது. இந்த நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தையும் பங்குச் சந்தை கட்டுப்பாடு வாரியமான ‘செபி’ எடுத்துக் கொண்டது. அந்த சொத்துகளை விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்துவருகிறது செபி. மக்கள் பணம் மொத்தம் ரூ.45,000 கோடி இந்த ஒரு நிறுவனத்தின் மூலம் ‘ஸ்வாகா’ ஆகியிருக்கிறது. ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த நிறுவனத்தில் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற மக்கள் படாதபாடுபட்டு வருகிறார்கள்.

ஆனால், வருத்தம் தரும் விஷயம் என்னவெனில், பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்ததில் இருந்து மக்கள் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். காரணம், பி.ஏ.சி.எல் நிறுவனத்தைப் போலவே, மக்களிடம் இருந்து பணம் வசூலித்து ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து, அதன் மூலம் நல்ல லாபம் தருவதாகச் சொல்லி வருகிறது மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நியோமாக்ஸ் (Neomax) நிறுவனம்.

‘டபுளாகும் முதலீடு... சொந்தமாகும் மனை...’ அன்று பி.ஏ.சி.எல்... இன்று நியோமாக்ஸ்? உஷார் மக்களே உஷார்!

ஸ்கூல், காலேஜ், சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால்...

இந்த நிறுவனத்தின் பிசினஸ் பிளான் அதாவது, மக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப் போடும் தூண்டில் இதுதான்.

‘‘அஞ்சு லட்சமோ, பத்து லட்சமோ எங்ககிட்ட போடுங்க. நீங்க கட்ற பணத்துக்கு ஏத்த மாதிரி ஒரு பிளாட்டை உங்க பேர்ல ரிஜிஸ்டர் செஞ்சு கொடுத்துடுறோம். நீங்க தந்த பணத்துக்கு ஆண்டுக்கு 24% வட்டி தந்துடுவோம். அது மூணு, நாலு வருஷத்துல டபுள் ஆயிடும். அதுக்குப் பிறகு உங்க பேர்ல இருக்கிற மனையை நீங்களே எடுத்துக்கலாம்; அல்லது அந்த மனையை வேற யாருக்காவது வித்து பணமா வாங்கிக்கலாம்.

உங்களுக்கு வாங்கித் தந்த பிளாட்டுக்குப் பக்கத்துல ஸ்கூல், காலேஜ், சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால், ஐ.டி பார்க் அப்படி, இப்படின்னு பலவிதமா அந்த ஏரியாவை டெவலப் பண்ணுவோம். இதனால உங்க பிளாட்டோட வேல்யூ பயங்கரமாக ஏறிடும். நீங்க போட்ற பணம் நாலஞ்சு வருஷத்துல டபுளா, ட்ரிபிளா கிடைச்சுடும்’’ என்று சொல்ல, பலரும் யோசிக்காமல் பணம் கட்டி வருகிறார்கள்.

‘‘கட்டுன பணம் மூணு, நாலு வருஷத்துல வட்டியா திரும்ப வந்துடுது. அதுபோக, நம்ம பேர்ல இருக்கிற மனையை வேணுமின்னா வித்து பணமாக்கலாம் அல்லது நம்மளே வச்சுக்கலாம்... இந்த பிளான் சூப்பரா இருக்கே...’’ - இதுதான் பணம் கட்டுபவர்கள் போடும் கணக்கு. இப்படிக் (தப்புக்) கணக்கு போட்டுத்தான் இன்றைக்கு இந்த நிறுவனத்தில் பல ஆயிரம் பேர் பல லட்சங்களை முதலீடு செய்துவிட்டு, பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள்.

லாபம் தந்த திருச்சி மொராய் சிட்டி புராஜெக்ட்...

‘நியோமாக்ஸ்’ நிறுவனத்தால் இந்த அளவுக்கு அதிகமான லாபத்தை (ஆண்டு தோறும் 18% - 24%) எப்படித் தர முடிகிறது என்கிற கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ளும்முன், இந்த நிறுவனத்தின் வரலாறு குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.

பத்மநாபன் என்பவர் பெரம்பலூரில் உள்ள அரசுக்குச் சொந்தமான இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கிளை மேலாளராக இருந்தார். 2010 வாக்கில் இவர் வி.ஆர்.எஸ் வாங்கிக்கொண்டு திருச்சிக்கு இடம்பெயர்ந்தார். இன்னும் சிலருடன் கூட்டு சேர்ந்து, நியோமாக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

அந்த நேரத்தில் திருச்சியில் ஏர்போர்ட் செல்லும் பாதை யில் ‘மொராய் சிட்டி’ என்கிற பெயரில் யாரோ ஒருவர் பிளாட் போட்டு விற்க, அந்த புராஜெக்ட் சரியாகப் போகவில்லை. அந்தப் பகுதி யில் நிலத்தடி நீர் சரியில்லை என்று தகவல் பரவியதே இதற்குக் காரணம். அந்த புராஜெக்ட்டை பத்மநாபன் அண்ட் கோ குறைந்த விலைக்கு மொத்தமாக வாங்கி, அந்தப் பகுதியில் பள்ளி, சூப்பர் மார்க்கெட் எனப் பல வசதிகளை ஏற்படுத்த, விற்காமல் கிடந்த வீடுகள் அத்தனையும் விற்றுத் தீர்ந்தன. இதனால் நியோமாக்ஸ் நிறுவனத்துக்கு நல்ல லாபம் கிடைத்தது.

‘அட, இதையே நாம் ஏன் பிசினஸ் மாடலாக எடுத்து செய்யக்கூடாது’ என்று நினைத்தனர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள். மக்களிடம் இருந்து பணம் வாங்கி அவர்களையும் ஒரு பார்ட்னர் ஆக்கி, இந்த பிசினஸை செய்யத் தொடங்கியது நியோமாக்ஸ். கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிசினஸை வெற்றிகரமாக நடத்தி வருவதால், பல ஆயிரம் பேர் இந்த நிறுவனத்தில் பணம் போட்டிருக்கிறார்கள்.

நிறுவனம் விதிக்கும் நிபந்தனைகள்...

இந்த நிறுவனத்தில் சேர குறைந்தபட்சம் ரூ.1.5 லட்சம் கட்டவேண்டும். அதிகபட்சமாக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால், எவ்வளவு பணத்தை நீங்கள் கட்டுவதாக இருந்தாலும், அதை ரொக்கமாகத்தான் கட்ட வேண்டும். செக் மூலம் பணம் தருவது, டி.டி எடுத்து தருவதற்கெல்லாம் அனுமதி இல்லை. ஆனால், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம். அப்படி செலுத்தும்போது ஒரே வங்கிக் கணக்கில் பணம் செலுத்தக் கூடாது. இந்த நிறுவனம் சொல்லும் வெவ்வேறு வங்கிகளின் பல்வேறு கணக்குகளில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கட்ட வேண்டும். யார் பணம் கட்டுகிறார், யார் பெயரில் கட்டுகிறார், எதற்காக பணம் கட்டுகிறார் என்பதை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி ஓர் ஏற்பாடு.

பணம் கட்டி முடித்தபின் பணம் கட்டியதற்கான ரசீது ஒன்றை நிறுவனத்தின் சார்பில் தருவார்கள். பணம் கட்டிய வருக்கு எப்போது மனை பதிவு செய்து தரப்படும் என்பதைப் பற்றி அந்த ரசீதில் சொல்வார்கள். தவிர, 100 ரூபாய் மதிப்பு கொண்ட பத்திரம் ஒன்றில் ஒரு பாண்டையும் தருவார்கள். அதில் நீங்கள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் அத்தனையும் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த பாண்டில் நீங்கள் கையெழுத்து போட்டுவிட்டால், அதன்பிறகு அந்த நிறுவனம் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

எப்படி லாபம் தருகிறது?

சரி, இந்த நிறுவனத்தால் இவ்வளவு பெரிய லாபம் எப்படித் தர முடிகிறது என்கிற கேள்விக் கான பதிலை இனி பார்ப்போம்.

‘‘இந்த நிறுவனம் ஆரம்பத்தில் ஆண்டுதோறும் 30% வட்டி தந்துவந்தது; பிற்பாடு இது 24 சதவிகித மாகக் குறைத்தது. இப்போது ஆண்டுதோறும் 18% வட்டி தருகிறார்கள். இப்போது தரப்படும் வட்டியே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அதாவது, ஒருவர் கட்டிய பணத்துக்கு நிகரான பணம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வட்டி வருமானமாகக் கிடைத்துவிடும்.

மக்களிடம் இருந்து வாங்கும் பணத்தில் நிலம் வாங்கி, அதில் சூப்பர் மார்க்கெட் உட்பட பலவற்றைக் கட்டி, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம்தான் வட்டி தருவதாகச் சொல்கிறார்கள். இது நம்பக்கூடிய வாதமாக இல்லை. காரணம், இந்த நிறுவனம் கட்டியிருக்கிற வணிக வளாகங்கள் அனைத்துமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதிலும் கோவிட் காலத்தில் ரியல் எஸ்டேட் மிகவும் நொடிந்துபோனது. ரியல் எஸ்டேட் இன்னும்கூட ‘பிக்அப்’ ஆகாத நிலையில், இந்த நிறுவனத்தால் மட்டும் 18% வருமானம் எப்படித் தர முடியும்? இவரிடம் வாங்கிய பணத்தை அவருக்கும், அவரிடமிருந்து வாங்கிய பணத்தை இவருக்கும் தந்துவருகிறது இந்த நிறுவனம். இந்தத் ‘திருப்பிவிடும்’ வேலை என்றைக்கு முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாது’’ என்று சொல்கிறார் சிலர்.

நிலம் என்ன ஆகும்?

சரி, மக்கள் கட்டிய பணத்தைக் கொண்டு வாங்கிய மனை என்னவாகும் என்று கேட்டோம். ‘‘இந்தத் திட்டத்தில் பணம் கட்டி நான்கைந்து ஆண்டுகள் கழித்து மனையை விற்க நினைத்தால், அதை வேறு யாராவது ஒருவர் வாங்குகிற வரை காத்திருக்க வேண்டும். இந்த நிறுவனம் பெருமளவில் வாங்கி வைத்திருக்கும் இடமெல்லாம் நகர்ப் புறத்துக்கு வெகு தொலைவில் உள்ளன. இந்த மனைகள் அதி வேகத்தில் வளர்ச்சி அடைந்து, நல்ல லாபம் தரும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

‘மனைதானே..! அதை யாரும் திருடிக்கொண்டு போக முடி யாது’ என்று மக்கள் பேசாமல் இருக்கிறார்கள். ஆனால், எதிர் காலத்தில் பிரச்னை வந்தால், பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் அலைகிற மாதிரி அவர்களும் அலைய வேண்டி யிருக்கும்’’ என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

‘டபுளாகும் முதலீடு... சொந்தமாகும் மனை...’ அன்று பி.ஏ.சி.எல்... இன்று நியோமாக்ஸ்? உஷார் மக்களே உஷார்!

புகார் தந்தவரை ரூ.87 லட்சம் தந்து அமுக்கினார்கள்...

இந்த நிறுவனம் எட்டு ஆண்டு களாகச் செயல்பட்டு வந்தாலும், இதுவரை பெரிதாக எந்தப் புகாரும் வரவில்லை. முதல் புகார் சில மாதங்களுக்குமுன் ராமநாதபுரத்திலிருந்து வந்தது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத்குமார் 2019 நவம்பரில் ரூ.26 லட்சம் பணத்தை இந்த நிறுவனத்தில் கட்டினார். கட்டிய பணம் பறி போய்விடுமோ என்று பயந்து போன வினோத் குமார் பணத்தைத் திரும்பக் கேட்டார். பணம் திரும்பக் கிடைக்காத நிலையில், அவர் ராமநாதபுரம் போலீஸில் புகார் தர, அது விகடன் இணைய தளத்தில் செய்தியாக வெளி யானது.

இந்தச் செய்தியைப் படித்த நியோமாக்ஸ் நிறுவனத்தினர் வினோத்குமாரைச் சுற்றி வளைத் தனர். அவருக்குச் சேர வேண்டிய பணம் ரூ.87 லட்சத்தை உடனே தந்து, நிறுவனத்துக்கு எதிராக அவர் தந்த புகாரை வாபஸ் பெற வைத்தனர். விகடன் இணைய தளத்தில் வந்த செய்தியையும் இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என வினோத்குமாரை நெருக்கியது நியோமாக்ஸ் தரப்பு. ஆக, இந்த நிறுவனம் ஒரே சமயத்தில் ரூ.87 லட்சம் தந்து ‘செட்டில்’ செய்கிற அளவுக்கு நிறைய பணம் வைத்திருக்கிறது. இது அரசுக்குத் தெரியுமா?

இந்த நிறுவனம் வாங்குகிற பணத்துக்கும், தருகிற பணத்துக் கும் முறையாக வரி கட்டுகிறதா, மக்களிடம் இருந்து பணம் வசூலித்து மனை வாங்கி, லாபம் தருவதற்கு அரசிடம் ஏதாவது அனுமதி வாங்கியிருக்கிறதா அல்லது இரு தனிப்பட்ட நபர் களுக்கு நடக்கும் வர்த்தக ரீதி யிலான உடன்பாடு இது என்பதால், தமிழக அரசும் காவல் துறையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதா என்கிற கேள்வி களுக்கான பதிலை அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.

‘டபுளாகும் முதலீடு... சொந்தமாகும் மனை...’ அன்று பி.ஏ.சி.எல்... இன்று நியோமாக்ஸ்? உஷார் மக்களே உஷார்!

நாணயம் விகடனின் கேள்விகளுக்கு என்ன பதில்..?

நியோமாக்ஸ் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதன் நிர்வாகம் என்ன சொல்கிறது என்பதை அறிய மதுரை சுப்ரமணியபிள்ளைத் தெருவில் ரிக்கி டவர்ஸ் என்னும் இடத்தில் உள்ள அதன் அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கே ஒன்றிரண்டு ஊழியர்கள் தவிர யாரும் இல்லை. நியோமாக்ஸ் நிறுவனம் குறித்து வந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு வந்திருப்பதைச் சொன்னோம். ‘‘ராமநாதபுரத்துல ரெண்டு புகார் வந்துச்சு. அந்த பிரச்னையை சரிக்கட்டியாச்சே...’’ என்று அங்கிருந்த ஓர் ஊழியர் அசால்ட்டாகப் பதில் சொன்னார்.

நியோமாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளைச் சந்தித்து விளக்கம் கேட்க வேண்டும் என்று சொன்னோம். ‘‘அவர்களைச் சந்திக்க முடியாது; அவர்களுடைய போன் நம்பர் எங்களிடம் இல்லை’’ என்றவர்கள், நம் விசிட்டிங் கார்டை வாங்கிக்கொண்டு, ‘‘எங்கள் வழக்கறிஞர் உங்களிடம் பேசுவார்’’ என்று அனுப்பி வைத்தனர்.

அதன்பின், நியோமாக்ஸ் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் என்று நம்முடன் போனில் பேசினார் ஒருவர். நாம் கேட்க நினைத்த கேள்விகள் அனைத்தையும் அவரிடம் கேட்டோம். நம் கேள்விகள் அனைத்தையும் தெளிவாகக் கேட்டு வாங்கிக் கொண்டவர், அவற்றுக்கான பதிலை நிர்வாகிகளிடம் கேட்டு அளிப்பதாகத் தெரிவித்தார். ஆனால், பதில் தர வில்லை. நாம் மறுநாள் மீண்டும் அவருக்கு நினைவுபடுத்தியும் பதில் தரவில்லை. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறது எனில், மக்கள் சார்பாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல என்ன தயக்கம்..?

ஒரு நிறுவனம் மக்களிடம் பணம் வசூலித்து, தொழில் செய்ய வேண்டும் எனில், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி எந்த ஓர் அனுமதியும் இந்த நிறுவனம் வாங்கவில்லை. வர்த்தக விவகாரத் துறையில் மட்டும் பதிவு செய்துகொண்டுள்ளது. தவிர, ஆண்டுதோறும் 18% நிச்சயமான வருமானம் தருவோம் என்று சொல்வதும் சட்டப்படி தவறாகும். ஆனால், இவற்றை எல்லாம் இந்த நிறுவனம் எப்படி செய்கிறது?

நியோமாக்ஸ் நிறுவனத்தில் பணம் போட்ட அத்தனை பேரும் அவசியம் கேட்க வேண்டிய கேள்வி இது. இந்தக் கேள்வியை இப்போது கேட்கவில்லை எனில், பிற்பாடு வருத்தப்பட வேண்டியிருக்கும்! உஷார் மக்களே உஷார்!

போலி பத்திரம் தந்து ஏமாற்றிய ஏஜென்ட்!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்த ராவுத்தர் என்பவர் நியோமாக்ஸ் நிறுவனத்தில் ஏஜென்டாக வேலை பார்த்து வருகிறார். திண்டுக்கலைச் சேர்ந்த கார்த்திக் பாபு என்பவரிடம் ஆசை காட்டி, நியோமாக்ஸ் நிறுவனத்தில் சேர்க்க வைத்திருக்கிறார். 2019-ல் இவர் செய்த ரூ.9 லட்சம் முதலீட்டுக்கு 100 ரூபாய் பத்திரத்தில் எழுதித் தந்தது நியோமாக்ஸ் நிறுவனம். 3% வட்டி ஆறு மாதங்கள் வரை கிடைத்தது. பின்னர் வட்டி பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கத் தொடங்க, ‘வட்டி வேண்டாம், கட்டிய பணத்தை மட்டும் திருப்பிக் கொடுங்கள்’ என அலையாய் அலைந்ததில் ரூ.4 லட்சம் மட்டும் திரும்பக் கிடைத்துள்ளது. மீதமுள்ள ரூ.5 லட்சம் பணத்தை வாங்க முடியாமல் போராடி வருகிறார்.

இந்தப் புகாரை எடுத்துக்கொண்டு நம்மை சந்தித்தார் ராவுத்தர். அவரை அழைத்துக்கொண்டு ராமநாதபுரம் குமரய்யா கோயில் பகுதியில் உள்ள நியோமாக்ஸ் அலுவலகத்துக்குச் சென்றோம்.

அங்கிருந்த நியோமாக்ஸ் ஊழியரிடம் பேசினோம். பத்திரத்தைக் காட்டினோம். ‘‘இது மாதிரி நியோமாக்ஸில் இருந்து யாருக்கும் பத்திரம் எழுதித் தர மாட்டோம். பாண்டுதான் எழுதித் தருவோம். ஆனா, ராவுத்தரு நல்லவராச்சே! இப்படி எழுதித் தர மாட்டேரே!’’ என்றவரிடம், ‘‘அவருக்கு போன் பண்ணி கேளுங்க’’ என்றோம். அவரும் ராவுத்தருக்கு உடனே போன் செய்து பத்திரம் பற்றிக் கேட்டார். ‘‘ஆமா, நான்தான் பணம் வாங்கினேன். அந்த பத்திரங்களை வாங்கி வச்சுக்குங்க. பணத்தைக் கொடுத்துடுவாருன்னு சொல்லி அனுப்பிடுங்க’’ என்று அசால்ட்டாகச் சொல்லிவிட்டு, போனை கட் செய்தார். எப்ப பணம் கொடுப்பார் என்று தெரிந்துகொள்ள அவருக்கு மீண்டும் போன் செய்தால், போனை எடுக்கவே இல்லை.

இதைப் பார்த்து உடனே ஜகா வாங்கினார் ஊழியர். ‘‘ராவுத்தரு இப்படி செய்வாருன்னு நாங்க எதிர்பார்க்கல. இதை யார்கிட்டயும் சொல்லாதீங்க. பத்திரத்தை மட்டும் கொடுத்துட்டுப் போயிடுங்க’’ என்று சொல்ல, ‘‘பணம் கொடுங்க, பத்திரத்தை வாங்கிக்கிங்க’’ என்று கார்த்திக்பாபு சொல்ல, ‘‘ஒரே வாரத்துல பணம் வாங்கித் தந்துட்றேன். தயவு பண்ணி போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடாதீங்க’’ என்று கெஞ்சினார்.

நியோமாக்ஸில் பணம் போட்டவர்களின் கையில் உள்ள பத்திரம் ஒரிஜினல் ஏஜென்ட் தந்ததா அல்லது போலி ஏஜென்ட் தந்ததா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே!

- கு.விவேக்ராஜ்