தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

கையில தொழில் இருக்கு மனசுல தைரியம் இருக்கு! - மைதிலி

மைதிலி
பிரீமியம் ஸ்டோரி
News
மைதிலி

வாழ்தல் இனிது

மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனத்தில் வலம்வரும் மைதிலி, சென்னை மேற்கு மாம்பலம் ஏரியாவில் பலருக்கும் பரிச்சயமானவர். தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கை குறையாத அவரைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அடுப்படியிலிருந்து ஓய்வுபெறும் வயதில், அதையே தன் வாழ்வாதாரமாக மாற்றிக் கொண்டிருக்கும் மைதிலியின் கதை, முதுமையைச் சாபமாக நினைப்போரை ஆற்றும், தேற்றும்!

‘`பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். பிறவியிலேயே போலியோ அட்டாக் வந்ததால சரியா நடக்க முடியாமப்போச்சு. ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவருக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தாங்க. கல்யாணத்துக்குப் பிறகுதான் டைப்ரைட்டிங் கத்துக்கிட்டேன். சோஷியல் வொர்க்கர் ஜெயா அருணாசலம் எனக்கு கம்போசிங், பிரின்ட்டிங் எல்லாம் கத்துக்கொடுத்து பிரின்ட்டிங் பிரஸ்ஸில் வேலையும் கொடுத்தாங்க.

என் கணவருக்குச் சரியான வேலையில்லை. அவர் அதிகம் படிக்கலை. நான் அவரை விடவும் அதிகம் படிச்சிருக்கேன், கலரா இருக்கேன், வேலைக்குப் போறேன்னு அவருக்குள்ளே எக்கச்சக்கமான தாழ்வு மனப்பான்மை. அது சந்தேக புத்தியா வெடிச்சது. எதுக்கெடுத்தாலும் சந்தேகப்பட்டு அசிங்கமா திட்டுவார். கொஞ்சநாள் நல்லா இருப்பார். திடீர்னு என்மேல சந்தேகம் அதிகமாயிடும். சண்டை போட்டுட்டுக் கோவிச்சுக்கிட்டுப் போயிடுவார். இதுவே வாடிக்கையா இருந்தது” - சின்ன விசும்பலுடன் நிறுத்தும் மைதிலியின் வாழ்க்கையில் ‘குழந்தை பிறந்தா எல்லாம் சரியாகிடும்’ எனும் வாதமும் பலனளிக்கவில்லை.

கையில தொழில் இருக்கு மனசுல தைரியம் இருக்கு! - மைதிலி

‘`அப்போ நான் எட்டுமாசம் கர்ப்பமா இருந்தேன். திடீர்னு ஒருநாள் என்னைக் கட்டாயப்படுத்தி சினிமாவுக்குக் கூப்பிட்டார். நான் வரலைன்னு சொல்லியும் கேட்கலை. உடம்புக்கு முடியாத நிலையில் அவர்கூட நைட்ஷோ படத்துக்குப் போயிட்டு, வீட்டுக்குத் திரும்பிட்டிருந்தபோது எனக்கு அபார்ஷன் ஆயிடுச்சு. அன்னிக்கு நான் கதறின கதறல் இன்னிக்கும் எனக்கு மறக்கலை. சரி... அந்தச் சம்பவத்துக்குப் பிறகாவது அவருக்கு என்மேல அன்பு வரும், நடத்தையை மாத்திப்பார்னு எதிர்பார்த்தேன். ஆனா, `கரு கலைஞ்சதே மேல்'னு நினைக்கவைக்கிற அளவுக்கு அவருடைய போக்கு இன்னும் மோசமாச்சு. `அந்தக் குழந்தை பிழைச்சிருந்தா என்னுடன் சேர்ந்து அதுவும் படாதபாடுபட்டிருக்குமோ’ன்னு நினைச்சு மனசைத் தேத்திக்கிட்டேன். எங்க அப்பாவும் அவருக்கு எவ்வளவோ அட்வைஸ் பண்ணிப் பார்த்தார். தன் சொத்துகளையெல்லாம் விற்று எங்களுக்குத் தேவையானதை செய்தார். ஆனாலும், என் கணவர் மட்டும் மாறவே இல்லை.

வேற வழியே இல்லாம நாலு வருஷங்களுக்குப் பிறகு நான் அவரைவிட்டுப் பிரிஞ்சேன். அப்போதும் அவர் என்னை விடறதா இல்லை. ‘இனிமே நான் ஒழுங்கா இருக்கேன். என்கூட வந்துடு’ன்னு லெட்டர் போடுவார். ஒருமுறை அவர் வார்த்தைகளை நம்பி மறுபடி அவரைத் தேடிப் போனேன். எனக்கு வேலை கொடுத்த ஜெயா மேடம்கிட்டயே அவருக்கும் ஒரு வேலை போட்டுத்தரச் சொல்லிக் கேட்டேன். அவங்க தனக்குச் சொந்தமான மாட்டுப்பண்ணையில் வேலை கொடுத்தாங்க. அந்த வேலையிலும் ரொம்ப நாள் நீடிக்கலை. வேலைக்குப் போகாம, குடியே கதியா இருந்தார். ‘இனிமேலும் சகிச்சுக்கிட்டு வாழறது சரியாவராது'ன்னு அவருக்கு ‘இனிமே உங்களோடு வாழ முடியாது’ன்னு நோட்டீஸ் அனுப்பிட்டு நிரந்தரமா பிரிஞ்சு வந்தேன். அந்த முறை என் முடிவில் உறுதியா இருந்துட்டேன்.

நான் நிரந்தரமா பிரிஞ்சுவந்து மூணு வருஷங்கள் இருக்கும். அந்த ஏக்கத்துலேயே அவருக்கு உடம்புக்கு முடியாமப் போயிருச்சு. ஒருநாள் அவருக்கு பாம்பு கடிச்சிருச்சுன்னு தகவல் வந்தது. நான் கிளம்பிப் போகறதுக் குள்ளேயே அவர் இறந்துட்டார். அவர் சடலத்தை எடுக்கக்கூட அங்கே யார்கிட்டயும் காசில்லை. என்னுடைய தாலிக்கொடியை வித்துதான் இறுதி சடங்குகளை முடிச்சேன். அதுக்குப் பிறகு என் ரெண்டு தங்கைகள்தாம் எனக்கு அடைக்கலம் கொடுத்தாங்க. கிட்டத்தட்ட 20 வருஷங்கள் அவங்ககூட இருந்தேன்.

இயல்பிலேயே நான் நல்லா சமைப்பேன். வற்றல், வடாம் போட்டு பிசினஸ் பண்ணிட்டிருந்தேன். நானும் என் தங்கையும் சேர்ந்து சின்ன அளவுல கேட்டரிங் பிசினஸ் ஆரம்பிச்சோம். விசேஷங்களுக்கு சமைச்சுக் கொடுத்திட்டிருந்தோம். ஒருகட்டத்துல அவங்க பிள்ளைங்க வளர்ந்து கல்யாண வயசுக்கு வந்ததும் அதுக்குப் பிறகும் அங்கேயே இருக்கிறது சரியா வராதுன்னு நான் தனியா வந்தேன். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் சமையல் மட்டும்தான். அதையே பிழைக்கிறதுக்கான வழியா மாத்திக்கிட்டேன். சென்னையில மேற்கு மாம்பலத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, பேச்சிலர்களுக்கும், வயசான தம்பதி களுக்கும் சமைச்சுக்கொடுத்திட்டிருக்கேன். விசேஷங்களுக்கு 50 பேர் வரைக்கும் ஆர்டர் எடுத்துச் சமைச்சுக்கொடுக்கறேன். நல்ல நாள், பண்டிகைகளுக்குப் பலகாரம் கேட்கிறவங்களுக்கும் செய்து கொடுக்கறேன்” - விடுமுறையின்றி உழைக்கும் மைதிலிக்கு வயது 70. எந்த வேலைக்கும் உதவிக்கு ஆட்களின்றி தனி மனுஷியாகவே சமாளிக்கிறார். பாரம்பர்ய சமையற்கலை கற்க விரும்புவோருக்குப் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறார்.

‘`நான் பாபா பக்தை. மாற்றுத்திறனாளிகள் கையால தள்ளி இயக்கும் வண்டியைத்தான் 50 வயசுவரைக்கும் ஓட்டிக்கிட்டிருந்தேன். பாபா கோயிலுக்குப் போனபோது ஒருத்தர் என்னைப் பார்த்துட்டு `டூ வீலர் ஓட்டறீங்களா'ன்னு கேட்டார்.

`50 வயசாயிடுச்சு. இனிமே அதெல்லாம் எப்படி முடியும்'னு தயங்கினேன். `முடியும்னு நம்புங்க. நிச்சயம் ஓட்டுவீங்க'ன்னு சொல்லிட்டுப் போனார். அடுத்தநாள் ஓர் இஸ்லாமிய நண்பர் வண்டியோடு வந்தார். தினமும் எனக்கு ஒருமணி நேரம் வண்டி ஓட்டப் பயிற்சி கொடுத்தார். ரெண்டே மாசத்துல பழகிட்டேன். எனக்கு நம்பிக்கை கொடுத்த நண்பர் டூ வீலருக்கு ஏற்பாடு பண்ணினார்.

மளிகைச் சாமான்கள் வாங்கவும், காய்கறிகள் வாங்கவும் இப்போ அந்த வண்டியிலதான் போயிட்டு வந்திட்டிருக்கேன். நாளுக்கு நாள் என் உடம்பு பலவீனமாயிட்டிருக்கு. மத்தவங்களைப்போல என்னால நின்னுக்கிட்டு சமைக்க முடியாது. முட்டியைத் தேய்ச்சுத் தேய்ச்சுதான் நகரணும். பலநேரங்களில் தவழ்ந்துபோய்தான் வேலைகளைச் செய்யணும். சம்பாதிக்கிற பணம் போதுமானதா இல்லை. என் தேவைகளுக்கும் மருத்துவச் செலவுகளுக்குமே சரியா இருக்கு. என் தங்கைகள் மறுபடி என்னை வெச்சுக்கத் தயாரா இருக்காங்க. ஆனாலும், யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுன்னு ஒரு வைராக்கியம். கையில தொழில் இருக்கு... மனசுல தைரியம் இருக்கு. அவை போதும் மிச்ச வாழ்க்கையை ஓட்ட” - சமைத்த உணவோடு அன்பையும் சேர்த்து டப்பாக்களில் நிரப்பியபடியே நம்மை வழியனுப்புகிறார் மைதிலி.