ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

ஓய்வுக்காலத்தில் அசத்தலான செஞ்சுரி இலக்கு! - உலகம் சுற்றும் மேனகா

மேனகா
பிரீமியம் ஸ்டோரி
News
மேனகா

எங்க 46 வருஷ குடும்ப வாழ்க்கையில, அவரைத் தாண்டிய வேறு உலகமே எனக்கு இருந்ததில்ல. அவர் இல்லாத வாழ்க்கை ரொம்பவே தவிப்பா இருக்கு

வெளிநாட்டுப் பயணம் என்பது பலருக்கும் கனவுதான். ஆனால், விரைவில், 100 நாடு களுக்குச் சென்று வந்த பெருமையைப் பெறப் போகிறார், சென்னையைச் சேர்ந்த மேனகா.

பணி ஓய்வுக்குப் பிறகு, வீட்டிலேயே முடங்குபவர்களுக்கு மத்தியில், மேனகாவின் கணவர் சுப்ரமணியன் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மனைவியோடு சேர்ந்து உலகத்தைச் சுற்றி வலம்வரத் தொடங்கியுள்ளார். கூடவே, ‘குறைந்தபட்சம் 100 நாடுகளுக்காவது பயணித்துவிட வேண்டும்’ என்று வியப்பான ஓர் இலக்கையும் தீர்மானித்துள்ளனர்.

“நம்ம ரெண்டு பேர்ல யாருக்கு என்ன நடந்தாலும், இந்த இலக்கை எட்டியே ஆகணும்” என்ற உறுதியுடன் மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த இவர்களின் வாழ்க்கை யில், கொரோனாவால் ஏற்பட்டது பெரும் சோகம். கணவரை, கொரோனாவுக்கு பறி கொடுத்த மேனகா, அவரது ஆசையை நிறை வேற்ற, மீண்டும் வெளிநாட்டுப் பயணத்துக்கு ஆயத்தமாகியிருக்கிறார்.

கணவருடன்
கணவருடன்
ஓய்வுக்காலத்தில் அசத்தலான செஞ்சுரி இலக்கு! - உலகம் சுற்றும் மேனகா

“எங்க 46 வருஷ குடும்ப வாழ்க்கையில, அவரைத் தாண்டிய வேறு உலகமே எனக்கு இருந்ததில்ல. அவர் இல்லாத வாழ்க்கை ரொம்பவே தவிப்பா இருக்கு” - வறட்சியான புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் மேனகா. “எங்க ரெண்டு பேருக்குமே பூர்வீகம் சிவகங்கை மாவட்டம். கல்யாணமானதும் சென்னையில குடியேறிட்டோம். இன்ஜினீ யரான அவர், தனியா லேத் ஃபேக்டரி நடத்தினார். விமானத்துல போகணும், வெளி நாடுகளைச் சுத்திப் பார்க்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டோம். அதுக்குப் பொருளாதாரம் பெரிய தடையா இருந்துச்சு. ஓய்வுக்காலத்துல சிரமம் இல்லாம வாழுறத்துக்காக, ஓடி ஓடி உழைச்சாரு. ஓய்வெடுக்க முடிவெடுத்தப்போ, ஃபேக்டரியிலிருந்த எல்லா மெஷின்களையும் பிரதிபலன் எதிர்பார்க்காம தன் ஊழியர்கள் வசமே ஒப்படைச்சுட்டாரு” என்கிறார் பெருமிதம் பொங்க.

“பொருளீட்டும் நிர்பந்தம் ஏதுமில்லாம, சேமிப்பை வெச்சு எஞ்சிய ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியா கழிக்க முடிவெடுத்தோம். முதல்ல பக்கத்து நாடானா சிங்கப்பூருக்கு போய்ட்டு வந்தோம். அப்புறமா சீனா, தாய்லாந்து, ஆஸ்தி ரேலியானு ஒவ்வொரு நாடா போனோம். வருஷத்துக்கு குறைஞ்சது அஞ்சு நாடுகளுக்குப் போயிடுவோம். ஒவ்வொரு நாட்டுலயும் பத்து பதினைஞ்சு நாள்கள் தங்கி முக்கியமான பகுதி களைச் சுத்திப் பார்ப்போம். இந்தியாவுல இருக்குறப்போ உள்நாட்டுக்குள்ளேயே சுற்றுலா போவோம்” - உற்சாக மோடுக்குத் திரும்பியவராக, பயண அத்தியாயம் பகிரும் மேனகா, கடந்த 16 ஆண்டுகளில் 94 நாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறார்.

நியூசிலாந்து விமான நிலையங்களில் பயணி களின் உடைமைகளை மோப்ப நாய்களைக் கொண்டுதான் சோதனை செய்வார்கள். அந்த நாட்டுக்குள் தாவர விதைகள் மற்றும் செடிகளைக் கொண்டுசெல்ல, வெளிநாட்டவர் களுக்கு அனுமதி கிடையாது. இது தெரியாமல், அங்கு பயணம் செய்தபோது தாவர விதைகள் சிலவற்றையும் கொண்டு சென்றிருக்கிறார் மேனகா. மோப்ப நாய்கள் அதைக் காட்டிக் கொடுக்க, “அடுத்தமுறை இதேமாதிரி செஞ்சா சிறைத்தண்டனை உறுதி” என்று சுங்க அதிகாரி களால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளார்.

ஓய்வுக்காலத்தில் அசத்தலான செஞ்சுரி இலக்கு! - உலகம் சுற்றும் மேனகா

“இதே மாதிரியே ஜெர்மனியில பெரும் பாலான பகுதிகள்ல வாக்கிங் போகவும், வாகனங்கள்ல பயணிக்கவும் தனித்தனி பாதையை அமைச்சிருப்பாங்க. இது தெரியாம, ஓர் இடத்துல வாகனங்கள் போகுற சாலையில நாங்க நடந்து போகவே, ‘உங்க செப்பலோ, ஷூவோ சாலையைச் சேதப்படுத்த வாய்ப் பிருக்கு. இன்னொருமுறை விதியை மீறினா கடுமையான தண்டனை விதிக்கப்படும்’னு போலீஸாரின் கண்டனத்துக்கு ஆளானோம்” என்று கூச்சத்துடன் சிரிப்பவர், அடுத்துச் சொல்வது டென்மார்க்கில் நடந்த விசித்திரமான ஒரு சம்பவத்தை...

“டென்மார்க்ல பயணத்தை முடிச் சுட்டு இந்தியா வர்றதுக்காக ஏர்போர்ட் போனோம். எங்களுடன் வந்திருந்த தோழி ஒருத்தங்களுக்கு திடீர்னு உடல்நிலை சரியில்லாம போயிடுச்சு. ‘எங்க நாட்டிலிருந்து வெளியே போறவங்க யாரா இருந்தாலும், நல்ல உடல்நலத்துடன்தான் வழியனுப்பு வோம்’னு உறுதியா சொன்ன அந்த நாட்டு அதிகாரிகள், எங்களை மட்டும் இந்தியாவுக்கு அனுப்பிட்டாங்க. யாருடைய துணையுமில்லாம அந்தப் பெண்ணை ஆஸ்பத்திரியில சேர்த்து, அவங்க செலவுலயே குணப்படுத்தி, ரெண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கொண்டுவந்து பாதுகாப்பா விட்டாங்க... ருமேனியா வுல நடந்த ஸ்பெஷல் சம்பவம் ஒண்ணு எல்லாத்தையும்விட அல்டிமேட்” என்று வியப்பை எகிறச் செய்தன, மேனகா கூறிய ருமேனியா நினைவுகள்.

அந்த நாட்டுக்குச் சென்றிருந்த போது, தன் கணவருடன் அங்கிருக்கும் உணவகம் ஒன்றில் சாப்பிடச் சென்றுள் ளார் மேனகா. யதேச்சையாக அங்கு வந்த ஒரு தம்பதியர், குழுமியிருந்தவர் களுடன் கலகலப்பாகப் பேசி, ஆடிப் பாடி நேரம் செலவிட்டுள்ளனர். “நண்பர்களைப்போல எங்களை உபசரிச்ச அந்தத் தம்பதியர் வேற யாருமில்லைங்க... அந்த நாட்டு ஜனாதிபதியும் அவரோட மனைவியும் தான்” என்கிறார் கண்கள் விரிய.

அமேசான் காடுகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியில், மணலைச் சாப்பிடுவதற்காகவே தினம்தோறும் கூட்டமாக வந்து செல்லுமாம் கிளிகள். “அந்தக் கிளிக்கூட்டத்தைப் போலவே எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத அனுபவத்தைக் கொடுத்துச்சு, பிலிப்பைன்ஸ் புவேர்ட்டோ பிரின்செசா பகுதி குகைப் பயணம். நிலப்பரப்புக்குக் கீழே இருக்குற நீளமான குகையில, குரங்குகள், பெரிய பல்லிகள், மலைப்பாம்புகள்னு பல்வேறு பிராணிகள் உயிர்வாழும். அதையெல்லாம் படகுப் பயணத்துல கிட்டக்கவே பார்க்கலாம். ஆனா, அவை நம்மள தொந்தரவே செய்யாது” என்கிறார் சிலிர்ப்பாக.

ஓய்வுக்காலத்தில் அசத்தலான செஞ்சுரி இலக்கு! - உலகம் சுற்றும் மேனகா
ஓய்வுக்காலத்தில் அசத்தலான செஞ்சுரி இலக்கு! - உலகம் சுற்றும் மேனகா

குழந்தையாகக் குதூகலித்த சில அனுபவங்களைப் பகிர்பவர், “தாய்லாந்துல புகழ்பெற்ற பட்டாயா நகரத்துல கடலுக்கு மேல 300 அடி உயரத்துல நானும் என் கணவரும் வயசை மறந்து பாராசூட்ல பயணம் செஞ்சோம். அதேபோல, மொரீஷியஸ்ல இந்து மகா சமுத்திரத்துல, ஆக்ஸிஜன் சுவாசத்துடன் நடுக்கடலுக்குள்ள பயணம் செஞ்சு கடல்வாழ் உயிரினங்களைப் பக்கத் திலிருந்து பார்த்துட்டு வந்த அனுபவம் மறக்கவே முடியாதது” என்று பூரிப்பவர், மெக்ஸிகோவிலிருக்கும் சின்சென் இட்சா கட்ட டத்தைத் தவிர, மற்ற ஆறு உலக அதிசயங்களையும் பார்த்திருக்கிறார்.

வெளிநாட்டுப் பரவசங் களைச் சிலாகித்த மேனகா வின் குரலில் வலி கூட்டுகின் றன, கணவரின் நினைவுகள். “இதுவரைக்கும் 450 முறைக்கும் மேல் விமானத்துல போயிருக்கோம். ஒவ்வொருமுறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சரியா திட்டமிடுவோம். போகுற இடத்துல எளிதா செரிமானமாகுற உணவுகளைத்தான் பெரும்பாலும் சாப்பிடுவோம். அதனால, எல்லாப் பயணமும் எங்க உடலுக்கும் மனசுக்கும் நிறைவானதாவே அமைஞ்சுது. கடைசியா கஜகஸ்தான் போயிட்டு வந்ததுமே, கொரோனாவால பயணத்தைத் தொடர முடியல. எதிர்பாராத வகையில கணவரைப் பறி கொடுத்துட்ட நிலையில, அவரது ஆசைப்படி மீதமிருக்குற ஆறு நாடுகளுக்குப் போயிட்டு வந்திடணும்னு முடிவெடுத்திருக்கேன். அவர் இல்லாம வெளிநாட்டுக்குப் போறதை நினைச்சா ரொம்பவே கவலையா இருக்கு. அவர் துணையா இருப்பார்ங்கிற நம்பிக்கையில, அடுத்து பர்மாவுக்குப் போகத் திட்டமிட்டிருக் கேன்” மென்சிரிப்புடன் கூறுபவரின் விழிகளில் ஈரம் படர்கிறது.