பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

நீங்கள் கோடீஸ்வரரா? முடிவு செய்யும் முக்கிய அம்சம் இதுதான்..!

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
News
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 13

ஒருவர் செல்வந்தர் (Wealthy), கோடீஸ்வரர் (Crorepati) என்பதை எப்படி முடிவு செய்வது? இதற்கான வரையறை ஏதும் இருக்கிறதா?

மிகப் பெரிய பணக்காரர்கூட தன் வாழ்நாள் நாளில் ஏதோ ஒரு கட்டத்தில் ஏழையாக உணர்கிறார். இதேபோல், சில சமயங்களில் ஏழைகளும் பணக்காரர்களாக உணர்கிறார்கள்.

இந்த விஷயத்தை நீங்கள் கூகுளில் தேடினால், செல்வம் மற்றும் வருமானத்துக்கு இடையிலான வேறுபாடுகள், வெற்றிகரமான நபர் மற்றும் பணக்காரர் இடையேயான வேறுபாடுகளை ஒப்பிடும் முடிவுகள் கிடைக்கும்.

செல்வத்தை, செல்வந்தரை அளவிடுவதற்கான பிரபலமான முறைகளாக வருமானம், நிகர சொத்து மதிப்பு (Networth) ஆகியவை உள்ளன. வருமானம் என்பது ஒருவரின் சம்பளம் அல்லது சம்பாத்தியத்தைக் குறிக்கும். நிகர சொத்து மதிப்பு என்பது அவரின் சொத்துகளிலிருந்து அவரின் கடன்களைக் கழித்தது போக உள்ள சொத்து மதிப்பைக் குறிக்கும்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

யார் கோடீஸ்வரர்?

இந்தியாவில் பாரம்பர்யமாக ரூ.1 கோடிக்குமேல் நிதிச் சொத்து (Financial Asset) இருந்தால், அவர் கோடீஸ்வரர் என்று கருதப்படுகிறார். ஆனால், ஒருவர் செல்வந்தரா என்பது பார்ப்பவரின் பார்வையில் உள்ளது. ஒரு நபரின் இருப்பிடம், தொழில், சமூகம், பின்னணி மற்றும் பல காரணிகள் செல்வத்தைப் பற்றிய உணர்வை ஏற்படுத்தலாம்.

‘பணக்காரர்’ என்பது தொடர்புடைய ஒரு சொல் மட்டுமே. ஒருவரை பணக்காரர் அல்லது ஏழை என்று வரையறுக்கும் மிகச் சரியான எண் எதுவும் இல்லை. செல்வம் எப்போதும் ஒரு தனிமனிதரை சார்ந்த விஷயமாக இருக்கிறது. செல்வம் எப்போதும் ஒருவரின் சொந்த உபயோகத்தையொட்டியே குறிப்பிடப்படுகிறது.

ஒருவருக்கு இரண்டு மாளிகை வீடுகள், இரண்டு சொகுசு கார்கள், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் (எஃப்.டி) கோடிக்கணக்கான ரூபாய் இருந்தால் அவர் பணக்காரர் என்பது பலரின் பார்வையாக உள்ளது.

செல்வத்தைக் குறிப்பிட பல வழிகள் உள்ளன. ஆனால், காலம் (TIME) எனப்படும் காரணி மூலம் அளவிடப்படுவதே பொருத்தமான மற்றும் சரியான வழியாக உள்ளது.

ஒருவர் வேலை பார்க்கும் ஆண்டுகள், அவரின் குடும்பக் கடமைகள் போன்றவை ஒருவர் செல்வம் சேர்ப்பதை முடிவு செய்கிறது. அதிக ஆண்டுகள் வேலை செய்யும்போது, குடும்பக் கடமைகள் குறைவாக இருக்கும் போது ஒருவர் விரைவாகக் கோடீஸ்வரர் ஆக முடியும்.

நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1960-ம் ஆண்டில் இந்தியர்களின் சராசரி ஆயுள் 41 ஆண்டுகளாக இருந்தது. இது 1990-ம் ஆண்டில் 57 ஆண்டுகளாக அதிகரித்தது. 2021-ம் ஆண்டில் இது 70 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இன்னும் 10, 15 ஆண்டுகளில் இது சுமார் 80 ஆண்டுகளாக அதிகரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

சராசரி இந்தியர்களில் பெரும்பாலானோரின் மிகப் பெரிய பிரச்னை, நீண்ட காலம் உயிர் வாழ்வதாகும். ஒருவர் இறக்கும் வரை வாழ்க்கைமுறை (LifeStyle) செலவுகள் மற்றும் இதர அத்தியாவசிய செலவுளுக்குப் பணம் வைத்துக்கொள்ள வேண்டும். இங்கே லைஃப்ஸ்டைல் என்பது சமூக அந்தஸ்து, வாரம் ஒரு முறை நண்பர்களுடன் பார்ட்டிகளில் கலந்து கொள்வது, மாதம் ஒரு முறை ஊர் சுற்றச் செல்வது, வீடுகளில் தனித்தனி அறைகளில் வசிப்பது போன்றவற்றைக் குறிக்கும். அவசிய செலவுகள் என்கிறபோது உணவு, உடை, உறையுள் (வசிக்க வீடு) மற்றும் ஆரோக்கியச் செலவுகள் போன்றவை ஆகும்.

இவற்றின் அடிப்படையிலும் ஒருவர் செல்வந்தர் என நவீன முதலீட்டு உலகில் நிர்ணயிக்கப்படுகிறது.

நீங்கள் கோடீஸ்வரரா? முடிவு செய்யும் முக்கிய அம்சம் இதுதான்..!

செல்வத்துக்கான சூத்திரம்

செல்வம் என்பது காலத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. வருமானம் என்பது பணத்துடன் தொடர்பு உடையதாக இருக்கிறது. அதாவது, ஒருவரின் வருமானம் / சம்பாத்தியம் என்பதைப் பணத்தில் அளவிடுவோம். வேலை பார்க்காமல் உங்கள் வாழ்க்கை முறையை எவ்வளவு காலம் தொடர முடியுமோ, அதுதான் உங்கள் செல்வம் ஆகும்.

வருமானம் மற்றும் செல்வம் என்பதை ஓர் உதாரணத்துடன் பார்த்தால் எளிதில் புரியும்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்திகேயனின் மாதச் சம்பளம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம். இவர் இந்தத் தொகையில் அவரின் குடும்பச் செலவு ரூ.40,000 போக, மாதம் ரூ.10,000 சேமிக்கிறார். அவரிடம் செலவு செய்யக்கூடிய தொகையாக ஏற்கெனவே ரூ.3,90,000 இருக்கிறது. இந்த மாதத்தின் 10,000 ரூபாயும் சேர்ந்தால் அவரிடம் இருக்கும் மொத்தப் பணம் ரூ.4,00,000 இருக்கும். அவர் வேலைக்குச் செல்லவில்லை எனில், மாதம் ரூ.40,000 வீதம் 10 மாதத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் சுதந்திரமாக செலவிட முடியும். இந்த இடத்தில் அவர் 10 மாத காலத்துக்குப் பணக்காரர் ஆவார். இங்கே அவர் தனது குடும்பச் செலவுகளை 10 மாதங்கள் சமாளிக்கும் அளவுக்கு செல்வந்தர் ஆவார்.

ஒருவர் தற்போதைய வாழ்க்கை முறையை இன்னும் பத்து வருடங்கள் வேலை எதுவும் செய்யாமல் பராமரிக்க முடிந்தால், அவர் 10 வருட பணக்காரர் / செல்வந்தர் ஆவார். இதில், பணவீக்கச் செலவும் அடங்கும். அதாவது, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப செலவு செய்ய அதிக பணம் அவரிடம் இருக்க வேண்டும்.

ஒருவர் எதிர்பார்க்கும் ஆயுள் முழுக்க தாராளமாக செலவு செய்வற்கான தொகுப்பு நிதியைச் சேர்த்துவிட்டால், அவர் வாழ்க்கையில் நிதிச் சுதந்திரத்தை (Financial Freedom) அடைந்துவிட்டார் என்று பெருமையுடன் கூறலாம். இதன் பொருள் அவர் வேலை பார்க்காமல் அல்லது பணத்துக் காக வேறொருவரை நம்பியிருக்காமல் அவர் விரும்பிய வாழ்க்கையை வாழலாம்.

ஆனால், இந்தச் சூத்திரத்தின் அடிப்படைப் புரிதல் ஒருவரின் மனநிறைவு என்பதாக ஆகும். உங்கள் வாழ்க்கைமுறை மற்றும் பண ஆசைகள் ஆகியவற்றில் திருப்தி அடைவதுதான் மிகப் பெரிய செல்வம் ஆகும். செல்வந்தராக இருப்பதைவிட, நம் வாழ்வில் நாம் எந்த நிலையில் இருந்தாலும் திருப்தியாக இருப்பது மதிப்புமிக்கது என்பதே இதன் பொருள்.

செல்வ உருவாக்கம் என்பது தனிப்பட்ட இன்பம், வாழ்க்கையின் நோக்கம், சமூக பங்களிப்பு, திருப்தி மற்றும் சுய நிறைவு ஆகியவற்றைக் கொண்டுவருகிறது.

பலரின் வருமானம் அதிகமாக இருக்கும். ஆனால், அவர்களின் செல்வம் குறைவாக இருக்கும். ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.1.5 லட்சம்கூட இருக்கும். ஆனால், அடுத்த மாதம் சம்பளம் வரவில்லை எனில், அவரால் அந்த மாதக் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாது.

பொதுவாக, நமது சம்பளம் /வருமானம் அதிகரிக்கும் போது செலவுகளும் அதிகரித்துவிடுகிறது. இதனால், செல்வந்தர் ஆகும் காலம் அதிகரிக்கிறது. சம்பளம் அதிகரிக்கும்போது செலவை அதிகரிக்காமல் சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரித்தால் விரைவாக செல்வந்தர் ஆகலாம்.

பொதுவாக, நமக்கு போனஸ் தொகை வருகிறது எனில், நாம் கண்டபடி செலவு செய்கிறோம். அதை நாம் சம்பளம் தவிர தனியே கிடைத்த தொகை என்பதால், அது ஏதோ நமக்கு சும்மா கிடைத்த தொகை என நினைக்கிறோம். ஆனால், அது ஓராண்டு முழுக்க நம் உழைப்புக்குக் கிடைத்த ஊக்கத் தொகை என்கிற எண்ணம் வந்தால், அந்தத் தொகையை கண்டபடி செலவு செய்யாமல் அதையும் எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைப்போம் அல்லது முதலீடு செய்வோம். அப்படிச் செய்யும்போது நாம் விரைவாக செல்வந்தர் ஆக முடியும்.

ஒருவர் தனது பணி ஓய்வுக்காலத்துக்குப் பிறகு 20 ஆண்டுகள் உயிர் வாழ்வோம் எனத் திட்டமிடுகிறார். அவரிடம் ரூ.1 கோடி ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி இருக்கிறது என வைத்துக்கொள்வோம். ஆண்டு சராசரி பண வீக்க விகிதம் 6% என வைத்துக்கொள்வோம். தொகுப்பு நிதி மூலம் ஆண்டுக்கு 8% வருமானம் வருகிறது. அவர் மாதச் செலவுக்கு ரூ.1 கோடியில் 5% அதாவது, 50,000 ரூபாயை எடுத்துச் செலவிடுகிறார் எனில், இந்த ரூ.1 கோடி என்பது 25 ஆண்டுகளுக்கு வரும். அவரின் தொகுப்பு நிதி ஆண்டுக்கு 8% வருமானம் கிடைப்பதால், அவர் ஒருபுறம் பணத்தை எடுத்துச் செலவு செய்தாலும் அவரின் பணம் பெருகிக்கொண்டிருக்கும். இப்படியாக அந்தப் பணம் 25 ஆண்டுகள் வரும்.

அவர் ஓய்வுக் காலத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தாலும் யார் கையையும் எதிர்பார்க்காமல் செல்வந்தராக வாழ முடியும். இங்கே அவரை 25 ஆண்டு செல்வந்தர் என்று குறிப்பிடலாம். நீங்கள் இப்படி வாழத் திட்டமிட்டால், நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளுங்கள். நீங்கள் திட்டமிட அவர்கள் நிச்சயம் உதவி செய்வார்கள்; முதலீட்டுக்கும் வழி காட்டுவார்கள்.

வருமானத்தைப் பணத்தில் மதிப்பிட வேண்டும்; செல்வத்தைக் காலத்தில் (மாதம் அல்லது ஆண்டுகள்) மதிப்பிட வேண்டும். நீங்கள் ஒரு நோக்கத்துடன் செல்வத்தை உருவாக்கும்போது நிச்சயம் கோடீஸ்வரர் ஆவீர்கள்; நிதிச் சுதந்திரம் பெறுவீர்கள்.

(கோடீஸ்வரர் ஆவோம்)