
மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 5
பணத்தைச் சரியாகக் கையாள்வது, நிர்வகிப்பது பெரும் பணம் சேர்ப்பது எல்லாம் ஒரு விளையாட்டு போன்றது. பெரும்பாலானோர் அவர்கள் விரும்புவதைப் பெறாமல் போக முதல் காரணம், அவர்கள் விரும்புவதை அவர்கள் சரியாக அறியாமல் இருப்பதாகும்.

பண விளையாட்டு...
பெரும்பாலானவர்கள் பண விளையாட்டி லிருந்து (Money Game) விலகி இருக்கிறார்கள். அவர்கள் பொதுவாக, பணத்தைத் தவிர்ப்பவர்கள் (Money Avoiders) என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது கிரெடிட் கார்டு அறிக்கைகளைக்கூட கவனிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் முதலீடுகள் (ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்குகள்), சொத்துகள் (மனை, வீடு), ஆபரணங்கள் (தங்கம், வெள்ளி மற்றும் வைர நகை) போன்ற செல்வத்தை (Wealth) மறு பரிசீலனை செய்ய மாட்டார்கள் மற்றும் பணம் குறித்த விஷயங்கள், கான்செப்ட் என வரும்போது அவர்கள் அவை குறித்து எதுவும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து தங்களைத் தாங்களே குறை கூறிக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஓய்வுபெற்ற பிறகும் வேலை செய்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் நிதி ரீதியாகச் சுதந்திரமாக இருக்க மாட்டார்கள்.
சிலர் பணத்துடன் வேறு மாதிரி விளையாடு கிறார்கள். அவர்கள் ஒரு போதும் மூலதனத்தை இழந்துவிடக் கூடாது என மிக ஜாக்கிரதையாக விளையாட்டை மேற்கொள்கிறார்கள். அவர்கள் எப்போதும் ரிஸ்க் இல்லாத பாரம் பர்ய முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்கிறார்கள். இதனால், குறைந்த வருமானத் தையே எப்போதும் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
மிகச் சிலரே பண விளையாட்டைச் சிறப்பாக மேற்கொள்கிறார்கள். அவர்கள் செல்வத்தைப் பெருக்கும் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களைப் பின்பற்றுகிறார்கள். பண நிர்வாகம் செய்வது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டு, அந்தப் பாடங்களைப் பின்பற்று வதன் மூலம் ஜெயிக்கிறார்கள்.
ஒருவர் செல்வந்தராக வேண்டுமெனில், ஹெட்ஜிங், டெரிவேட்டிவ்கள் (ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்) போன்ற அதிக ரிஸ்க் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. செல்வத்தை உருவாக்குவதில் மிக முக்கியமானது, நீங்கள் வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும் முதல் படியைத் தொடங்குவதுதான் மிக முக்கியம். இது நீங்கள் ஒரு முதலீட்டு மற்றும் நிதி நிபுணராக மாறுவதைவிட மிக முக்கியமானது. எந்த ஒரு பெரிய செயலும், ஒரு சிறிய அடி எடுத்து வைப்பதில்தான் ஆரம்பிக்கிறது என்பது முதலீட்டுக்கும் ஒருவர் செல்வந்தராவதற்கும் 100% பொருந்தும்.
பண விளையாட்டுக்குத் தயாராகத் திறந்த மனதுடன் இருப்பது அவசியம். விதிமுறைகளை அறியாமல் உங்களால் பண விளையாட்டை லாபகரமாகச் செய்ய முடியாது. உங்களின் அறிவு, திறன் மற்றும் முயற்சிகளில் பாதி அளவு கொண்ட சிலரைப் பார்த்து நீங்கள் சில சமயங்களில் ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள். காரணம், அவர்கள் உங்களை விட 3 அல்லது 5 மடங்கு அதிகம் சம்பாதிப்பார்கள். இதற்கு நீங்கள் பண விளையாட்டின் விதிமுறைகளை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

பணம் சம்பாதிக்க ஓர் எளிய விதிமுறை...
பழங்காலத்தில் வாழ்ந்த அரசர் ஒருவர் செல்வத்தை உருவாக்குவதற்கான அனைத்து விதிமுறைகளையும் ஒரே ஒரு வரியில் சுருக்கிச் சொல்லும்படி ஞானிகளிடம் கேட்டார். பல்வேறு விதிமுறைகளை ஆராய்ந்து பார்த்த அவர்கள் கடைசியில், ‘இந்த உலகில் எதையும் இலவசமாகப் பெற முடியாது (There is No Free Lunch in this world)’ என்கிற ஒரே ஒரு வரி விதிமுறையைச் சொன்னார்கள்.
இதுதான் செல்வத்தின் சட்டம் - நீங்கள் வருமானம் ஈட்டுவதற்கு முன் ஒரு வேலை செய்ய வேண்டும். சம்பாதித்த வருமானம் = வழங்கப்பட்ட மதிப்பு (Income Earned = Value provided) என்று சொல்லலாம். அதாவது, நீங்கள் ஒருவருக்குப் பணம் தருவதற்கான காரணம், அவர்கள் உங்களுக்கு மதிப்பான பொருள் அல்லது சேவையை வழங்குவதாகும். நீங்கள் தரும் பொருள்/சேவையில் மதிப்பு அதிகமாக இருந்தால், உங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
மதிப்பைக் கூட்டும் மூன்று வழிகள்...
பொதுவாக, மூன்று வழிகளில் நீங்கள் உங்களின் மதிப்பு மற்றும் வருவாயைப் பெருக்கலாம்.
1. நீண்ட நேரம் வேலை செய்வது
பகுதி நேர வேலை ஒவ்வொன்றிலும் வருமானம் என்பது வேலை நேரத்தைப் பொறுத்தது. நீண்ட நேரம் வேலை செய்தால் வருமானம் அதிகமாக இருக்கும். பலருக்கு மதிப்பை எவ்வாறு அதிகரிப்பது என்று தெரியவில்லை. அதனால், அவர்கள் அதிக மணி நேரம் வேலை செய்து அதிக பணம் சம்பாதிக்கிறார்கள்.
2. சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருப்பது
நம்மில் சிலர் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்-களில் படித்து, தகுதியின் அடிப்படையில் முதல் வேலையிலேயே மற்ற வர்களைவிட அதிக சம்பளத்தைப் பெறுவதைக் காண்கிறோம். அவர்கள் தங்கள் உயர்தகுதி மற்றும் மேம் படுத்தல் (Upgrade) காரணமாக மற்றவர்களைவிட அதிக மதிப்பைக் கொண்டு வர முடியும் என்று வேலைக்குச் சேர இருக்கும் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தை நம்ப வைக்கிறார்கள். அவர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள், குறைவாக வேலை செய்கிறார்கள். இதனால், அவர்கள் வசதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
3. அதிக மக்களுக்குச் உங்கள் சேவையைக் கொண்டுச் செல்லுங்கள்...
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மார்க் சக்கர்பெர்க், அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் முதல் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் வரை ஒவ்வொரு கோடீஸ்வரரையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களின் தயாரிப்புகள், பொருள்கள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களால் பயன் படுத்தப்படுகின்றன. எவ்வளவு அதிகமான நபர்களைச் சென்றடைந்து அதிக மதிப்பை வழங்க முடியுமோ, அவ்வளவு அதிகமா வருமானம் ஈட்ட முடியும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
மேற்கண்ட மூன்று முறை களில் நீங்கள் எந்த முறையை பின்பற்றுகிறீர்களோ, அந்த அளவுக்கு விரைந்து கோடீஸ்வரர் ஆக முடியும்.
(கோடீஸ்வரர் ஆவோம்)