பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

‘Money’ துளிகள்: இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கினால்தான் பர்சனல் லோன்!

‘Money’ துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
‘Money’ துளிகள்

‘Money’ துளிகள்..!

‘Money’ துளிகள்: இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கினால்தான் பர்சனல் லோன்!

ரூம் புக்கிங்... உஷார் மக்களே உஷார்!

நான் ஆன்லைன் தளம் ஒன்றில் ஹோட்டல் அறை புக் செய்தேன். ரூம் வாடகை ரூ.6,000 எனக் குறிப்பிட்டிருந்தார்கள். இன்னொரு ஆன்லைன் தளத்தில் அதே ஹோட்டலில் அதே அறை ரூ.4,000 எனக் குறிப்பிட்டிருக்கவே நான் அதில் புக் செய்தேன். நேரில் சென்றபோதுதான் இரண்டு ஹோட்டல்களும் வேறுவேறு எனத் தெரிய வந்தது. பிறகு, பலவிதமான அசெளகரியங்களுடன் சுற்றுலா சென்ற மகிழ்ச்சியே இல்லாமல் திரும்பினோம். ஆன்லைனில் அறை புக் செய்யும்போது நம்பகமான தளங்களில் ஹோட்டல்களைத் தேர்வு செய்வது மிக முக்கியம் தோழர்களே!

- ஆ.சந்தோஷ், புதுக்கோட்டை

‘Money’ துளிகள்: இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கினால்தான் பர்சனல் லோன்!

இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கினால்தான் பர்சனல் லோன்!

கடந்த சில மாதங்களாக எனக்கு பணச்சிக்கல். பர்சனல் லோன் கேட்டு பொதுத்துறை வங்கிகளை அணுகினேன். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி என்னை அலைக்கழித்தார்களே தவிர, எனக்கு கடன் தரவில்லை. இந்த நிலையில், எங்கு கடன் கிடைக்கும் என்பது தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தேன். அப்போதுதான் தனியார் வங்கி ஒன்றில் இருந்து போன் வந்தது. ‘உங்களுக்கு பர்சனல் லோன் வேண்டுமா?’ என்று கேட்டார்கள். நான் கடனுக்காக அலைகிற விஷயம் அவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை. ‘ஆமாம்’ என்றேன். என் பான் கார்டு நம்பரை வாங்கிக்கொண்டார்கள். மறுநாள் எனக்கு போன் செய்து பர்சனல் லோன் தரத் தயார் என்றார்கள். வட்டி எவ்வளவு என்று கேட்டேன். அவர்கள் சொன்னதை வைத்து கணக்கு போட்டுப் பார்த்தபோது, 20% வரை வந்தது. ஆபத்துக்கு பாவமில்லை என்று வாங்க நினைத்தபோது, இன்னொரு கண்டிஷன் போட்டார்கள். ‘ஆண்டுதோறும் 25,000 ரூபாய் பிரீமியம் கட்டுகிறமாதிரி ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கடன் கிடைக்கும்’ என்றார்கள். இந்த பாலிசியை எடுப்பதால், எனக்கு எந்த பிரயோஜனமும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. எனக்கு அவசரமாகக் கடன் தேவைப்பட்டதுதான். அதற்காகத் தேவையில்லாத இன்ஷூரன்ஸ் பாலிசியை நான் ஏன் வாங்க வேண்டும் என்று நினைத்து, ‘பாலிசி வேண்டாம்; கடன் மட்டும் கொடுங்கள்’ என்றேன். அதன்பிறகு அந்த வங்கியில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. நம் அவசரத்தைப் பயன்படுத்தி, நம் தலையில் தேவையில்லாத இன்ஷூரன்ஸ் பாலிசியைக் கட்டப் பார்த்தார்கள். நல்லவேளை, நான் மாட்டிக்கொள்ளவில்லை. எல்லோரும் உஷாராக இருப்பது நல்லது!

- கே.மாணிக்கவேல், சென்னை - 34

‘Money’ துளிகள்: இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கினால்தான் பர்சனல் லோன்!

சூப்பர் மார்க்கெட் பர்ச்சேஸ்...பொருள்கள்மீது கவனம் முக்கியம்!

கடந்த வாரம் வழக்கமாக நான் செல்லும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று வந்தேன். 5,000 ரூபாய்க்குப் பொருள்களை பர்ச்சேஸ் செய்தேன். பில் போடும் இடத்தில் கூட்டமாக இருந்தது. எதற்கு நேரத்தை வீணடிக்க வேண்டும் என பில் போட்டு பேக் செய்யச் சொல்லிவிட்டு, பக்கத்தில் இருந்த காய்கனி மார்க்கெட்டுக்குச் சென்றுவிட்டேன். சூப்பர் மார்க்கெட்காரர் பழக்கமானவர் என்பதால் தோராயமாக ரூ.6,000 தொகையும் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டேன். அரை மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து தயாராக இருந்த பேக்கிங்கை எடுத்துக்கொண்டு, மீதி தொகையையும் பெற்றுக்கொண்டேன். வீட்டுக்கு வந்து பொருள்களை அடுக்கி வைக்க எடுத்தபோது 5 கிலோ கோதுமை பாக்கெட் இல்லை. பில்லை செக் பண்ணினேன். பில்லில் போடப்பட்டிருந்தது. மீண்டும் கடைக்குச் சென்று விசாரித்தபோதும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. பிறகு, என் தோழி தன் அனுபவத்தைச் சொன்னபோதுதான் தவறு இப்படி நடந்திருக்கலாம் எனத் தோன்றியது. ‘பில் போடப்பட்ட பிறகு, மேசையில் இருந்து எல்லா பொருள்களையும் இன்னொரு நபர் பையில் எடுத்துப் போடுகிறார். முன்னதாக பில் போட்ட நபரின் பையில் நமக்கான பொருளை தவறுதலாக எடுத்துப் போட்டிருக்கக்கூடும். எனக்கு ஒருமுறை இப்படி நடந்தபோது அருகில் நான் இருந்ததால் கவனித்தேன்’ என அவள் சொன்னாள். பில் போட்டு, நமக்கான பொருள்களை நம் பையில் எடுத்துப் போடும்போது உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது அவசியம் எனப் புரிந்துகொண்டேன்.

- சி.தனலட்சுமி, திருச்சி - 17

‘Money’ துளிகள்: இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கினால்தான் பர்சனல் லோன்!

பாஸ்வேர்டு... பாக்கெட் டைரி அபாயம்!

நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். ஏ.டி.எம் கார்டு, நெட் பேங்கிங் என பலவித பின் நம்பர்களும் பாஸ்வேர்டுகளும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள சிரமப்பட்டு பாக்கெட் டைரியில் குறித்து வைத்துக்கொள்வது வழக்கம். வெளியூரில் பணி யாற்றும் என் மகன் வீட்டுக்கு ரயிலில் சென்ற போது என் பர்ஸும், பாக்கெட் டைரியும் காணாமல் போய்விட்டது. தொலைந்துவிட்டது எனக்கு தெரிய வந்ததும். என் மகனுக்கு தகவல் சொல்லி வங்கிக்குத் தெரிவித்து கார்டுகளை முடக்கிவிட்டோம். ஆனால், என் இரண்டு கணக்கிலிருந்தும் ரூ.65,000 வரை பணத்தை எடுத்துவிட்டார்கள். பாஸ்வேர்டு, பின் நம்பர்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், பிறந்த தேதி, வருடங்களை பாஸ்வேர்டு, பின் நம்பராக வைத்துக்கொண்டால் குறித்துவைக்க வேண்டியதில்லை. நண்பர் ஒருவர் சொன்ன இந்த ஐடியாவைத்தான் இப்போது ஃபாலோ பண்ணுகிறேன்.

- வா.வேணுகோபால், பொள்ளாச்சி

பண அனுபவங்களைப் பகிருங்கள்..!

சேமிப்பு, முதலீடு, ஏமாற்றம், இழப்பு, ஷாப்பிங், லாபம், நஷ்டம் என எல்லாவிதமான பண அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனுபவங்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய மெயில் முகவரி: navdesk@vikatan.com