தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

விலையைக் கேட்க வெட்கப்படாதீர்கள்!

‘Money’ துளிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
News
‘Money’ துளிகள்..!

‘Money’ துளிகள்..!

ஓவியங்கள்: அஞ்சலி.ஜி
ஓவியங்கள்: அஞ்சலி.ஜி

விலையைக் கேட்க வெட்கப்படாதீர்கள்!

சமீபத்தில் காய்கனி வாங்குவதற்காக பெரிய கடை ஒன்றுக்குச் சென்றேன். எல்லாக் காய்கனிகளும் ஃப்ரெஷ்ஷாக இருக்கவே ஆர்வமாக அள்ளிப் போட்டுக் கொண்டேன்.

வீட்டுக்குச் சென்றதும் பில்லைப் பார்த்து விட்டு என் மனைவி திட்டித் தீர்த்துவிட்டாள். ‘‘எல்லாக் காய்கனிகளும் டபுள் விலை. மளிகைக் கடையில் 20 ரூபாய்க்கு விற்கும் சுரைக்காயை 55 ரூபாய் தந்து வாங்கி வந்துள்ளீர்கள். மிடில் கிளாஸ் மக்கள் நாம் விலையைக் கேட்டு வாங்குவதில் என்ன வெட்கம்...” எனச் சொன்னாள் என் மனைவி. அவள் சொன்னதில் தவறு எதுவும் இல்லையே!

- என்.கணேசன், கோவை - 12

விலையைக் கேட்க வெட்கப்படாதீர்கள்!

கார் வாங்குவது பெருமையா..?

என் மைத்துனர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பெரிய அதிகாரியாக உள்ளார். தினம் அலுவலகம் வந்துபோக அவர் நிறுவனத் தில் அவருக்கு புது கார் வழங்கினார்கள். எங்கள் வீட்டுக்கு வரும்போது குடும்பத்துடன் புது காரில் வந்து இறங்கினார்கள். கார் வழங்கியபிறகு அலுவலகம் சென்றுவர மிகச் சுலபமாக இருப்பதாக மைத்துனர் பெருமையாகச் சொன்னார்.

ஒன்றிரண்டு நாள்களில் என் மனைவி என்னை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். இனி கார் வாங்கினால்தான் என்னுடன் வெளியிடங் களுக்கு வருவேன் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள். எல்லோரும் காரில் பெருமையாக வந்து போகிறார்கள். என்னால் அவமானப்பட முடியாது எனச் சொல்லி நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷத்துக்குக்கூட வர மறுத்துவிட்டார்.

என் வருமானத்தில் கார் வாங்கினால் கஷ்டம் எனத் தெரிந்தும் வேறு வழியில்லாமல் லோனில் கார் வாங்கிவிட்டேன். டீசல், பராமரிப்பு என யானையைக் கட்டி தீனி போட்ட கதையாய் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

- கே.மணிசேகரன், சென்னை - 45

விலையைக் கேட்க வெட்கப்படாதீர்கள்!

ஹெல்த் பாலிசி... உண்மையை மறைக்காதீர்கள்!

என்னுடைய அண்ணன் ஒரு தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அங்கிருந்த ஏஜென்ட் ஒருவர் அறிவுறுத்தியதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய்க்கு மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்திருந்தார். மூன்று வருடம் பணம் கட்டிய நிலையில் நாக்குக்கு அடியில் திடீரென ஏற்பட்ட ஒரு கேன்சர் கட்டியை அகற்ற ஒரு தனியார் மருத்துவமனையை அணுகினார்.

கட்டியை அறுவைசிகிக்சை மூலம் அகற்ற ரூ.3 லட்சம் வரை ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அந்த மருத்துவமனையில் இருந்த இன்ஷூரன்ஸ் பிரிவை அணுகியபோது, அவர்கள் கூறியது அதிர்ச்சிகரமாக இருந்தது. ஏற்கெனவே வேறொரு கேன்சர் கட்டியை 5 வருடங்களுக்கு முன்பு அதே மருத்துவமனயில் அகற்றியதை காப்பீடு செய்யும்போது மறைத்துவிட்டதாகவும், அதனால் காப்பீட்டுத் தொகை கிடைக்காது என்றும் கூறினார்கள்.

பத்திரத்திலும் இதற்குமுன் வேறு நோய்கள் இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்று தெரிவித்த அத்தாட்சி சுட்டிக் காட்டினார்கள். கடைசியில் கடன் வாங்கி அறுவை சிகிக்சையை முடித்தோம். மருத்துவக் காப்பீடு எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் ஏற்கெனவே வந்த நோய்கள் பற்றிய உண்மையானத தகவல்களை மறைக்காமல் இருப்பது!

- மு.சுப்பையா, தூத்துக்குடி-5.

விலையைக் கேட்க வெட்கப்படாதீர்கள்!

பெட்ரோல் போடும்போது கவனம் மக்களே!

அண்மையில் பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் பங்க் சென்றபோது எனக்கு நடந்த அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொன்னேன். பெட்ரோல் பங்க் ஊழியர் என்னிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு நிறுத்தினார். நான் 500 ரூபாய்க்கு போடச் சொன்னதை நீங்கள் கவனிக்கவில்லையா என்றேன். அவர் அப்படியா... சரி என்று கூறிவிட்டு, எனக்குப் பின்னால் ஏதோ ஒன்றைச் சுட்டிக்காட்டி சொன்னார். நான் பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் திரும்புவதற்குள் அவர் பெட்ரோல் போட்டுக் கொண்டு இருந்தார். 400 ரூபாய் வந்தவுடன் நிறுத்திவிட்டு பணம் கேட்டார்.

நான் 500 ரூபாய் வரவில்லையே என்றேன். அவர் முன்பே 100 ரூபாய்க்கு போட்டுவிட்டதாகவும், பிறகு ஜீரோ செய்துவிட்டு 400 ரூபாய்க்குப் போட்டதாகவும் சொல்லி 500 ரூபாய் வாங்கிவிட்டார். நான் ஏமாற்றப்பட்டது தெரிந்தும் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. இந்த சம்பவம் முதல் நான் பெட்ரோல் போடும்போது கவனமாக இருக்க ஆரம்பித்தேன். பெட்ரோல் பங்க் ஊழியர் நம் கவனத்தைத் திருப்ப முயற்சி செய்தாலும், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உஷார் மக்களே!

- நா.கிஷோர் குமார், தேன்கனிக்கோட்டை

பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு துணுக்குக்கும் பரிசு: ரூ.200

பண அனுபவங்களைப் பகிருங்கள்..!

சேமிப்பு, முதலீடு, ஏமாற்றம், இழப்பு, ஷாப்பிங், லாபம், நஷ்டம் என எல்லாவிதமான பண அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனுபவங்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய மெயில் முகவரி: navdesk@vikatan.com