
பணம் என் சாய்ஸ்!
‘‘நான் சின்ன வயதிலேயே நடன கச்சேரிகளில் பங்கேற்பேன். அப்போது அப்பா - அம்மாதான் கணக்கு வழக்குகளைப் பார்த்தாங்க. நான் 12-ம் வகுப்பு படிக்குறப்ப சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன். அப்போ என் ஒரு நாள் சம்பளம் ரூ.4,000. முதல் திரைப் படத்தில் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கினேன்.
நான் கல்லூரி படிக்கத் தொடங்கிய முதல் ஆண்டு வங்கியில் எனக்கென்று ஒரு தனி கணக்கு ஆரம்பித்து, பாஸ் புக், ஏ.டி.எம் கார்டு வாங்கினேன். அப்போது இருந்து இப்போது வரை நான் நிதிச் சுதந்திரம் உள்ள பெண்.

நான் செலவாளி கிடையாது. சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் பார்த்துப் பார்த்துதான் செலவு செய்வேன். ஒரு பொருளை வாங்குற துக்கு முன் பல முறை யோசிப்பேன். எதையும் சரியான திட்டமிடலுடன்தான் செய்வேன்.
ஆரம்பத்தில் எனக்கு டாக்ஸ் பற்றியோ, சேமிப்புகள் பற்றியோ பெரிசா தெரியாது. யாராவது ஒரு நபரை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அதன்பின் நானே கற்றுக்கொண்டேன். இப்போது டாக்ஸ் தொடங்கி சேமிப்பு வரை எல்லாவற்றையும் நானே நிர்வாகம் செய்கிறேன்.
வாழ்க்கைக்குப் பணம் முக்கியம். ஆனா, பணம் மட்டுமே வாழ்க்கை இல்ல. வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடணும். எனக்கு டிராவல் ரொம்ப பிடிக்கும். டிராவல் மூலம் கிடைக்கும் அனுபவங்களைத்தான் நான் பெரிய சொத்தாக நினைக்கிறேன்.
இப்போதைக்கு தங்கத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் என் சேமிப்புகள் இருக்கின்றன. நம்முடைய அம்மா, அப்பா, கணவர் என நம்முடன் இருப்பவர்கள் கோடி ரூபாய் சம்பாதித்தாலும், நமக்காக நாம் சம்பாதிப்பது மட்டுமே சுயமரியாதையை எப்போதும் தக்கவைத்துக்கொள்ள ஒரே வழி.”