பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

காலாவதி பொருள்கள்... ஆஃபர் எச்சரிக்கை..!

லிங்கை க்ளிக் செய்யுங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
லிங்கை க்ளிக் செய்யுங்கள்...

‘Money’ துளிகள்..!

ஓவியங்கள்: அஞ்சலி.ஜி
ஓவியங்கள்: அஞ்சலி.ஜி

காலாவதி பொருள்கள்... ஆஃபர் எச்சரிக்கை...

சமீபத்தில் பிரபல மளிகைக்கடை வாசலில் குறிப்பிட்ட சில பொருள்களுக்கு 20% - 50% ஆஃபர் எனப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதைப் பார்த்து குஷியாகி குடும்பத்தோடு உள்ளே நுழைந்துவிட்டோம். ஆஃபரில் பொருளை அள்ள கூட்டமும் அலைமோதியது. பிஸ்கட் பாக்கெட், குழம்பு மசாலா பொடிகள், சேமியா பாக்கெட், பேரீச்சை என எல்லாமே அதிரடி தள்ளுபடி. 5,000 ரூபாய்க்கு மேல் பொருள்களை வாங்கிக் குவித்து விட்டோம்.

வீட்டுக்கு வந்தபின் ஒவ்வொரு பொருளாகப் பார்த் தோம். தற்செயலாக எக்ஸ்பையரி டேட் பார்க்க எல்லாமே ஓரிரு நாளில் காலாவதியாகக்கூடிய உணவுப் பொருள் களாக இருந்தன. அதிர்ச்சியோடு திருப்பிக் கொண்டுபோய் கடையில் தந்தபோது, ஆஃபரில் வாங்கிய பொருள்களுக்கு ரிட்டர்ன் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். அத்தனை பொருள்களையும் ஓரிரு நாள்களுக்குள் உபயோகப்படுத்த முடியாததால், தெரிந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தோம். அன்று முதல் ஆஃபர் என்றாலே மிகவும் எச்சரிக்கையாக அணுகுகிறோம்!

- பெ.பாண்டியன், காரைக்குடி.

காலாவதி பொருள்கள்... ஆஃபர் எச்சரிக்கை..!

லிங்கை க்ளிக் செய்யுங்கள்... பரிசுகளை அள்ளுங்கள்..!

எனக்கு வயது 80-க்குமேல் ஆகிறது. சில மாதங் களுக்கு முன் வெளியூரிலிருக்கும் என் தம்பி என் கைபேசிக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தியை அவர் அனுப்பியிருந்தார். அதில் ஒரு பிரபல வேட்டி, பனியன் தயாரிக்கும் நிறுவனம் நடத்தும் போட்டி இருந்தது. அதில் உள்ள லிங்கைக் க்ளிக் செய்தால், சில சுலபமான கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருக்கும் என்றும், அதற்கு சரியான பதில்களை அனுப்பினால் குலுக்கல் முறையில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பரிசுகளை அனுப்புவார்கள் என்றும் என் தம்பி கூறினார்.

நான் உடனே லிங்கைக் க்ளிக் செய்து கேள்விகளுக்கான பதில்களை அனுப்பிவிட்டு, பரிசுக்கான கனவில் மூழ்கிவிட்டேன். வெளிநாட்டிலிருக்கும் என் பேரனிடம் நான் பெருமையாக இது குறித்து கூறினேன். அவனோ, “பாட்டி, உங்களைப் போன்ற வயதானவர்களைக் குறிவைத்து இதுபோன்ற பல கோல்மால் பேர்வழிகள் கிளம்பிவிட்டார்கள். அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கி லுள்ள பணத்தை உங்களுக்குத் தெரியாமல் எடுத்தால் என்ன செய்வீர்கள்’’ என்று பொரிந்து தள்ளினான். அவன் சொன்னது சரிதான். சில நாள்கள் கழித்து அந்த பிரபல நிறுவனம் தாங்கள் அதுபோல் எந்தப் போட்டியையும் நடத்தவில்லையென்றும், மக்கள் யாரும் ஏமாற வேண்டா மென்றும் செய்தித் தாள்களில் விளம்பரம் கொடுத்திருந்தது.

- ஆர்.பார்வதி, சென்னை – 53

காலாவதி பொருள்கள்... ஆஃபர் எச்சரிக்கை..!

முதலீட்டில் தொடர்ச்சியான அணுகுமுறை முக்கியம்!

எனக்குத் திருமணம் ஆகும் முன்பே தவணை முறையில் வீட்டுமனைத் திட்டத்தில் சேர்ந்து மாதம்தோறும் தொகை செலுத்தி வந்தேன். இரண்டரை ஆண்டுகள் செலுத்திய நிலையில் திருமணம் முடித்து சென்னையில் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழலால் பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை. தொடர்ந்து தவணைத் தொகை கட்ட முடியாமல் போனது. அந்த இடத்துக்கான அன்றைய விலை ரூ.35,000. இப்போது அதன் மதிப்பு ரூ.35 லட்சம். அதே போல, அந்தக் காலகட்டத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசியும் எடுத் திருந்தேன். இரண்டே முக்கால் வருடங்கள் பிரீமியம் கட்டியும் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம். கட்டிய தொகையும் கிடைக்கவில்லை. சில ஆண்டுகள் சமாளித்து தொடர்ந்து கட்டியிருந்தால், மகளின் கல்விச் செலவுக்காவது அந்தத் தொகை உதவியிருக்கும். முதலீடு, காப்பீட்டுத் திட்டங்களில் சேரும்முன், தொடர்ந்து தொகையைச் செலுத்த முடியுமா என யோசித்து சேர வேண்டும்; சேர்ந்த பிறகு கஷ்டம் வரும்போது, விட்டுவிடாமல் தொடர்ந்து பணம் கட்டும் வழியைத் தேட வேண்டும். முழுமையாகக் கட்டி முடிக்க முடியாத திட்டத்தில் சேரவே கூடாது என்பதை சற்றுத் தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன்.

- சிவ்ராம், சென்னை.

காலாவதி பொருள்கள்... ஆஃபர் எச்சரிக்கை..!

தவறான முடிவுகளால் முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டம்!

சிறப்பாகச் செயல்பட்ட ஃபண்ட் திட்டம் ஒன்றில் 2012-ம் ஆண்டு முதல் எஸ்.ஐ.பி முறையில் மாதம் தோறும் முதலீடு செய்து வந்தேன். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என எனக்கு சிலர் ஆலோசனை சொன்னார்கள். நானும் மியூச்சுவல் ஃபண்டில் இருந்த முதலீட்டை ரியல் எஸ்டேட் முதலீடாக மாற்றினேன். 2,100 சதுர அடி மனை வாங்கினேன். அன்று நான் முதலீடு செய்து வந்த ஃபண்ட் இன்று பல மடங்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. ஆனால், நான் வாங்கிப் போட்ட மனையை விற்று காசாக்க நினைக்கும்போது. விலை பெரிதாக ஏறவில்லை. வாங்க நினைப்பவர்களும் சொற்பமாகவே உள்ளனர். பணத் தேவை இருக்கும் நேரத்தில் லாபத்துக்கு விற்க முடியாத நிலை உள்ளது. முதலீட்டு விஷயத்தில் பிறரின் ஆலோசனைகளைக் கேட்பது தவறில்லை. ஆனால், ஆலோசனை சொல்பவர்களின் அனுபவம், தகுதி அறிவதுடன் நாமும் சுயமாக யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

- ஜி.ராஜசரவணன், நாகப்பட்டினம்.

பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு துணுக்குக்கும் பரிசு ரூ.250

பண அனுபவங்களைப் பகிருங்கள்..!

சேமிப்பு, முதலீடு, ஏமாற்றம், இழப்பு, ஷாப்பிங், லாபம், நஷ்டம் என எல்லாவிதமான பண அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனுபவங்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய மெயில் முகவரி: navdesk@vikatan.com