தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

டோர் டெலிவரி... உஷார் மக்களே!

‘Money’ துளிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
News
‘Money’ துளிகள்..!

‘Money’ துளிகள்..!

ஓவியங்கள்: அஞ்சலி.ஜி
ஓவியங்கள்: அஞ்சலி.ஜி

டோர் டெலிவரி... உஷார் மக்களே!

எங்கள் வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்களை வாடிக்கையாக டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்றில் வாங்குவோம். வாட்ஸ்அப்பில் பொருள்களின் லிஸ்ட்டை அனுப்பினால் சில மணி நேரங்களில் டெலிவரி செய்துவிடுவார்கள். ஆனால், கடந்த நான்கைந்து மாதங்களாக நாங்கள் கேட்கும் பிராண்டட் மசாலாப் பொருள்கள், ரவை, பஜ்ஜி மிக்ஸ், எண்ணெய் வகைகள் ஸ்டாக் இல்லை எனச் சொல்லி அவற்றுக்குப் பதிலாக அவர்களின் தயாரிப்புகளை சப்ளை செய்ய ஆரம்பித்தார்கள்.

எனக்கு சந்தேகம் எழவே, நேரில் அந்தக் கடைக்குச் சென்று பார்த்தேன். நாங்கள் கேட்ட பிராண்டட் பொருள்கள் அனைத்துமே அங்கு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஸ்டோரின் தயாரிப்புப் பொருள்களின் தரம் குறைவு. அவர்களின் தயாரிப்புப் பொருள்கள் விற்பனையில் அவர்களுக்கு லாபம் அதிகம். கடைக்காரர் லாபம் பார்க்க என்னைப் போன்ற பலரையும் ஏமாற்றி வந்துள்ளார். டோர் டெலிவரி பர்ச்சேஸ் முறையில் பொருள்களை வாங்கும்போது கூடுதல் கவனம் அவசியம்!  

- டி.ஆர்.ரவீந்திரன், ஈரோடு. 

டோர் டெலிவரி... உஷார் மக்களே!

மருத்துவக் காப்பீடு கவரேஜ்... கவனம் தேவை!

சமீபத்தில் என் அப்பாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவானது. ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே மருத்துவக் காப்பீடு இருந்தது. பாக்கி ரூ.1.5 லட்சத்தைக் கையில் இருந்த பணத்தை வைத்து செலவு செய்தேன்.

அறுவை சிகிச்சை நடப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன், அப்பாவின் வயதுக்கு ஏற்ப மருத்துவக் காப்பீடு கவரேஜை ரூ.3 லட்சமாக ஆக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அதோ இதோ எனக் காலத்தைக் கடத்தினேனே தவிர, அதைச் செய்யாமல் விட்டுவிட்டேன். சரியான நேரத்தில் செய்யாத காரியத்தால் எனக்கு ஏற்பட்ட இழப்பு இது என்பதைப் புரிந்துகொண்டேன்.

வயதுக்கேற்பவும் மருத்துவச் செலவு அதிகரிப்புக்கு ஏற்பவும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கவரேஜை அதிகரித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்பதை நன்கு அறிந்துகொண்டேன்.

- எம்.பழனியப்பன், சென்னை.

டோர் டெலிவரி... உஷார் மக்களே!

வாரன்டி பத்திரம்..!

எங்கள் எல்.இ.டி டிவியில் திடீரென கோடுகள் தெரிய வரவே, வாரன்டி இருப்பதால், போன் செய்து சொல்லிவிடுமாறு என் மகனிடம் சொன்னேன். ஆனால், அவனோ அலுவலக வேலையாக நான்கு நாள்கள் பெங்களூரு சென்றுவிட்டான். நானே போன் செய்யலாம் என்று டிவியின் வாரன்டி விவரங்களைத் தேடினால் கிடைக்கவில்லை.

மகன் திரும்பி வந்தவுடன் கம்ப்யூட்டரில் வாரன்ட்டி காப்பியைக் கண்டுபிடித்துப் பார்த்தால், இரண்டு நாள்களுக்கு முன்பே வாரன்டி காலாவதி ஆகியிருந்தது. எவ்வளவோ சொல்லியும் ஃப்ரீ சர்வீஸுக்கு கம்பெனி ஒப்புக்கொள்ளவில்லை. ரூ.15,000 செலவு செய்து டிவியை சரிசெய்தேன். இந்த நிகழ்வுக்குப் பிறகு, எந்த சாதனம் வாங்கினாலும் வாரன்டி கார்டு, பில் போன்றவற்றை தனி ஃபைல் போட்டு பத்திரமாக வைக்க பழகிக்கொண்டேன்.

- மனோகர், மைசூர்

டோர் டெலிவரி... உஷார் மக்களே!

தற்பெருமையால் தொலைந்த ஓய்வுக்கால பணம்!

எனக்குத் தெரிந்த ஒரு பெரியவரின் அனுபவம் இது. அவரிடம் பல லட்சம் பணமிருந்தது. அதை நம்பிக்கையான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யாமல், தெரிந்தவர்களிடம் எந்தவித ஆதாரச் சான்றோ, பொருளோ பெற்றுக்கொள்ளாமல் சொற்ப வட்டிக்குக் கடன் கொடுத்து வந்தார். சிலர் சரியாக வட்டியைக் கொடுத்து வந்தார்கள். அந்தப் பெரியவரின் நோக்கம், வட்டிக்கு விட்டு வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதல்ல. நாலு பேருக்குமுன், தான் பெரிய பணக்காரர் எனத் தெரிய வேண்டும் என்பதுதான்.

இவரின் குணாதிசயத்தை நன்றாகத் தெரிந்துகொண்ட சிலர், அவரை கொடைவள்ளல், தாராள குணமுடையவர் எனப் புகழ்ந்து பேசி, பெரிய தொகையைக் கடனாகப் பெற்றுக்கொண்டு, வட்டியும் தராமல் அசலையும் தராமல் இழுத்தடித்தார்கள். பணம் வாங்கிய சிலர் வெளியூருக்குச் சென்றுவிட்டார்கள். இப்போது விழிபிதுங்கி நிற்கிறார் பெரியவர். வயதான காலத்தில் கையில் இருக்கும் தொகையை கவனமாகக் கையாளாவிட்டால் இப்படித்தான் அவஸ்தைப்பட நேரிடும்.

- சிவா, தஞ்சாவூர்

பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு துணுக்குக்கும் பரிசு ரூ.250

பண அனுபவங்களைப் பகிருங்கள்..!

சேமிப்பு, முதலீடு, ஏமாற்றம், இழப்பு, ஷாப்பிங், லாபம், நஷ்டம் என எல்லாவிதமான பண அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனுபவங்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய மெயில் முகவரி: navdesk@vikatan.com