கட்டுரைகள்
Published:Updated:

முதலீட்டில் லாபம் ஈட்ட 10 கட்டளைகள்!

முதலீட்டில் லாபம் ஈட்ட 10 கட்டளைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீட்டில் லாபம் ஈட்ட 10 கட்டளைகள்!

திட்டமிட்டு, புரிந்து, நல்ல முதலீட்டைச் செய்துவிட்டாலும், வேலை முடிந்தது என்று அமராதீர்கள். முதலீட்டைப் பராமரிக்க வேண்டும்

கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக டீமேட் கணக்குகள் கணக்கில்லாமல் உயர்ந்துள்ளன. பங்குச் சந்தையும் புதிய உச்சத்தைத் தொட்டது. இவை பல புது முதலீட்டாளர்களின் வருகையால் நடந்த சாதனையே. இந்தப் புது முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ளவும், பழைய முதலீட் டாளர்கள் நினைவுகூரவும் பத்துக் கட்டளைகள் இங்கே...

1. மந்திரக்கோல் எதுவும் இல்லை

பணம் சம்பாதிக்க எந்த மந்திரக்கோலும் இல்லை. சரியான திட்டமிடலும் புரிந்துகொள்ளலும் பொறுமையும்தான் தேவை. அதிர்ஷ்டம் சில நேரம் சிலருக்கு அமைந்தாலும் அது எப்போதும் கைகொடுப்பதில்லை.

I எம்.கண்ணன், நிதி ஆலோசகர் radhaconsultancy.blogspot.com
I எம்.கண்ணன், நிதி ஆலோசகர் radhaconsultancy.blogspot.com

2. எப்போது லாபம் அதிகம்?

ரிஸ்க் எடுக்கத் தயங்கும் பல முதலீட்டாளர்கள், லாபம் மட்டும் அதிக அளவில் சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். இது பேராசை. உதாரணமாக ஈக்விட்டி வகையான திட்டங்களில் ரிஸ்க் அதிகம், லாபமும் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்ட்களில் ரிஸ்க் குறைவு, லாபமும் குறைவு. எனவே ரிஸ்க் அதிகமாகும்போது லாபம் அதிகமாகும்; ரிஸ்க் குறையும்போது லாபம் குறையும்.

3. ரிஸ்க் அதிகம் வேண்டாம்

இரண்டாவது கட்டளையைப் படித்துவிட்டு, ‘நான் அதிக ரிஸ்க் எடுத்து அதிக லாபம் பார்ப்பேன்’ என்று கோதாவில் இறங்க வேண்டாம். உங்களது நிதி நிலைக்கு ஏற்றவாறு, எந்த அளவில் ரிஸ்க் சாத்தியமோ அந்த அளவுக்கே இறங்கவேண்டும். அதை எப்படித் தெரிந்துகொள்வது என்கிறீர்களா? ரிஸ்க் ப்ரொபைலர் (Risk profiler) என்று கூகுள் கடவுளிடம் கேளுங்கள். ரிஸ்க் பற்றி அறிந்து, தெரிந்து, பின்னர் ரிஸ்க் எடுக்கவும்.

4. பொது அறிவை அதிகம் பயன்படுத்துங்கள்

பணம் சம்பாதிக்க, நிறைய நேரங்களில் பொது அறிவு மட்டுமே போதுமானது. படிப்பதில், பார்ப்பதில், கேட்பதில், நிதி பற்றிய சரியான விவரங்களைச் சேகரியுங்கள், புரிந்துகொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு முதலீடு செய்யுங்கள். உதாரணமாக, வங்கி வட்டி 7% - 8% என்று இருக்கும்போது ஒருவர்/ஒரு நிறுவனம் 15%, 20% வட்டி தருகிறது என்றால் அந்த வீதிக்குப் போகாதீர்கள். இது படிப்பறிவு தரும் நன்மை மற்றும் உண்மை.

முதலீட்டில் லாபம் ஈட்ட 10 கட்டளைகள்!

5. கவனச்சிதறல் கூடவே கூடாது

கவனச்சிதறல், நமது பணம் தொலைந்து போக வழிவகுக்கும். ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது அல்லது பணப் பரிவர்த்தனைகள் செய்யும்போது, சிறிய அளவில்கூட கவனச்சிதறல் இருக்கக்கூடாது. நிதி பற்றிய ஆன்லைன் பரிமாற்றங்களில் எதையும் எளிதில் நம்பிவிடாதீர்கள். மிக மிக கவனமாகச் செயல்படுங்கள்.

6. விற்பவர்கள் சமர்த்து, வாங்குபவர்கள் ஏமாளிகளா?

விற்பவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், நாம் வாங்கும் முன் அது சரியானதா, அல்லது மிகைப்படுத்தப்பட்டதா என்பதைப் பார்க்க வேண்டும். தெரியவில்லை என்றால் வாங்க வேண்டாம். பொறுத்திருந்து வாங்கலாம். மேலும், தேவையில்லாத திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.

7. பேராசை பெருநஷ்டம்

கட்டளை நான்கில் கூறியபடி வங்கி 7% - 8% வட்டி தரும்போது தனிநபரோ நிறுவனமோ மிக அதிக வட்டி தருவதாகக் கூறினால் முதலீடு செய்து ஏமாறாதீர்கள். வட்டி கூடக் கூட, கட்டளை மூன்றில் சொன்னபடி ரிஸ்க்கும் கூடுகிறது. அதிக வட்டி என்பது வலை.

8. திட்டமிடுதல் அடிப்படை

எந்த அளவு பணத்தை, எவ்வாறு, எங்கு முதலீடு செய்ய வேண்டும், எப்போது அதன் பலனை அனுபவிக்க வேண்டும் என்பதில் சரியான திட்டமிடல் அவசியம். ஆர்வத்திலோ அடுத்தவர் பேச்சைக் கேட்டோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படக்கூடாது.

முதலீட்டில் லாபம் ஈட்ட 10 கட்டளைகள்!

9. பராமரிப்பு அவசியம்

திட்டமிட்டு, புரிந்து, நல்ல முதலீட்டைச் செய்துவிட்டாலும், வேலை முடிந்தது என்று அமராதீர்கள். முதலீட்டைப் பராமரிக்க வேண்டும். வருடம் ஒரு முறை எவ்வளவு லாபம் வந்தது, அந்த நிறுவனம் நன்றாக நடைபெறுகிறதா, அந்த முதலீட்டுத் திட்டம் லாபகரமாக வருமானம் தருகிறதா என்று கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால் முதலீட்டுத் திட்டத்தைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

10. பரந்து விரிந்த முதலீடு

சரி, நன்கு அலசி ஆராய்ந்து ஒரு மிகச்சிறந்த திட்டத்தில் எல்லாப் பணத்தையும் முதலீடு செய்யலாமா? கூடாது. உலகெங்கும் ஒவ்வொரு வகையான முதலீடும் ஒரு காலகட்டத்தில் நன்கு வளர்ந்து நல்ல லாபம் தருகிறது. அதே நேரம் அடுத்து வரும் காலகட்டங்களில் அது தொலைந்துபோகிறது. இதை ‘அசட் சைக்கிள்’ என்பார்கள். எனவே, ஒரே வகையான முதலீட்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, தங்கம், ஈக்விட்டி, கடன் பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் என்று பல்வேறு வகையான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு முதலீட்டில் லாபம் குறைந்தாலும் பிற முதலீடுகள் ஏறி லாபம் கொடுக்கும்.