அவள் 16
Published:Updated:

அமெரிக்காவில் மூன்று ரெஸ்டாரன்ட்டுகள்...

அமெரிக்காவில் மூன்று ரெஸ்டாரன்ட்டுகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
அமெரிக்காவில் மூன்று ரெஸ்டாரன்ட்டுகள்...

- அசத்தும் சென்னைப் பெண்! பிசினஸ்

‘ஒரு நாளைக்கு ஏன் 24 மணி நேரம் மட்டும்..?’ - கேட்கிறார் பரபரப்பாக இயங்கும் சுஜாதா நாராயணன். மூன்று ரெஸ்டாரன்ட்டுகள், ரியல் எஸ்டேட் பிசினஸ், வீடு என்று சுஜாதா சுழன்றுகொண்டிருப்பது, அமெரிக்காவில். அமெரிக்காவின் கோலராடோ மாநிலத்தில் உள்ள டென்வெரில் வசிக்கும் இந்த தமிழ்ப் பெண்ணின் ‘ஜெய் ஹோ’, அதன் கிளை, மற்றும் ‘கசானா’ இந்திய உணவகங்கள் அங்கு பிரபலம்.

அமெரிக்காவில் மூன்று ரெஸ்டாரன்ட்டுகள்...

“நான் பக்கா சென்னைப் பொண்ணு. பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கேதான். அண்ணா ஆதர்ஷில் பள்ளிப் படிப்பு முடிச்சுட்டு, எத்திராஜ்  காலேஜ்ல நியூட்ரிஷன் மற்றும் டயடிக்ஸ் படிச்சேன். அப்புறம் எம்.பி.ஏ முடிச்சுட்டு, சிட்டி பேங்கில் வேலைபார்த்தேன். திருமணத்துக்கு அப்புறம் கணவர் சத்யா கூட கனடா பயணம். அங்க அஞ்சு வருஷம் வாசம். கனடா கிட்டத்தட்ட ஒரு குட்டி இந்தியாதான். இந்தியர்களும் இந்திய உணவுகங்களும் அங்க ஏராளமா இருக்கும்.

2004-ல் அமெரிக்காவில் உள்ள டென்வருக்கு வந்தோம். இங்க இந்திய உணவகங்கள் எதுவும் பெருசா இல்லை. வடஇந்திய உணவுகளான சிக்கன் டிக்கா மற்றும் சில உணவுகள்தான் மொத்த இந்தியாவின் உணவுனு சொல்லி விற்கப்பட்டன. இந்திய உணவுக்கான தேடலும், எம்.பி.ஏ அனுபவமும் ‘ஜெய் ஹோ’ இந்தியன் ரெஸ்டாரன்ட்டை அமெரிக்காவில் தொடங்க உந்துதலா இருந்தது. ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியின் டைரக்டரா வேலைபார்க்கும் கணவரும் நானும் சேர்ந்து முதலீடு செஞ்சு, 2010-ல் ‘ஜெய் ஹோ’வை தொடங்கினோம்!’’

- சென்னையின் பள்ளி மாணவியில் இருந்து அமெரிக்காவில் பிசினஸ் உமன் ஆனது வரையிலான தன் பயணத்தை ஸ்வீட் அண்ட் ஷார்ட்டாகச் சொன்னார் சுஜாதா.

அமெரிக்காவில் மூன்று ரெஸ்டாரன்ட்டுகள்...

‘‘சராசரி இந்திய உணவகங்கள் போல இல்லாமல், வட இந்திய நாண், பனீர் பட்டர் மசாலாவைத் தாண்டி அருமையான இந்திய உணவுகள் எத்தனை எத்தனை இருக்கு என்பதை டென்வர் மக்களுக்கு ‘ஜெய் ஹோ’வில் அறிமுகம் செய்தோம். குறிப்பா, நம்ம ஊரு கொத்து பரோட்டா, செட்டிநாடு மீன் குழம்பு, ஆந்திரா கோங்குரா மட்டன், கேரளத்து இறால் வறுவல், தொக்குனு எங்க ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட்டுத் திரும்பும்போது, இந்தியாவுக்கே போய் திரும்பின மாதிரி இருக்குனு கஸ்டமர்கள்கிட்ட இருந்து ஃபீட்பேக் வாங்கினதுதான், எங்க உணவகத்தின் தனித்துவமான சிறப்பு.

டென்வரிலேயே, போல்டர் என்ற இடத்தில் ‘ஜெய் ஹோ’வின் கிளையை 2011-ல் தொடங்கினோம். அதுக்கும் அமோக வரவேற்புதான். அந்த உற்சாகத்தில் அதிகம் தாமதிக்காம 2013-ல் ‘கசானா’ என்ற மற்றொரு உணவகத்தை ஆரம்பிச்சோம்!’’ - புன்னகைக்கும் சுஜாதாவின் மூன்று உணவகங்களும், கோலராடோவில் சக்கைப்போடு போடு கின்றனவாம்.

அமெரிக்காவில் மூன்று ரெஸ்டாரன்ட்டுகள்...

2012, 2013 வருடத்தில் டென்வரின் சிறந்த உணவகங்கள் பட்டியலில் ‘ஜெய் ஹோ’ இடம்பெற்றது, கோலராடோவின் சிறந்த 100 உணவுகளின் பட்டியலில் இவர்கள் உணவகத்தின் ‘சில்லி கோபி’ இடம் பெற்றது என சாதனைகளை சந்தித்து வருகிறார் சுஜாதா. தன் ரியல் எஸ்டேட் முகம் பற்றி தொடர்ந்து பகிர்ந்த சுஜாதா...

‘‘உணவகங்கள் தொடங்குறதுக்கு முன்பிருந்தே ரியஸ் எஸ்டேட் துறையில் வேலை செஞ்சுட்டு வர்றேன். டென்வரில் உள்ள பிரபலமான ரியல்டர்களில் நானும் ஒருத்தி.

இந்தப் பொறுப்புகளோட பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் சஹானா, ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் சாராண்ஷ், கணவர், வீடுனு நான் ஒரு பெஸ்ட் ஹோம்மேக்கரும்கூட. வீட்டு வேலைகளுக்கு இந்தியாபோல இங்க ஆளெல்லாம் வெச்சுக்கிறது கஷ்டம். சமையலில் இருந்து வீடு பராமரிப்புவரை எல்லாம் நான்தான் பார்த்துக்கணும்.

அமெரிக்காவில் மூன்று ரெஸ்டாரன்ட்டுகள்...

காலையில் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, ரியல் எஸ்டேட் வேலைகளை முடிச்சுட்டு, 11 மணிக்கு ரெஸ்டாரன்ட்டுக்குப் போவேன். உணவகங்களில் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தாலும்,  என்னோட நேரடி மேற்பார்வை இருக்கணும்னு நினைப்பேன். உணவகத்தில் இருந்து வந்ததும் ரியல் எஸ்டேட் க்ளையன்ட்ஸுக்கு வீடு காண்பிக்கக் கிளம்புவேன். இரவு வீடு திரும்பி, குழந்தைகள் ஹோம்வொர்க், டின்னர்னு பொழுது முடியும். சொந்த தொழில் என்பதால, நேரத்தை அட்ஜஸ்ட் செய்துக்கலாம் என்பது கொஞ்சம் வசதியா இருக்கும். இருந்தாலும், ‘ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மட்டும்தானா..?’னு பரபரப்பா இருக்கும்.

வீட்டு வேலை, நேரமில்லைனு ஆயிரம் சாக்குபோக்குகள் இருக்கும்தான். ஆனா, நேரத்தை கொஞ்சம் சரியா திட்டமிட்டா உலகத்தை வெல்லலாம்!’’ என்று உறுதியாகக் கூறுகிறார் சுஜாதா.

ஐ.மா.கிருத்திகா