Published:Updated:

அறம் பொருள் இன்பம் - 5

அறம் பொருள் இன்பம் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
அறம் பொருள் இன்பம் - 5

வ.நாகப்பன்

அறம் பொருள் இன்பம் - 5

திருடன் ஒருவன் நுழைந்து, கண் முன்னே உங்கள் பணத்தைத் திருடிச் சென்றால் என்ன செய்வீர்கள்... சும்மா உட்கார்ந்திருப்பீர்களா? அடுத்த முறை திருட்டு நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுப்பீர்கள்தானே!

சொன்னால் நம்ப மாட்டீர்கள். நம்மில் பெரும்பாலானோர் அப்படிச் செய்வது இல்லை – முதலீட்டில் மட்டும்! சில விஷயங்களை யோசித்துப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும் என்பதால், அவற்றைப் பற்றி நாம் யோசிப்பதுகூட இல்லை. யார் அந்தத் திருடன்? எப்படிக் களவுபோகிறது நம் பணம்?


வரிச் சேமிப்பு

வருடாவருடம் இன்கிரிமென்ட், போனஸ் என வருவாய் கூடினாலும்கூட, நடுத்தட்டு மக்கள் நடுத்தட்டு மக்களாகவே இருப்பதற்கு என்ன காரணம்? பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது... நம் சேமிக்கும்/முதலீடுசெய்யும் விதத்தில் உள்ள தவறுகள்தான். அவை என்னென்ன?

நம் சேமிப்புகள், பெரும்பாலும் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைத் தருவது இல்லை. வரி கட்டியதுபோக மீதம்தான் வருவாய் என்பதால், ஏற்படும் இழப்பு – 30 சதவிகிதம் வரைகூடச் செல்லலாம்.

ஓர் ஆண்டுக்கு முன்னர் பணவீக்கம் 10 சதவிகிதம் இருந்தது. இதற்கு என்ன அர்த்தம்? சென்ற ஆண்டு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு பொருளை, இந்த ஆண்டு 110 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். அதே அளவு, அதே தரம்தான். ஆனால், விலை மட்டும் 10 ரூபாய் அதிகம்.

பொருட்களின் உற்பத்தி குறைவாக இருந்தாலோ, அதற்கான தேவை அதிகமானாலோ, இது நிகழும். அதாவது, பொருட்களின் தேவை அதிகரிப்பதற்கு ஏற்ப உற்பத்தியும் அதிகரிக்காமல் இருக்கலாம்... அல்லது தேவை பெரிதாக அதிகரிக்காமல்  அதே  அளவு  இருக்கும் போதும்கூட, உற்பத்தி மட்டும் குறைந்திருக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால், குறைந்த அளவிலான பொருட்களை, அதிக எண்ணிக்கையில் பணம் துரத்தும்போது பணவீக்கம் உண்டாகிறது.

இதில் என்ன பிரச்னை?

நடப்பு ஆண்டில் பொதுத் துறை வங்கிகளில் வைப்பு நிதிக்கான வட்டி, ஆண்டுக்கு 7 சதவிகிதத்தை ஒட்டியிருக்கிறது. அதாவது 100 ரூபாய் டெபாசிட் செய்தால், ஓர் ஆண்டு கழித்து 107 ரூபாய் கிடைக்கும். சென்ற ஆண்டு கையில் இருந்த பணத்தைவிட, இப்போது கையில் அதிகம் பணம் இருக்கும். இருப்பினும் சென்ற ஆண்டு 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை, அதே விலைக்கு இப்போது வாங்க முடியாது. ஏனெனில், பணவீக்கம் காரணமாக அந்தப் பொருளின் விலை இப்போது 110 ரூபாயாக உயர்ந்திருக்கும்.

அதற்காக அத்தியாவசியத் தேவைகளை வாங்காமல் இருக்க முடியுமா என்ன? நாம் என்ன செய்வோம் தெரியுமா? உபரியாகத் தேவைப்படும் அந்த 3 ரூபாயை, நம் சேமிப்பில் இருந்துதான் எடுத்துச் செலவுசெய்வோம். அப்போது என்ன நடக்கும்... நம் சேமிப்பில் 3 ரூபாய் குறையும். அது மட்டுமா? அடுத்த ஆண்டில் அதன் மீதான வட்டி வருவாயும் கிடைக்காது.

பிரச்னை இத்துடன் நிற்கவில்லை... நீங்கள் வருமான வரி கட்டுபவராக இருந்தால், இன்னும் சிக்கல்!

வங்கியில் நீங்கள் போடும் 100 ரூபாய், ஆண்டு இறுதியில் 107 ரூபாயாகக் கிடைக்காது. உங்கள் வருமான அளவைப் பொறுத்து அதில் 10 அல்லது 20 அல்லது 30 சதவிகிதத்தை வருமான வரியாகக் கட்ட வேண்டும். உதாரணமாக, நீங்கள் 30 சதவிகிதம் வருமான வரி கட்டுபவராக இருந்தால், உங்கள் கையில் கிடைக்கும் 107 ரூபாயில் இருந்து இரண்டு சதவிகிதத்துக்கு மேல் வருமான வரியாகப் போய்விடும். கையில் 105 ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கும்.

இதில் 10 சதவிகிதப் பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், கையில் மிஞ்சுவது சுமார் 95 ரூபாய். அதாவது, சென்ற ஆண்டு வைத்திருந்ததைவிடக் குறைவு. உள்ளதும் போச்சு. பணத்தின் எண்ணிக்கையில் கையில் 105 ரூபாய் இருந்தால்கூட, அதன் உண்மையான மதிப்பும் வாங்கும் சக்தியும் 95  ரூபாய்க்கானதுதான்.

இந்த 105 ரூபாயைக் கொண்டு, சென்ற ஆண்டு 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை வாங்க வேண்டுமானால், பணவீக்கம் காரணமாக 110 ரூபாய் தேவை. மீண்டும் நம் சேமிப்பில் கைவைத்து 5 ரூபாயை எடுத்து செலவுசெய்ய நேரிடும். சேமிப்பு, அதிகமாகக் கரையும். நடுத்தட்டு மக்கள் கடைசி வரை நடுத்தட்டு மக்களாகவே இருக்கும் ரகசியம் இதுதான்.

பணவீக்கத்தின் முழுமையான தாக்கத்தைத் தெரிந்துகொள்ள, இன்னொரு கணக்கைப் பார்க்கலாம்.

மாதம் 30,000 ரூபாய் சம்பாதிப்பவரா நீங்கள்? இதே வாழ்க்கைத் தரத்தை, அடுத்த 20 ஆண்டுகள் கழித்தும் மெயின்டெயின் பண்ணத் தேவையான தொகை எவ்வளவு தெரியுமா? 80,000 ரூபாய். இதுகூட ஆண்டுக்கு வெறும் 5 சதவிகிதப் பணவீக்கத்தை அடிப்படையாகக்கொண்டு கணக்கிடப்பட்டது. பணவீக்கம் 10 சதவிகிதமானால், இது எங்குபோய் நிற்கும்... நீங்கள் என்ன செய்வீர்கள்... அதுவும்கூட, வாழ்க்கைத்தரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல்?

ஒருவேளை எந்தவிதமான முன்னேற்றமும் இன்றி இதே 30,000 ரூபாய் வருமானமே தொடர்ந்தால், அதன் உண்மையான மதிப்பு என்ன தெரியுமா? வெறும் 11,000 ரூபாய்தான். அதுவும் இப்போதைய பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. ஒருவேளை பணவீக்கம் அதிகரித்து 10 சதவிகிதமானால்... அதோகதிதான்!

கொஞ்சம் பயமாகத்தானே இருக்கிறது; பயப்படுங்கள். அதுவும் நல்லதுக்குத்தான். பயம், நல்ல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். முன்னெச்சரிக்கை உணர்வு அது.

பணவீக்கம் எனும் திருடனையும், வரி எனும் அரக்கனையும் சமாளிக்க வேண்டும். இந்த இருவரையும் சமாளித்து, பணம் ஈட்டுவோரே பணக்காரர் ஆக முடியும் என்பது தெளிவு.

அறம் பொருள் இன்பம் - 5

வரிச் சேமிப்பு

முன்னர் எல்லாம் பணக்காரர்கள் மட்டுமே வரி கட்டுவார்கள்.

மேல் நடுத்தட்டு மக்களைத் தாண்டி, நடுத்தட்டு மக்களுக்கு அதைப் பற்றிய கவலை பெரிதாக இருந்தது இல்லை. ஆனால், அவை எல்லாம் அந்தக் காலம்.

இப்போது ஒழுங்காக வரி கட்டுவதே நடுத்தட்டு மக்கள்தான். ஜனவரி மாதம் வந்துவிட்டாலே வருமான வரிப் பிடித்தம் போக, கையில் ஒன்றும் அதிகம் மிஞ்சாது. பிப்ரவரி மார்ச் மாதங்களும் அப்படித்தான். அந்த மூன்று மாதங்களும் நாம் வேலைபார்ப்பது அரசுக்காகத்தானோ, நம் குடும்பத்துக்காக இல்லையோ என எண்ணத் தோன்றும். இப்போது எல்லாம் பணக்காரர்களில் பெரும்பாலானோர் எப்படி வரி கட்டாமல் ஏய்ப்பது என ஆலோசனை சொல்ல, மிக சகஜமாக ஆள் அமர்த்தித் திட்டமிடுகிறார்கள்.

வரி திட்டமிடல் மூலமாக நாம் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும், மேலும் ஒரு ரூபாய் புதிதாகச் சம்பாதித்ததற்குச் சமம் என்பதோடு, அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் மீது வரக்கூடிய வருவாயையும் சேர்த்துச் சம்பாதித்தது ஆகும். எனவே `A penny saved is penny earned' எனும் பழமொழியைக் கொஞ்சம் மாற்றி `A penny saved is not only a penny earned but a penny plus the interest on it earned' என்பதை அழுத்தமாக நினைவில்கொள்ள வேண்டும்.

நாம் ஈட்டும் சம்பளத்திலோ, வருவாயிலோ வரி கட்டுகிறோம் என்றாலும், வரி கட்டிய பிறகு நம் சேமிப்பில் செய்யக்கூடிய முதலீட்டின் மீது வரும் வருவாயின் மீதும் வருமான வரி செலுத்தும்போது எவ்வளவு வலியாக இருக்கிறது அல்லவா? அதைத் தவிர்ப்பது எப்படி? முதலீட்டின் மீதாவது வருமான வரிச் சேமிப்பு இருந்தால், எவ்வளவு மிச்சம் பண்ணலாம்!

அதற்காகவே இருக்கிறது பல முதலீட்டுத் திட்டங்கள். அவற்றில் `ட்ரிப்பிள் இ' (E-E-E அல்லது Exempt – Exempt – Exempt) வகை முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால், முதலீட்டுக்கும் வருமான வரிவிலக்கு கிடைப்பதோடு, அதன் மீது ஈட்டும் வருவாய்க்கும் பூரண வரிவிலக்கு உண்டு. பணத்தைத் திரும்ப எடுக்கும்போது வருமான வரி கிடையாது.
 
ஊழியர் சேமநல நிதி, பொது சேமநல நிதி, இ.எல்.எஸ்.எஸ் எனும் பரஸ்பர நிதித் திட்டம் போன்றவை இதில் அடங்கும். இவை ஒவ்வொன்றின் சாதக-பாதகங்கள் என்னென்ன, முதலீடு கட்டவேண்டிய காலம் மற்றும் முதிர்வடையும் காலகட்டம் எவ்வளவு, பாதுகாப்பான முதலீடா, வருமானம் எவ்வளவு... என, பல அம்சங்களையும் ஆராய்ந்து ஆலோசனை பெற்று முதலீடு செய்யலாம்.

பணம் ஈட்டியவர்களின் தாரக மந்திரம் இதுதான்.

`பணம், பணத்தை ஈட்டும்; நாம் தூங்கலாம். ஆனால், நம் பணம் தூங்கக் கூடாது – ஒரு நிமிடம்கூட!' ஒரு நாளைக்கு 8 மணி நேரமோ, 10 மணி நேரமோ நாம் உழைக்கலாம். ஆனால், நம் பணம் 24 மணி நேரமும் நமக்காக உழைக்க வேண்டும். உழைக்கும்!

எப்படி?

- பொருள் சேர்க்கலாம்...

அறம் பொருள் இன்பம் - 5

வரிச் சேமிப்புத் திட்டங்கள் எவை?

முதலீட்டுத் திட்டங்கள் சில...

1. பி.பி.எஃப்.: பொது சேமநல நிதி
2. இ.எல்.எஸ்.எஸ் – வரிச் சேமிப்புக்கான பரஸ்பர நிதித் திட்டம்
3. அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள்
4. வரிச் சேமிப்புக்கான 5 ஆண்டு வங்கி வைப்புநிதி!

அறம் பொருள் இன்பம் - 5

அனுமதிக்கப்பட்ட செலவுகள் சில...

1. காப்பீடு – ஒரு முதலீடு அல்ல என்பதால்
2. பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம்
3. வீட்டுக் கடன் மீதான வட்டி –
மறைமுகச் சேமிப்பு!

அறம் பொருள் இன்பம் - 5

கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசி

பெற்றோர், தாத்தா, பாட்டி என குடும்பத்தில் ஏற்கெனவே ஆரோக்கியக் குறைபாடுகளுக்கான பின்னணி இருந்தால், இந்தக் காப்பீடு எடுப்பது நல்லது. பிரீமியம் கொஞ்சம் அதிகம் என்றாலும், பெரும் செலவு ஏற்படும்போது உதவியாக இருக்கும்!