மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாத்தி யோசி மைடியர் ப்ரோ!

மாத்தி யோசி மைடியர் ப்ரோ!
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தி யோசி மைடியர் ப்ரோ!

புதிய தொடர் - 1நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்

து ஸ்டார்ட் அப்-களுக்கான காலம். அரசு உத்தியோகம், தனியார் கம்பெனிகளில் கை நிறைய சம்பளம் என்று கனவுகண்ட காலமெல்லாம் போய், ‘எனக்கென ஒரு விஷயத்தை நானே உருவாக்குகிறேன். அந்த விஷயத்தை உலகுக்கு விற்பதன் மூலம் கோடி கோடியாகச் சம்பாதித்துக் காட்டுகிறேன்’ என பல ஆயிரம் இளைஞர்கள் துணிந்து இறங்கும் காலம். சுருக்கமாக, இளைஞர்கள் எல்லோருமே மாத்தி யோசிக்கும் காலம் இது.

இது மாத்தி யோசிப்பதற்கான காலம் மட்டுமல்ல, மாத்தி யோசிப்பவர்களுக்கு மட்டுமேயான காலம் என்பேன்.  ஓர் உதாரணம் சொன்னால், நான் இப்படிச் சொல்வதன் அர்த்தம் சட்டெனப் புரியும்.

மாத்தி யோசி மைடியர் ப்ரோ!

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, அமெரிக்காவில் எல்லோரும் மாய்ந்து மாய்ந்து டாக்ஸிகளை வாங்கி, வாடகைக்கு விட்டார்கள். பெருகிவரும் மக்களின் தேவைக்கேற்ப வாடகை கார்கள் மூலம் ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கவே செய்தது. ஆனால், புதிது புதிதாக கார்களை வாங்க வேண்டியிருந்தது. புது கார்களை வாங்க, வங்கிகளில் கடன் வாங்க வேண்டியிருந்தது. வங்கிகளில் கடன் வாங்க சொத்துகளை அடமானம் வைக்க வேண்டியிருந்தது. இத்தனை பாடுபட்டுக் கடன் வாங்கி, வண்டி ஒழுங்காக ஓடவில்லை என்றால், அதாவது தொழில் சரியாக நடக்கவில்லை என்றால், கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்து அல்லவா பறிபோகும்?

ஆனாலும், வேறு வழி தெரியாமல், இந்த ஒரு வழியையே எல்லோரும் பின்பற்றி வந்தார்கள். இந்த ஆட்டு மந்தைச் சிந்தையிலிருந்து ஒரே ஒரு மனிதர் மட்டும் மாற்றி யோசித்தார். அவர் பெயர்தான், கெர்ரட் கம்ப் (Garrett Camp). கம்ப்யூட்டர் ஆசாமி. எல்லா விஷயங்களிலும் கம்ப்யூட்டரைப் புகுத்தி என்ன புதுமைகளைச் செய்ய முடியும் என்று யோசிப்பதில் கெர்ரட்  கில்லாடி. அதாவது, மாத்தி யோசிப்பதில் மன்னர். கெர்ரட் அப்படி என்ன யோசித்தார்?

ஒரு வாடகை கார் நிறுவனம். ஆனால், அதற்கென சொந்தமாக ஒரு கார்கூட இல்லை. காரே இல்லை என்கிறபோது டிரைவர்கள் இருப்பார்களா என்ன? அவர்களும் இல்லை. கார் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, கடன் வாங்க வேண்டியதில்லை.  காரும் இல்லை, கார் டிரைவரும் இல்லை என்றபிறகு எப்படித்தான் வாடகை கார் கம்பெனியை நடத்துவது? மாத்தி யோசிப்பதன் மூலம் அருமையாக நடத்த முடியும் என்று கண்டுபிடித்தார் கெர்ரட். எப்படி?

கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் மூலம் ஒரு நெட்வொர்க்கினை அமைத்தார். வாடகை கார் வேண்டும் என்கிறவர்களின் அழைப்பு (Call) முதலில் வரும். அந்த அழைப்பினை ஏற்று, அவருக்குச் சேவை செய்ய (கார் ஓட்ட) மறுமுனையில் பல டிரைவர்கள் தயாராக இருப்பார்கள். அந்த டிரைவர்களில் யார் அந்த அழைப்பினை முதலில் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர் அந்தப் பணியைச் செய்ய வேண்டும். எவ்வளவு தூரம், எத்தனை மணித் துளிகள் என எல்லா விஷயங்களும் செல்போனில் உள்ள ஜி.பி.எஸ் மூலம் கம்ப்யூட்டரில் பதிவாகும். காரில் பயணித்த பயணி, பயணம் செய்து முடித்தவுடன் அதற்கான தொகை உள்ளிட்ட தகவல்கள் கம்ப்யூட்டர் மூலம் செல்போனுக்குச் செல்லும். அந்தத் தொகையைப் பயணி கொடுத்துவிட்டால், முடிந்தது கதை. 

மாத்தி யோசி மைடியர் ப்ரோ!

இதில் இரண்டு விஷயங்கள் கட்டாயம் வேண்டும். முதலில், பயணிகள் தங்களுக்கு கார் தேவை என அழைக்க வேண்டும். அதற்குப் பஞ்சமே இல்லை. உலகம் முழுக்க ஒவ்வொரு நிமிடமும் பல லட்சம் பேருக்கு எங்காவது செல்ல கார் தேவைப்படுகிறது. வாடகை காருக்காக அவர்கள் அலையத் தேவையில்லை. கட்டணத்தைப் பேரம் பேசத் தேவையில்லை. ஒரே ஒரு முறை செல்போனில் அழைத்தால் போதும்; அடுத்த சில நிமிடங்களில் கார் வந்து நிற்கும். வாடகை கார் வேண்டும் எனக் கேட்கிற பயணிகளுக்கு இதற்குமேல் என்ன வேண்டும்?

இரண்டாவது, காரும், டிரைவர்களும் தேவை. சொந்தமாக கார் வைத்திருக்கும் டிரைவர்கள் உலகம் முழுக்க பல லட்சம் பேர் இருக்கிறார்கள். எப்போதடா வேலை வரும் என்று அவர்கள் காத்தும் கிடைக்கிறார்கள். வேலை கிடைக்காத நாள்களில் அவர்களுக்கு வருமானம் கிடைக்காது. எனவே, வேலை கிடைக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை அவர்களின் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு செல்போன் மூலம் ‘இங்கிருந்து இங்கு செல்லத் தயாரா’ என ஓர் அழைப்பு வந்தால், யெஸ் (அல்லது நோ) சொல்லிவிடலாம். ஆக, எந்த டிரைவரும் இன்று வேலை கிடைக்குமோ, கிடைக்காதோ என்று யோசிக்கத் தேவையே இல்லை.

ஆக, ஒரு கம்ப்யூட்டர், ஒரு செல்போன் என்கிற இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு, ஊபர்கேப் என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார் கெர்ரட். மாத்தி யோசித்ததன் மூலம் கிடைத்த அற்புதமான ஐடியா. பவர்ஃபுல்லான இந்த ஐடியாவைப் பார்த்துப் பூரித்துப் போனார் டிராவிஸ் கலானிக் (Travis Kalanick) என்கிற அமெரிக்க பிசினஸ்மேன். இவரும் ஒரு கம்ப்யூட்டர் ஆசாமி என்பதால், கெர்ரட்டின் ஐடியா அவருக்குச் சட்டெனப் புரிந்தது. இருவரும் சேர்ந்து, ஊபர்கேப்-பை ஊபர் என்று மாற்றினார்கள். இன்று, ஊபர் உலகம் முழுக்க பல நாடுகளில் செயல்படுகிறது. இதன் மதிப்பு (Valuation) சுமார் 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறார்கள். இத்தனைக்கும் இந்த நிறுவனத்துக்கென ஒரு வாடகை கார்கூட சொந்தமாக இல்லை. மாத்தி யோசித்ததன் மூலம் கிடைத்த வெற்றியைப் பார்த்தீர்களா?

இதுமாதிரி மாத்தி யோசிக்கும் இளைஞர்கள் தான் இன்றைய பிசினஸ் உலகில் வெற்றிக் கொடியை உச்சத்தில் பறக்க விடுபவர்களாக இருக்கிறார்கள். அப்படி மாத்தி யோசிக்கும் இளைஞர்களை உருவாக்குவதே இன்றைக்கு நமது உச்சபட்சத் தேவையாக இருக்கிறது.

இன்றைக்கு நாம் புத்தாக்கம், புத்தாக்கம் (Innovation) என்று பேசிக் கொண்டிருக்கிறோமே, அது வேறு ஒன்றுமில்லை, மாத்தி யோசிப்பதுதான். இன்றைய தேதியில் எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி, புதுமை படைக்கவில்லை எனில், மடிந்து அழிந்துபோவது தவிர, வேறு வழியில்லை. மாத்தி யோசித்து, புதுமை படைப்பதன் மூலம் சாம்பலிலிருந்து ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டும் எழுந்துவர முடியும். ஆனால், மாத்தி யோசிக்கிற திறமையும், தகுதியும் இன்றைக்கு நம் இளைஞர்களிடம் இருக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. 

இன்றைக்கு நம் இளைஞர்களிடம் என்ன திறமை இல்லை? படிப்பில் கெட்டிக்காரர் களாக இருக்கிறார்கள். ஒழுக்கத்தில் அவர்கள் அளவுக்கு வேறு எந்த நாட்டு இளைஞர்களும் நிச்சயம் வர மாட்டார்கள். மாத்தி யோசித்து, புதுமைகளைப் படைப்பதில்கூட மன்னர்களாக இருக்கிறார்கள். ஆனால், என்ன புண்ணியம்? யாரோ ஒருவரிடம் சம்பளத்துக்குத் அறிவையும் திறமையையும் உடல் உழைப்பையும் விற்றால் போதும் என்று நினைக்கிறவர்களாகவே இருக்கிறார்கள்? இதனால் ஓர் இளைஞனின் அற்புதமான சிந்தனைத்திறன் மூலம் விளைந்த லாபம், வேறு ஒருவரின் பைகளை நிரப்புகிறது. சம்பளப் பணத்தைப் பார்த்துத் திருப்தி அடையும் அந்த இளைஞன், தனது எஜமானரைப் பெரும் செல்வந்தனாக்குகிறான்.

சம்பளத்துக்காக உழைப்பதில் தவறு எதுவுமில்லை. சிலருக்கு அதுவே செளகர்யமாக இருக்கும். ஆனால், அதை மட்டுமே செய்ய நினைத்தால், மணி அடித்தால் சோறு கிடைக்கும். வாழ்க்கையில் மகத்தான பேரோ, கை நிறையப் பணமோ கிடைக்காது.

தமக்கும், தன்னோடு சேர்ந்த பல ஆயிரம் பேருக்கும் வேலை தந்து, செல்வத்தைச் சேர்க்க உதவுவதுதான் பிசினஸ். இந்த பிசினஸில் ஜெயிக்க வேண்டுமெனில், உங்களுக்கே உங்களுக்கென மாத்தி யோசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பதைச் சொல்லவே இந்தத் தொடர். தொடர்ந்து படியுங்கள்! 

(மாத்தி யோசிப்போம்)


தொகுப்பு: மா.பாண்டியராஜன்

படம் : மீ.நிவேதன்