
இரா.கலைச்செல்வன்
2015 ஆண்டு. பாரீஸின் ஒரு குளிரான நாள். பல நாட்டு அதிபர்களும் மேடையில் வீற்றிருக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன் உரையைத் தொடங்கினார்...
“ரிக் வேதா கூற்றுப்படி, அனைத்து ஜீவராசிகளுக்குமான அடிப்படை உயிராக இருப்பது சூரியக் கடவுள்தான். குறிப்பாக, எம் தேசமான இந்தியாவில் ஒவ்வொரு நாளின் காலையையும் சூரிய வழிபாட்டோடுதான் தொடங்குவோம். மொத்த உலகமும், மாற்று சக்திக்கான வழியாக சூரியனை நோக்கி மட்டுமே நகர முடியும். தற்போது, 4 கிகாவாட் சூரிய மின்சார சக்தியை உற்பத்தி செய்யும் இந்தியா, வரும் 2022-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அளவுக்கான சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும்...” என்று சொன்ன வார்த்தைகள்தான், எதிர்கால இந்தியாவின் மின்சக்திக்கான விதைகள்.
சூரிய ஒளி அதிகம் படும் கடக ரேகை மற்றும் மகர ரேகைகளை ஒட்டியிருக்கும் 120 நாடுகளை இணைத்து ‘சர்வதேச சோலார் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை பாரீஸில் அன்று மோடி தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டமைப்பின் தலைமையகம் குர்கானில் அமைக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. எதிர்கால மின்சாரத் தேவைகளுக்குச் சூரியனையும், காற்றையும், இன்னபிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களையும்தான் நாடிச் செல்ல வேண்டும் என்கிற நிலையில், அதற்கு நாமும், நம் அரசாங்கங்களும் எந்தளவுக்குத் தயாராக இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய நிலையில் இந்தியாவின் மொத்த மின்சாரத் தேவையில் 60% நிலக்கரியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 30 சதவிகிதத்துக்கும் குறைவான அளவிலேயே புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதிலும், சூரிய சக்தியைத் தனியாகப் பிரித்தால், மிகக் குறைந்த சதவிகிதமே மிஞ்சும். வருடம் முழுக்க சூரியனைத் தரிசிக்கும் இந்தியா போன்ற நாட்டுக்கு, சூரிய மின்சக்திதான் பல வகைகளிலும் நன்மை தரக்கூடியதாக இருக்கும். 1971-ல் ஆண்டொன்றுக்கு 98 கிலோவாட்டாக இருந்த தனிநபர் மின் நுகர்வு, 2015-16-ம் ஆண்டில் 1,074 கிலோ வாட்டாக உயர்ந்திருக்கிறது. இது வருங்காலத்தில் இன்னும் உயரும்.
தன்னுடைய மின்சாரக் கனவை நோக்கி மிகத் துரிதமாக செயல்பட ஆரம்பித்தது மத்திய அரசு. உலகிலேயே மிகப் பெரிய சூரிய மின்உற்பத்தி நிலையம், ராமநாதபுரம் அருகே உள்ள கமுதியில் அதானி குழுமத்தால் அமைக்கப்பட்டது. 2,500 ஏக்கர் பரப்பளவில் ரூ.4,550 கோடி செலவில், 25 லட்சம் சோலார் மாடியூல்களைக் கொண்டு இது அமைக்கப்பட்டது. இதிலிருந்து 648 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். மேலும், குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் சூரிய மின்சார உற்பத்தி ஏற்கெனவே நடக்கிறது. ஆனாலும், அரசின் வேகமும், அணுகுமுறையும், சூரிய மின் உற்பத்திக்கான இலக்கை எட்டப் போதுமானதாக இல்லை என்பதே இந்தத் துறை சார்ந்தவர்களின் கருத்து.

திருச்சியில் சோலார் பேனல் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ‘ஆக்கர் டெக்னாலஜீஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் அருண் குமாரிடம் இதுகுறித்துக் கேட்டோம்.
“எதிர்கால எரிசக்திக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரே வழி சோலார் மட்டும்தான். ஒரு அணு உலை கட்ட எத்தனை கோடி ரூபாய் செலவாகும். அத்தனை கோடி செலவு செய்து கட்டினாலும், அதிலிருந்து குறைந்த அளவிலான மின்சாரத்தையே உற்பத்தி செய்ய முடியும். மேலும், அது மிகவும் ஆபத்தானதும்கூட.
ஆனால், சோலார் அப்படி இல்லை. குறைந்த அளவிலான முதலீட்டில் நிறைய பலனை அனுபவிக்கலாம். இது அரசாங்கத்துக்கும் தெரியும். ஆனால், சூரிய மின்சாரம் செயல்பாட்டுக்கு வருவதில் பல பிரச்னைகள்.
நான்கு வருடங்களுக்குமுன், ஒரு கிலோவாட் சோலார் பேனலை நிறுவ ரூ.1.5 லட்சம் வரை செலவானது. இன்று அரசாங்கம் அதற்கான உச்சவரம்பாக 90 ஆயிரம் ரூபாயை முடிவு செய்திருக்கிறது. ஆனால், நாங்கள் வெறும் 70 ஆயிரம் ரூபாய்க்கே சோலார் பேனல்களை விற்பனை செய்கிறோம். ஆனால், பொது மக்களிடம் இதை வாங்குவதற்கு போதிய விழிப்புஉணர்வு இல்லை.
அதேசமயம், கமர்ஷியல் செக்டாரில் இதற்கான தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், அவர்கள் சோலாருக்கு மாறுவதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. சோலார் அமைக்க மத்திய அரசாங்கம், மானியம் கொடுக்கிறது. அது மாநில அரசின் மூலம் உபயோகிப்பாளருக்கு வந்தடையும். ஆனால், இந்த மானியத்தை அரசிடமிருந்து வாங்குவதற்குப் பதில், இங்கிருந்து காஷ்மீர் வரை மாரத்தான் ஓட்டமே ஓடலாம். அந்தளவுக்குச் சிரமப்படுகிறார்கள்.
இந்த சிக்கல் ஒரு பக்கம் என்றால், சோலார் அமைக்க வீட்டில் ‘நெட் மீட்டர்’ என்று ஒன்றைப் பொருத்த வேண்டும். அதை நம் மின்சாரத் துறையிட மிருந்துதான் வாங்க வேண்டும். கடந்த ஒரு வருடமாக ‘நெட் மீட்டர்’ சப்ளை சரியாக இல்லை. எப்போது கேட்டாலும், இல்லை என்ற பதிலே வருகிறது. இதன் காரணமாகவும், விற்பனை கடுமையாகப் பாதிப்பு. அதாவது, தேவை இருந்தும், அதற்கான உற்பத்தி இருந்தும், அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.

அதே மாதிரி, சோலார் பேனல் களுக்கான மூலப்பொருட்களை ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்கிறோம். அதை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டால், விலை இன்னும் குறையும்; மக்களும் அதிக பயனடைவார்கள். இப்படிப் பல பிரச்னை களால் சூரிய மின்சாரம் இன்னும் இருட்டிலேயே இருக்கிறது’’ என்றார் அருண்.
இன்றைய நிலையில், உலகிலேயே சோலார் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது சீனா, ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள்தான். உள்கட்டமைப்பு வசதிகளில் இந்தியாவைவிட முன்னணியில் இருக்கும் இந்த நாடுகளேகூட, தங்கள் மக்களைத் தற்சார்பு முறையில் சோலார் உற்பத்தி செய்ய வைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, தற்போது கமுதியில் உற்பத்தி செய்யப்படும் சோலார் மின்சாரத்தை பல இடங்களுக்கும் கொண்டுசேர்க்கும் மின்வழிப் பாதைகள் உறுதியானதாக இல்லை. ட்ரான்ஸ்ஃபார்மர்களும் காமராஜர் காலத்தைச் சேர்ந்தவைதான். சமீபத்தில் கோவில்பட்டியில் ஒரு சிறு மின்னல் தாக்குதலைத் தாங்க முடியாமல் கவிழ்ந்து, அந்தப் பகுதி முழுக்க மின்சாரம் இன்றி மக்கள் தவித்தார்கள். சோலார் மின்சாரத்தை நாடு முழுக்கக் கடத்த வேண்டும் எனில், மொத்த மின்பாதைகளையும் சீரமைக்க வேண்டும்.
இதற்கு மாறாக, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலேயே சோலார் பேனல்களை அமைத்துக்கொண்டு, தற்சார்பு முறையில் மின் உற்பத்தியைச் செய்ய அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். ஆனால், அதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்பதே விடை கிடைக்காத முக்கியமான கேள்வி.
படங்கள் : கே.கார்த்திகேயன், தி.குமரகுருபரன்
சூரிய மின்சாரம்... வழிகாட்டும் சோலார் சுரேஷ்!

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் ‘சோலார்’ சுரேஷ் என்றால் மிகவும் பிரபலம். 2012-ம் ஆண்டு முதலே தன் வீட்டுக்கான மொத்த மின்தேவைகளையுமே, சோலார் பேனல்களைக் கொண்டு உற்பத்தி செய்து வருகிறார். ஒரு கிலோவாட்டில் தொடங்கி, இன்று மூன்று கிலோவாட் சூரிய மின்சாரத்தைத் தயாரித்து வருகிறார். “அரசின் எந்த உதவியும் இல்லாமல், நானாகவே இந்த சோலார் பேனல்களை அமைத்தேன். கடந்த ஐந்து வருடங்களாகவே, இது எனக்குச் சிறந்த பயனைக் கொடுத்து வருகிறது. கரண்ட் பில் கட்டும் அவசியமே இல்லாமல் போய்விட்டது. சோலாருக்குப் பெரிய பராமரிப்பும், செலவுகளும் இல்லை. இந்தப் பேனல்கள் இன்னும் 20 வருடங்களுக்கு என் வீட்டுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொடுக்கும்” என்கிறார் ‘சோலார்’ சுரேஷ்.
வாரன் பஃபெட் Vs எலன் மஸ்க்!
அமெரிக்காவின் நிவேடா என்ற நகரத்தில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அத்தனை மக்களும் தாங்களாகவே முன்வந்து இதைச் செய்திருக்கின்றனர். பிரபலத் தொழிலதிபர் எலன் மஸ்க்கின் ‘சோலார் சிட்டி’ நிறுவனம்தான் இந்தப் பேனல்களை அமைத்தது. ஆனால், வாரன் பஃபட், தன் அரசியல் செல்வாக்கைக் கொண்டு எலன் மஸ்க்குக்கு எதிரான நடவடிக்கையாக, நிவேடா நகர மக்களுக்கான மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளார். பல லட்சங்கள் செலவு செய்தும்கூட, இரு நிறுவனங்களின் தொழில் போட்டிக்குப் பலியாகி, போராடிக் கொண்டிருக்கிறார்கள் நிவேடா மக்கள்.