
ம. சக்கர ராஜன்
அது 2011-ம் ஆண்டு. உலகத்தின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிளின் சந்திப்பு ஒன்று, கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோ என்ற இடத்தில் நடந்தது. அப்போது ஆப்பிளின் முக்கிய நிர்வாகியான க்றிஸ் வாங் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, உலகில் பல பேருக்கு முன்னுதாரணமாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், தனது உடல் முழுமையாக ஒத்துழைக்காத போதிலும், அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் வந்துகொண்டு இருப்பதைப் பார்த்தார். யாருக்கும் அவரின் வருகையைப் பற்றித் தெரியாது. அவருக்கு உடல்நலம் சரியில்லை என்கிற தகவல் மட்டுமே பலருக்கும் தெரியும்.
நடக்க முடியாமல் நடந்து வந்த அவர், எப்போதும் அணிந்த அதே கருப்பு நிற டி ஷர்ட்டை அணிந்திருந்தார். அவர் பெயரைச் சொன்னாலே நினைவுக்கு வரும் அவரின் ட்ரேட்மார்க் உடை அது. ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திரச் சந்திப்புகளில் அவர் பேசும் அதே தொனியில் பேச்சைத் தொடங்கினார். அதுவே அவருடைய கடைசி மேடைப் பேச்சாக அமையும் என்று யாரும் நினைக்கவில்லை. அந்தப் பேச்சில் ஸ்டீவ் பேசியதாவது...

“ஆப்பிள் நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால், நாம் இன்றுவரை குபெர்டினோ விலிருந்துதான் இயங்கி வருகிறோம். நமக்கு ஒரு புதிய அலுவலகம் இன்றியமையாதது. குபெர்டினோ விலேயே ஒரே கட்டடத்துக்குள் 12,000 பேர் வேலை செய்ய முடிந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால், அது சாத்தியம் இல்லைதானே? சாத்தியம் இல்லாததைத்தான் ஆப்பிள் செய்து வருகிறது. நிறைய அலுவலகங்களில் நிறைய கட்டடங்கள் இருக்கும். ஆனால், அவற்றின் வடிவமைப்பு சில நாள்களில் போர் அடித்துவிடும். அப்படி ஆகாமல் புத்துணர்வைத் தரும் ஒரு கட்டடத்தைக் கட்ட வேண்டும். அது எவ்வாறு இருக்கும் என்று கூறுகிறேன்.பொறுமையாகக் கேளுங்கள்.
12,000 பேர் வேலை செய்யும் அளவுக்கு அமைய போகும் இந்தக் கட்டடம், நாம் எச்.பி நிறுவனத்திடமிருந்து அண்மையில் வாங்கிய இடத்தில் அமையலாம். அது ஒரு கட்டடம் போலவே இருக்காது. வானிலிருந்து ஒரு விண்கலம் தரையிறங்கியது போல தோற்றமளிக்கிற மாதிரி, வட்ட வடிவம் கொண்டிருக்கும்.
வட்டமாக ஒரு கட்டடத்தை அமைக்கத் தேவையான பொருள்செலவும் சிரமங்களும் பற்றி உங்களுக்குத் தெரியும். இந்தக் கட்டடத்தில் ஒரு கண்ணாடிகூட நேராக இருக்காது. ஒவ்வொரு கண்ணாடியும் வளைந்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அது நம்மால் முடியாதது அல்ல. இந்தக் கட்டடத்துக்காகவே கண்ணாடிகளை உலகின் மிகச் சிறந்த பொறியாளர்கள் அமைக்க வேண்டும். ஒரு கட்டடம், ஒரு ஆப்பிள்.”

ஸ்டீவ் ஜாப்ஸ் பேச்சைக் கேட்டவுடன் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஸ்டீவ் ஜாப்ஸின் கடைசி பெரிய ஆசை இதுவென்று கூறலாம். ஆனால், அது நிஜமாவதைப் பார்க்க அவர் உயிருடன் இல்லை. இன்று அவர் காலமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்குச் சமர்ப்பணம் செய்யும் வகையில் ஆப்பிள், இந்த புதிய அலுவலகத்தைத் துவங்க உள்ளது.
‘ரிங்’ என்று ஆப்பிள், இந்தக் கட்டடத்தை அழைக்கிறது. இந்தக் கட்டடம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து மக்கள் டிரோன்களைப் பறக்கவிட்டு, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கட்டடத்தை அமைப்பதா அல்லது பங்கு தாரர்களுக்கு டிவிடெண்ட் தருவதா என சில வாதங்களும் எழுந்தன.
ஸ்டீவ் ஜாப்ஸின் இறப்புக்குப்பின் எந்தப் புதிய தயாரிப்பையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், ஆப்பிளின் இந்தக் கட்டடம் பங்குதாரர்களை மகிழ்விக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், உலகம் முழுக்க உள்ள ஆப்பிள் ஆர்வலர்கள் இந்தக் கட்டடத்தை வியந்து பார்த்துப் பூரித்து வருகிறார்கள்.
இந்தக் கட்டடம் வட்ட வடிவமென்பதால், அதற்கெனப் பிரதான வாசல் எதுவும் கிடையாது. மொத்தம் ஒன்பது வாசல்கள். இந்தக் கட்டடத்துக்்கென்றே செய்யப்பட்ட கண்ணாடிச் சுவர்கள், புதிய வடிவம் கொண்ட தாழ்ப்பாள்கள், ஒரு லட்சம் சதுர அடி கொண்ட ஃபிட்நெஸ் சென்டர், அதில் இரண்டு மாடி யோகா மையம் என ஆச்சர்யப்படுத்துகிறது ரிங்.
ஏறத்தாழ 755 அடி சுரங்கப் பாதையைத் தாண்டித் தான் இந்தக் கட்டடத்தின் வடிவத்தையே பார்க்க முடியும். கட்டடத்தின் உள்சுற்றளவை ஒட்டி ஒரு நடைபாதை உள்ளது. இந்த நடைபாதை அனைத்து பிரிவுகளையும் இணைக்கும். இந்த அலுவலகத்துக்கு ஆப்பிள் தொழிலாளர்களை மாற்றவே ஆறு மாதங்கள் ஆகுமாம்.
ஆப்பிளின் இந்த புதிய அலுவலகத்தின் அதிகாரபூர்வமான பெயர் ‘ஆப்பிள் பூங்கா’. இதில் ஹைலைட், ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர்தான். கட்டடத்திலேயே உயர்வான பகுதியில் அமைந்துள்ள இந்த அரங்கம், எதிர்கால ஆப்பிள் பொருள்கள் வெளியிடப்படும் இடமாக இருக்குமாம்.

சென்ற வருடம் மார்ச் மாதம் நடந்த சந்திப்பில், ஆப்பிளின் தலைமை அதிகாரி டிம் குக் ‘ஆப்பிள் பார்க்’ பற்றி நிறையச் சொன்னார். அவை...
“ஸ்டீவ் ஜாப்ஸின் திட்டங்கள் அவரது காலத்தைவிட முன்சென்று யோசிக்கப்பட்டவை. அடுத்த பல தலைமுறைகளின் கண்டுபிடிப்புகள் பிறக்கும் இடமாக ‘ஆப்பிள் பூங்கா’ இருக்க வேண்டும் என்று நினைத்தார் அவர். சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. வேலை செய்யும் இடமே ரோல் மாடலாக மாறும் விதத்தில் இந்த அலுவலகம் அமையும். கட்டடம் முழுவதும் புதிப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்குகிற மாதிரி இந்தக் கட்டடத்தின் மேலே சோலார் அட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன” என்றார்.
இது மட்டுமில்லாமல், கட்டடத்தைச் சுற்றி 7,000 மரங்கள் நடப்பட்டுள்ளன. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு நிபுணர் இந்தக் கட்டடத்தைச் சுற்றியிருந்த உயிரினங்களின் பாதுகாப்புக்காக ஆராய்ச்சி செய்து வருகிறார். இந்தக் கட்டடத்தை வடிவமைத்த டிசைனரைச் சந்தித்த ஸ்டீவ் ஜாப்ஸ், ‘‘என்னை உங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள். என்னை உங்கள் வாடிக்கையாளராக மட்டுமே பார்க்காதீர்கள்” என்றாராம். இப்படியொரு கட்டடத்தைக் கட்டுவதன் மூலம் தனது குழந்தைப் பருவத்தில் பார்த்த கலிபோர்னியாவை மீண்டும் கொண்டுவர எண்ணினாராம் ஸ்டீவ்.
புதிய அலுவலகத்தைச் சுற்றி வர, ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்குச் செல்ல ஆயிரம் மிதிவண்டிகள் வைக்கப்படவுள்ளன. திறந்தவெளியில் வேலை செய்ய 18 அடி நீளம் கொண்ட ஐநூறு மேசைகள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிளின் பொருள்கள் போலவே, இந்த அலுவலகமும் உலகத்தின் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்தாராம் ஸ்டீவ்.
புதுத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கும் இடத்திலிருந்து யோசனைகள் வெளியே செல்லாமல் இருக்க மிக ரகசியமான ஆய்வுக்கூடங்களைக் கொண்டுள்ளது ஆப்பிள் பூங்கா. இந்த அலுவலகம் மிகக் குளிரான பிரதேசத்தில் உள்ளதால், ஏசி வசதி கிடையாது. கட்டடம் முழுக்க பைப்புகள் மூலம் தண்ணீர் சுழற்றப்படும். இதனால் 2 முதல் 5 டிகிரி வரை மட்டுமே வெப்ப அளவை மாற்ற முடியும். தோன்றும்போது வளைந்த கண்ணாடிகளைத் தூக்கிவிட்டு வேலை செய்யும் வசதி அமைக்கவே இந்த அமைப்பு.
‘ஆப்பிள் பார்க்’ பற்றி இதுவரை நீங்கள் படித்தவை அதிலிருக்கும் ஒரு சில அடிப்படை வசதிகள் மட்டுமே. சொல்லப்படாத பிரமாண்டங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன.
இனி அமெரிக்காவுக்குப் போனால், அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ‘ஆப்பிள் பார்க்’ நிச்சயம் இடம்பெறும்!