
நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: ரெஸ்ட் (Rest)

ஆசிரியர்கள்: அலெக்ஸ் சூஜுங் மற்றும் கிம் பாங் (Alex Soojung - Kim Pang)
பொதுவாக, நாம் எல்லோருமே வேலையை இன்னமும் சிறப்பாகச் செய்வது எப்படி என்றுதான் சிந்திப்போம். ஆனால், ஓய்வைச் சிறப்பாகச் செலவிடுவது எப்படி என்பது பற்றி யோசித்துப் பார்ப்பதே இல்லை. இன்றைய சூழ்நிலைகளும் அப்படித்தான் இருக்கின்றன. புத்திசாலியான பணியாளர் என்பவர் ஸ்மார்ட்டான வேலைகளைச் செய்வாரே தவிர, கஷ்டப்பட்டு உழைக்கமாட்டார் என்கின்றன பல புத்தகங்கள். கிரியேட்டிவாக இருக்கும் மனிதர்கள் வேலையே செய்ய வேண்டியதில்லை என்கின்றன இந்தப் புத்தகங்கள்.
வேலையும் ஓய்வும் எதிரிகளல்ல
வேலையையும் ஓய்வையும் எதிரெதிர் விஷயமாகவே நாம் பார்க்கிறோம். வேலை பார்க்க வேண்டும் அல்லது ஓய்வெடுக்க வேண்டும் - இதுதான் நமக்குத் தெரியும். ‘நான் பெரிய வேலைக் காரனாக்கும்... கம்பெனிக்காக உயிரையும் கொடுப்பேன். 18 மணி நேரம் கம்பெனியில் உழைப்பேன்...’ என்று நீங்கள் சொல்லிக் கொண்டு திரிந்தால், வேலைதான் உங்களுடைய அடையாளம். அந்த வேலை இல்லாவிட்டால், நீங்கள் இந்த உலகத்தில் இல்லாமல் போய்விடுவதற்குச் சமம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
நம்மில் பெரும்பாலானோர் மிக அதிகமாக உழைக்கிறோம். பலர் விடுமுறையே எடுப்பதில்லை. வெளியில் போகும் இடத்திலும் ஆபீஸ் மெயிலையேபார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படியே போனால், நம் உற்பத்தித்திறன் அதிகரித்து, முதலாளியிடம் நல்ல பெயர் வாங்க முடியாது; கெட்ட பெயர்தான் வரும்.
வேலையும் ஓய்வும் நம் எதிரிகளுமல்ல; நண்பர்களுமல்ல. அவை நம் பார்ட்னர்கள். ஒன்றுக்கொன்று உதவிகரமாக செயல்படுபவை. ஓய்வினைப் போதுமான அளவுக்கு எடுக்காவிட்டால், வேலையை ஒழுங்காக செய்ய முடியாது. ஒலிம்பிக் வீரர்கள், எழுத்தாளர்கள், டிசைனர்கள் மற்றும் ஏனைய துறைகளைச் சார்ந்த சாதனையாளர்கள் பலரும் ஓய்வின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.
மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், ‘மூளை நாம் ஓய்வெடுக்கும்போதுகூட ஓய்வெடுப்பதில்லை. பல விஷயங்களைச் சரிசெய்தும், சிந்தித்தும், பிரச்னைகள் குறித்து அலசியும், கிரியேட்டிவான விஷயங்கள் குறித்து சிந்தித்தும் செயல்பட்டும் வருகிறது. இதை நம்மால் நிறுத்தவும் முடியாது; கட்டுப்படுத்தவும் முடியாது.
ஆனால், ஓய்வை எப்படிச் சிறப்பாக எடுப்பது என்பதைப் பற்றி தெரிந்துகொண்டால், மூளையின் இந்த வகைச் செயல்பாட்டை நம்மால் நன்றாக ஊக்குவிக்க முடியும்’ என்கிறார்கள்.
ஓய்வு என்பது..?
ஓய்வு என்பது வெறுமனே படுத்துத் தூங்கி, டிவி பார்த்து பொழுதைக் கழிப்பதல்ல. ஓய்வில் அது ஒரு வகை மட்டுமே. பல சமயங்களில் உடல் உழைப்பு தேவைப்படும் பல விஷயங்கள்கூட ஓய்வுதான்.
ஏனென்றால், அது நம்முடைய முதன்மையான வேலையல்லவே! மிகப் பெரிய சிந்தனையாளர்கள் பலரும் தங்களின் சிறு வயதில் தங்களுடைய தாய், தந்தை, சகோதர, சகோதரிகளிடம் இருந்து விருப்பத்துடன் கற்றுக் கொண்டதை தற்போது செய்வதன் மூலம் மனதுக்கினிய ஓய்வைப் பெறுகின்றனர்.
ஓய்வு என்பது ஒரு திறமை சார்ந்த விஷயமாகும். பாடுதல், ஓடுதல் போன்று ஓய்வெடுத்தல் என்பதும் ஒரு திறமை சார்ந்த விஷயம். இந்தத் திறமையை வளர்த்துக்கொண்டால், அதீத ரசனையுடன் ஒருவர் ஓய்வெடுக்கலாம். எல்லோருக்கும் ஓய்வு எடுக்கத் தெரியும்.
ஆனால், திறமையாக ஓய்வெடுக்கத் தெரிந்த ஒருவரே, தான் எடுக்கிற ஓய்வினால் அதிக அளவிலான புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கிறார். திட்டமிட்டு வேண்டுமென்றே எடுக்கப்படும் ஓய்வு என்பது அன்றாட வேலையில் இருக்கும் மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வை சரிசெய்ய உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது எப்படிப் பாடகர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும், போர் வீரர்களுக்கும் தங்களுடைய செயல்பாட்டில் சிறப்பாகச் செயல்பட உதவுகிறதோ, அதேபோல்தான் ஓய்வும்.
இதற்காக ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைத்து, மாலையில் பப்புக்கும், வார இறுதியில் கிளப்புக்கும், நீண்ட விடுமுறையில் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா செல்ல வேண்டும் என்றில்லை. அவையெல்லாம் நம்மைச் சூழ்ந்திருக்கும் பிரச்னைகளை மறக்கக் கிடைக்கும் ஒரு தற்காலிக நிவாரணிதான். இயற்கையான ஓய்வு என்பது நம்மை மகிழ்விப்பதாகவும், மனதுக்கு வெகுமதி அளிப்பதாகவும் இருக்கும் என்பதே நிஜம். அதனாலேயே நல்ல முறையில் ஓய்வெடுக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
கற்பனையை வளர்க்கும் ஓய்வு
நம்மில் பலருக்கும் வேலையும் ஓய்வும் ஒரு சேரக் கிடைக்காது. ஆனால், புத்திசாலித்தனமாக கிரியேட்டிவ் மனிதர்கள் திட்டமிட்டு எடுக்கும் ஓய்வானது, அவர்களுடைய கற்பனாசக்தியை அதிகரிக்க உதவுகிறது. அவர்கள் வேலையின் நடுவிலேயே சிறு நடைப்பயிற்சி செய்து, அல்லது சிறு தூக்கத்தைப் போட்டு, தங்கள் செயல்பாடுகளை நாள் முழுக்கச் சிறப்பானதாக ஆக்கிக்கொள்கிறார்கள். பார்க்கும் வேலைகளுக்கு நடுவே சிறு சிறு ஓய்வுகளுக்கு அவர்கள் இடம் தந்தே திட்டங்களைத் தீட்டுகின்றனர். இதுவே அவர்களிடத்தில் இருக்கும் கற்பனாசக்தியை இன்னும் சக்தி மிகுந்ததாக ஆக்குகிறது என்று சொல்லலாம்.
சிலிக்கான் வேலியில் 30 வயதுக்குள் பெரும் பணம் சேர்க்கவேண்டும். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் வாரம் நூறு மணி நேரம் வேலை பார்த்தாலும், போதுமான அளவு பணம் சேர்க்க முடியாது என்ற நிலையே இருக்கிறது.
ஏனென்றால் அளவு கடந்த வேலை என்பது சிலருக்கே கைகூடும் விஷயம். பலரும் அதில் எரிந்து சாம்பலாகிவிடுவார்கள். ஏனென்றால் சிலிக்கான் வேலியில் நடப்பது நேரத்துக்கும் (Time) வழக்கொழிந்துபோவதற்கும் (Obsolescence) இடையேயான போட்டி. அந்தப் போட்டியில் மிகச் சிலரே ஜெயிக்கின்றனர்.
நாங்கள் வேலைக்கு எதிரியல்ல
ஓய்வின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுவதால், என்னை வேலையின் எதிரியாக யாரும் நினைக்கத் தேவையில்லை. ஆனால், சிறப்பாக ஓய்வெடுக்கும் முறையினால் வேலையை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைச் சொல்வதே எங்கள் நோக்கம் என்கிறார்கள் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள்.
வேலையும் ஓய்வும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், நீங்கள் நல்லதொரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும் என்பதே எங்களுடைய வாதம் என்கின்றனர் ஆசிரியர்கள்.
ஓய்வு குறித்த பிரச்னைகள், ஓய்வு என்கிற விஞ்ஞானம் என்ற இரண்டு அத்தியாயங்களில் ஓய்வைக் குறித்தும், வேலையில் அதன் அத்தியாவசியம் குறித்தும். பல நூறு ஆண்டுகளாக ஓய்வு என்பது எப்படியெல்லாம் மாறி வந்துள்ளது என்பது குறித்தும் அக்குவேறு ஆணிவேறாக இந்தப் புத்தகத்தில் அலசியுள்ளார்கள் ஆசிரியர்கள்.
மேலும், கிரியேட்டிவிட்டி என்னும் கற்பனா சக்தியை எப்படித் தூண்டுவது, அதை எப்படி நீங்காது நம்முடன் நிறைந்திருக்கச்செய்வது என்பதையும் பத்து அத்தியாயங்களாக பல்வேறு உதாரணங்களுடனும் சுவையாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
ஓய்வில்லாமல் உழைக்கும் இந்தக் காலத்தில் பணிக்குச் செல்பவர்களும், தொழில் முனை வோரும் அவசியம் ஒருமுறையாவது படித்து ஃபாலோ செய்ய வேண்டிய புத்தகம் இது.
- நாணயம் டீம்