நடப்பு
Published:Updated:

உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்? - வழிகாட்டும் ஐசிஐசிஐ புரூ மியூச்சுவல் ஃபண்ட் நிமேஷ் ஷா

உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்? - வழிகாட்டும் ஐசிஐசிஐ புரூ மியூச்சுவல் ஃபண்ட் நிமேஷ் ஷா
பிரீமியம் ஸ்டோரி
News
உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்? - வழிகாட்டும் ஐசிஐசிஐ புரூ மியூச்சுவல் ஃபண்ட் நிமேஷ் ஷா

சி.சரவணன்

ந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நிர்வகிக்கும் தொகையின் அடிப்படையில் (ரூ.2,57,880 கோடி) முதல் இடத்தில் இருக்கிறது, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நிமேஷ் ஷா, நாணயம் விகடன் இதழுக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார்.

உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்? - வழிகாட்டும் ஐசிஐசிஐ புரூ மியூச்சுவல் ஃபண்ட் நிமேஷ் ஷா

“உங்கள் பார்வையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படியிருக்கும்?”

“ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்தியப் பொருளாதாரம் பாசிட்டிவாக இருக்கும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படும் என நம்புகிறோம். தற்போதைய பொருளாதார மேக்ரோ விஷயங்களான பணவீக்க விகிதம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, நிதி ஆண்டுப் பற்றாக்குறை போன்றவை மேம்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம், நாட்டில் நிலையான ஆட்சி அமைந்திருப்பதாகும். நல்ல பொருளாதாரச் சூழலை உருவாக்கும் செயலில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறது.

வங்கித் துறையில் உள்ள பிரச்னைகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது நீண்ட காலத்தில் பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும். பிரச்னைகளைப் புரிந்துகொள்வதே, தீர்வுக்கான முக்கியமான முதல் நடவடிக்கை ஆகும். மத்திய அரசு, பிரச்னைகளைப் புரிந்து கொண்டுள்ளது என்று நம்புகிறோம். இதன் மூலம்  எல்லாப் பிரச்னைகளுக்கும் நீண்ட காலத்தில் சரியான தீர்வு கிடைக்கும்.”

“சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) பங்குச் சந்தையில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா?”

“ஜிஎஸ்டி வரி விதிப்பு, நடைமுறைக்கு வருவதன் மூலம் கிடைக்கும் பலன் நீண்ட காலத்தில் மிக அதிகமாக இருக்கும். இதன் மூலம் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது 2018-19-ம் நிதியாண்டில் தெரியவரும். அதே நேரத்தில், குறுகிய காலத்தில் சில பாதிப்புகள் இருக்கும். ”

“இந்திய மியூச்சுவல் துறையில் நிர்வகிக்கப்படும் தொகை, கூடிய விரைவில் ரூ.20 லட்சம் கோடியைத் தாண்டப் போகிறது. இதே போன்ற வளர்ச்சியை அடுத்த மூன்றாண்டுகளில் எதிர்பார்க்க முடியுமா?”

“இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது நாட்டின் ஜிடிபி-யில் 12 சதவிகிதம் என்கிற அளவில் உள்ளது. இது, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 55 சதவிகிதமாக உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை, ஆண்டுக்கு சராசரியாக 15% அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.”

உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்? - வழிகாட்டும் ஐசிஐசிஐ புரூ மியூச்சுவல் ஃபண்ட் நிமேஷ் ஷா


“2016-17-ம் ஆண்டில் எஸ்ஐபி முறையில் மொத்தம் ரூ.43,921 கோடி முதலீடு செய்யப்பட்டது. 1.35 கோடி எஸ்ஐபி கணக்குகள் இருக்கின்றன. இந்த அதீத வளர்ச்சிக்கு என்ன காரணம்?’’

“எஸ்ஐபி முதலீடு முன்பைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் எஸ்.ஐ.பி முதலீடு சிறப்பான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. 2015 மார்ச் மாதம் எஸ்.ஐ.பி முறையில் ரூ.1,800 கோடி முதலீடு செய்யப்பட்டது. இது 2017 ஏப்ரலில் இது ரூ.4,200 கோடியாக அதிகரித்துள்ளது.

இன்றைய தேதியில், செல்வம் சேர்க்க சிறந்த வழி எஸ்.ஐ.பி என்பதை மியூச்சுவல் ஃபண்ட் சிறு முதலீட்டாளர்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புஉணர்வுக் கூட்டங்கள் மூலம் சாத்தியமாகி இருக்கிறது. இதுதவிர, முதலீடு தொடர்பான பத்திரிகைகளும், முதலீட்டாளர்கள் சரியான முதலீட்டைத் தேர்வுசெய்ய உதவி செய்து வருகின்றன.’’

பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் மூலம் எந்தெந்தத் துறைகள் அதிகம் பயனடையும்?

‘‘இவை இரண்டும் இந்தியப் பொருளாதாரத்தில் ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைத்திருக்கின்றன. கறுப்புப் பணப் புழக்கம் குறைந்திருக்கிறது. அமைப்பு சாரா துறைகளைவிட, அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் அதிக லாபம் அடையும். ஜிடிஎஸ் சீர்திருத்தத்தால் நுகர்வோர், கட்டுமானம், ரசாயனங்கள், சரக்குப் போக்குவரத்து போன்ற துறைகள் லாபம் அடையும்.”

வங்கிகளுக்கு, நிகர வாராக் கடன் என்பது பயமுறுத்தும் விஷயமாகவே இருக்கிறது. இதனால் வங்கி அல்லது நிதிச் சேவை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது பாதுகாப்பானதா?”

“குறைவான வளர்ச்சி மற்றும் அதிக நிகர வாராக் கடன் போன்றவற்றால் கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் பாதிப்புக்குள்ளாகின. ஆனால், மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் வங்கித் துறைக்குச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று நம்புகிறோம். சிறப்பாக நிர்வகிக்கப்படும் தனியார் வங்கிகள் மற்றும் பெரிய பொதுத் துறை வங்கிகள் நன்றாகச் செயல்படும் என மதிப்பிட்டுள்ளோம்.

இந்த வங்கிப் பங்குகளின் விலை, அவற்றின் வரலாற்றுச் சராசரிக்கு அருகில் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் மேம்படும்போது, வங்கிகள் லாபப் பாதைக்குத் திரும்பும்.”

அடுத்த 3 - 5 ஆண்டுகளில் எந்தத் துறைகள் அதிகம் வளர்ச்சி காணும்?

“உள் கட்டமைப்பு (இன்ஃப்ரா.) துறையைக் குறிப்பிடலாம். உள் கட்டமைப்புத் துறையில் மின் உற்பத்தி, சாலைக் கட்டுமானம், டெலிகாம் போன்றவை சிறப்பாகச் செயல்படும். அபோர்டபிள் ஹவுஸிங் திட்டத்துக்கு மத்திய அரசு அளித்துவரும் முக்கியத்துவம் மூலம் சிமென்ட் துறை லாபமடையக் கூடும்.  ஐ.டி மற்றும் பார்மா துறைகள் கடந்த ஓராண்டு காலமாக மந்தநிலையில் உள்ளன. இவை அடுத்த இரண்டு ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி காணும்.”

இந்தியப் பங்குச் சந்தை அதிக மதிப்பீட்டில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

“பி/இ (price-to-earnings) அடிப்படையில், இந்தியப் பங்குச் சந்தை எக்ஸ்பென்சிவாக இருக்கிறது. அதே நேரத்தில், பிரைஸ் டு புக் (price-to-book) வேல்யூ அடிப்படையில் பார்க்கும்போது, நியாயமான விலைக்குச் சற்று அதிகமாக உள்ளது. பங்குச் சந்தையின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனுக்கும்  நாட்டின் மொத்த உற்பத்திக்கும் (ஜிடிபி) உள்ள விகிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, தற்போது இந்தியப் பங்குச் சந்தை அதன் நீண்ட கால சராசரிக்கு அருகில் இருக்கிறது.”

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் மிக நீண்ட காலத்தில் (10, 15 ஆண்டுகளில்) எவ்வளவு வருமானத்தை எதிர்பார்க்கலாம்?


“கடந்த பத்தாண்டுகளில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரு இண்டெக்ஸ்களும் ஆண்டுக்கு சராசரியாக முறையே 8.01% மற்றும் 8.51% வருமானம் தந்திருக்கின்றன.

அதே நேரத்தில், கடந்த ஐந்தாண்டுகளில் இந்த வருமானம் சுமார் 14 சதவிகிதமாக உள்ளது. அதே நேரத்தில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் மூலமான வருமானம் சராசரியாக 17 சதவிகிதத்துக்கு மேல் உள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களின் செல்வம் பெருக, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் உதவி வருகின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது.

அண்மைக்காலத்தில், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் லாபம் தராமல் இருக்கின்றன. இதனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மீது முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், அண்மைக்கால வருமானத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு முதலீட்டை மேற்கொள்ளக்கூடாது. நீண்ட கால முதலீட்டின் மூலமே செல்வம் உருவாகும் என்பதை மறக்கக்கூடாது.”

உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்? - வழிகாட்டும் ஐசிஐசிஐ புரூ மியூச்சுவல் ஃபண்ட் நிமேஷ் ஷாகுறியீடுகள் புதிய உச்சத்தில் இருக்கின்றன. இப்போது பங்குகள் அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் எந்த முதலீடு லாபகரமாக இருக்கும்?

தற்போதைய சந்தை சூழ்நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் டைனமிக் அஸெட் அலோகேஷன் ஃபண்ட் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.

“தற்போதைய சந்தை சூழ்நிலையில், சிறு முதலீட்டாளர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?”

“கடந்த ஓராண்டில் இந்தியப் பங்குச் சந்தை 15 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. இதனால் நீண்ட காலத்துக்கு இந்தியச் சந்தை மலிவானதாக இருக்காது. மேலும், சந்தையில் அதிக ஏற்ற இறக்கத்துக்கு வாய்ப்பு இருக்கிறது.

எனவே, புதிதாக பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் அல்லது ஏற்கெனவே செய்து வருபவர்கள், டைனமிக் அஸெட் அலோகேஷன் ஃபண்டுகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலம் ஏற்ற இறக்கத்தை ஈடுகட்ட முடியும்.

இந்த ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதி, நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் கலந்து முதலீடு செய்யப்படும். பங்கு முதலீடு கவர்ச்சிகரமாக இருக்கும்பட்சத்தில், அதில் அதிக முதலீடு செய்யப்படும்; கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு குறைக்கப்படும். இதுவே, பங்குச் சந்தை, அதிக எக்ஸ்பென்சிவாக இருக்கும்பட்சத்தில், பங்குகளில் முதலீடு குறைக்கப்பட்டு, கடன் திட்டங்களில் முதலீடு அதிகரிக்கப்படும்.

சிறு முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது மூலம் நீண்ட காலத்தில் அதிக லாபம் பார்க்க முடியும்” என்று நிறைவாக முடித்தார்.

தமிழகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ!

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஸியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களில் தமிழகத்திலிருந்து சுமார் ரூ.11,580 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. எந்தத் திட்டத்தில் எவ்வளவு முதலீடு தெரியுமா..?

லிக்விட் ஃபண்டுகள் - ரூ.2,472 கோடி

இதர கடன் திட்டங்கள் - ரூ.4,123 கோடி

ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்கள் ரூ.4,436 கோடி

பேலன்ஸ்ட் ஃபண்ட்கள் ரூ.545 கோடி