
விக்னேஷ் சி.செல்வராஜ், ஓவியம்: ஹரன்
எரிவாயு சிலிண்டருக்கு, ரேஷன் கார்டுக்கு, பான் கார்டுக்கு என்று ஆதார் எண் கேட்ட காலம் போய், இப்ப லேட்டஸ்ட்டா செல்போனுக்கும் ஆதார் கேட்கிற காலமிது. இனி சைக்கிள் வெச்சிருந்தா ஆதார், ரேடியோ வெச்சிருந்தா ஆதார்ன்னு எல்லாத்துக்கும் ஆதார் கார்டு எண் கேப்பாங்கபோல. ஆதார் என்பது ஏறக்குறைய ஒரு ‘சர்வரோக நிவாரணி’ போல மாறியிருக்கிற நிலையில், இன்னும் எவற்றுக்கெல்லாம் ஆதாரைக் கேட்பார்கள் என்று கற்பனை செய்தோம். வந்தது ‘கெக்கெக்கே’ காமெடி!


பீச்ல காத்து வாங்கப் போறவங்க, சுண்டல் சாப்பிடப் போறவங்க, நண்டு பிடிக்கக் கடலுக்குப் போறவங்கனு எல்லோரும் ஆதார் அட்டையைக் காட்டிவிட்டுத்தான் கடற்கரைக்குள்ளேயே காலடி எடுத்து வைக்கணும்னு ஓர் உத்தரவு வந்தாலும் வரும். இப்போவெல்லாம் பல முக்கிய முடிவுகளே கடற்கரையை வெச்சுத் தானே எடுக்குறாங்க. அங்கேயே ஆதார் இல்லைன்னா எப்படி?

பக்கத்து ஏரியாவுக்குப் போக ஆட்டோ பிடிக்கணும்னாகூட ஆதார் அட்டையைக் காட்டணும்னு சொன்னாலும் சொல்லுவாங்க. ‘கைதட்டினா ஆட்டோ வரும்’ங்கிற ‘பாட்ஷா’ பாட்டுக்குப் பதிலா ‘ஆதார் காட்டுனா ஆட்டோ வரும்னு சொல்றோம்ங்க...’ என மத்திய அரசு எசப்பாட்டு பாடினாலும் பாடும்.

இப்பல்லாம் ரயிலில் காசு குடுத்து டிக்கெட் வாங்கி ஏறினாலும், கையில் ஆதார் அட்டை (அல்லது வேறு ஏதாவது ஓர் ஆதாரம்) இல்லை என்றால் இறக்கிவிட்டு விடுகிறார்கள். இந்த இம்சை எல்லாம் போதாது என்று, ‘இனி பஸ்ஸில் ஏறுவதற்கு ஆதார் அட்டையைக் கையோடு கொண்டு வரணும்’ என்று மத்திய அரசு உத்தரவு போட்டாலும் ஆச்சர்யமில்லை. ஆதார வீட்டுல மறந்து வெச்சுட்டு வந்தா ஆட்டோவுல போய் எடுத்துட்டு வரணும். ஆனா, அதுக்கும் ஆதார் வேணும்ல...

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு அவசர தடைச்சட்டம் கொண்டுவந்த மாதிரி, பேருந்து நிலையங்களில் இருக்கும் பொதுக் கழிப்பிடங்கள் முதல் சாலையோரங்களில் இருக்கும் நவீன பசுமைக் கழிப்பிடங்கள் வரை அவசரத்துக்கு ஒதுங்கணும்னாகூட ஆதார் அட்டையைக் காட்டிட்டுத்தான் போகணும்னு ‘சுவாச் பாரத்’ மூலமா ‘அவசர’ சட்டம் கொண்டுவந்தாலும் வருவாங்க.

ஆதார் கார்டு வாங்குறதும், அதைத் தினமும் பயன்படுத்துவதும் ஒரு நல்ல குடிமகனின் முழு முதற்கடமை. இதைச் செய்யாதவர்களை ‘ஆன்ட்டி நேஷனல்’ என்று முத்திரை குத்தி நாடு கடத்திட முடிவு செஞ்சாலும் செய்வாங்க. ‘ஆப் கே தேஷ் ஹே, டிஜிட்டல் இண்டியா ஹே...’ன்னு அதுக்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்து வயித்தைக் கலக்குவாங்க!

வாரம்தோறும் கார்ப்பரேஷன் லாரி மூலமா கொண்டுவந்து ஊத்துற தண்ணியைப் பிடிக்கணும்னா அதுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படலாம். ஆதார்ஜி, டாஸ்மாக் சரக்கு வாங்குறதுக்கு மட்டும் ஆதாரைக் கேட்டுறாதீங்கஜி! சரக்கை வாங்கிட்டு ஆதார அப்படியே போட்டுட்டுப் போயிடுவாங்கஜி!