மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா?

செல்லமுத்து குப்புசாமி

ன் மகள் என்னிடம் கேட்டாள்.

“அப்பா, பூ மார்க்கெட்ல என்ன விக்கறாங்க?”

“பூ” என்றேன்.

“மீன் மார்க்கெட்ல?”

“மீன்.”

“அப்ப சூப்பர் மார்க்கெட்ல?”

“சூப்பர்…” என ஒரு மாதிரியாகச் சமாளித்து, சூப்பர் மார்க்கெட்டுக்கே அவளை அழைத்துக்கொண்டு போய் விளக்கிச் சொன்னேன்.

‘‘சார், இந்த ஷேர் மார்க்கெட்ங்கிறது எங்க இருக்கு? அங்கே என்னதான் விப்பாங்க?’’ - இந்தக் கேள்வியைப் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா?

ஷேர்களை வாங்கி விற்கும் இடம் ஷேர் மார்க்கெட். அதாவது, பங்குச் சந்தை. தக்காளி, வெங்காயம், கொத்தவரங்காய் மாதிரி ஷேர்களை வாங்கலாம், விற்கலாம். நிறையப் பேர் போட்டிபோட்டு வாங்கும் ஷேரின் விலை அதிகரிக்கும். வேண்டாம் என விற்கும் ஷேரின் விலை குறையும். அந்த வகையில் ஷேர் மார்க்கெட் மற்ற மார்க்கெட்களைப் போலத்தான்.

என்ன இது, பங்குச் சந்தையை இவ்வளவு சிம்ப்ளா சொல்லீட்டிங் களே என்கிறீர்களா?  ஆமாம், அவ்வளவேதான்! எப்படி?

உங்களூரில் உள்ள காய்கறிச் சந்தைக்குப் போயிருப்பீர்கள். அங்கு பலரும் காய்கறிகளை வியாபாரம் செய்துகொண்டு இருப்பார்கள். அதாவது, அவர்கள் அதைத் தொழிலாகச் செய்து கொண்டிருப்பார்கள். எந்தக் காய்கறியை எந்த விலைக்கு வாங்க வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். தக்காளி விலை கிலோ ரூ.100 என்றால், அதை வாங்கி விற்க முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, அதிக விலையில் தக்காளி விற்கும்போது கொஞ்சமாகத்தான் வாங்கி விற்க நினைப்பார்.

சரி, தக்காளி விலை கிலோ ரூ.5 என்றால்..? அப்போதும் நிறைய வாங்கி விற்க நினைக்க மாட்டார். காரணம், ஒரு கிலோ தக்காளி விலை ரூ.5. இதைக் கொண்டுவர ஒரு கிலோவுக்கு 50 காசு செலவு என  குத்துமதிப்பாக வைத்துக்கொள்வோம்.ஒரு கிலோ தக்காளி மூலம் நாம் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச லாபம் 10% என்றும் வைத்துக் கொள்வோம்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா?


ஆக, ஒரு கிலோ தக்காளியை அதிகபட்சம் ரூ.6 அல்லது 7-க்கு மேல் விற்க முடியாது. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 100 கிலோ தக்காளி விற்றால்தான் ரூ.100 முதல் 200 லாபம் கிடைக்கும்.  ரூ.200-க்காக நாள் முழுக்கக் கஷ்டப்பட வேண்டுமா என்று காய்கறி வியாபாரிகள் நினைக்கும்பட்சத்தில், இல்லை என்று சொல்லாத அளவுக்குக் கொஞ்சமாக தக்காளியை வாங்கி விற்பார்.

தக்காளியை வாங்கி விற்கும் ஒரு வியாபாரி, தனது தொழிலை நஷ்டமில்லாமல் செய்ய வேண்டும் எனில், அது தொடர்பான இத்தனை விஷயங்களையும் கண்ணும் கருத்துமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

இது மாதிரித்தான் ஷேர் மார்க்கெட்டும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்றால், நீங்கள் ஒரு தொழிலில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதை முதலில் நன்றாக உணர்ந்துகொள்ளுங்கள்.

உதாரணத்துக்கு,  உங்கள் வீதியில் ஒரு டீக்கடை உள்ளது. அந்தக் கடை நீண்ட காலமாக அதே வீதியில் உள்ளது. ஆனால், டீக்கடைக்கார நண்பருக்கு நிதி நெருக்கடி. அவசரமாக ஒரு லட்ச ரூபாய் வேண்டும். பல பேரிடம் கடன் கேட்டுப் பார்த்திருக்கிறார். யாருமே உதவ முன்வரவில்லை. நீங்கள் அந்தத் தொகையைத் தந்து உதவினால், அவரது  டீக்கடையில் உங்களை பார்ட்னர் ஆக்குவதாகச் சொல்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?

கடனாகக் கொடுத்தால் பரவாயில்லை. வியாபாரத்தில் லாபமோ நஷ்டமோ, அந்த நபர் வாங்கிய கடனை வட்டியோடு திருப்பித்தர வேண்டும். ஆனால், வியாபாரத்தில் பார்ட்னர் என்றால்?

ஒருவேளை நீங்கள் போடும் முதலீடு அமோகமாக லாபம் தரலாம் அல்லது ஒன்றுமே இல்லாமல் போகலாம். என்ன வேண்டுமானாலும் ஆகலாம். எதுவானாலும் நீங்கள் கேட்ட மாத்திரத்தில் பணத்தைத் தூக்கிக் கொடுக்க மாட்டீர்கள். நிறைய யோசித்து, அதன் பிறகே டீக்கடையில் பார்ட்னராகும் முடிவுக்கு வருவீர்கள்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா?

அந்தக் கடை எத்தனை காலமாக அங்கே இயங்குகிறது, தினமும் எத்தனை பேர் வந்து போகிறார்கள், சராசரியாக தினசரி வியாபாரம் எவ்வளவுக்கு நடக்கிறது, அதில் எவ்வளவு செலவாகிறது, மீதம் எவ்வளவு லாபம் நிற்கும், டீக்கடையை யார் பார்த்துக்கொள்வது, அவருக்கு எவ்வளவு சம்பளம், அதுபோக மீதமிருக்கும் லாபத்தைத்தான் இருவரும் எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது,  டீக்கடை நடத்தும் நண்பர் எப்படிப்பட்டவர், ரூ.1,000-த்துக்கு நடக்கும் வியாபாரத்தை வெறும் ரூ.600 என்று ஏமாற்றி விடுவாரா, அந்த ஏரியாவில் வேறு ஏதாவது டீக்கடைகள் உள்ளனவா, வேறு கடைகள் இல்லையென்றால், புதிதாகக் கடைகள் வருவதற்கு சாத்தியம் உண்டா, அப்படி வந்தால் இந்தக் கடையில் வியாபாரம் பாதிக்கப்படுமா?

அந்தக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தினசரி வந்துபோகும் வழக்கமான வாடிக்கையாளர்களா அல்லது எப்போதாவது வந்துபோகும் வழிப் போக்கர்களா, வாடிக்கையாளர் களின் எண்ணிக்கைக்கும் கடை அமைந்திருக்கும் கட்டத்துக்கும் தூரம் குறைவா, அதிகமா, கட்டட உரிமையாளர் இனிமேல்  வாடகைக்குக் கடை கிடையாது என்று சொல்ல வாய்ப்புண்டா?

அப்படி நடந்தால் வியாபாரம் பாதிக்காத வகையில் வேறு இடத்துக்குக் கடையை மாற்ற முடியுமா? பி.ஃபார்ம் படித்தவர்கள் தான் மருந்துக்கடை நடத்த வேண்டும் என்பது போல  இனிமேல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்கள் மட்டும்தான் டீக்கடை நடத்த வேண்டும் எனச் சட்டம் ஏதாவது வந்து தொலைக்குமா?

நமது டீக்கடைக்கார நண்பர் இதேபோல எப்போதும் தேநீர் மட்டும் விற்பதோடு நிறுத்திக் கொள்வாரா அல்லது பஜ்ஜி, வடை போன்ற பலகாரங்களையும் சுடுவதற்குத் திட்டம் வைத்திருக்கிறாரா? அதை பேக்கரியாக மாற்றும் எண்ணமிருக் கிறதா? காலப்போக்கில் வெவ்வேறு கிளைகள் திறக்க திட்டம் உண்டா? ஒருவேளை அவருக்கும் நமக்கும் சரிப்பட்டு வரவில்லை என்கிற நிலைமை ஏற்பட்டு, நாம் வெளியேறினால், அப்போது நமக்கு அவர் எவ்வளவு தருவார், அதே ஒரு லட்ச ரூபாயா அல்லது அதிகமாகவா அல்லது குறைவாகவா அல்லது அப்போது பேசித் தீர்மானிப்பதா அல்லது நாமே இன்னொரு பார்ட்னரைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டு, அந்தப் புதிய பார்ட்னரிடம் பணம் பெற்றுக்கொள்ள வேண்டுமா?

நாம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து டீக்கடையில் பார்ட்னராகும் பட்சத்தில் ஒரு வருடத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும், நமது பணம் முழுவதுமாக நமக்குத் திரும்ப வர எவ்வளவு காலம் பிடிக்கும் என்றெல்லாம் கணக்குப் போட்டுத்தானே பணத்தைத் தயார் செய்வோம். ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு தொழிலில் பார்ட்னராகும் நோக்கம் இருந்தால், இதெல்லாம் செய்துதான் தீர வேண்டும் என்கிறபோது, ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்போது, மேலே கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றிரண்டைக்கூட நாம் கேட்பதில்லை.

அவர் சொன்னார் விலை டபுள் ஆகுமென்று. இவர் சொன்னார் விலை ட்ரிபிள் ஆகுமென்று. வாங்கிவிட்டு, `அய்யோ, விலை ஏறும்’ என்று பார்த்தால், `இறங்கிக்கொண்டிருக்கிறதே’ என்று நினைத்து, கவலைப்பட்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன்மூலம் நாம் அதன் பார்ட்னராகிறோம். தொழில் செய்யப்போகிறோம், அதன் லாப நஷ்டத்தில் நமக்கும் பங்குண்டு, நல்லது கெட்டதில் பொறுப்புண்டு என்பதை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் என்ன கம்பெனியின் பங்குகளை வாங்குகிறோம், அந்த கம்பெனி என்ன பிசினஸ் செய்கிறது என்றுகூட யோசிக்காமல்தான் பங்கு வாங்கி, இதுவரைக்கும் வாங்கி நஷ்டப்பட்டு, ‘பங்குச் சந்தை என்பது சூதாட்டம்’ என்கிற எண்ணத்தில் இருக்கிறீர்களா?

ஷேர் மார்க்கெட் என்பது சூதாட்டக் களமல்ல. நாம்தான் சூதாடிகள் என்று ஒப்புக்கொள்ளுங்கள்.

(லாபம் சம்பாதிப்போம்)