நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நாகப்பன் பக்கங்கள்: அதிர்ச்சி தரும் ‘டைம்ஷேர்’ நிஜங்கள்!

நாகப்பன் பக்கங்கள்: அதிர்ச்சி தரும் ‘டைம்ஷேர்’ நிஜங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாகப்பன் பக்கங்கள்: அதிர்ச்சி தரும் ‘டைம்ஷேர்’ நிஜங்கள்!

வ.நாகப்பன்

“சே . . . தேவையில்லாம வாங்கி மாட்டிக்கிட்டேன் சார்” என்றார் மதன். அப்படி  அவர் என்னதான் செய்தார்?  

இப்போதெல்லாம் முடிவு எடுத்தபின் வருத்தப் படுவது சகஜமாகிவிட்டது. இதற்கு ஆங்கிலத்தில் ‘Buyer’s Remorse’ என்பார்கள். கலர்கலராக ஃபாம்ப்லெட், புக்லெட், ஆசை வார்த்தைகளில் மயங்கி, ஆயுள் காலம் முழுவதும் கட்டணம் ஏதுமில்லாமல் குடும்பத்தோடு விடுமுறையைக் கொண்டாடலாம் என நம்பி, ‘டைம் ஷேர்’ வாங்கியவரா நீங்கள்? உங்களுக்கு ‘பையர்ஸ் ரிமோர்ஸ்’ கட்டாயம் இருக்கும்.

விடுமுறை என்றாலே குடும்பத்தினருக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், குடும்பத் தலைவருக்குக்கோ திண்டாட்டம். எங்கு செல்வது என முடிவெடுப்பதில் தொடங்கி, எப்போது செல்வது, எப்போது திரும்பி வருவது, எத்தனை நாள்கள் செல்வது, எங்கு தங்குவது, பயண டிக்கெட் எனத் திட்டமிடல் ஒருபக்கமென்றால், இவற்றுக்கான செலவுகள் மறுபக்கம் எனத் தலைசுற்றும். 

நாகப்பன் பக்கங்கள்: அதிர்ச்சி தரும் ‘டைம்ஷேர்’ நிஜங்கள்!

விடுமுறையைக் கொண்டாட மலை வாசஸ்தலங்களுக்குச் செல்வது நமது வழக்கம்.அங்கு தங்கும் இடம் கிடைத்தால் டிக்கெட் கிடைக்காது; டிக்கெட் கிடைக்கும் அன்று ஹோட்டல்களில் அறை கிடைக்காது; அப்படியே கிடைத்தாலும் அநியாயமாக அதிகக் கட்டணமாக இருக்கும். போகும்போது இருக்கும் ஜோர், திரும்ப வரும்போது இருக்காது. புத்துணர்ச்சிக்காக விடுமுறை சென்ற நாம், அயற்சியுடன் திரும்பி வருவதுதான் நடக்கும்.

இப்படி வருடா வருடம் தங்கும் கட்டணம் உயர்வதைப் பார்க்கையில், விடுமுறையே வேண்டாம் எனத் தோன்றும். ஆனால், அப்படி இருக்க முடியுமா என்ன? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உருவானதுதான் ‘டைம் ஷேர்’ ரிசார்ட்கள். 1980-களில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டபோது சில சந்தேகங்கள் இருந்தன. பின்னர் இந்த கான்செப்ட் சூடு பிடிக்கத் துவங்கியது.

‘இனி ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வரும் தங்கும் அறைக் கட்டணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதே இல்லை. அடுத்த பல ஆண்டுகளுக்கான செலவு மொத்தத்தையும் கணக்கிட்டு, ஒரே ஒரு முறை முன்பணமாகக் கட்டினாலே போதும். பின்னர் வருடா வருடம், ஒரு வார காலத்துக்குக் கட்டணம் ஏதுமின்றி தங்கிக்கொள்ளலாம்.

தங்கும்போது நாம் பயன்படுத்தும் மின்சாரம் மற்றும் தண்ணீருக்கு மட்டும் பணம்  செலுத்தினால் போதும்.  ஒரு மினி அபார்ட்மென்ட் போலவே இருக்கும். வீட்டைப் போலவே, நமக்கு வேண்டியதைச் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம். நம்மால் பயணம் செய்ய முடியாதபோது அந்தச் சலுகையை நம் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ பயன்படுத்தக் கொடுக்கலாம். தங்கும்போது பயன்படுத்தும் மின்சாரம் போன்றவற்றுக்கான கட்டணங்கள் தவிர, வேறு ஏதும் அவர்கள் தரத் தேவையில்லை. பணவீக்கத்தால் பாதிக்கப்படாமல், முதலில் கட்டிய கட்டணத்திலேயே அடுத்த பல ஆண்டுகளுக்கு விடுமுறையைக் கழிக்கலாம்’ என்றெல்லாம் சொல்லப்பட்டது.

நாகப்பன் பக்கங்கள்: அதிர்ச்சி தரும் ‘டைம்ஷேர்’ நிஜங்கள்!


ஆனால், எல்லாம் வாங்கும்வரைதான். டைம் ஷேர் வாங்கியபின் அதிர்ச்சிதான் காத்திருக்கும். முதலில், வாழ்நாள் முழுவதும் எனச் சொல்லப்பட்டது பின்னர் 99 ஆண்டுகளுக்கு என மாற்றி அமைத்து விற்கப்பட்டது. அதற்குப் பின்னர் 33 ஆண்டுகளாகக் குறைந்து, இன்று 25 ஆண்டுகள்தான் என்னும் நிலைக்கு வந்திருக்கிறது.

சமையலறை தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். காபி/டீ போடும் எலெக்ட்ரிக் கெட்டில் போக, உணவுப் பொருளை சூடுபடுத்தும் ‘அவன்’ மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, முன்புபோல சமைத்துச் சாப்பிட முடியாது.

அதுமட்டுமா? பெரும்பான்மையான ரிசார்ட்கள் ஊருக்கு வெளியே இருப்பதால், ரிசார்ட்டில் இருக்கும் உணவகத்தில்தான் சாப்பிட வேண்டிய சூழல். நான்கு பேர் கொண்ட குடும்பம் சென்றால், நாள் ஒன்றுக்கு உணவுச் செலவே ரூ.5,000-த்தைத் தாண்டும். நம்மால் செல்ல முடியாது போனால், நமக்குப் பதில் நம் நண்பர்கள் சென்றால் அதற்கு, கூடுதலாக  ரூ.1,000 கட்டினால்தான் விடுமுறையே புக் செய்வார்கள்.

அறையும் நாம் கேட்ட நாளில் கிடைத்தால் அதிசயம்தான். நாம் கேட்கும் நாளில் அறை இல்லை என்பார்கள். பள்ளி விடுமுறை முடிந்த பின்னர் வேறு ஏதாவது ஒரு நாளில்தான் கிடைக்கும் என்பார்கள். அதுவும்கூட வார நாளாக இருக்கும். ஆன்லைனில் புக் செய்யும் வசதியை அரசு நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி-யே வைத்திருக்கும்போது, இவர்கள் இன்றும் தொலைபேசி மூலமாகவோ, மின் அஞ்சல் மூலமாகவோத்தான் புக்கிங் ரிக்வெஸ்ட் அனுப்ப வேண்டும் என்கிறார்கள். அதே சமயம், உறுப்பினர் அல்லாதோர், முழுப் பணம் கொடுத்து நாள் வாடகைக்குக் கேட்டால் அதே நாளிலேயே ரூம் இருக்கிறது என்பார்கள்.

மின்சாரத்தை நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, நாளொன்றுக்கு ரூ.1,000-க்குக் குறையாமல் கட்ட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். இதுபோக, ஆண்டுக்கு ஒருமுறை அறை எடுத்தாலும், எடுக்காமல் போனாலும், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சப் பராமரிப்புத் தொகையைக் கட்ட வேண்டும் என்பது தலைவிதி.

சுருக்கமாகச் சொன்னால், டைம்ஷேர் வாங்க ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், ஒருமுறை பணம் கட்டி, பெரிதாக நன்மை அடைந்துவிடலாம் என்று நினைத்தால், ‘Buyer’s remorse’-ல்’ நீங்கள் சிக்கிப் பரிதவிக்க வேண்டியிருக்கும். எனவே, ‘Buyers Beware’. உஷாரய்யா உஷாரு!

(சொல்கிறேன்)