நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ரொக்கப் பணப் பயன்பாடு... கட்டுப்பாடுகள் என்னென்ன?

ரொக்கப் பணப் பயன்பாடு... கட்டுப்பாடுகள் என்னென்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
ரொக்கப் பணப் பயன்பாடு... கட்டுப்பாடுகள் என்னென்ன?

ஜெ.சரவணன்

முன்பு எத்தனை லட்ச ரூபாய் வைத்திருந்தாலும், அதை ரொக்கமாகத் தந்து மாற்றிவிட முடியும். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. மிகக் குறைந்த தொகைக்கு மட்டுமே ரொக்கமாக பணத்தைப் பரிமாற்றம் செய்ய முடியும். அதிலும் கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அன்று மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ரொக்கமாகப் பணப் பரிவர்த்தனை செய்ய பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள்  பற்றி ஆடிட்டர் சதீஷ்குமாரிடம் கேட்டோம். 

ரொக்கப் பணப் பயன்பாடு... கட்டுப்பாடுகள் என்னென்ன?

“முன்பெல்லாம் ரொக்கப் பணப்பரிவர்த் தனைகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும்  இல்லாமல் இருந்தது. இதனால் கறுப்புப் பணம் அதிகம் புழங்கி வந்தது. என்ன காரணத்துக்காக ரொக்கப் பணப் பரிவர்த்தனைகள் நடக்கிறது என்பதுகூட தெரியாத நிலையே இருந்தது. இதனை மாற்றுவதற்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், அனைத்துப் பரிவர்த்தனைகளையும் கணக்கில் கொண்டு வரவும் இப்படிப்பட்ட அதிரடிக் கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்திருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கையால் பலனும் இருக்கிறது; சில சிக்கல்களும் இருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் அவசியமே. அதனால்தான் இது குறித்து எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளாமல், தான் நினைத்ததைச் செயல்படுத்தி வருகிறது.

ரொக்கப் பணப் பயன்பாடு... கட்டுப்பாடுகள் என்னென்ன?


தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு,  வணிக பயன்பாட்டுக்கு ரூ.10,000 வரை மட்டுமே ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்ய முடியும். இது முன்பு ரூ.20,000 என இருந்தது. ரூ.10,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால், வருமான வரிச் சலுகையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. 

 மேலும், வரி செலுத்தும் ஒருவர் தனது மொத்த வருமானத்தில் ஆண்டுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ரு.2 கோடி வரை பெற்றிருந்தால், அதற்கான வருமான வரி  8 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நன்கொடைகளில், ரொக்கப் பணப் பரிவர்த்தனை வரம்பு ரூ.10,000-லிருந்து 2,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.2,000-க்கு மேல் ரொக்கமாகப் பெறப்பட்டால் அவற்றுக்கு 80G-ன் கீழ் வருமான வரிச் சலுகை கிடையாது. அதேபோல், அரசியல் கட்சிகளால் பெறப்படும் நிதி ரூ.2,000-க்கு மேல் ரொக்கமாகப் பெற்றாலும், அவற்றுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிவிலக்கு இல்லை.

ஒரு தனிநபர், ஒரு நாளைக்கு ஒரே முறை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறை ரூ.3 லட்சம் வரை ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்யலாம் என்றிருந்த வரம்பு, தற்போது ரூ.2 லட்சமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. அதாவது, மருத்துவச் செலவு, ஃபர்னிச்சர் போன்ற வீட்டுச் செலவுகள் போன்ற தனிநபர் செலவுகளுக்கு ரூ.2 லட்சம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிசினஸுக்காகச் செய்யப்படும் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20,000 வரை மட்டுமே ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்ய அனுமதி உண்டு. மேலும், ரியல் எஸ்டேட் துறை தொடர்பான எந்தப் பரிவர்த்தனைகளும் ரூ.10,000 மட்டுமே ரொக்கமாகச் செய்ய அனுமதி உண்டு. அதற்குமேல் காசோலையாகவோ, ஆர்டிஜிஎஸ் ஆகிய வழிகளில் மட்டுமே பரிவர்த்தனை செய்யமுடியும். ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை ரூ. 8,333 வரை மட்டுமே ரொக்கமாக வழங்கலாம். அதற்கு மேல் என்றால் காசோலை அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். ரூ.15 லட்சம் வரைக்கும் வீட்டில் ரொக்கமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கான வங்கி ஆதாரங்களை வைத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறி முடித்தார் ஆடிட்டர் சதீஷ்குமார்.

இனி ரொக்கமாகப் பணத்தைக் கொடுத்தால், சிக்கலில் சிக்கிவிடுவோம், ஜாக்கிரதை!