
ஜெ.சரவணன்
நம்மில் பலரும் `ஆன்லைனே கதி’ என இருக்கும் காலம் இது. பணப்பரிவர்த்தனை, தகவல் தொடர்பு என அனைத்தும் பெரும்பாலும் ஆன்லைன் வழியாகத்தான் நடக்கின்றன. எந்த அளவுக்கு ஆன்லைன் பயன்பாடு அதிகரித்திருக்கிறதோ, அதே அளவுக்கு அவற்றில் குற்றங்களும் முறைகேடுகளும் மோசடிகளும் அதிகரித்துள்ளன.
எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் ஏதோ ஒரு சமயம் எப்படியோ மாட்டிக்கொள்ளும் வகையில் மோசடிக்காரர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இ-மெயில் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம்தான் நிதி மோசடி வலைகளை வீசுகிறார்கள். அப்படிப்பட்ட மெயில் மற்றும் குறுஞ்செய்திகளை எப்படி அடையாளம் காண்பது எப்படி?

ரிசர்வ் வங்கி ஆளுநரிடமிருந்து வரும் இ-மெயில்
ரிசர்வ் வங்கி ஆளுநர் அல்லது ரிசர்வ் வங்கி பெயரில், உங்களுடைய பணம் ரிசர்வ் வங்கிக் கணக்கில் இருப்பதாகவும், அவற்றை உங்களுடைய வங்கிக் கணக்குக்கு அனுப்ப உங்களுடைய வங்கிக் கணக்கு குறித்த விவரங்களைத் தருமாறு கேட்டும் மெயில் வரலாம். அவற்றில் உங்கள் பாஸ்வேர்டு அல்லது ரகசியக் குறியீட்டு எண்ணையும் கேட்டிருந்தால் உஷாராகிவிட வேண்டும். உங்களுடைய பணத்தை உங்களுடைய கணக்குக்கு மாற்ற கமிஷனாக அல்லது கட்டணமாக ஒரு தொகையை நீங்கள் செலுத்த வேண்டும் என்றுகூட கேட்பார்கள். அப்படிப்பட்ட மெயில் வந்தால் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே பிரச்னையில் சிக்காமல் இருக்க சிறந்த வழி.
என்.பி.சி.ஐ பெயரில் வரும் மெயில்கள்
இந்திய தேசியப் பரிவர்த்தனை கார்ப்பரேஷன் அமைப்பு, இந்தியாவின் சில்லறை வர்த்தகப் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் அமைப்பாக விளங்குகிறது. இந்த அமைப்பின் பெயரிலும் அவ்வப்போது மோசடி மெயில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. போலி என்.பி.சி.ஐ லெட்டர்ஹெட்டில் இந்த மெயில்கள் அனுப்பப்படலாம். என்.பி.சி.ஐ ஒருபோதும் பணம் கேட்டோ, பரிவர்த்தனைக் கட்டணங்கள் கேட்டோ, எந்த ஒரு நபரையும் தொடர்புகொள்ளாது. மேலும், அந்நியச் செலாவணி அல்லது கரன்சி பாண்டுகள் அல்லது தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வேறு எந்தவொரு நிதியையும் நிர்வகிப்பதில்லை. மூன்றாம் நபர்களுக்குத் தரவேண்டிய எந்த ஒரு கட்டணத்தையும் செயல்படுத்துவதில்லை. எனவே, என்.பி.சி.ஐ பெயரில் எந்த மெயில் வந்தாலும், உஷாராக இருப்பது அவசியம்.
`லாட்டரி’ மெயில்கள்
உங்களுக்கு லாட்டரியில் பல பில்லியன் டாலர்கள் விழுந்திருப்பதாகவும், அந்தப் பணத்தை உங்களுக்கு அனுப்ப உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டும், பரிவர்த்தனைக் கட்டணமாக ஒரு தொகையைக் கேட்டும், இ-மெயில்களோ குறுஞ்செய்திகளோ வரலாம். அதுபோன்ற மெயில்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் ரகசியக் குறியீட்டுச் சொல் மற்றும் எண்களையோ பகிர்ந்துவிடாதீர்கள். ரிசர்வ் வங்கியின், அந்நியச் செலாவணி மாற்றல் சட்டம் 1999-ன்படி, லாட்டரி அல்லது லாட்டரி போன்ற எந்த ஒரு திட்டத்திலும் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லாட்டரி திட்டத்தில் பங்கு பெறாமலேயே உங்களுக்கு எப்படி லாட்டரியில் பணம் விழுந்திருக்கும் என்று யோசியுங்கள். இதெல்லாம் ஏமாற்று வேலை என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ளுங்கள்.
முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை
* நிதி சார்ந்த எந்தவோர் அரசு அமைப்புத் தரப்பிலிருந்தும் உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் உங்கள் பாஸ்வேர்ட் மற்றும் ரகசிய எண்ணைக் கேட்டுவந்தால் உஷாராகி விடுங்கள். `இவ்வளவு பணமா!’ என வாயைப் பிளந்தால், நீங்கள் பெரும் இழப்பையே சந்திக்க வேண்டி இருக்கும். இது மாதிரி உங்களுக்கு மெயில்கள், குறுஞ்செய்திகள் வந்தால், அதை சைபர் செல் அலுவலகத்துக்கு உடனே தெரியப்படுத்துங்கள்.
* ரிசர்வ் வங்கி தரப்பிலும் இதுபோன்ற சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான இணையதள முகவரி : (http://bit.ly/2p0sKxO).
* என்.பி.சி.ஐ-யிடமிருந்து உங்களுக்கு வரும் மெயில்களின் நம்பகத்தன்மையை அறிய, நீங்கள் riskmanagement@npci.org.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பலாம்.
இவற்றையெல்லாம் தாண்டி, இதுபோன்ற மெயில்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்குப் பதில் அளித்து உங்கள் பணம் பறிபோனால் அடையும் இழப்புக்கும் விளைவுகளுக்கும் முழுக்க முழுக்க நீங்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
உஷாராக இருந்தால், உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது என்பது மட்டும் நிச்சயம்.