நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஃபண்ட் கார்னர் - ஒரே ஃபண்டில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாமா?

ஃபண்ட்  கார்னர் - ஒரே ஃபண்டில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கார்னர் - ஒரே ஃபண்டில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாமா?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ஃபண்ட்  கார்னர் - ஒரே ஃபண்டில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாமா?

ஆர்.எஸ். மதிவாணன், சென்னை.

?‘‘ஒரே ஃபண்டில் 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்யலாமா? ஒரு ஃபண்டினை ரெவியூ செய்வது எப்படி?’’

‘‘தாராளமாக ஒரே ஃபண்டில் 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்யலாம். அதற்கு நீங்கள்  நெடுநாட்களாக நடைமுறையில் இருக்கும், நல்ல செயல்பாட்டுடன் உள்ள திட்டமாகப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். பொதுவாக, நீண்ட காலத்தில் பங்கு சார்ந்த திட்டங்கள் வேறு சொத்து வகைகளைவிட நல்ல வருமானத்தைத் தரும் என்பதால், ஒரே ஃபண்டில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதில் தவறில்லை. இதை லேஸி இன்வெஸ்டிங் (lazy investing) என்று கூறுவோம். அவ்வாறு முதலீடு செய்யும்பட்சத்தில், இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.

ஆக்டிவாகச் செயல்படும் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது ஆண்டுக்கு ஒரு முறை ரெவியூ செய்து கொள்ளலாம். முதலில், அந்த ஃபண்டின் பெஞ்ச்மார்க் குறியீட்டைவிட வெவ்வேறு காலகட்டங்களில் அதிக வருமானம் தந்துள்ளதா என்பதை ஒப்பிடுங்கள். அவ்வாறு இருந்தால் அது நல்ல ஃபண்ட் எனலாம்.  உதாரணமாக, எந்தவொரு லார்ஜ்கேப் ஃபண்டை எடுத்துக்கொண்டாலும், அதன் பெஞ்ச்மார்க் குறியீடு நிஃப்டி 50 அல்லது சென்செக்ஸாக இருக்கும். அந்தக் குறியீட்டைவிட, உங்களின் லார்ஜ்கேப் ஃபண்ட் அதிகமான வருமானத்தைத் தந்திருந்தால், நீங்கள் அந்த ஃபண்டில் முதலீட்டைத் தொடரலாம்.

இவற்றைவிட இன்னும் சிறந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்டின் கேட்டகிரி ஆவரேஜுடன் ஒப்பிடுங்கள். கேட்டகிரி ஆவரேஜைவிடவும், உங்கள் ஃபண்ட் அதிகமான வருமானத்தைத் தந்திருந்தால், நீங்கள் உறுதியாக அந்த ஃபண்டில் முதலீட்டைத் தொடரலாம். நீங்கள் ஒரு ஃபண்ட் ஆலோசகரின்  உதவியுடன் முதலீடு செய்யும்போது, அவர் இந்த வேலைகள் அனைத்தையும் உங்களுக்காகக் கவனித்துக் கொள்வார். அந்த வேலையைச் செய்வதற்காக நீங்கள் அவருக்குக் கட்டணம் தரவேண்டியிருக்கும்.’’

வி.கே.கார்த்திக், சென்னை.

?‘‘குரோத் ஃபண்டுக்கும், டிவிடெண்ட் ஃபண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?’’

‘‘மியூச்சுவல் ஃபண்டுகளில் குரோத் ஃபண்ட், டிவிடெண்ட் ஃபண்ட் என வெவ்வேறு ஃபண்டுகள் எல்லாம் கிடையாது. பெரும்பாலான ஃபண்டுகளில் இந்த இரண்டு ஆப்ஷனும் உள்ளன. ஒரு வகையில் பார்த்தால், குரோத் ஆப்ஷன் என்பது குமுலேட்டிவ் டெபாசிட் போன்றது. டிவிடெண்ட் ஆப்ஷன் என்பது ஃபிக்ஸட் டெபாசிட்டைப் போன்றது. ஃபிக்ஸட் டெபாசிட்டில் குறிப்பிட்ட இடைவெளிகளில் வட்டி கிடைத்துக்கொண்டே இருக்கும்.

ஃபண்ட்  கார்னர் - ஒரே ஃபண்டில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாமா?


குரோத் ஆப்ஷனில் உங்களின் முதலீடு வளர்ந்து கொண்டே செல்லும். டிவிடெண்ட் ஆப்ஷனில் உங்கள் முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபமானது  அவ்வப்போது உங்களுக்கு டிவிடெண்டாகத் திரும்பத் தரப்படும்.  நீண்ட காலத்துக்குப் பணம் தேவைப்படாதவர்கள் குரோத் ஆப்ஷனையும், அவ்வப்போது பணம் தேவைப்படுகிறவர்கள் டிவிடெண்ட்் ஆப்ஷனையும் தேர்வு செய்துகொள்வது நல்லது.’’

ரங்கராஜன், சைதாப்பேட்டை.

?‘‘சிட் ஃப்ண்டில் கிடைக்கும் லாபம், மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்கும் லாபம் - இந்த இரண்டில் எது பெஸ்ட் என்று சொல்லுங்கள்.’’

‘‘சிட் ஃபண்டில் ஒழுங்குமுறைக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் நிறுவனங்கள் உள்ளன. ஒழுங்குமுறைக்கு உட்படாமல் செயல்படும் நிறுவனங்களும்  ஆயிரக்கணக்கில் உள்ளன. ஒழுங்கு முறைக்கு உட்படாத சிட் ஃபண்டுகளில் அதிக வருமானம் கிடைக்கலாம். ஆனால், ரிஸ்க்கும் மிக அதிகம் என்பதை மறந்துவிடக் கூடாது. 

கடந்த கால் நூற்றாண்டில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் கணிசமான வருமானத்தைத் தந்துள்ளன. இந்த வருமானம் சிட் ஃபண்டுகளைவிடவும் அதிகம். அதிக வட்டியில் கடன் வாங்குபவர்களுக்கு சிட் ஃபண்டுகள் சிறப்பாக அமையும்.

ஆனால், நீண்ட காலத் தேவைகளுக்காக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுதான் சிறப்பாக அமையும். ஏனென்றால், மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் எடுப்பது மார்க்கெட் ரிஸ்க் மட்டும்தான். உங்கள் பணத்தை யாரும் ஏமாற்றி எடுத்துச்செல்ல வாய்ப்பில்லை. மேலும், நீங்கள் விரும்பும் வரை முதலீட்டை மேற்கொண்டு வரலாம் அல்லது செய்த முதலீட்டை விட்டு வைக்கலாம். அது வளர்ந்துகொண்டே இருக்கும். தேவைப்படும்போது அதிகபட்சமாக ஒரு வாரத்துக்குள்  பணம் கிடைத்துவிடும். தேவைப்படும் பணத்தைச் சிறிது சிறிதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது முழுவதுமாக எடுத்துக் கொள்ளலாம். 12 மாதத்துக்கு மேல் முதலீட்டை மேற்கொள்ளும்போது, வரும் லாபத்துக்கு வருமான வரி ஏதும் இல்லை. எனவே, சிட் ஃபண்டிலிருந்து மியூச்சுவல் ஃபண்டுக்கு மாறுவது இன்றியமையாதது. தினசரி ஏராளமானோர் மாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.’’

ஃபண்ட்  கார்னர் - ஒரே ஃபண்டில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாமா?