மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’!

நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! ( விகடன் டீம் )

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். பிசினஸுக்கும் அது பொருந்தும். எந்தவொரு பிசினஸாக இருந்தாலும் உங்களுடைய பொருள்கள் அல்லது சேவைகளின் சாம்பிள் உங்கள் கைகளில் இருக்க வேண்டும்.சாம்பிள் இல்லாமல் எந்த ஒரு பிசினஸையும் செய்யக் கூடாது. முக்கியமாக, ஏற்றுமதியில் சாம்பிள் என்பது மிக முக்கியம். 

சாம்பிள் இல்லாமல் ஏற்றுமதி பிசினஸை வெற்றிகரமாகச் செய்ய முடியாது. ஆனால், சாம்பிளை வைத்தே பிசினஸ் செய்பவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். இதை முதலில் மனதில் நன்றாகப் பதிய வைத்துக்கொண்ட பிறகே சாம்பிள் தருவது பற்றி யோசிக்க வேண்டும்.

சரி, சாம்பிள் கொடுப்பது எப்படி, எந்தப் பொருளை எவ்வளவு சாம்பிள் தரவேண்டும், எவற்றையெல்லாம் சாம்பிள் தரக்கூடாது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’!

  சாம்பிள் மூன்று வகை

பிசினஸில் சாம்பிள் கொடுப்பதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, மூலப் பொருள்கள் மற்றும் பொடி செய்யப்பட்ட பொருள்கள்; இரண்டு, முழுவதுமான செய்து முடிக்கப்பட்ட (Finished) பொருள்கள், அதாவது உடனடிப் பயன்பாட்டுக்கான இறுதிநிலைப் பொருள்கள். மூன்று, பிராண்டட் பொருள்கள், அதாவது ஏற்கெனவே பிரபலமாக உள்ள பொருள்கள். இப்படி மூன்று வகைகளாக ‘சாம்பிள்’ தர  வேண்டிய பொருள்களைப் பிரிக்கலாம்.

இவற்றில் எப்படி, எவ்வளவு சாம்பிள் தருவது  என்பதை இனி தனித்தனியாகப் பார்க்கலாம்.

மூலப்பொருள்கள் மற்றும் பொடி செய்யப்பட்ட பொருள்கள் (Raw and Powder products)

நேரடி உற்பத்திப் பொருள்கள், அதாவது அரிசி, முந்திரி போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். அதேபோல், பொடி அல்லது மாவு பொருள்கள். உதாரணமாக, இட்லி பொடி, சாம்பார் பொடி மற்றும் சத்து மாவு போன்றவற்றைச் சொல்லலாம். இவை எதுவாக இருந்தாலும், 100 முதல் 250 கிராம் மட்டுமே சாம்பிள் கொடுக்க வேண்டும்.

கிலோக் கணக்கில் யாராவது உங்களிடம் சாம்பிள் கேட்டால் உஷாராகிவிடுங்கள்.  உங்களிடம் கிலோக் கணக்கில் வாங்குவதுபோல, வேறு சிலரிடம் வாங்கியே ஒரு கடையைப் போட்டுவிடுவார்கள். அப்படி செய்தால் நீங்களே முதல் போட்டு உங்களுக்குப் போட்டியாக ஒரு ஆளைத் தயார் செய்கிறீர்கள் என்று அர்த்தம். 

ஃபினிஷ்டு புராடக்ட்ஸ் (Finished Products)

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’!


ஃபினிஷ்டு பொருள்கள், அதாவது உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய வகையிலான பொருள்களான இயந்திரங்கள் மற்றும் ஜவுளிகளை இவற்றுக்கு உதாரணமாகச்   சொல்லலாம். இவற்றையெல்லாம் சாம்பிள் அனுப்புங்கள் என்று யாராவது கேட்டால், சற்றுக் கவனமாகச் செயல்பட வேண்டும்.

இந்த வகைப் பொருள்களைப் புகைப்படம் எடுத்து அனுப்புவது சிறந்த வழி. அதையும் மீறி, சாம்பிள் தந்தால் உடனடியாக ஆர்டர் கிடைக்கும் என்றால், அவர்களிடம் சாம்பிளுக்கான பணத்தை அனுப்பச் சொல்லிக் கேளுங்கள். பணத்தை அனுப்பினால், சாம்பிள் அனுப்புங்கள். இல்லையெனில்,  அவருடைய சகவாசமே வேண்டாம் என்று ஒதுக்கிவிடுங்கள். 

அதேபோல், சாஃப்ட்வேர் தொடர்பான புராடெக்ட்டுகள். உதாரணத்துக்கும் வெப் டிசைன், புராடெக்ட் டிசைன் அல்லது ஆப் டிசைன் போன்றவை. இந்த வகை தயாரிப்புகளை பிடிஎஃப்-ஆக (PDF) கன்வர்ட் செய்து, அந்த பிடிஎஃப்-ஐ போட்டோ எடுத்து அனுப்புவதுதான் சிறந்த வழி. ஏதோ ஓர் ஆர்வக்கோளாறில் உங்கள் தயாரிப்புகளை சி.டி அல்லது பென் டிரைவில் போட்டுத் தந்துவிட்டால் அவர்கள் அதை காப்பி எடுத்து உங்கள் பிசினஸை வாரிக் கொண்டு போய்விடுவார்கள். இதற்கு பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.
 
  பிராண்டட் பொருள்கள்

புரூ டீ, டாடா சால்ட் இப்படி ஏற்கெனவே பிரபலமாக உள்ள அல்லது ஏற்கெனவே ஒரு பெயரில் விற்பனை ஆகும் பொருள்களை யாராவது சாம்பிள் கேட்டால், உடனே அனுப்பி விடாதீர்கள். பிராண்டட் பொருள்களுக்கு சாம்பிள் வழங்க வேண்டிய அவசியமே இல்லை. அந்தப் பொருள்களைப் பற்றி பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அப்படியே அவர்களுக்கு அந்தப் பொருள்கள் பற்றித் தெரிய வேண்டுமெனில், ஒவ்வொரு பிராண்டுக்கும் இணையதளம் இருக்கிறது. அந்த பிராண்டின் இணையதளத்தில் அதன் தயாரிப்புகள் குறித்த விவரங்கள் இருக்கும். அந்த இணையதளப் பக்கத்தை அனுப்பிப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட வேண்டும்.

  முக்கியமாக செய்ய வேண்டியவை

சாம்பிள் தரும் போது, இறக்குமதி யாளரிடம் சாம்பிள் அனுப்பிய 15 நாள்களுக்குள் ஆர்டர் தந்தால்தான்  உடனடியாகப் பொருள்களை அனுப்பும் வேலைகளில் விரைவாக இறங்க முடியும் என்பதைத் தெளிவாகத் தெரியப்படுத்துவது அவசியம்.  மேலும், அனுப்பும் சாம்பிளில் பாதியை அவர்களுக்கும், மீதியை உங்கள்  ரெஃப்ரன்ஸுக்கும் நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். 

சாம்பிள் அனுப்பும்போது ஒரு டிக்ளரேஷன் லெட்டரும் நீங்கள் அனுப்ப வேண்டும். அந்தக் கடிதத்தில், இந்தக் காரணத்துக்காக, இந்த சாம்பிள் பொருளை, இந்த இடத்துக்கு அனுப்புகிறேன் என்பது போன்ற விவரங்களை அவசியம் குறிப்பிட்ட வேண்டும்.

என்ன தேதியில் நீங்கள் சாம்பிள் அனுப்புகிறீர்கள்,  எப்போது அதற்கான பதிலைச் சொல்வார்கள்  என்கிற விவரங்களையும் அதில் குறிப்பிடுவது அவசியம். சாம்பிள் அனுப்பும் பொருள்கள் விற்பனைக்கானதல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.

சாம்பிள் கொடுக்கவே கூடாத பொருள்களும் உள்ளன. அவற்றில் முக்கியமானவை காய்கறி, எண்ணெய் போன்ற பொருள்கள். காய்கறிகளுக்கான சாம்பிளை எந்தக் காரணம் கொண்டு  கொடுக்கக் கூடாது. அதேபோல், எண்ணெய் பொருள்களை கொரியரில் அனுப்ப அனுமதி இல்லை. அதேசமயம், சாம்பிளாகத் தரப்பட்ட பொருளை வெளிநாடுகளுக்குத் தொடர்ந்து ஏற்றுமதி செய்து கொண்டிருக்கவும் கூடாது.

(ஜெயிப்போம்)