
கா.முத்துசூரியா
சண்முகம், காரைக்குடியைச் சேர்ந்தவர். அவருக்கு 35 வயதாகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாகத் துபாயில் பணியாற்றி வருகிறார். சண்முகம் துபாய்க்குச் சென்ற ஒரே வருடத்தில் சரளாவைத் திருமணம் செய்துகொண்டு, தன்னுடன் துபாய்க்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
துபாய் சென்ற சில மாதங்களில் சரளாவும் வேலைக்குப் போக ஆரம்பித்தார். இருவரும் சேர்ந்து மாதம் ரூ.3,27,500 சம்பளமும் வாங்கினார்கள். புதிதாகக் கல்யாணமான தம்பதிகள் என்பதால், சண்முகமும், சரளாவும் பல நாடுகளுக்கு ஹனிமூன் சென்றார்கள். நிறைய ஷாப்பிங் போனார்கள். கார் வாங்கினார்கள். மனைவியைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஏராளமான தங்க நகைகளை வாங்கித் தந்தார் சண்முகம். வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் வாங்கிக் குவித்தார். யாரோ சொன்னார்கள் என்று புதுக்கோட்டையில் சில ஏக்கர் நிலம் வேறு வாங்கிப் போட்டார்.

இப்படி அள்ளி அள்ளிச் செலவு செய்ததால் நிறையக் கடன் வாங்கினார். துபாயில் கடன் கிடைப்பது எளிது. வாங்கும் சம்பளத்தைப் போல 20 முதல் 25 மடங்கு வரை வங்கிகளில் கடன் வாங்க முடியும். இது சண்முகத்துக்கு வசதியாகப் போகவே சகட்டுமேனிக்குக் கடன் வாங்கித் தள்ளினார். இதனால் பல லட்சம் ரூபாய் அவருக்குக் கடனாகச் சேர்ந்தது.
சண்முகம் - சரளா தம்பதிக்கு மதுமிதா என்ற மூன்று வயது பெண் குழந்தை ஒன்றுள்ளது. வாங்கும் சம்பளத்தில் 40% வரை கடனைத் திரும்பக் கட்டவே சரியாகப் போனது. ஆடம்பரமாகச் செலவு செய்து பழகிவிட்டதால், குடும்பச் செலவுகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை. துபாய்க்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகியும், ஒன்றுமே சேர்க்கவில்லையே என்று சண்முகம் பதற ஆரம்பித்தார். இன்னும் 10 ஆண்டுகளில் ஓய்வு பெற்று இந்தியாவுக்குத் திரும்ப விரும்பினார். ஆனால், எதுவும் சேர்க்கவில்லையே என்கிற கவலை அவரை அரிக்க, நம்முடன் தொடர்பு கொண்டு பேசினார்.
‘‘என்னுடைய வரவு செலவு, முதலீட்டு விவரங்கள், எங்கள் சமூக வழக்கப்படி மகளுக்கு அதிகமாக நகை போட வேண்டிய சூழல், ஓய்வுக் காலத்துக்கான தேவை எனப் பல தகவல்களையும் உங்களுக்கு மெயில் அனுப்பி யிருக்கிறேன். ஓய்வுக் காலத்துக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் ரூ.30,000 (தற்போதைய கணக்குப்படி) தேவை’’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

வரவு செலவு விவரம்
சண்முகத்தின் சம்பளம் : ரூ.2,27,500
சரளாவின் சம்பளம் : ரூ.1,00,000
மாதாந்திரச் செலவுகள் : ரூ.1,00,000
கடன் இ.எம்.ஐ : ரூ.1,25,000

சீட்டு : ரூ.20,000
யூலிப் : ரூ.30,000
பயண செலவு (ஆண்டுக்கு) : ரூ.15,000
மீதமாகும் தொகை : ரூ.37,000
மனை மதிப்பு : ரூ.50,00,000
தேவைகள்
மதுமிதாவின் மேற்படிப்புக்கு (15 ஆண்டுகளில்) : ரூ.50 லட்சம்
மதுமிதாவின் திருமணம் (21 ஆண்டுகளில்) : ரூ.1.50 கோடி
அவர் கொடுத்த விவரங்களை நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதிக்கு அனுப்பி வைத்தோம். சண்முகத்துக்கு அவர் தரும் நிதித் திட்டமிடலும் ஆலோசனைகளும் இனி...
“மிஸ்டர் சண்முகம், கடன் வாங்குவது தவறே இல்லை. ஆனால், எதற்காகக் கடன் வாங்குகிறோம் என யோசிக்காமல் வாங்குவது மிகப் பெரிய தவறு. வீடு வாங்க, நிலம் வாங்க, பிசினஸ் செய்யக் கடன் வாங்கினால் தவறில்லை. ஆனால், நீங்கள் கடன் வாங்கி, மிக மிக ஆடம்பரமாக வாழ்ந்துள்ளீர்கள். கடனுக்கான இ.எம்.ஐ மட்டும் மாதம் ரூ.1.25 லட்சம் செலுத்துவது என்பது ஒப்புக்கொள்ள முடியாத தவறு.
ஆனால் ஒரே நல்ல விஷயம், உங்கள் தவறை 35 வயதுக்குள்ளாகவே உணர்ந்துவிட்டீர்கள். நீங்கள் கேட்கும் தேவைகளை நிறைவேற்றுகிற அளவுக்கு உங்களிடம் போதிய பணம் தற்போது இல்லை. ஆனால், கடனைத் திரும்பக் கட்ட கட்ட, உங்களுக்குக் குறிப்பிட்ட அளவு பணம் மிச்சமாகும். அப்போது உங்கள் எதிர்கால இலக்குகளுக்குத் தேவையான முதலீட்டைத் தாராளமாக செய்யலாம்.

நீங்கள் 45 வயதில் ஓய்வுபெற விரும்புவதால், இன்னும் 10 ஆண்டுகளில் உங்கள் எல்லா இலக்குகளுக்கும் எப்படிப் பணம் சேர்க்க முடியும் எனப் பார்ப்போம்.
உங்கள் குழந்தையின் மேற்படிப்புக்கு அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் தேவை எனக் கேட்டுள்ளீர்கள். பத்து ஆண்டுகளே உங்களுக்கு அவகாசம் இருப்பதால், அதற்குள் ரூ.28 லட்சம் சேர்த்து விட்டு, அதனை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மறுமுதலீடு செய்தால், இந்த இலக்கு நிறைவேறும்.
ரூ.28 லட்சம் சேர்க்க வேண்டுமானால், மாதம் ரூ.13,100 முதலீடு செய்ய வேண்டும். ஆனால், உங்களுக்கு மொத்தமே ரூ.37,000 மட்டுமே மீத மிருப்பதால், இப்போதைக்கு இது சாத்தியமில்லை. மாதம் ரூ.7,200 முதலீட்டில் தொடங்கி ஆண்டுக்கு 15% முதலீட்டை உயர்த்தி முதலீடு செய்வதன் மூலம் ரூ.28 லட்சம் என்ற இலக்கை அடைய முடியும். அடுத்து, மதுமிதாவின் திருமணத்துக்கு நிறைய நகை போட வேண்டியிருப்பதால், ரூ.1.50 கோடி தேவை என்கிறீர்கள். 10 வருடங்களில் ரூ.43 லட்சம் சேர்த்துவிட்டு, அதனை அடுத்த 11 வருடங்களுக்கு மறுமுதலீடு செய்வதால், நீங்கள் கேட்ட தொகையைப் பெறலாம். மாதம் ரூ.9,700 முதலீட்டில் தொடங்கி, ஆண்டுக்கு 18% முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் ரூ.43 லட்சம் கிடைக்கும்.
அடுத்து ஓய்வுக்காலம். மாதம் ரூ.30 ஆயிரம் தேவை எனச் சொல்லியுள்ளீர்கள். 7% பணவீக்கம் எனக் கணக்கிட்டால், 10 வருடங்களுக்குப்பின் மாதம் ரூ.59,000 தேவைப்படும். அப்படியானால், கார்பஸ் தொகையாக ரூ.2.3 கோடி தேவை. நீங்கள் முதலீடு செய்துள்ள யூலிப் பாலிசி மூலம் தோராயமாக ரூ.1.24 கோடி கிடைக்கும். மீதமுள்ள ரூ.1.08 கோடியைச் சேர்க்க மாதம் ரூ.20,000 முதலீட்டில் தொடங்கி, ஆண்டுக்கு 25% அதிகரிப்ப தால், இந்த இலக்கை எட்ட முடியும்.
நீங்கள் ரூ.20,000 சீட்டுக் கட்டி வருகிறீர்கள். அது இன்னும் 15 மாதங்களில் முடிந்துவிடும். இன்னொரு முக்கியமான விஷயம், 2019-ல் உங்கள் கடன் வெகுவாகக் குறைந்துவிடும். அப்போது மீண்டும் ஆடம்பரச் செலவுகளுக்குக் கடன் வாங்காமல், அந்தத் தொகையைப் பயன்படுத்தி, முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் நிர்ணயிக்கப் பட்ட காலத்துக்குமுன்பே உங்கள் இலக்குகளை எட்ட முடியும். அடுத்தமுறை இந்தியாவுக்கு வரும் போது, குறைந்தபட்சம் ரூ.2 கோடிக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். வாழ்த்துகள்!’’

முதலீட்டுப் பரிந்துரை
பங்கு சார்ந்த முதலீடு:
ஐசிஐசிஐ புரூ. ஃபோகஸ்டு புளூசிப் : ரூ.6,000
எஸ்பிஐ மல்டிகேப் : ரூ.6,500
மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் : ரூ.6,000
கடன் சார்ந்த முதலீடு:
செல்வமகள் திட்டம் : ரூ.6,000
ஹெச்டிஎஃப்சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் : ரூ.5,000
ஐசிஐசிஐ புரூ. இன்கம் ஆப்பர்ச் சூனிட்டீஸ் ஃபண்ட் : ரூ.3,800
கோல்டு ஃபண்ட் :
ஐடிபிஐ கோல்டு ஃபண்ட் : ரூ.3,700
குறிப்பு: பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்துகொள்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor- Reg. no - INA200000878