
நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்
பிரச்னை... பிரச்னை... இன்றைக்குப் பலரும் கண்டு அஞ்சும் வார்த்தை இது. பிரச்னை இல்லாத வாழ்க்கை வேண்டும் என எல்லோரும் வேண்டி விரும்பிக் கேட்கும் காலம் இது.
ஆனால், பிரச்னை இல்லாத வாழ்க்கை என்ற ஒன்று பகல்கனவுதான். அப்படியொரு வாழ்க்கை யாருக்கும் அமைவதும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என எந்த பிசினஸ்மேனும் எதிர்பார்ப்பதும் இல்லை. பிரச்னை வரும்போது ஒரு பிசினஸ்மேனின் மூளை மாற்றி யோசிக்க வேண்டும். இதற்கு ஓர் உதாரணமாக, என் தந்தையின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு சம்பவத்தைச் சொல்கிறேன்.
என் தந்தையார் சின்னி கிருஷ்ணன் அதிகமாகப் புத்தகங்களைப் படிப்பார். எந்த ஊருக்குச் சென்றாலும் அவரது சூட்கேஸில் பல புத்தகங்கள் இருக்கும். ஒரு நாள் அவர் வெளியூருக்குச் சென்றபோது அவர் சூட்கேஸில் இருந்த ஷாம்பூ பாட்டில் உடைந்து புத்தகங்களின் மீதும், உடுத்த வைத்திருந்த ஆடைகளின் மீதும் கொட்டிவிட்டது. புத்தகம், உடுப்புகள் மீது ஷாம்பு கொட்டிவிட்டதே என அவருக்கு வருத்தம்தான். ஆனால், அந்த வருத்தத்திலேயே அவர் மூழ்கிவிடவில்லை. தனக்கு நடந்த மாதிரி இன்னும் எத்தனை பேருக்கு இப்படி நடந்திருக்குமோ என்று யோசித்தார். இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்று யோசித்தார். அப்போது உருவானதே உடையவே உடையாத ‘ஷாசே’ பாக்கெட் தொழில்நுட்பம்.

அவரே ஷாம்பு தயாரிக்கிற ஃபார்முலாவைக் கண்டுபிடித்து, அதனைத் தயாரித்து, ‘ஷாசே’ பாக்கெட்டுகளில் அடைத்தார். வெளியூருக்குச் செல்லும்போது எளிதாகப் பயன்படுத்துகிற மாதிரி அதை ‘ட்ராவலர்ஸ் பேக்’-ஆக மாற்றித் தந்தார். அதைப் பார்த்த என் அண்ணன், இதை வெளியூர் செல்ல நினைக்கும் பயணிகள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? வீட்டிலே இருக்கும் அனைவரும்கூட பயன்படுத்தலாமே என்று நினைத்தார். எல்லோரும் அதைப் பயன்படுத்துகிற மாதிரி விளம்பரமும் செய்தார். விளைவு, இன்றைக்கு பணம் படைத்தவர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை பயன்படுத்தும் ஒரு அத்தியாவசியமான பொருளாக மாறியிருக்கிறது ஷாம்பு.
என் தந்தையார் கண்டுபிடித்த ஷாசே தொழில்நுட்பம், ஷாம்புடன் மட்டும் நிற்கவில்லை. இன்றைக்கு எந்தவொரு மளிகைக் கடைக்கும் போய்ப் பாருங்கள். அரிசி, பருப்பு, சர்க்கரை முதல் அத்தனை பொருள்களும் பாக்கெட்டுகளாக மாறக் காரணம், இந்த ஷாசே தொழில்நுட்பம்தான். ‘அண்ணாச்சி... அரை கிலோ சர்க்கரை’ என்று கேட்டால், அதை அளந்து, பொட்டலம் கட்டித் தரவேண்டியதில்லை. அரை கிலோ சர்க்கரை பாக்கெட் ஒன்றை எடுத்துத் தந்தால் போதும், அரை விநாடியில் முடிந்தது வேலை.
ஆக, பிரச்னை வந்தபோது மாற்றி யோசித்ததன் மூலம் எஃப்.எம்.சி.ஜி சந்தையில் பெரும் புரட்சியைக் கொண்டு வந்தார். அவரைப்போல ஒவ்வொரு பிசினஸ்மேனும் பிரச்னை வரும்போது, அதனை நேருக்கு நேர் சந்தித்து, மாற்றி யோசிப்பதன் மூலம் அதற்கான எளிய தீர்வினைக் கண்டுபிடிக்க முயல வேண்டும். அப்படி செய்ய நினைக்கிற பிசினஸ்மேனின் பெயர்தான் நிச்சயம் சரித்திரத்தில் இடம்பெறும்.
மாற்றி யோசித்ததன் விளைவாக, பிசினஸ் வரலாற்றில் இடம்பிடித்த மனிதர்தான் திருபாய் அம்பானி. மாற்றி யோசிக்கும் மனோபாவம் அவரிடம் இளமைப் பருவத்திலேயே இருந்ததுதான் ஆச்சர்யம்.

திருபாய் அம்பானி, சிறு வயதில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்தார். அப்போது விலை உயர்ந்த காரில் ஒருவர் பெட்ரோல் போட வருவது வழக்கம். அவரைப் பார்த்த அம்பானி, யார் அவர் என விசாரித்திருக்கிறார். ‘‘இவர் பல எண்ணெய்க் கிணறுகளுக்குச் சொந்தக்காரர். மிகப் பெரிய செல்வந்தர்’’ என அவர்கள் கூறியபோது, ‘‘நானும் ஒரு நாள் எண்ணெய் கிணறு வைப்பேன்’’ என அவர்களிடம் சொன்னார் அம்பானி. அதைக் கேட்டவர்கள் ஏளனமாகச் சிரித்தனர்.
பெட்ரோல் பங்கில் வேலைப் பார்த்த நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் ஆடிட்டர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார் அம்பானி. ஒரு மாத காலம் தொடர்ந்து வேலை பார்த்தபிறகு ஆடிட்டரின் உதவியாளர் அம்பானிக்குச் சம்பளம் கொடுக்க, அம்பானி அதை வாங்க மறுத்துவிட்டார். ‘இவன் நன்றாக வேலை பார்ப்பதால், அதிகச் சம்பளம் எதிர்பார்க்கிறான் போல’ என்று நினைத்து ஆடிட்டரின் உதவியாளர் ஆடிட்டரிடம் சொல்ல, அவர் அம்பானியை அழைத்தார்.
சம்பளம் வாங்க மறுத்ததற்கான காரணத்தைக் கேட்க, அம்பானி சொன்ன பதில்தான் அவர் மாற்றி யோசித்தார் என்பதற்கான ஆதாரம். ‘‘நான் இங்கு அக்கவுன்ட்ஸ் கற்றுக்கொள்ளத்தான் வந்திருக்கிறேன். எனவே, எனக்கு எந்தச் சம்பளமும் வேண்டாம்’’ என்று சொன்னதைக் கேட்டு அசந்து போனார் அந்த ஆடிட்டர். இவன் வித்தியாசமாக யோசிக்கிறானே என்று நினைத்த ஆடிட்டர், அம்பானிக்கு அக்கவுன்ட்ஸ் பற்றிய அத்தனை விஷயங் களையும் சொல்லித் தந்தார். ஒரு கல்லூரி மாணவன்போல, அக்கவுன்ட்ஸ் பற்றிய அத்தனை விஷயங் களையும் கற்றுக் கொண்டதால்தான், பிற்பாடு ரிலையன்ஸ் என்கிற சாம்ராஜ்ஜியத்தை அவரால் அமைக்க முடிந்தது.
திருபாய் அம்பானி, எடுத்த எடுப்பிலேயே ரிலையன்ஸ் என்கிற நிறுவனத்தை ஆரம்பித்து விடவில்லை. மாற்றி யோசித்ததன் மூலம் உருவானதுதான் அந்த சாம்ராஜ்யம். எப்படி?
திருபாய் அம்பானி, பல பிசினஸ் முயற்சிகளைச் செய்தபின் ஆரம்பித்ததுதான் ‘விமல்’ சூட்டிங்ஸ். ‘ஒன்லி விமல்’ என்பது அன்றைக்கு எல்லோரும் சொன்ன பிசினஸ் டாக்லைன். ‘விமல் சூட்டிங்ஸ்’ சக்கைப்போடு போட்டதைப் பார்த்து, இது போதுமே என்று அவர் திருப்தி அடைந்துவிட வில்லை. ஆடைகள் தயாரிக்கத் தேவையான பாலியெஸ்டர் எதிலிருந்து கிடைக்கிறது என்று யோசித்தார். கச்சா எண்ணெயிலிருந்து என்று கண்டறிந்தார். கச்சா எண்ணெயிலிருந்து பாலியெஸ்டர் தயாரிக்கும் பிசினஸில் அவர் இறங்க, கடைசியில் அது கச்சா எண்ணெயைச் சுத்தப்படுத்தி விற்பதில் போய் முடிந்தது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இன்றைக்கு மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது ரிலையன்ஸ்.
இந்த மாற்றம், திருபாய் அம்பானி மாற்றி யோசித்ததால் வந்தது. மாற்றி யோசிக்கத் தயார் எனில், நாளைக்கு நீங்களும் ஒரு திருபாய் அம்பானியாக மாறுவது உறுதி. ஆனால், மாற்றி யோசிப்பது எப்படி? சொல்கிறேன்.
(மாத்தி யோசிப்போம்)