மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 3 - தோல்வியிலிருந்து வெற்றி... கற்றுத்தரும் கலகல கல்லூரிப் பருவம்!

நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்
கல்லூரியில் பட்டம் பெறுவது ஓட்டுநர் உரிமம் வாங்குவதைப் போலத்தான். அதற்குப் பின்புதான் நாம் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. வரலாற்று ஆசிரியர் நமக்கு வரலாற்றை மட்டுமே சொல்லித் தருவார். வரலாற்றில் எப்படி இடம்பிடிக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தர மாட்டார். அதனால் பாடத்தைத் தவிர, கற்றுக்கொள்ள பல விஷயங்கள் கல்லூரியில் இருக்கின்றன.
நான் கல்லூரியில் படிக்கும்போது வகுப்புகளுக்குப் பெரும்பாலும் செல்லமாட்டேன். எங்கள் துறை மாணவர்களோடு மட்டுமில்லாமல், மற்ற துறை மாணவர்களுடனும், எங்கள் சீனியர் மாணவர்களுடனும் அதிகமாகப் பழகுவேன். இது பல தரப்பட்டவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருந்தது. அதேபோல், கல்லூரியில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பேன். யார் எங்கள் கல்லூரியில் பேச வந்தாலும் அவர்களின் பேச்சைக் கேட்கச் செல்வேன்.
அப்படியொரு நாள் எங்கள் கல்லூரியில் உதயமூர்த்தி பேச வந்தார். அப்போது அவரின் பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருந்தேன். அவர் ஒரு நல்ல பேச்சாளர் என்று தெரியும். அதனால் அவரின் பேச்சைக் கேட்க நண்பர்களை அழைத்துக் கொண்டுச் சென்றேன். அன்று காந்தி ஜெயந்தி என்பதால், அவர் காந்தியைப் பற்றிப் பேசினார்.

எனக்கு அப்போது காந்தியைப் பிடிக்காது. ஏனென்றால், கல்லூரியில் படிக்கும்போது நான் ஒரு கிரிக்கெட் பைத்தியம். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்திருந்தால் எளிதாக உலகக் கோப்பையை வெல்லலாம். ஆனால், இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிய, காந்திதான் காரணம் என நானாகவே நினைத்துக்கொண்டிருந்ததால், காந்தியை எனக்குப் பிடிக்காமல் இருந்தது.
காந்தி ஜெயந்தியை நாம் எப்படி கொண்டாடுகிறோம் என்பது குறித்து உதயமூர்த்தி பேசினார். காந்தியின் புகைப்படம் ஒன்றை அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பார்த்ததாகவும், அந்தப் படத்தின் கீழே எம்.கே.காந்தி, ‘ஃபாதர் ஆஃப் தி நேஷன் இந்தியா’ என்று எழுதாமல், அவரின் படத்துக்குக் கீழே, ‘எ சிங்கிள் மேன் கேன் மேக் எ டிஃபரென்ஸ்’ என்று எழுதியிருந்ததைப் பார்த்து பிரமித்துப்போனதாகச் சொன்னார். காந்தியை நாம் எப்படிப் பார்க்கிறோம், அமெரிக்கர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என அன்றுதான் எனக்குப் புரிந்தது. அதன்பின் காந்திஜியைப் பற்றி தேடித் தேடிப் படித்தேன்.

என்னால் அந்த ‘எ சிங்கிள் மேன் கேன் மேக் எ டிஃபரென்ஸ்’ என்ற வாக்கியத்தை மட்டும் மறக்கவே முடியவில்லை. தனியொரு ஆளாய் என்னால் மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா? காந்தியால் முடிந்தது என்னால் முடியுமா என்கிற கேள்வியை எனக்குள் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அந்தக் கேள்விகள்தான், என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாணவனும் கல்லூரியிலிருந்தே தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
சமீபத்தில் நான் ஒரு கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தேன். அங்கு ஒரு பெண் பரதநாட்டிய ஆடையை உடுத்திக்கொண்டு அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அடுத்த 15 நிமிடத்தில் அவரே நடனமும் ஆடினார். அடுத்து அந்தக் கல்லூரியின் லியோ க்ளப் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார்கள். அதில் ஒருவராகவும் அந்தப் பெண் இருந்தார். இப்படி எல்லா விஷயங்களிலும் ஈடுபாட்டுடன் செய்யும்போது நிறைய விஷயங்களை ஒருவரால் கற்றுக்கொள்ள முடியும். இது கல்லூரியில் படிக்கும்போதுதான் சாத்தியமாகும்.
எல்லாக் கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் பார்த்தால், நன்றாகப் படிக்கிற மாணவர்கள் அவர்களைப்போல் படிக்கிற பிற மாணவர்களுடன் தான் பழகுவார்கள். அதேபோலதான் சராசரி மற்றும் கடைசி பெஞ்ச் மாணவர்கள். இவர்கள் இவர்களைப் போலவே இருக்கும் மாணவர்களுடன் மட்டுமே பழகுவார்கள். நடு மற்றும் கடைசி பெஞ்ச் மாணவர்கள் படிப்பைத் தவிர, பிற செயல்பாடுகளிலும் ஈடுபாட்டுடன் இருப்பார்கள். ‘அரியர்ஸ் இல்லாத மனிதன் அறை மனிதன்’ என்கிறமாதிரி, இவர்கள் அவ்வப்போது அரியர் வைப்பார்கள். அப்புறம் இரவு பகலாகப் படித்து பாஸ் செய்வார்கள்.
இவர்கள் கல்லூரியை முடித்து வெளியில் வேலைக்குச் செல்லும்போது தப்பித்துக் கொள்வார்கள். ஆனால், படித்த மாணவர்களுடன் மட்டுமே பழகிய மாணவர்கள் வேலைக்குச் செல்லும்போது கொஞ்சம் சிரமப்படுவார்கள். வேலை செய்கிற இடத்தில் அவர்களது பாஸ் சின்னதாகச் சத்தம் போட்டாலே அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஏனென்றால், அவர்கள் அதுவரை தோல்வியைச் சந்திக்காமலே இருந்திருப்பார்கள். ஆனால், இந்த நடு மற்றும் கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு இது சாதாரணமாக இருப்பதோடு, வேலைக்குச் சென்றபின் பொறுப்புடன் இருக்கவேண்டும் என்கிற எண்ணமும் வரும். இதனால் அவர்களின் வேலையைச் சரியாகச் செய்வார்கள். தோல்வி வந்தாலும் துவண்டு போக மாட்டார்கள்.

இதற்காக, கல்லூரியில் நன்கு படிக்கும் மாணவர்கள் நன்றாக படிக்கவே கூடாது என்று நான் சொல்லவில்லை. படிப்பு மிகவும் அவசியம்தான். ஆனால், அந்தப் படிப்பு உங்களை ஒரு கம்பெனியின் இன்டர்வியூ வரைக்கும்தான் அழைத்துச் செல்லும். அதன்பிறகு உங்களின் திறமைதான் உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். என்னைப் பொறுத்தவரை, கல்லூரியில் படிக்கும்போது ஒரு மாணவன் தோல்வியைச் சந்திக்க வேண்டும். அந்தத் தோல்வி, படிப்பில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. விளையாட்டுப் போட்டியில்கூட தோல்வியைச் சந்தித்திருக்கலாம்.
ஒரு புத்தகத்தில் ஒரு சம்பவத்தைப் படித்தேன். அதில், ஒரு பெண் குழந்தை பள்ளியில் எப்போதும் முதல் மாணவியாக மதிப்பெண் எடுப்பாள். அந்தப் பெண் குழந்தைக்கு பார்பி டால் மிகவும் பிடிக்கும். எனவே, அவளது மாமா அந்தப் பெண் குழந்தைக்குப் பிடித்த பார்பி டாலை வாங்கித் தந்து, ‘‘நீ அடுத்த பரீட்சையில் ஃபெயில் ஆக வேண்டும்’’ என்று சொன்னாராம். ஏனென்றால், நீங்கள் வெற்றியை மட்டும் ருசித்துக் கொண்டிருந்தால், அதன் அருமை உங்களுக்குத் தெரியாது. ஒரு தோல்விக்குப் பின்னால் கிடைக்கிற வெற்றி எப்போதும் அதிக ருசியைத் தரும்.
என் வாழ்க்கையிலேயே இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். ஒவ்வோர் ஆண்டும் ஐ.ஆர்.எஃப் அமைப்பில் (Indian Retail Forum) இருந்து சிறந்த தொழில்முனைவோருக்கு விருதுகள் தருவார்கள். அப்போது நான் வெறும் 25 சலூன்களை மட்டுமே வைத்திருந்தேன். என்றாலும், இந்த விருதுக்கு நான் விண்ணப்பித்தேன். எனக்கு ‘வெல்னஸ்’ என்ற கேட்டகிரியில் விருது தந்தார்கள்.
அடுத்த வருடம் அந்த விருதுக்கு நான் விண்ணப்பிக்கவில்லை. எனவே, அந்த வருடம் எனக்கு அந்த விருது கிடைக்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து 150 சலூன்களைத் திறந்துவிட்டேன். அப்போதும் இந்த விருதுக்கு விண்ணப்பித்தேன். எனக்கு விருது தந்தார்கள். அதன்பின் அந்த விருதினைப் பெற நான் விண்ணப்பிக்கவில்லை. எனவே, அந்த வருடம் எனக்கு அந்த விருது கிடைக்கவில்லை. அப்போதுதான் எனக்கு அந்த விருதின் மதிப்பு தெரிந்தது. அதன்பின்னர் மீண்டும் விண்ணப்பித்து விருது வாங்கினேன். இப்படிதான் தோல்விக்குப்பின் கிடைக்கும் வெற்றியை உணர்ந்தேன்.
இப்படி நீங்களே உங்கள் கல்லூரி நாள்களைச் செதுக்கிக்கொண்டால், அதன்பிறகு நீங்கள் வேலைக்குச் செல்லும்போது நிச்சயம் வெற்றியைப் பெற முடியும்.
(மாத்தி யோசிப்போம்)
படங்கள்: தே.தீட்ஷித்