மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்!

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்!

செல்லமுத்து குப்புசாமி

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்!

ரு மேலை நாட்டு அறிஞரும், பேரழகி ஒருத்தியும் பார்ட்டி ஒன்றில் சந்தித்துக்கொண்டார்கள். கையில் மதுக் கோப்பையோடு அறிஞரை அணுகிய அந்த அழகி கேட்டாள்.  “நாம் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?”

அதற்கு அந்த அறிஞர், “உங்களுக்கு அப்படியொரு யோசனை வரக் காரணம் என்னவோ?”

“நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டால் நமக்குப் பிறக்கும் குழந்தை உங்களது அறிவையும், எனது அழகையும் ஒன்றாகக் கலந்த விநோத குழந்தையாகப் பிறக்கும்.”

“வேண்டாம்” என்றார் அறிஞர். அவளுக்கோ குழப்பம். தன் கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் செல்வந்தர்கள் ஏராளம் என அவளுக்குத் தெரியும் என்பதால் ஆச்சர்யம் கலந்த குழப்பம்.

குழப்பம் தீர்க்கும் வகையில், “ஒருவேளை என் அழகும், உங்களது அறிவும் சேர்ந்து பிறந்துவிட்டால் கஷ்டம் அல்லவா!” என்கிறார் அறிஞர்.

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதிலும் இப்படி நடக்கலாம். பொதுவாக, குறைவான விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது புத்திசாலித்தனமான அணுகுமுறை என்பார்கள். நம்மில் பலருக்கும் அதிக விலைக்கு வாங்கிக் குறைவான விலைக்கு விற்கும் பிராப்தமே அமைகிறது.

ஒருவேளை நாம் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கியபிறகு விலை சரிந்தால் என்னாவது? நம்ம ராசி அப்படித்தான் எனச் சமாதானம் செய்து கொண்டு அதன்பிறகு மார்க்கெட் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டோம். ‘ஷேர் மார்க்கெட், ரிஸ்க்’ என நம்மில் பலரும் கருதுவதற்கு முக்கியமான காரணமே இதுதான். விலை சரிந்தால் இதயம் துடிக்கும் வேகம் அதிகரிக்கும்.

குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால், நீண்ட கால அடிப்படையில் மற்ற முதலீட்டு வடிவங்களைவிட பங்கு முதலீடுகள் லாபகரமானவை என்பதைப் பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. வங்கி வைப்புகள், தங்கம், ரியல் எஸ்டேட் என எல்லா முதலீடுகளையும்விட பங்கு முதலீடுகள் சிறந்தவை என்பது புரியும்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்!

“நான் பிறந்தப்ப தங்கம் ஒரு பவுன் வெறும் 500 ரூபாய்தான். இப்ப எவ்ளோ விக்குது பாருங்க.”

“மேடவாக்கத்துல ஒரு கிரவுண்ட் ஜஸ்ட் 10 லட்சத்துக்கு வாங்கினோம். இப்ப ஒன் சி போகும்.”

இப்படியெல்லாம் மற்றவர்கள் பேசக் கேட்டிருப்போம் நாம். தங்கம், ரியல் எஸ்டேட் எல்லாம் பன்மடங்கு உயர்ந்த மாதிரி தெரியும். ஆனால், அதே கால அளவுக்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருந்தால், நம் பணம் அதைக் காட்டிலும் பெருகியிருக்கும்.

மும்பை பங்குச் சந்தையில் குறியீடு சென்செக்ஸ் 1979 முதல் தற்போது வரை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதைப் பாருங்கள் (பார்க்க : வரைபடம்)

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்!


1979-ம் ஆண்டு வெறும் 118 புள்ளியில் முடிந்த சென்செக்ஸ் இப்போது 31 ஆயிரத்துக்கும் மேலே. ஏறக்குறைய 260 மடங்கு பெருகியிருக்கிறது. ஷேர் மார்க்கெட் ரிஸ்க் என்றும், தங்கம் பாதுகாப்பானது என்றும் கருதுவோர் ஒரு கிராம் தங்கத்தின் விலை 1979-லும், தற்போதும் எவ்வளவு என்று கணக்கு போட்டு பார்த்தால் உண்மை புரியும்.

எனினும், இந்தப் பயணம் நேர்கோட்டில் இல்லை. குறிப்பாக, 2008-ம் ஆண்டை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஆண்டு 20325.27 புள்ளியில் ஆரம்பித்து, 21206.77-ல் உச்சம் தொட்டு, அதன்பிறகு 7697.39-க்குச் சரிந்தது. இத்தனையும் ஒரே வருடத்துக்குள். இத்தகைய சரிவில் இருந்து 2 - 3 ஆண்டுகளில் பங்குச் சந்தை மீண்டு வந்தது. ஒரு நீண்ட பயணத்தின்போது  அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வெடுப்பது மாதிரிதான் இதுவும்.

1979 முதல் தற்போது வரைக்கும் நீண்ட கால அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வைத்திருந்தால், சராசரியாக ஆண்டுக்கு 16.24% வளர்ச்சி கிடைத்திருக்கும். இது ஆண்டு முடிவில் வாங்கி, 5 வருடம் கழித்து ஆண்டு முடிவில் விற்றால் வரும் கணக்கு. ஆனால், எந்த ஐந்தாண்டு கால இடைவெளியிலும் சந்தை சில உயரங்களைத் தொட்டு, அதிக லாபத்தில் விற்பதற்கான வாய்ப்புகளை உண்டாக்கித் தந்தே தீரும்.

ஓர் ஆண்டில் மிகக் குறைந்த புள்ளியில் முதலீடுசெய்து அடுத்த ஆண்டின் அதிகப் புள்ளியில் விற்றிருந்தால், கடந்த 21 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 77.76% லாபம் ஈட்டி யிருக்கலாம். 21 ஆண்டுகளில் 8 ஆண்டுகள் முதலீட்டை இரட்டிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். ஒருவேளை அறிஞரின் அழகோடும், அழகியின் அறிவோடும் குழந்தை பிறப்பதுபோல, ஒரு வருடத்தின் உச்சியில் வாங்கிவிட்டு, அடுத்த வருடம் ஆகக் குறைவாக இருக்கும்போது விற்றால்...? அதே 21 ஆண்டுகள் சராசரியாக 26.46% நஷ்டம் ஏற்படுத்தித் தந்திருக்கும்.

அவ்வாறு நடக்காமல் தடுக்க நாம் அறிஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சரிவின்போது மனம் கலங்காமல் ஷேர்களை நீண்ட கால முதலீடாகக் கருதிக் காத்திருந்தால் போதும்...  சொல்வதற்கு எளிதாக இருக்கும். ஆனால், நம் முதலீடு பாதியாகக் குறைந்திருப்பதைக் காண மனது வலிக்கும். கொஞ்சம் சிரமம்தான்... ஆனாலும் சாத்தியம்தான். முதலீட்டாளருக்கான பண்புகளைக் கற்பது நீச்சல் கற்பதைப் போலத்தான். பயிற்சியால் முடியாது ஏதுமில்லை.

நெருப்பில் வெந்தால் மட்டுமே தங்கம் ஆபரணமாகும். ஒரு சரிவினைத் தாக்குப் பிடித்து நிற்கும்போதுதான் ஒரு நல்ல முதலீட்டாளன் உருவாகிறான்.

(லாபம் சம்பாதிப்போம்)