நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சொந்த வீடு சுமையா..? சிக்கலில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!

சொந்த வீடு சுமையா..? சிக்கலில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சொந்த வீடு சுமையா..? சிக்கலில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!

ஜெ.சரவணன்

பெரும்பாலான நகரவாசிகளின் வாழ்நாள் கனவு, `சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும்’ என்பதே. அப்படி ஆசைப்பட்டுக் கடைசி வரை முடியாமல் போன பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்குச் சொல்லிச் சொல்லி வளர்ப்பது சொந்த வீடு வாங்குவது குறித்துதான்.

சென்னை போன்ற பெருநகரங்களில் சொந்த வீட்டில் இருப்பதே பெரிய கெளரவம். இதுபோக, வாடகை வீடுகளில், வீட்டு உரிமையாளர்கள் போடும் கட்டுப்பாடுகளும், காட்டும் கெடுபிடிகளும்கூடச் சொந்த வீடு வாங்குவதற்கு முக்கியமான காரணங்கள். இதனால் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குவது பற்றி பலரும் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். 

ஆனால், வாழ்நாள் முழுக்க ஆசைப்பட்ட `சொந்த வீட்டு’க் கனவை வீட்டுக் கடன் மூலம் நிறைவேற்றிக் கொண்டவர்கள் எல்லாம் திருப்தியாக இருக்கிறார்களா என்றால்... இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது. வீட்டுக் கடன் காரணமாக, பல்வேறு விஷயங்களைத் தியாகம் செய்பவர்களே இன்றைக்கு அதிகம். அப்படியானால், `சொந்த வீடு என்பது சுமைதானா... சுமையில்லாமல் சொந்த வீடு வாங்க என்ன செய்ய வேண்டும்?’ என்று நிதி ஆலோசகர் பி.பத்மநாபனிடம் கேட்டோம்.

சொந்த வீடு சுமையா..? சிக்கலில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!

“வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் கிடைத்ததும், `கடனை வாங்கியாவது சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட வேண்டும்’ என்றுதான் இன்றைக்குப் பலரும் நினைக்கிறார்கள்.  பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், விளம்பரங்கள், செய்தித்தாள் மற்றும் தொலைக் காட்சி என எல்லாத் தரப்புகளுமே இதையேதான் சொல்கின்றன. இப்படிக் கடன் வாங்கி வீடு வாங்குவதால், பெரும்பாலும் சுமைகளே அதிகம்.

ஒருவர் வேலையில் சேரும்போது அவருடைய சம்பளம் மிகவும் குறைவாக இருக்கும். அப்போது கடன் வாங்கி வீடு வாங்கினால், 50 சதவிகிதச் சம்பளப் பணம் மாதத் தவணைக்கு (EMI)் சென்றுவிடும். மீதம் உள்ள 50 சதவிகிதத்தில்தான் குடும்பத்தை நடத்த வேண்டியிருக்கும். இப்போது விற்கும் விலைவாசியில் வாங்குகிற சம்பளத்தில் பாதியை வீட்டுக் கடன் கட்டவே தந்துவிட்டால், அதைச் சுமை என்று சொல்லாமல் என்னவென்பது?

அதுமட்டுமல்லாமல், கடனில் நாம் வாங்கும் வீட்டுக்கு அசல், வட்டி சேர்த்து அதன் மதிப்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது. ஏனெனில், நம் தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. திருமணம், குழந்தைகளின் படிப்பு,  அவர்களின் திருமணம் எனப் பல்வேறு செலவுகள் நம்மைத் துரத்துகின்றன. முன்பைவிட இவற்றுக்கான செலவுகள் இப்போது அதிகம். இந்த நிலையில், வேலையில் சேர்ந்தவுடன் கடனில் வாங்கும் வீடு, நிச்சயமாக நம்முடைய எதிர்காலத் தேவைக்குச் சரியாக இருக்காது.

சொந்த வீடு சுமையா..? சிக்கலில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!


அதுமட்டுமல்லாமல், இன்றைய நிலையில் கடைசி வரை நாம் ஒரே வேலையில் இருப்போம் எனச் சொல்ல முடியாது. நாம் வேறொரு ஊருக்கு வேலைக்காக மாறிச் செல்லலாம். அவசரப்பட்டுச் சொந்த வீடு வாங்கிவிட்டால், நமக்கு வரும் புதிய வேலைவாய்ப்புகளையும் நாம் இழக்க நேரிடலாம். எனவே, வீடு வாங்குவதைப் பொறுத்தவரை, உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நம் முன்னேற்றத்துக்குச் சொந்த வீடு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது.

மண்ணில் பணம் போட்டால் நஷ்டம் வராது என்பது பலருக்கும் உள்ள ஒரு நம்பிக்கை. ஆனால், இப்போதைய ரியல் எஸ்டேட் நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. வீட்டை அவசரப்பட்டு வாங்கி விட்டு, பிறகு விற்க முடியாமல் அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைகூட உருவாகலாம். ‘வீட்டின் மதிப்பு காலத்துக்கேற்ப உயரும்’ என்பதெல்லாம் நம்மிடம் திணிக்கப்பட்ட மிகப் பெரிய பொய் மூட்டை.  இன்று நாம் வாங்கக்கூடிய ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டை, இன்னும் 5 - 7 வருடங்களில் ரூ.35 லட்சத்துக்கு மேல் விற்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தது கடந்த காலம். இப்போது அந்தச் சாத்தியக்கூறுகள் இல்லை.

ரியல் எஸ்டேட் நன்றாக இருக்கிறது என்பதற்கு ஒரு ‘தம்ப் ரூல்’ உள்ளது. இன்றிலிருந்து எந்தவொரு வீடும் கட்டப்படாமல்,  இதுவரை கட்டிய வீட்டை விற்க 8 முதல் 11 மாதங்கள் எடுத்துக்கொண்டால், ரியல் எஸ்டேட் நல்ல நிலையில் உள்ளது என அர்த்தம். ஆனால், இன்றைய நிலையில், 46 மாதம் வரை விற்கக்கூடிய அளவுக்கு வீடுகள் ஏற்கெனவே கட்டப்பட்டுவிட்டன. நிறைய இடங்களில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டும் வருகின்றன. எனவே, ‘குறைந்தது அடுத்த ஐந்து வருடம் வரை, ஒருவர் ரியல் எஸ்டேட்டில் பணத்தை முதலீடு செய்வது சரியானத் தீர்வாக இருக்க முடியாது’ என்பதே கசப்பான மற்றும் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.

சொந்த வீடு சுமையா..? சிக்கலில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்!

சரி, `சுமையில்லாமல் சொந்த வீடு வாங்க வேறு என்னதான் வழி’ என்று கேட்கிறீர்களா?

ஆரம்பத்திலேயே வீட்டுக் கடன் வாங்காமல் முதலீடு செய்வதுதான் ஒரே வழி. கூட்டு வட்டியின் மகத்துவம் என்பது, நாம் செய்யும் முதலீட்டுத் தொகையைவிட முதலீட்டுக் காலத்தில்தான் உள்ளது என நாம் பலமுறை படித்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது, புத்திசாலித்தனமாக முதலீட்டின் மூலம் சேமிப்பதை விட்டுவிட்டு, வீட்டுக் கடனில் வீடு வாங்குவது ஒருபோதும் லாபகரமானதாக  இருக்காது.

வீடு என்பதை ஒரு முதலீடாகப் பார்க்கலாம் என்றாலும், அதனால் கிடைக்கும் வருமானம் என்பது குறைவுதான். ஒரு வீடு வைத்திருப்பவர்கள், அதில் வசிக்கவே விரும்புவர். அதனால் அவர்களுக்கு வருமானம் இல்லை. உதாரணமாக, ஒருவர் சென்னையில் 25 லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்குகிறார் என்றால், அதற்கு மாதத் தவணையாக ரூ.25,000 கட்டவேண்டும். ஆனால், அதே வீடு ரூ.6,000 வாடகையில் கிடைத்துவிடும். இன்று கடன் வாங்கி வீடு வாங்கினால், வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு  அதிகபட்சமாக 2 சதவிகிதம்தான். அப்படி இருக்கும்போது, ஒன்பது சதவிகிதத்தில் வங்கியில் கடன் வாங்குவது எப்படிச் சரியாக இருக்கும்? 

அதே சமயம், வாடகை வீட்டில் இருந்துகொண்டு, கடனுக்குக் கட்டும் மாதத் தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதற்கு ஏழே ஆண்டுகளில் 12% வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். (நடைமுறையில் இதற்குக்  கொஞ்சம் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ கிடைக்கலாம்.) இந்த  ஏழு ஆண்டுகளில் நம்முடைய தேவை எவ்வளவு, நாம் எங்கு வசிக்கப்போகிறோம் என ஓரளவுக்குத் தெரிந்துவிடவும் வாய்ப்புண்டு. அந்த ஏழு வருட காலத்தில் நம்முடைய சம்பளமும் கணிசமாக உயர்ந்திருக்கும். அப்போது வீடு வாங்குவது சுமையில்லாத நல்ல தீர்வாக இருக்கும்.

மேலும், ஒருவர் 40,000 ரூபாய்க்கு மேல்   சம்பாதிக்கும் போதுதான் வீடு வாங்குவது பற்றி யோசிக்கலாம். அதற்கும் குறைவாகச்  சம்பாதிப்பவர்கள் வீடு வாங்குவது கடினமே. ரூ.40,000 வருமானம் உடையவர்கூட, அதிகபட்சமாக ரூ.20,000 வரை தவணை கட்ட முடியும். இவர்கள்கூட முன்பணமாக ரூ.5  லட்சம்  வரை கையிலிருந்து தரும்படியாகவே இருக்கும்.

இன்றைய சூழலில் நகரின் வெளிப்பகுதியில்தான் வீடு வாங்க முடியும். அந்த வீட்டுக்கு ரூ.6,000-க்கு  மேல் வாடகை கிடைப்பது கடினம். அதே சமயம், ரூ.10,000 வாடகை கொடுத்து நகரத்தில் வீடு எடுத்து, மீதியுள்ள 10,000 ரூபாயை அடுத்த ஏழுஆண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், ரூ.24 லட்சம் கிடைக்க வாய்ப்புண்டு. எனவே, வேலையில் சேர்ந்து சம்பளம் சற்று அதிகமாக வந்ததுமே கடனில் வீடு வாங்குவதைக் காட்டிலும், முதலீடு செய்து சில ஆண்டுகளிலேயே நம்முடைய வீட்டுக்கான தொகையைச் சேர்த்து, கடன் இல்லாமல் வீடு வாங்கலாம். கூடுதல் தொகை தேவைப் பட்டால், தேவைப்படும் தொகைக்கு மட்டும் கடன் வாங்கிக்கொள்ளலாம். ஏனெனில், அந்தக் குறிப்பிட்ட ஆண்டு களில் நம் வருமானமும் அதிகரித்திருக்கும் என்பதால், அந்தச் சிறிய கடனை நம்மால் எளிதாகத் திரும்பக் கட்ட முடியும்’’ என்றார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன்.

இனி வீடு வாங்குகிறவர்கள் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்காமல், நன்கு யோசித்து  முடிவெடுத்தால், சொந்த வீட்டைச் சுமையாக நினைக்க வேண்டிய அவசியமே இருக்காது.

படம்: தே.தீட்ஷித்