
வ.நாகப்பன்
“ஷேர் மார்க்கெட் ரிஸ்க் சார். அதனால் எல்லாமே ஃபிக்ஸட் டெபாசிட்லதான் போட்டிருக்கேன். அதிலேயும் எல்லாமே மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை வங்கிகளில்தான் போட்டிருக்கேன்” என்றார் ஜெகன் பெருமையாக.
அன்றைய செய்தித்தாளை அவர் முன்பாக வைத்தேன். வங்கிகளின் வாராக் கடன் பற்றிய செய்தி முன்பக்கத்தில் போடப்பட்டிருந்தது.
‘இதை எதுக்கு என்னிடம் காட்டுகிறீர்கள்?’ என்பது போல என்னைப் பார்த்தார் ஜெகன். அவரைப் போலத்தான் இன்றைக்குப் பலரும் பல லட்சம் ரூபாயை வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்-ஆகப் போட்டு விட்டு, நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறார்கள்.

பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வாராக் கடன்களாகக் குவிந்து கிடக்கின்றன வங்கிகளில். பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, வாராக் கடனின் அளவு மிக அதிகம். அதனால் நமக்கு என்ன ஆபத்து என்கிறீர்களா?
ஆபத்து வரலாம், இல்லை வராமலும் போகலாம். ஆனால், வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தைப் போட்டு வைக்கும் முடிவினை எடுப்பதற்குமுன், இதை மனதில் இருத்திக்கொள்ளுதல் அவசியம்.
அமெரிக்க நிதிச் சந்தை 2008-ம் ஆண்டு கவிழ்ந்ததே வாராக் கடன் சுமையால்தான். அது அமெரிக்காவில் நடக்கும். நம் நாட்டில் வங்கிகள் திவால் ஆவதெல்லாம் இல்லை எனச் சொல்பவர்கள் ஒரு வினாடி நின்று நிதானித்து யோசித்துப் பாருங்கள். 1950-60 காலகட்டத்துக்கு எல்லாம் செல்ல வேண்டாம். நம் கண்முன்னே சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வங்கி காணாமல் போனதே... க்ளோபல் ட்ரஸ்ட் வங்கி. அது நினைவிருக்கிறதா? ஆக, இந்தியாவிலும் சமீப காலத்தில் இது நடக்கவே செய்திருக்கிறது.
‘அது தனியார் வங்கிதானே, அரசுக்குச் சொந்தமான வங்கிகளைத் திவாலாக விட்டுவிடு வார்களா என்ன..?’ என்று கேட்காதீர்கள். தனியார் மயமான பின்னர் யாருக்கு எது நடக்கும்... எது நடக்காது என்றெல்லாம் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.
சரி, ஒருவேளை வங்கிகள் திவாலானால் நம் டெபாசிட் என்ன ஆகும்? வங்கியின் எல்லாச் சொத்துகளையும் காசாக்கி, பணத்தைத் திருப்பித் தரும் முயற்சிகள் நடக்கலாம். அதையும் தாண்டி பணம் போதவில்லை என்றால்..?
சிறு முதலீட்டாளர்கள் பயப்பட வேண்டாம்.நாம் வங்கியில் போட்டிருக்கும் பணத்துக்கு ரூ.1 லட்சம் வரையில் காப்பீடு உண்டு. எனவே, நீங்கள் எத்தனை லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருந்தாலும், 1 லட்சம் ரூபாய் வரை திரும்பக் கிடைக்கும். இது என்ன அளவுகோல் என்கிறீர்களா?
சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாக்கவும், வங்கித் துறையின் மீது ஒரு நம்பிக்கையை

உண்டாக்குவதற்காகவும், நாட்டின் நிதித்துறை ஸ்திரமாக இருக்கவும் ஏதுவாக 1960-களில் ‘டெபாசிட் இன்ஷூரன்ஸ் அண்ட் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன்’ என்னும் ஒரு நிறுவனத்தை மத்திய அரசாங்கம் ஏற்படுத்தியது. மத்திய ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானது இந்த நிறுவனம்.
‘தி டெபாசிட் இன்ஷூரன்ஸ் அண்ட் க்ரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன் ஆக்ட், 1961’ என ஒரு சட்டம் 1961-ம் ஆண்டு, இதற்கெனவே கொண்டு வரப்பட்டது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள், குறிப்பிட்ட கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என கிட்டத்தட்ட எல்லா வங்கிகளுமே இந்தச் சட்டத்தின் கீழ் வரும்.
ஒவ்வொரு வங்கியும், மத்திய ரிசர்வ் வங்கியிடம் வங்கிக்கான உரிமம் பெற்றவுடனேயே இதற்கான காப்பீட்டைச் செலுத்தி, இதன் அங்கமாக வேண்டும் என்பது கட்டாயம்.
மேலே சொன்னபடி, ஒருவேளை வங்கிகளில் பெரும் இழப்பு ஏற்பட்டு மூடவேண்டிய சூழல் வந்தால், அதனால் சிறு முதலீட்டாளர்கள் பாதிப்படையக் கூடாது என்னும் வகையில், குறிப்பிட்ட அளவுக்குள் /வரம்புக்குள் அவர்களுடைய டெபாசிட் பணம் திருப்பித் தரப்படும்.
ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட், சேவிங்க்ஸ் அக்கவுன்ட், கரன்ட் அக்கவுன்ட் என எல்லாக் கணக்குகளும் இதன் கீழ் அடக்கம்.
ஆரம்பத்தில் இந்தத் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.1,500 என்கிற அளவில்தான் இருந்தது. அன்றையத் தேதியில் பணத்தின் மதிப்பு அதிகம். அதாவது, வங்கிகள் திவாலானால், அங்கு டெபாசிட் போட்டிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.1,500 வரை பணத்தை இந்தக் காப்பீட்டு நிறுவனம் உத்தரவாதமாக வழங்கும்.
ஆனால், காலவோட்டத்தில் இந்தத் தொகை போதாது என்பதால் பரிசீலனைக்கு உட்படுத்தப் பட்டது. 1968-ம் ஆண்டில் இந்தக் காப்பீட்டு இழப்புத் தொகை ரூ.5,000-ஆக உயர்த்தப்பட்டது. 1970-ல் இது ரூ.10,000 ஆகவும், 1976-ல் ரூ.20,000 ஆகவும், 1980-ல் ரூ.30,000 எனவும் உயர்த்தப்பட்ட உச்ச வரம்புத் தொகை, கடைசியாக உயர்த்தப் பட்டது எப்போது தெரியுமா?
1993-ம் ஆண்டில்தான். சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம். வட்டியும் முதலும் சேர்த்தே இந்த உச்ச வரம்பு என்பதைக் கவனிக்கவும். ஒரே வங்கியின் பல கிளைகளில் பல டெபாசிட்களாகப் பிரித்துப் போட்டிருந்தாலும், அவையெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு நபர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் உச்ச வரம்பில் கணக்கிட்டு இழப்பீடு தரப்படும்.

இப்போது ஏன் இதைப் பற்றி பேசுகிறோம் என்கிறீர்களா?
பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக கையில் உள்ள பணத்தையெல்லாம் வங்கிகளில் போடும்படியான கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறோம் நாம். மேலும், பணத்தை ரொக்கமாக வெளியில் திரும்ப எடுப்பதற்கும் ஏகப்பட்ட கடுமையான சட்டதிட்டங்கள், கட்டணங்கள் வேறு. எல்லோரையும் டிஜிட்டல் எக்கானமி நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது அரசு.
இப்படிப்பட்ட சூழலில் கால் நூற்றாண்டுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட தொகை எப்படிப் போதும்? அதுவும் பண மதிப்பு கணிசமாகக் குறைந்திருக்கும் சூழலில் இதை உடனடியாக அதிகரிக்க வேண்டாமா?
வங்கிகளின் வாராக் கடன் சுமை, பளுவாக அழுத்தும் சூழலில் உடனடியாக அரசு இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும். அதுதான் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். இதற்கென, இந்த உச்ச வரம்பை உயர்த்தக்கோரி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கின் மீது, கடந்த ஏப்ரல் மாதம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குஜராத் உயர் நீதிமன்றம்.
இதற்கிடையே, Financial Resolution and Deposit Insurance, Bill 2017 என்னும் வரைவுச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. இதன்படி, Deposit Insurance and Credit Guarantee Corporation Act, 1961 சட்டத்துக்குப் பதில் புதுச் சட்டம் கொண்டு வரப்படும். ‘ரிசல்யூஷன் கார்ப்பரேஷன்’ என்பது மும்பையில் அமைக்கப்பட்டு, இதே வேலையைத் திறம்படச் செய்யும் எனச் சொல்லப்படுகிறது.
மத்திய அரசாங்கம் தனது செளகரியத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். ஆனால், மக்களின் கையை முறுக்கி வங்கியில் போட வைத்த பணம் பாதுகாப்பாக இருக்க யார் உத்தரவாதம் என்பதே சாமானியனின் கேள்வி. அது மல்லையாவின் கையில் சிக்காமல் பாதுகாப்பாகத் திரும்பக் கிடைக்க என்ன உத்தரவாதம்?
சிறு முதலீட்டாளர்களைக் காக்கும் கடமையை மத்திய அரசாங்கம் கனிவுடனும் அக்கறையுடன் மேற்கொண்டே ஆகவேண்டும்!