
BIZ பாக்ஸ்
புதுமை படைப்பதில் உயர்ந்த இந்தியா!
புதிது புதிதாக உணவு வகைகளைத் தயாரிப்பதில்தான் கைதேர்ந்தவர்களாக இருந்த நாம், இப்போது புதுமை படைப்பதில் முன்னேறி வருவதாகச் சொல்லியிருக்கிறது கார்னல் பல்கலைக்கழகம். குளோபல் இன்னோவேஷன் இண்டெக்ஸ் (GII) என்கிற பட்டியலை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது இந்தப் பல்கலைக்கழகம். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில், நம் நாடு கடந்த ஆண்டைவிட ஆறு இடங்களில் முன்னேறி 60-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா நான்காவது இடத்திலும், சீனா 22-வது இடத்திலும், ரஷ்யா 45-வது இடத்திலும் உள்ளன.
அடுத்த ஆண்டில் 50 இடங்களுக்குள் நாம் வருவோமா?

விராட்டுடன் கைகோத்த எம்.ஆர்.எஃப்!
எம்.ஆர்.எஃப் நிறுவனம் தனது பிராண்டினைப் பிரபலப்படுத்த முன்னணி விளையாட்டு வீரர்களுடன் ஒப்பந்தம் போடுவது வழக்கம். இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லியுடன், தனது நிறுவனத்தின் பெயர் பதித்த மட்டையைக் கொண்டு விளையாட ரூ.100 கோடிக்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது எம்.ஆர்.எஃப் நிறுவனம். எட்டு ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும். கலக்கல் கூட்டணி!

படு குஷியில் பாபா!
படு குஷியில் இருக்கிறார் பாபா ராம்தேவ். அவரது பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத அடிப்படையில் தயாரித்து சந்தைப்படுத்தும் பொருள்கள் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, மற்ற நிறுவனங்களும் ஆயுர்வேதத்தின் அடிப்படையில் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 69 சதவிகித வீடுகளைச் சென்றடைந்த ஆயுர்வேதத்தின் அடிப்படையிலான தயாரிப்புகள், தற்போது 77 சதவிகித வீடுகளைச் சென்றடைகிறதாம். இன்னும் என்னென்ன பொருள்களை ஆயுர்வேதத்தின் அடிப்படையில் தயாரித்து வெளியிட முடியும் என்கிற ஆராய்ச்சியையும் முடுக்கிவிட்டிருக்கிறாராம் பாபா. ஜெய் பாபா!
24 பில்லியன் டாலர் - கடந்த மே மாதத்தில் நம் நாடு ஏற்றுமதி செய்த பொருள்களின் மதிப்பு
2.8 லட்சம் கோடி டாலர் - 2040-ல் இந்தியாவில் சூரிய மின் உற்பத்தியில் முதலீடாகும் என எதிர்பார்க்கப்படும் தொகை

இந்தியாவுக்கு வருகிறார் எலன் மாஸ்க்!
எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்க, நமது மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியிருக்கிறார் டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ எலன் மாஸ்க். 2030-க்குள் நம் நாடு 100% எலெக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்த முடிவெடுத்திருப்பதையொட்டி அவர் இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார். ‘’தொழிற்சாலை அமைக்கத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்ய சில சலுகைகளை அளிக்க வேண்டும்’’ என மோடி அரசாங்கத்துக்கு விண்ணப்பம் தந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு வாங்க எலன்!
உச்சத்தில் ரிலையன்ஸ்!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு, கடந்த ஐந்து மாதங்களில் ஏறக்குறைய 30 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானத்தைத் தந்திருக்கிறது. உலகச் சந்தையில் கச்சா விலை குறைவாக இருப்பதால், லாபம் அதிகரித்திருப்பது ஒரு காரணம். ஜியோ நிறுவனத்துக்குக் கிடைத்த வரவேற்பு இன்னொரு காரணம். இதற்கிடையே தற்போது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து கிருஷ்ணா - கோதாவரிப் படுகையில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடிப்பதற்கு ரூ.40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. முகேஷ் காட்ல மழைதான் போங்க!

ஜாக் மா-வின் எதிர்கால இலக்கு!
இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து, அதாவது 2036-ல் தன்னுடைய அலிபாபா நிறுவனம் உலகத்திலேயே ஐந்தாவது பெரிய நிறுவனமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார் ஜாக் மா. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், கடந்த ஆண்டு 90 பில்லியன் டாலரை சம்பாதித்தது. அமேசான் நிறுவனம் 136 பில்லியன் டாலரை ஈட்டியது. ஆனால், அலிபாபா நிறுவனத்தின் வருமானம் 23.4 பில்லியன் டாலர்தான். நத்திங் இம்பாசிபிள் மா!

பார்த்திபன் பயணம்!
சென்னையைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான கேப்லின்பாய்ன்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பார்த்திபன், இரண்டு மாதப் பயணமாக தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்கிறார். பயண நோக்கம் என்னவோ? ‘‘எங்களது புதிய தயாரிப்புகளைத் தென் அமெரிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தத்தான்’’ என்கிறார் பார்த்திபன். Bon voyage!