ரெக்கவரி அதிகரிப்பு... "விரைவில் லாபத்துக்குத் திரும்புவோம்!’’ - ஐ.ஓ.பி - யின் எம்.டி சுப்பிரமணியகுமார் சிறப்புப் பேட்டி

பா.பிரவீன்குமார்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்(ஐ.ஓ.பி) புதிய மேலாண்மை இயக்குநராகி இருக்கிறார் ஆர்.சுப்பிரமணியகுமார். இந்தியன் வங்கியின் செயல் இயக்குநராக இருந்த இவரை, கடந்த ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மாற்றியது மத்திய அரசு. தற்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநராகவும் தலைமைச் செயலாக்க அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வாராக் கடன், நஷ்டம் அதிகரிப்பு மற்றும் ப்ராம்ட் கரெக்டிவ் ஆக்ஷன் (PCA) எனப் பலவற்றுடன் பரபரப்பாக இணைத்துப் பேசப்பட்டு வரும் நிலையில், சுப்பிரமணியகுமாரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். இவர், ஐ.ஓ.பி-யின் நிர்வாக இயக்குநரான பிறகு அளிக்கும் முதல் பேட்டி இது. நாம் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் தெளிவாகப் பதில் சொன்னார் அவர்.

‘‘வாராக் கடன் அதிகமாக இருக்கும் வங்கியாக இருக்கிறது ஐ.ஓ.பி. இவ்வளவு வாராக் கடன் ஏற்பட என்ன காரணம்?’’
‘‘2007-08-ல் உலகமே பொருளாதாரத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் அதன் பாதிப்புத் தெரியவில்லை. அந்தச் சமயத்தில், இந்தியாவின் ஜி.டி.பி-யை அதிகரிக்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் எல்லாத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் பங்கேற்றன. சில தனியார் வங்கிகளும் இதில் பங்கேற்றன.
இந்தியாவின் வளர்ச்சியில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்கேற்பு மிகப் பெரிய அளவில் இருக்கிறது. கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடு செய்யவில்லை என்றால், நெடுஞ்சாலை, துறைமுகம், விமான நிலையம், மின் உற்பத்தி என நாட்டின் கட்டமைப்பு வசதிகள் உருவாகாது. எனவே, இந்தியாவின் வளர்ச்சிக்கானத் திட்டம் என்பதால், ஐ.ஓ.பி-யும் இதில் பங்கேற்றது. அதன்பிறகு, இந்தத் தொழில் துறைகளின் தேவை குறைந்தது. இதனால், இந்தத் தொழில் துறைகள் பாதிக்கப்பட்டதுடன், அதில் முதலீடு செய்ய கடன் வழங்கிய வங்கிகளும் பாதிப்படைந்தன. இதில் எங்கள் வங்கியும் கொஞ்சம் பாதிக்கப்பட்டது.
இந்த நேரத்தில், வங்கியின் விரிவாக்கம் மற்றும் வங்கியின் மென்பொருளை உருவாக்குதல் என்று சில கட்டமைப்புப் பணிகள் நடந்தன. இதற்கு அதிக அளவில் செலவிடப்பட்டது. இந்த நேரத்தில், வங்கியின் வருவாயும் குறைந்ததால், மிகப் பெரிய அளவில் இழப்பு ஏற்படும் சூழல் உருவானது. இந்தியாவிலேயே ‘இன் ஹவுஸ் சாஃப்ட்வேரை’ உருவாக்கியது ஐ.ஓ.பி-தான். ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றங்கள் வங்கியில் வந்ததால், அதைப் பலரால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் சிலர் வேறு வங்கிகளை நாடிப் போனார்கள் என்பது உண்மைதான்.
கடந்த ஆண்டு நான் இந்தியன் வங்கியிலிருந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு வந்தேன். முதல் ஆறு மாதங்கள் வரை டெக்னாலஜி பிளாட்ஃபார்மை நிலைப்படுத்தும் பணியை மேற்கொண்டோம். இப்போது எங்கள் டெக்னாலஜி பிளாட்ஃபார்ம் சிறப்பானதாக மாறிவிட்டது. இதனால், வெளியேறிய வாடிக்கையாளர்கள் எல்லோரும் மீண்டும் வர ஆரம்பித்துவிட்டனர். இது எங்கள் வங்கியின் மீதும், வங்கி நிர்வாகத்தின் மீதும் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.’’
‘‘இருப்பினும் ஐ.ஓ.பி வங்கிக்கு இப்போதும்கூட வாராக் கடன் அதிகமாக உள்ளதே?’’
‘‘என்.பி.ஏ எனப்படும் வாராக் கடன் பிரச்னை எல்லா வங்கிகளுக்கும் உள்ளது. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மட்டும் விதிவிலக்கு இல்லை. ஒரு கணக்கை வாராக் கடன் என்று எப்போது வேண்டுமானாலும் வங்கி அறிவிக்கும். மற்ற எல்லா வங்கிகளும் என்.பி.ஏ ஏற்படும் சூழலை உணர்ந்து கொள்வதற்குமுன்பே, எங்கள் வங்கி அதை உணர்ந்துகொண்டது. ரெக்கவரியைச் சீக்கிரமே ஆரம்பிக்கலாம் என்ற நோக்கில் எங்கள் வங்கி முன்கூட்டியே என்.பி.ஏ-வை அறிவித்தது. என்.பி.ஏ-வை அறிவித்தால், ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, 15 சதவிகித ‘சப்ஸ்டாண்டர்டு புரவிஷன்’ தரவேண்டும். ஒவ்வோர் ஆண்டும் அது, 25, 40, 60% என அதிகரித்துக்கொண்டே செல்லும். நாங்கள் முன்கூட்டியே என்.பி.ஏ அறிவித்ததால், 15% என்கிற அளவில் இருக்கவேண்டியது, 40, 60% என உயர்ந்துவிட்டது.
2016-17 பேலன்ஸ்ஷீட்டை ஒப்பிட்டால், நிறைய முன்னேற்றத்துக் கான அறிகுறிகள் நன்றாகவே தென்படும். ‘ஆப்ரேட்டிங் பிராஃபிட்’ (Operating Profit) 26 சதவிகிதத்துக்கு மேல், அதாவது 3,600 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இன்றைக்கு எங்கள் வங்கியின் என்.பி.ஏ ரூ.35,098 கோடி என்கிற அளவில் இருக்கிறது. இனிவரும் நாள்களில் பொருளாதாரச் சூழல் முன்னேற்றம் ஏற்பட்டு, இந்த நிறுவனங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்போது கிடைக்கும் வருமானம் வங்கிக்கு லாபமாக மாறும்.
உதாரணத்துக்கு, சில நாள்களுக்கு முன்பு கோவையில் ஒரு நிறுவனம் தனது செயல்பாட்டை மீண்டும் தொடங்கியது. ஒரே நாளில் வங்கிக்கு ரூ.27 கோடி வந்தது. இப்படி, இந்த நிறுவனங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்போது வங்கிக்கு வரவேண்டிய பணம் அதிகமாகும். கடந்த 2016 மார்ச் வரையிலான ரெக்கவரி ரூ.5,800 கோடி. 2017 மார்ச்-ல் அது ரூ.8,710 கோடியாக அதிகரித்துள்ளது.’’
‘‘வங்கியின் வளர்ச்சிக்கு அடிப்படையானது கடன். ஐ.ஓ.பி-யும் இப்போது அதிக அளவில் கடன் தருகிறதா?’’
‘‘விவசாயக் கடன் வழங்குவதில் ஐ.ஓ.பி பெயர் பெற்றதாக இருக்கிறது. அதே நேரத்தில், ரீடெய்ல் சந்தையில் வலிமை அடையத் திட்டமிட்டுள்ளோம். ரீடெய்லில், நகை, வீட்டுக்கடன், நுகர்வோர் கடன், வாகனக் கடன் போன்றவற்றுக்குக் கடன் அளிக்கத் தனிப்பிரிவை உருவாக்கியிருக்கிறோம். முன்பு பெரும் தொழில்புரிவோர் மீதுதான் எங்கள் கவனம் இருந்தது. அந்தக் கவனத்தை நாங்கள் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதேசமயம், ரீடெய்லில் அதிகக் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறோம்.
சிறு, குறுந்தொழில் புரிவோருக்கு ஐ.ஓ.பி தொடர்ந்து முன்மாதிரியாக இருந்துவந்திருக்கிறது. 2007-08-க்குப் பிறகு உள்கட்டமைப்பில் முதலீடு செய்த காலத்தில், சிறு, குறுந்தொழிலுக்குக் கடன் கொடுப்பதில் சிறு தொய்வு ஏற்பட்டது. அதையும் சரிக்கட்டி இப்போது முன்னேற்றப் பாதையில் நடைபோட்டு வருகிறோம்.
முத்ரா திட்டத்தில், தேசிய இலக்கு 85 சதவிகிதத்தை அடைந்திருக்கிறோம். ரீடெய்ல் சந்தையில், கடந்த ஆண்டு 26 சதவிகித வளர்ச்சி கண்டோம். இந்த ஆண்டு அது 30 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.
பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப்பிறகு, எங்கள் வங்கியில், ரூ.24 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டது. செயல்படாமல் இருந்த வங்கிக் கணக்குகள் எல்லாம் ஆக்டிவ் ஆகின. டெபிட், கிரெடிட், இன்டர்நெட் பேங்கிங் முன்பு பெரிதாக இல்லை. இப்போது, டிஜிட்டல் டிபார்ட்மென்டினை ஆரம்பித்துள்ளோம். இதனால் கார்டுகளைப் பயன்படுத்திப் பொருள்கள் வாங்குவது, பணப் பரிமாற்றம் செய்வது (பாயின்ட் ஆஃப் சேல்) 56% அதிகரித்துள்ளது. டெபிட் கார்டின் பயன்பாடு 26 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இ-காமர்ஸ் டிரான்ஷாக்ஷன் 117% உயர்ந்துள்ளது.’’

‘‘என்றாலும், ஐ.ஓ.பி வங்கியின் செயல்பாடு முன்புபோல இல்லை என்கிற ஒரு கருத்து நிலவுகிறதே?’’
‘‘வங்கி சில தொய்வுகளைச் சந்தித்ததால், அது ஊழியர்கள் மத்தியிலும் தொய்வை ஏற்படுத்தியது. இதை எதிர்கொள்ள, ஊழியர்களுக்குப் பதவி உயர்வு உள்ளிட்டவற்றைத் தந்திருக்கிறோம். என்.பி.ஏ-ஆன கணக்குகளை எல்லாம் ஆய்வுசெய்து, கடன் தந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுமாதிரியான நடவடிக்கை தங்கள் மீதும் பாயுமோ என்கிற சந்தேகம் ஊழியர்கள் மத்தியில் இருந்தது. மேலும், புதிதாகக் கடன் தருவதிலும் தயக்கம் இருந்தது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் இப்போது இல்லை. இதுவரை, மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். வங்கியின் செயல்பாட்டை அவர்களுக்குப் புரிய வைத்திருக்கிறேன். இதனால் ஊழியர்கள் மன உளைச்சல், மனத்தொய்வில் இருந்து வெளியே வந்துள்ளனர். அதிகப் புத்துணர்வுடன் அவர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் வங்கிக்கு ரூ.2,200 கோடி இழப்பு ஏற்பட்டது. அதுவே, இரண்டாவது அரையாண்டில் ரூ.1,200 கோடியாகக் குறைந்துள்ளது. என்.பி.ஏ ரெக்கவரி அதிகரித்திருக்கிறது. இந்த நிதியாண்டின் இறுதியில் நீங்கள் இன்னும் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.’’
‘‘ஐ.ஓ.பி கடன் கொடுக்க (Prompt Corrective Action) ரிசர்வ் வங்கி தடை விதிக்க உள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளதே?’’
‘‘பி.சி.ஏ என்பது தவறான விஷயமே இல்லை. ‘வங்கி ஓர் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. அதை எதிர்கொள்ள இருவரும் இணைந்து செயலாற்றுவோம்’ என்று ரிசர்வ் வங்கி கூறுவதுதான் ‘பிராம்ப்ட் கரெக்டிவ் ஆக்ஷன்.’ இந்த நேரத்தில், வங்கி தன்னுடைய நிர்வாகச் செலவைக் குறைக்க வேண்டும். புதிய கிளைகளைத் திறப்பது, கூடுதல் பணியாளர்களை நியமிப்பது போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாது என்றுதான் ரிசர்வ் வங்கி சொல்கிறது. ஆனால், பி.சி.ஏ அறிவிக்கப்பட்டாலே, வங்கியால் கடன் கொடுக்க முடியாது என்று பலரும் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். உண்மையில் கடன் கொடுப்பதில் தடை ஏதும் இல்லை. ஆனால், ‘மிகப் பெரிய அளவில் கடன் கொடுக்கும்போது கவனத்துடன் கையாளுங்கள்’ என்றுதான் அறிவுறுத்தும். கடந்த 2015 செப்டம்பரிலேயே ஐ.ஓ.பி வங்கிக்கு பி.சி.ஏ-வை ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக வங்கி, தற்போது முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது.’’
‘‘வங்கியின் மேம்பாட்டுக்கு நீங்கள் செயல்படுத்த உள்ள திட்டங்கள் என்ன?’’
‘‘பெரிய நிறுவனங்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை ஐ.ஓ.பி வங்கியின் சேவை சென்றடைய வேண்டும் என்று பல திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். மிகச் சிறிய அளவில் தொழில் செய்பவர்களுக்குக் கடன் உதவி அளிக்க, எஸ்.எம்.இ 300 என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். மிகச் சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் எல்லாம், தினசரி அதிக வட்டிக்குப் பணம் வாங்கித் தொழில் செய்வதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இப்போது இவர்களுக்கு நாங்கள் கடன் தருகிறோம். இவர்களால் மாதத் தவணை செலுத்துவது கடினம். எனவே, எங்கள் வங்கியின் வங்கித் தொடர்பாளர் (Business Correspondent) நேரடியாக இவர்களைச் சந்தித்து, பணத்தை வசூல் செய்வார்கள். வாரத்துக்கு ஐந்து நாள் நேரில் சென்று இவர்கள் பணத்தை வசூல் செய்வார்கள். வாடிக்கை யாளர்களை இவர்கள் தினமும் நேரில் சென்று சந்திப்பதால், வாடிக்கை யாளருக்கும் வங்கிக்குமான நெருக்கம் அதிகரித்திருக்கிறது.
ரீடெய்ல் லோனில் 7 சதவிகிதமாக இருந்த என்.பி.ஏ தற்போது 3.18 சதவிகிதமாகக் குறைந்திருப்பது, எங்கள் ஊழியர்கள் வெளியே சென்று மக்களைச் சந்திக்கின்றனர் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. கடன் தேவை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக அருகாமையில் உள்ள ஐ.ஓ.பி வங்கி மேலாளரைச் சென்று சந்தித்தால்போதும். நியாயமான கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில், மண்டல மேலாளரை அணுகலாம். அவரும் அதை ஏற்கவில்லை எனில், நேரில் என்னிடம் புகார் செய்யலாம். எந்தவொரு புகாருக்கும் ஏழு நாள்களுக்குள் தீர்வு கண்டு வருகிறோம்.
வாராக் கடன் உள்ள நிறுவனங்களுக்குப் புத்துயிரூட்ட ‘வயபிலிட்டி ஸ்டடி’ செய்கிறோம். அதில் நல்ல ரிப்போர்ட் வந்தால், அவர்களுக்கு மேற்கொண்டு கடன் அளிக்கிறோம். அவர்களால் தொழிலைத் தொடர முடியாத சூழலில், வேறு ஒருவர் எடுத்து நடத்தவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம். கடன் வாங்கிவிட்டு, முதலீடு செய்யாமல் ஏமாற்றினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கிறோம்.
ஆக, பொருளாதார வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் சீர்படும். அப்போது, வங்கியின் வாராக் கடன் பிரச்னையும் தீரும். எங்கள் வங்கியின் முன்னேற்றத்தை, லாபத்தை நீங்கள் நேரடியாகக் காணலாம்!’’
படங்கள்: சு.குமரேசன்