
சேனா சரவணன்
உங்கள் பணத்தை பீரோவில் பூட்டி வைத்திருந்தால் அதன் மதிப்புக் குறைந்து கொண்டேதான் போகும். உதாரணமாக, உங்களிடம் ரூ.10,000 இருக்கிறது. அதனை 10% வட்டி கிடைக்கிற மாதிரி முதலீடு செய்தால், அடுத்த ஆண்டில் அது ரூ.11,000 ஆகப் பெருகும்.

ஆனால், அந்தப் பணத்தை முதலீடு செய்யாமல் அப்படியே வைத்திருந்தால், அது பார்ப்பதற்கு வேண்டுமானால் ரூ.10,000 ஆக இருக்கும். ஆனால், அடுத்த ஆண்டின் விலைவாசி உயர்வு அல்லது பணவீக்க விகிதம் 7% அதிகரித்திருந்தால், உங்கள் பணம், அதன் மதிப்பில் 7% குறைந்திருக்கும். அதாவது, அதன் மதிப்பு 9,300 ஆகவே இருக்கும்.
பணத்தைப் பெட்டியில் பூட்டி வைக்காமல், முதலீடு செய்திருந்தால், பணவீக்க விகிதத்தைச் சரிகட்ட முடிந்திருப்பதுடன், உங்கள் பணத்தின் மதிப்பு 3% அதிகரித்திருக்கும்.

‘‘உங்கள் உழைப்புக்குச் சம்பளம், போனஸ் கிடைக்கும். உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கும்போது, அதாவது, பணத்தைச் சரியாக முதலீடு செய்யும்போது வட்டி, வருமானம், டிவிடெண்ட் போன்றவை கிடைக்கும். உழைப்பதன் மூலமானப் பணத்தைக் கொண்டு, நம் செலவுகளைப் பார்த்துக்கொள்ளலாம். நம் முதலீட்டின் மூலம் நாம் ஆசைப்பட்ட வாழ்க்கையை நனவாக்கிக்கொள்ளலாம்’’ என்கிறார் நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன்.
இதற்கு ஒரு உதாரணத்தையும் சொல்கிறார் அவர். “ மாதமொன்றுக்கு ரூ.10,000 வீதம் 15 வருடம் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், அதற்கு ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், அந்த முதலீடு ரூ.50.5 லட்சமாக அதிகரித்திருக்கும்.
இந்தத் தொகையை வெளியே எடுக்காமல் தொடர்ந்து வைத்திருந்து, அதற்கு ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், அடுத்த ஆறு ஆண்டுகளில் இதன் மதிப்பு ரூ. 1 கோடி யாக உயர்ந்திருக்கும்” என்கிறார் அவர்.
நம் பணத்தை நமக்காக உழைக்க வைப்பது நம் கையில்தான் இருக்கிறது!