நடப்பு
தொடர்கள்
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை!

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை!
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை!

கா.முத்துசூரியா

வாழ்க்கையில் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு பிரச்னை. ஆனால், பத்மாவுக்கு 54 வயதில் 30 வயது பெண்மணிக்கு வரும் பிரச்னையும், கவலையும் வந்தன. காரணம், 30 வயதுக்கான வாழ்க்கையை அவர் 50 வயதுக்குப் பிறகுதான் வாழ ஆரம்பித்தார்.   அவர் மீதும் தவறில்லை. சூழ்நிலைக் கோளாறு என்று சொல்லலாம். 

பத்மா, அரசுத் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். அவர் கணவர் சுரேந்தர், பிசினஸ் கன்சல்டன்டாக-ஆக இருக்கிறார். அவருக்கு வயது 58. பத்மா - சுரேந்தர் தம்பதிக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. பல வருடங்கள்  காத்திருந்தபின்,  கார்த்திக்கை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். கார்த்திக், தற்போது 5-ம் வகுப்புப் படிக்கிறான்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை!

தங்களுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை எனத் தெரிந்த சில ஆண்டுகளிலேயே, குழந்தையைத் தத்தெடுக்கும் முடிவை எடுக்காமல், காலம் கடந்து எடுத்ததன் விளைவே இன்றைய கவலைக்கும் கஷ்டத்துக்கும் காரணம் எனப் பத்மாவே உணர்ந்திருக்கிறார்.

சில பெர்சனல் காரணங்களால் பத்மா விருப்ப ஓய்வு பெற்றபின் தற்போது மாதமொன்றுக்கு ரூ.25 ஆயிரம் பென்ஷன் வாங்குகிறார் பத்மா. சுரேந்தருக்குப் பெரிதாக வருமானம் இல்லை. தொடர்ந்து வேலை பார்க்கும் ஆர்வமும் அவருக்கு இல்லை. தற்போது சுரேந்தர் மாதம் ரூ.15 ஆயிரம்தான் சம்பாதிக்கிறார்.

குடியிருக்கும் ரூ.30 லட்சம் மதிப்புக்கொண்ட வீடு அல்லாமல் ரூ.72 லட்சத்துக்குச் சேமிப்பு  மற்றும் முதலீடுகள் இருக்கின்றன. பங்குச் சந்தையில் ரூ.20 லட்சம், மியூச்சுவல் ஃபண்டில் ரூ.6 லட்சம், வங்கி டெபாசிட்டில் ரூ.30 லட்சம், தங்கத்தில் ரூ.10 லட்சம், யூலிப்பில் ரூ.6 லட்சம் என முதலீடு செய்துள்ளார். ஆனாலும், கார்த்திக்கின் எதிர்காலம், தங்களின் ஓய்வுக்காலம் எனப் பல விஷயங்கள் பற்றிய கவலை பத்மாவுக்கு.

கார்த்திக்கின் மேற்படிப்புக்கு 2024-ல் ரூ.25 லட்சம் தேவை. 2030-ல் கார்த்திக் திருமணத்துக்கும் குறிப்பிட்ட தொகை தேவை, தங்கள் ஓய்வுக் காலத்துக்கும் தெளிவான திட்டமிடல் தேவை என அடுக்கினார் பத்மா.

வருமானம் குறைந்துவிட்ட இந்தச் சூழலில் எதிர்கால இலக்குகளுக்கு எப்படிப் பணம் சேர்க்கப் போகிறோமோ என்ற கவலையுடன், தங்களின் சேமிப்பு முதலீடு, வரவு செலவு விவரங்களை மெயில் அனுப்பி வைத்தார்.

செலவு விவரங்கள் 
  

குடும்பச் செலவுகள்     : ரூ.18,000

பள்ளிக் கட்டணம்     : ரூ.3,000

வீட்டுக் கடன் இ.எம்.ஐ     : ரூ.6,000

ஆர்.டி     : ரூ.5,000

இன்ஷூரன்ஸ் பிரீமியம்     : ரூ.7,000

மியூச்சுவல் ஃபண்ட்     : ரூ.3,000

சுற்றுலா (மாதாந்திரக் கணக்கு)    : ரூ.4,000

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை!

இனி இவருக்கான நிதித் திட்டமிடலை தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“மேடம், நீங்கள் வருமான வரிச் சேமிப்புக்காக ஹோம் லோனைத் தொடர்ந்து வைத்திருப்பது  லாபமாக இருக்காது. நிதி சார்ந்த அறிவும், தெளிவும் இருந்துகூட நீங்கள் ஏன் லாபம் இல்லாத ஒரு விஷயத்தைச் செய்தீர்கள்? மிகக் குறைந்த அளவு வரியைச் சேமிக்க 10% வட்டியில் வீட்டுக் கடனைத் தொடர்வது ஏற்புடையதல்ல. உடனே ஃபிக்ஸட் டெபாசிட்டிலிருந்து ரூ.3 லட்சத்தை எடுத்து வீட்டுக் கடனை அடைத்து விடுவது நல்லது. இ.எம்.ஐ-ஆகச் செலுத்தும் ரூ.6,000 எதிர்கால முதலீட்டுக்குப் பயன்படும்.

இன்னொரு விஷயம், உங்கள் கணவர் தொடர்ந்து வேலை பார்ப்பதில் ஆர்வம் காட்ட வில்லை என்கிறீர்கள். ஒருவேளை அவர் இப்போதே வேலையை விட்டாலும் கூட வீட்டுக் கடன் இ.எம்.ஐ இல்லாத நிலையில், உங்களுக்குச் சுமை இல்லாமல் இருக்கும்.

உங்கள் மகன் கார்த்திக்கின் படிப்புக்குப் பங்குச் சந்தை முதலீட்டிலிருந்து ரூ.10 லட்சத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும். 15% வருமானம் என்றாலும், அடுத்த 7 வருடங்களில் ரூ.26.6 லட்சம் கிடைக்கக்கூடும். கார்த்திக்கின் திருமணத்துக்கு நீங்கள் பிளான் எதுவும் கேட்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாவது ஒதுக்குவது நல்லது. ஃபிக்ஸட் டெபாசிட்டிலிருந்து ரூ.5 லட்சத்தை, கார்த்திக் திருமணத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளவும்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை!


வீட்டுக் கடன் செலுத்தியதுபோக, மீதமுள்ள எஃப்.டி தொகை ரூ.27 லட்சம். அதில் ரூ.12 லட்சம் மாத வட்டியிலும், 15 லட்சம் கூட்டு வட்டியிலும் உள்ளது. கூட்டு வட்டியில் உள்ள ரூ.15 லட்சத்தில் ரூ.5 லட்சத்தைத்தான் மகன் திருமணத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளச் சொல்லியிருந்தேன். மீதியுள்ள ரூ.10 லட்சத்தை அவசரக் கால நிதியாக வைத்துக்கொள்ளவும்.

அடுத்து, ஓய்வுக்காலத் திட்டமிடலைப் பார்ப்போம். உங்களுக்குத் தற்போது தோராயமாக மாதம் ரூ.32 ஆயிரம் வரை குடும்பச் செலவு ஆகிறது. உங்கள் பென்ஷன் ரூ25 ஆயிரம், எஃப்.டி தொகை ரூ.12 லட்சத்துக்கான வட்டி ரூ.8,000 என உங்களுக்கு ரூ.33 ஆயிரம் கிடைக்கும். எனவே, உங்கள் கணவர் வேலைக்குப் போகவில்லை என்றாலும் இப்போதைக்குப் பற்றாக்குறை எதுவும் வராது.

ஆனால், பணவீக்கம் அதிகரிப்பால் உங்களின் 59-வது வயதில் பற்றாக்குறை வரக்கூடும். அப்போது கூட்டு வட்டியில் உள்ள எஃப்.டி தொகை ரூ.12 லட்சத்தை மாத வட்டிக்கு மாற்றி னால், கூடுதலாக ரூ.6,000 கிடைக்கும். இதை வைத்து இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம். ஆனால், அடுத்த ஐந்து வருடங்களில் உங்களின் 63-வது வயதில் மீண்டும் பற்றாக்குறை வரக்கூடும். அப்போது யூலிப் முதலீட்டில் உள்ள ரூ.6 லட்சம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள ரூ.6 லட்சம், பங்குச் சந்தையில் உள்ள ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.22 லட்சம் முதலீட்டிலிருந்து 8% வருமானத்தை மட்டும் எடுத்துக் குடும்பச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும். இப்படியே தொடர்ந்து 85 வயது வரை பிரச்னை இல்லாமல் நிம்மதியாகக் கழிக்கலாம்.

அதையும் தாண்டிப் பணப் பற்றாக்குறை வரும்பட்சத்தில் உங்களிடம் உள்ள தங்கத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது ரூ.5 லட்சத்துக்கு ஹெல்த் பாலிசி வைத்துள்ளீர்கள். எதிர்காலத்தில் ஹெல்த் பிரச்னை வரக்கூடும் என நினைத்தால், அதனை ரூ.10 லட்சமாக உயர்த்திக்கொள்வதுடன் கூடுதல் வசதிகள் உள்ள பாலிசியாக மாற்றிக்கொள்வதும் நல்லது.  தேவையானால், 70 வயதுக்குப்பின் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை எஃப்.டி.க்கு மாற்றிக்கொள்ளவும். ஆக, நீங்கள் திட்டமிட்டு வாழ்க்கையை நடத்தினால், கவலையோ பயமோ இல்லாமல் இருக்கலாம்.’’

குறிப்பு: பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளன. இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்துகொள்வது அவசியம். 

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor- Reg. no - INA200000878

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை!