நடப்பு
தொடர்கள்
Published:Updated:

இன்ஜினீயரிங் காலேஜ் முதல் அரசியல் கட்சிகள் வரை... - கறுப்புப் பணத்தைக் கட்டிக்காக்கும் டிரஸ்ட்கள்!

இன்ஜினீயரிங் காலேஜ் முதல் அரசியல் கட்சிகள் வரை... - கறுப்புப் பணத்தைக் கட்டிக்காக்கும் டிரஸ்ட்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஜினீயரிங் காலேஜ் முதல் அரசியல் கட்சிகள் வரை... - கறுப்புப் பணத்தைக் கட்டிக்காக்கும் டிரஸ்ட்கள்!

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரிசி.வெங்கட சேது

ப்ளஸ் டூ படித்து முடித்த மாணவர்கள் இன்ஜினீயரிங் கல்லூரியில் சேரும் காலம் இது. கம்ப்யூட்டர் சயின்ஸுக்கு ரூ.1 லட்சம், இஇஇ-க்கு ரூ.2 லட்சம், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்குக்கு ரூ.3 லட்சம் எனக் குறைந்தபட்ச அளவு நன்கொடைக் கட்டணத்தை நிர்ணயம் செய்து, ‘ரொக்கமாக’ வசூல் செய்து வருகின்றன முன்னணி தனியார் இன்ஜினீயரிங் கல்லூரிகள். ரொக்கமாக வசூலிக்கப்படும் இந்தப் பணமெல்லாம் இந்த நிறுவனங்கள் நடத்தும் டிரஸ்ட்களுக்குப் போய்விடுகிறது. இப்படி டிரஸ்ட்டுக்குப் போகும் பணத்தை யாரும் கணக்கு கேட்க முடியாது. எனவே, இன்ஜினீயரிங் காலேஜ்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகள், மருத்துவமனைகள், சமூக அமைப்புகள் போன்றவை டிரஸ்ட்கள் என்று சொல்லப்படும் அறக்கட்டளைகளைத் தொடங்கி, பணத்தைக் குவித்துக் கொண்டிருக்கின்றன. 

இந்தியாவில் வரி ஏய்ப்பு என்பது காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. வரி ஏய்ப்பு செய்வதற்குக் கல்வி நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் முக்கியமான ஆயுதமாகப் பயன்படுத்துவது இந்த டிரஸ்ட்களைத்தான். நன்கொடையாகப் பெறும் ரொக்கப் பணத்தை வருமான வரித் துறையிடம் கணக்கு காட்டாமல் மறைக்க உதவுவது, டிரஸ்ட்களுக்கான சட்டங்கள்தான். இந்தச் சட்டத்தைச் சரிசெய்துவிட்டாலே நம் நாட்டில் கறுப்புப்பணம் குறையத் தொடங்கிவிடும் என்கிறார்கள் நிதி மற்றும் வரித் துறை நிபுணர்கள்.

இன்ஜினீயரிங் காலேஜ் முதல் அரசியல் கட்சிகள் வரை... - கறுப்புப் பணத்தைக் கட்டிக்காக்கும் டிரஸ்ட்கள்!

இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கிற கல்வி நிறுவனங்கள்  எல்.கே.ஜி முதல் இன்ஜினீயரிங் கல்லூரி வரை லட்சக் கணக்கில் நன்கொடையை வசூலிக்கின்றன. மாணவர்களிடம் பெறும் முழுத் தொகைக்கும் ரசீது தருவதில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கல்வி நிறுவனங்களின் நன்கொடை வசூலைத் தடுக்கத் தவறிவிடுகின்றன. தேர்தலின் போதும், கட்சி மாநாடுகளின்போதும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் கணிசமான தொகையை ‘நன்கொடை’யாகப் பெறுவதே இதற்குக் காரணம். தவிர, பல கல்வி நிறுவனங்களை அரசியல்வாதிகளின் பினாமிகள் நடத்தி வருவதாலும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

மாதச் சம்பளம் பெறுவோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்களது வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும் என வற்புறுத்தும் மத்திய அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் செயல்படும் டிரஸ்ட்களில் குவியும் கோடிக்கணக்கான பணத்துக்குக் கணக்குக் கேட்பதே இல்லை. காரணம், டிரஸ்ட்களுக்குச் சாதகமாக உள்ள சட்ட விதிமுறைகள்தான். பல கல்வி நிறுவனங்கள், ஏதாவதொரு தொண்டு நிறுவனத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு, சட்டவிதிமுறைகளைப் பின்பற்றாமல் வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன.

கல்வி நிறுவனங்கள் இப்படியென்றால், அரசியல் கட்சிகளோ நன்கொடை என்ற பெயரில், தொண்டர்களிடமும், நிறுவனங்களிடமும் இருந்து நிதிப் பெறுகின்றன. பெரு நிறுவனங்கள் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்து வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன. இப்படிப் பெறும்  தொகையினைத் தங்களின் கட்சியின் பெயரிலோ அல்லது தலைவர்கள் பெயரிலோ அறக்கட்டளை தொடங்கி, அந்தப் பணத்தைக் கொண்டுக் கட்சியை நடத்துவதற்கான செலவுகளைச் செய்கின்றன.மேலும், கட்சி மாநாடு மற்றும் கூட்டங்களை  நடத்தவும், தேர்தல் நேரத்தில் மக்களுக்குப் பணம் தரவும் செலவழிக்கின்றன. ஆண்டுதோறும் உயிரிழக்கும் கட்சித் தொண்டர்களின் குடும்பங்களுக்கும் நிதியுதவி செய்து நல்ல பெயர் சம்பாதிக்கின்றன.

இந்தியாவில் டிரஸ்ட்கள் என்கிற பெயரில் நிறுவனங்கள் செய்யும் வரி ஏய்ப்பு குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல ஆடிட்டர் சதீஷ்குமாரிடம் கேட்டோம்.

“ஒரு டிரஸ்ட் என்றால், பொதுவாக அதில் ஐந்து பேர் இடம்பெற்றிருப்பார்கள். 1975 - 1980-ம் ஆண்டுகளில் டிரஸ்டின் உறுப்பினர்கள் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த, வெவ்வேறு  குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். நன்கொடையாக வசூலிக்கும் தொகையை எந்த நோக்கத்துக்காக டிரஸ்ட்டைத் தொடங்கினார்களோ, அதற்காகப் பயன்படுத்தி வந்தனர்.

காலப்போக்கில் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் டிரஸ்டின் கீழ்வந்தன. இந்த நிலையில், அந்த டிரஸ்டின் உறுப்பினர்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் இருப்பதைப் பார்க்கிறோம். தவிர, டிரஸ்ட் பணத்தைக் கொண்டு, கட்டடம் கட்டுதல் மற்றும் விரிவாக்கம், கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்கி அவற்றில் குடும்ப உறுப்பினர்கள் பயணித்தல் என ஆடம்பரமாகச் செலவு செய்து, டிரஸ்ட் சொத்துகளை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர்’.’ - நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்ட டிரஸ்ட்கள் இன்று கறுப்புப் பணம் புழங்கும் கூடாரமாக மாறியதன் பின்னணியைச் சொன்னார் ஆடிட்டர் சதீஷ்குமார்.

இன்ஜினீயரிங் காலேஜ் முதல் அரசியல் கட்சிகள் வரை... - கறுப்புப் பணத்தைக் கட்டிக்காக்கும் டிரஸ்ட்கள்!

கல்வி நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் டிரஸ்ட்களைத் தொடங்கி, வருமான வரித் துறையின் கண்களில் மண்ணைத் தூவி எப்படி வரி ஏய்ப்பு செய்கின்றன என்பதைப் பற்றி சென்னையைச் சேர்ந்த முன்னணி வரித் துறை நிபுணரும் மூத்த வழக்கறிஞருமான வைத்தீஸ்வரனிடம் கேட்டோம்.

“கல்வி நிறுவனங்கள் பெயரிலான டிரஸ்ட்கள், பொதுத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிபந்தனை அடிப்படையில் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்கள், சட்டத்துக்குப் புறம்பாகக் கணக்கில் காட்டாமலும், முறையாக ரசீது தராமலும் மாணவர்களிடம் இருந்து ரொக்கமாகப் பெறும் பணம், கறுப்புப் பணமாகக் கருதப்படும். இப்படிப் பணம் பெறுவது சட்டப்படிக் குற்றம். பண மதிப்பு நீக்கத்துக்குப்பிறகு, பணப்புழக்கம் குறைந்துள்ள நிலையிலும், கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க பெரும் தொகையை ரொக்கமாக வாங்குவது அநியாயம்.

அரசியல் கட்சிகளுக்கு இப்போதுவரை வருமான வரி விலக்கு உள்ளது. என்றாலும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆண்டுதோறும் தங்களின் வரவு-செலவுக் கணக்கை வருமான வரித் துறையிடம் செலுத்தி, அதற்கான சான்றைப் பெற்றிருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திடமும் அரசியல் கட்சிகள் அதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். எத்தனை அரசியல் கட்சிகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன?

தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கான பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. எதிர்வரும் காலத்தில், அரசியல் கட்சிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளன” என்றார்.

இதற்காக டிரஸ்ட்கள் என்கிற பெயரில் எல்லோரும் கறுப்புப் பணம் சேர்க்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. ‘சாரிட்டபிள் டிரஸ்ட்’ எனப்படும் பொதுத் தொண்டு அல்லது சேவை நிறுவனங்கள் மருத்துவம், கல்வி உள்பட பல்வேறு துறைகளில் ஏழை மக்களுக்கு இன்றும் சேவை செய்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுடன் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இத்தகைய தொண்டு நிறுவனங்கள், வருமான வரித் துறையிடம் அனுமதி பெறும்போது சமர்ப்பிக்கும் ஆவணங்களில் சொல்லியுள்ளபடி, பொதுத் தொண்டுகளுக்காகவோ அல்லது சேவைகளுக்காகவோ குறிப்பிட்ட தொகையைச் செலவிடுகிறார்களா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தபின்னரே வருமான வரி விலக்குப் பெற முடியும்.

குறிப்பிட்ட ஓர் ஆண்டில், சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்துக்கு எவ்வளவு தொகை  நன்கொடையாக வந்துள்ளது, அந்தத் தொகையில், வருமான வரித் துறையிடம் தெரிவித்துள்ள அளவுக்கான தொகை தொண்டு காரியங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுசெய்து, அதன் அடிப்படையில் வரி விலக்கு அளிக்கப்படும். தொண்டு நிறுவனங்களுக்கு இத்தனைக் கறார் விதிமுறைகளும், சட்டங்களும் இருக்கிறபோது, மற்ற டிரஸ்ட்களுக்குக் கொஞ்சமாவது கறார் விதிமுறைகள் இருக்கக்கூடாதா என்பதுதான் நேர்மையாளர்கள் எழுப்ப விரும்பும் கேள்வி.
டிரஸ்ட்களைத் தொடங்கிப் பெரும் பணம் சேர்த்துவரும் இந்த நிறுவனங்களை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என ஆடிட்டர் சதீஷ்குமாரிடம் கேட்டோம்.

‘‘ஒரு டிரஸ்டின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி விட்டாலே, அந்த நிறுவனத்துக்கு 30% வருமான வரி விதிக்கப்பட வேண்டும். மேலும், நன்கொடையாகப் பெறும் தொகைக்கு ஒவ்வோர் ஆண்டும் முறையான கணக்கினைச் சமர்ப்பித்து,  கட்டமைப்புப் பணிகளுக்கும், பிற செலவுகளுக்கும்  செலவிடப்பட்ட தொகையைக் கழித்துவிட்டு எஞ்சிய தொகைக்கு வருமான வரி செலுத்தும் வகையில் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் கறுப்புப்பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

மாதச் சம்பளம் பெறுவோர், வர்த்தகர், சுய தொழில் செய்வோர், தொழிற்கல்வி முடித்த நிபுணர், வழக்கறிஞர், பட்டயக் கணக்காளர்் என அனைத்துத் தரப்பினருமே வருமான வரி, சேவை வரி, தொழில் வரி செலுத்தக்கூடிய நிலையில், டிரஸ்ட்களுக்கும் வரி விதிக்க  மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்.

இன்ஜினீயரிங் காலேஜ் முதல் அரசியல் கட்சிகள் வரை... - கறுப்புப் பணத்தைக் கட்டிக்காக்கும் டிரஸ்ட்கள்!


கல்வி நிறுவனங்களைப் போன்றே சில தொண்டு நிறுவனங்களும், தற்போதைய சூழலுக்கேற்ப லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறிவிட்டன. ‘முதியோர் மற்றும் ஏழைகளைப் பராமரிக்கிறோம்’ என்று கூறிக்கொண்டு, நன்கொடை பெறுகிறார்கள். ஆனால், முறையான செலவுகளுக்குப் பதில், கட்டடம் கட்டுதல் போன்ற அவர்களின் சொந்தச் செலவுகளைச் செய்து வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற தொண்டு நிறுவனங்களை அதிகாரிகள் கண்காணித்து அடையாளம் காண்பதுடன், வரி செலுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இன்றைக்குப் பெரும்பாலான கட்சிகள், குடும்பக் கட்சிகளாக மாறிவிட்டன. ரூ.1,000, ரூ.2,000  எனக் கட்சித் தொண்டர்களிடம் இருந்து பெறும் தொகைக்குக்கூட கணக்கு காட்டுவதில்லை. தவிர, கட்சிகளின் மாநாடு, தேர்தல் என பல்வேறு தருணங்களில், தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெருந்தொகையை அரசியல் கட்சிகள் நன்கொடையாகப் பெறுகின்றன. ரொக்கமாகப் பெறும் பணத்துக்கு முறையான கணக்குவழக்கை எல்லோருக்கும்  காட்டுவதில்லை. 

அரசியல் கட்சிகள் தங்களது கணக்கைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று சட்ட விதிமுறை இருந்தபோதிலும், சரியான கணக்கை எந்தவோர் அரசியல் கட்சியும் வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. ஏதோவொரு தொகையைக் குறிப்பிட்டு, அதற்கேற்றாற்போல் கணக்கை நேர் செய்து விடுவதே அரசியல் கட்சிகள் பின்பற்றும் வாடிக்கையான செயலாக உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளாலும் வரி ஏய்ப்பு அதிகம் நடைபெறுகிறது.

அரசியல் கட்சிகளுக்கு வரி விதிப்பது அல்லது அனைத்து நன்கொடைகளையும் காசோலைகள் மூலம் பெறுவதுடன், தொண்டர்களிடம் இருந்து பெறக்கூடிய தொகைக்கு ரசீது வழங்கி, அதனையும் கணக்கில் வரச் செய்தால் மட்டுமே கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பைத் தடுக்க முடியும். அரசியல் கட்சிகளுக்கான நிதிக் கட்டுப்பாட்டைத் தேர்தல் ஆணையம் விரைவில் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் கறுப்புப் பணம் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு, அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும்” என்றார்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்று நமது அரசாங்கம் முடிவெடுத்துவிட்டது. கறுப்புப் பணம் எப்படி எல்லாம் உருவாகிறது என்பதைக் கண்டறிந்து, அந்த ஓட்டைகளைச் சரிசெய்வதன் மூலமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். இதற்கு டிரஸ்ட்கள் தொடர்பான விதிமுறைகளைக் காலத்துக்கேற்ப மாற்றி அமைத்து, அதை எல்லா நிறுவனங்களும் பின்பற்றுகிறதா என்பதைக் கண்காணித்து,  இந்த நிறுவனங்களிடம் இருந்து உரிய வரியை வசூலிப்பதே சரி!    

மாட்டிக்கொண்ட இன்ஜினீயரிங் கல்லூரிகள்!

மத்திய அரசாங்கம் கடந்த ஆண்டு நவம்பரில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை அறிவித்தபோது, பெரும்பாலான டிரஸ்ட்கள் கோடி கோடியாகக் குவித்து வைத்திருந்த பணத்தைக் கணக்கில் காட்ட முடியாமல் தவித்தன. இன்ஜினீயரிங் கல்லூரிகள், மாணவர்களிடம் வசூலித்த கறுப்புப் பணத்தை டிரஸ்ட்களின் கணக்கில் டெபாசிட் செய்தன. இதைக் கண்காணித்த வருமான வரித் துறை, 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வங்கியில் டெபாசிட் செய்த டிரஸ்ட்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

சென்னையைச் சேர்ந்த சில கல்வி நிறுவனங்கள், தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் டிரான்ஸ்ஃபர் செய்தன. இது குறித்த புகாரின் பேரில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வழக்குத் தொடர்ந்துள்ளது. வருமான வரித் துறையின் நோட்டீஸூக்கு சில டிரஸ்ட்கள் பதில் அளித்துள்ளன. வேறு சில டிரஸ்ட்கள் இதுவரை பதிலளிக்காமல் இழுத்தடித்து வருகின்றன. ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் போடப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.