
கா.முத்துசூரியா
பலர், நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால், சிலர்தான் சரியாகத் திட்டமிட்டுச் சேமிப்பார்கள். இன்னும் சிலர் சம்பாதித்தப் பணத்தைக் கண்டபடி செலவு செய்துவிட்டு, பிறகு கடன் வாங்கிக் கவலைப்பட்டுப் புலம்பித் தவிப்பார்கள். கோவையைச் சேர்ந்த சக்தி இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.
32 வயது ஆகும் சக்தி, பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறார். சக்தியின் மனைவி இல்லத்தரசி. ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை. இரட்டையர் களான இவர்களுக்கு நான்கு வயது. சக்தியின் பெற்றோர் அவருடன் வசிக்கிறார்கள். சக்தி அனுப்பிய சில விவரங்களைப் படித்துவிட்டு அவருடன் பேசினோம்.

“கோயம்புத்தூரில் வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். என் மனைவி இன்ஜினீயரிங் படித்துள்ளார். அவர் வேலைக்குச் செல்லவில்லை. குழந்தைகள் பிறப்பதற்குமுன் அவர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். தற்போது எம்.இ படிக்க உள்ளார். படித்து முடித்தபின் வேலைக்குச் செல்வார்.
எனது சம்பளம், பிடித்தம்போக 66,650 ரூபாய். குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க பெரிய தொகை தேவைப்பட்டது. எனக்குச் சில செலவுகளுக்காக அவ்வப்போது வாங்கிய சின்னச் சின்னக் கடன்கள் இருந்தன. குழந்தைகளின் படிப்புச் செலவுக்காகவும், சிறு கடன்களை அடைக்கவும் கடந்த ஜனவரியில் ரூ.5 லட்சம் பர்சனல் லோன் வாங்கினேன். இந்தக் கடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் முடியும்.
அதுபோக, என் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து ரூ.3.50 லட்சம் கடன் வாங்கி உள்ளேன். இடம் வாங்குவதற்காக வாங்கிய வங்கிக் கடன் ரூ.6.85 லட்சம் உள்ளது. இது அடுத்த நான்கு ஆண்டுகளில் முடியக்கூடும். கிரெடிட் கார்டு மூலம் கடன் ரூ.60,000 உள்ளது.
வங்கிக் கடனில் வாங்கிய 3.2 சென்ட் மனையின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.12.5 லட்சம். என் அப்பா வாங்கிய வீடு ஒன்று உள்ளது. அதன் மதிப்பு ரூ.3.5 லட்சம். என் பி.பி.எஃப்-ல் தற்போது ரூ.2.6 லட்சம் உள்ளது.
நான் இதுவரை எந்தச் சேமிப்பும் செய்யவில்லை. கடன் நிறைய உள்ளதால், பெரும் மன உளைச்சலாக இருக்கிறது. காலி மனையை விற்றுக் கடனை அடைப்பது சரியாக இருக்குமா? இப்போதுதான் நான் செய்த பல நிதித் தவறுகளை உணர்கிறேன்” என்றவர், வரவு செலவு, காப்பீடுகள், எதிர்பார்ப்புகளை மெயிலில் அனுப்பி வைத்தார்.

காப்பீடு
மெடிக்ளெயம் - ரூ.3 லட்சம் (பெற்றோர்க்கும் சேர்த்து)
செலவுகள், முதலீடுகள்
குடும்பச் செலவுகள் - ரூ.20,200
இடம் லோன் இ.எம்.ஐ - ரூ.9,525
பெர்சனல் லோன் இ.எம்.ஐ - ரூ.17,455
கிரெடிட் கார்டு லோன் - ரூ.2,500
சுகன்யா சம்ரிதி - ரூ.3,000
மொபைல் இ.எம்.ஐ - ரூ.2,000 (12 மாதம் மீதம் உள்ளது)
ஸ்கூல் பீஸ் - ரூ.30,000 (4 மாதங்களுக்கு ஒரு முறை, இரு குழந்தைகளுக்கும் சேர்த்து)
சீட்டு - ரூ.16,000 (4 மாதங்களுக்கு ஒருமுறை)
வருடம் ஒரு முறை
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் - 25,000
கார், பைக் இன்ஷூரன்ஸ் - 7,000
எதிர்பார்ப்புகள்

* என் மனைவி எம்.இ படிக்க - 2,00,000
* மகன் மேற்படிப்பு (அடுத்த 12 வருடங்களில்) - ரூ.15 லட்சம்
* மகள் மேற்படிப்பு (அடுத்த 12 வருடங்களில்) - ரூ.15 லட்சம்
* மகன் திருமணம் ( அடுத்த 22 வருடங்களில்) - ரூ.15 லட்சம்
* மகள் திருமணம் ( அடுத்த 20 வருடங்களில்) - ரூ.25 லட்சம்
* சொந்த வீடு (அடுத்த 10 வருடங்களுக்குள்) - ரூ.35 லட்சம்
இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.
“அத்தியாவசியத்துக்கும், தேவைக்கும் உள்ள வித்தியாசத்தை உணராததால்தான் இவ்வளவு பெரிய கடன் சுமையை நீங்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.10,000 மொபைல் போனிலேயே எல்லா வசதிகளும் இருக்கிறபோது, மாதம் ரூ.2,000 இ.எம்.ஐ செலுத்தி, ரூ.24,000-த்துக்கு மொபைல் போன் வாங்கியது அநாவசியம். அதனால்தான் பள்ளிக் கட்டணம் செலுத்தக்கூட கடன் வாங்க வேண்டிய நிலை உங்களுக்கு உருவானது.
நீங்கள் கேட்ட எல்லா இலக்குகளுக்கும் இப்போதிருந்தே முதலீட்டைத் தொடங்க வேண்டும் எனில், ரூ.33,000 தேவை. ஆனால், உங்கள் அனைத்துச் செலவுகளையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது ரூ.4,300 மட்டுமே இப்போது உங்களால் முதலீடு செய்ய முடியும். எனவே, தற்போது இந்தத் தொகையிலிருந்து முதலீட்டைத் தொடங்குங்கள். உங்கள் கடன்கள் படிப்படியாகத் தீர்ந்தபின் முதலீட்டை அதிகரிக்கலாம்.
முக்கியமான விஷயம், நிதி ஒழுங்கு இல்லாதவர்கள் கிரெடிட் கார்டு லோன் வாங்காமல் இருப்பது நல்லது. நீங்கள் வாங்கியுள்ள கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி அதிகமாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் செலுத்தி வரும் சீட்டுப் பணத்தை எடுத்து அந்தக் கடனை அடைத்துவிடலாம்.
உங்கள் மனைவி எம்.இ படிப்பதற்குக் கல்விக் கடன் வாங்கிக்கொள்ளுங்கள். அவர் வேலைக்குப் போனதும் அந்தக் கடனை அடைத்துக்கொள்ளலாம்.
மகனின் மேற்படிப்புக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து ரூ.6,500 முதலீடு செய்தால் இலக்கை அடையலாம். ஆனால், தற்போது கையில் உள்ள 4,300 ரூபாயை முதலீடு செய்துவரவும். இரண்டு ஆண்டுகள் கழித்து ஏதாவது ஒரு கடன் அடையும்போது முதலீட்டுத் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம். உங்களுக்கு ரூ.15 லட்சத்துக்குக் கூடுதலாகவே கிடைக்கக்கூடும்.
மகளின் மேற்படிப்புக்கான முதலீட்டை நான்கு ஆண்டுகள் கழித்தே நீங்கள் தொடங்க முடியும். எட்டே ஆண்டுகளில் இந்த இலக்கை நீங்கள் அடைய வேண்டுமெனில், சுகன்யா சம்ருதியில் முதலீடு செய்துவரும் ரூ.3,000 போக, இன்னும் ரூ.6,400 முதலீடு செய்ய வேண்டும்.
மகனின் திருமணத்துக்கு ஆறு ஆண்டுகள் கழித்து மாதம் ரூ.2,600 வீதம் நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பித்தால், 2039-ல் நீங்கள் கேட்ட தொகையைப் பெறலாம்.
மகளின் திருமணத்துக்கான முதலீட்டை, இரண்டு ஆண்டுகள் கழித்து உங்கள் மனைவி வேலைக்குப் போனதும் ஆரம்பிக்கலாம். மாதம் ரூ.3,300 வீதம் முதலீடு செய்தால் 18 ஆண்டுகளில் இலக்கை அடையலாம்.
சொந்த வீடு என்ற இலக்கை 10 வருடங்கள் கழித்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் வாங்கி வைத்துள்ள மனையை விற்றால் சுமார் ரூ.20 லட்சம் கிடைக்கும். 2021 முதல் மாதம் ரூ14,300 முதலீடு செய்தால், 2027-ல் ரூ.15 லட்சம் கிடைக்கக்கூடும். மொத்தம் ரூ.35 லட்சம் மதிப்பில் வீடு வாங்கிக்கொள்ளலாம். அல்லது அந்த மனையில் வீடு கட்ட வேண்டும் என்றால், பற்றாக்குறைத் தொகைக்கு வீட்டுக் கடன் வாங்கிக்கொள்ளலாம்.
பரிந்துரை: டி.எஸ்.பி.ஆர் ஃபோகஸ் 25 ஃபண்ட் - ரூ.2,300, எஸ்.பி.ஐ மல்டிகேப் ஃபண்ட் 2,000
குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்கு மானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்துகொள்வது அவசியம்.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor- Reg. no - INA200000878
