மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்!

நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! ( விகடன் டீம் )

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ற்றுமதி தொழில் குறித்த அடிப்படை விஷயங்களையும், பிசினஸ் சூட்சுமங்களையும் ஒவ்வொரு வாரமும் மிக விரிவாகப் பார்த்து வருகிறோம். நீங்களும் ஏற்றுமதி செய்யத் தயாராகியிருப்பீர்கள். ஆனால், ஏற்றுமதி செய்வதற்குமுன் உங்களுடைய பையர் (Buyer), அதாவது இறக்குமதியாளரிடம் நீங்கள் கேட்க வேண்டிய முக்கியமான பத்து கேள்விகள் உள்ளன. இந்தப் பத்து கேள்விகளுக்குமான பதில்களைப் பெற்ற பின்னரே ஏற்றுமதி செய்வதற்கான வேலைகளில் இறங்க வேண்டும். 

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்!

1. என்ன பொருள், எவ்வளவு?

இறக்குமதியாளருக்கு என்ன பொருள் தேவை, எவ்வளவு தேவை என்பதைக் கேட்க வேண்டும். மேலும், முக்கியமான அந்தப் பொருளில் பல்வேறு வகைகள் இருந்தாலோ, பல்வேறு தரத்தில் இருந்தாலோ என்ன வகை, என்ன தரத்தில் வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்ள வேண்டும். பிறகு, அந்தப் பொருள் உங்களிடம் இருக்கிறதா அல்லது வாங்கி விற்கப் போகிறீர்களா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். 

2. எதில் அனுப்ப வேண்டும்?

கப்பல் வழிப் போக்குவரத்து, ஆகாய மார்க்கம்,  தரைவழிப் போக்குவரத்து என எதன் மூலம் இறக்குமதியாளர் பொருள்களைப் பெற விரும்புகிறார் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப பொருள்களை அனுப்பத் தயாராக வேண்டும். பொருள் சென்று சேரும் காலம் என்பது ஒவ்வொரு வகைப் போக்குவரத்துக்கும் மாறுபடும். அதையும் அவர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பொருள்கள் சென்று இறக்குமதியாளரைச் சேரும் வரை அவர் விரும்பும் தரத்தில், அவர் விரும்பும் விதத்தில் இருக்க வேண்டியது அவசியம். எனவே, இந்த விவரங்கள் குறித்து இறக்குமதியாளருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றால் நீங்களே அதை எடுத்துச் சொல்லலாம். அப்போதுதான் மீண்டும் நம்மிடம் அவர் பிசினஸ் செய்ய முன்வருவார்.

3. பேக்கிங் அளவு

பொருள்கள் என்ன அளவிலான பேக்கிங்கில் இறக்குமதியாளருக்குத் தேவை என்பதைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு, அதன்படி பேக்கிங் செய்ய வேண்டும். கிலோ கணக்கிலா, கிராம் கணக்கிலா, லிட்டரா, மில்லி லிட்டரா இப்படித் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.  

4. என்ன வகை பேக்கிங்?

பொருள்களை என்ன வகை பேக்கிங்கில் அனுப்ப வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்ள வேண்டும். காட்டன் பாக்ஸில் அனுப்ப வேண்டுமா, கன்னி பேக் (Gunny Bag) பேக்கிங்கா என்பதைக் கேட்டு அதற்கேற்ப பேக்கிங் செய்து அனுப்பலாம். மேலும், பொருள்கள் கெட்டுப் போகாத வகையில், பூச்சிகள் தாக்காத வகையில் தரமான பேக்கிங் இருக்க வேண்டும். எந்தப் பொருளுக்கு என்ன பேக்கிங் என்பதை  ஏற்கெனவே விரிவாகத் தந்திருக்கிறோம்.

5. மொழி

பேக்கிங்கில் என்ன மொழி அச்சிடப்பட வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில், பேக்கிங்கில் நாம் செய்யும் பிரின்டிங்தான் வாடிக்கையாளரைக் கவரும். பொருளின் பிராண்ட் பெயர், பொருளின் அளவு, உற்பத்தி இடம் உள்ளிட்ட விவரங்களை அச்சிடும் போது பொதுவான மொழியிலும், விற்பனை செய்யப்படும் இடத்தினுடைய மொழியிலும் அச்சிட வேண்டும். உதாரணமாக, வளைகுடா நாடுகளில் அரபு மொழியில் கட்டாயம் அச்சிட  வேண்டும். பிரான்ஸ் நாட்டுக்கு ஃப்ரெஞ்ச், ஜெர்மனிக்கு ஜெர்மன் மொழி... இப்படி அந்த நாட்டு மொழியை அச்சிட வேண்டும்.

6. பேமென்ட் முறைகள்

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்!



பேமென்ட் முறைகள் பற்றியும் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். பொருளை எப்படிக் கவனமாக அனுப்ப வேண்டுமோ, அதைவிடக் கவனமாக  அனுப்பிய பொருளுக்கான பணத்தைப் பெற வேண்டும். எனவே, அட்வான்ஸ் பேமென்ட் பெறுவது, பொருளை அனுப்பி முடித்த பிறகு மீதமுள்ள தொகையைப் பெறுவது, லெட்டர் ஆஃப் கிரெடிட் மூலம் பெறுவது இப்படி எந்த முறையில் பேமென்ட் செய்யப்பட வேண்டும் என்பதைப் பேசிவிடுங்கள்.

7. இன்கோ டேர்ம்ஸ் (Incoterms)

சர்வதேச அளவிலான வர்த்தகங்களுக்குப் பல்வேறு இன்கோ டேர்ம்ஸ் (Incoterms) விதிமுறைகளைச் சர்வதேச வர்த்தக சபை வரையறுத்திருக்கிறது அது குறித்து இறக்குமதியாளரிடம் பேசி தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (பேமென்ட் முறைகள் பற்றியும் இன்கோ டேர்ம்ஸ் பற்றியும் பின்னர் விரிவாகச் சொல்கிறேன்)

8. எப்போது டெலிவரி?

பொருள்கள் எப்போது இறக்குமதியாளரைச் சென்று சேர வேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்ள வேண்டும். பொருள்களுக்கேற்ப டெலிவரி காலம் மாறும். இறக்குமதியாளர் எப்போது பொருள்களைப் பெற விரும்புகிறாரோ அதற்கேற்ப பொருள்களை அனுப்புவதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

9. என்னென்ன சான்றிதழ்கள் தேவை?

சில நாடுகளில் கடுமையான சட்டமுறைகள் உள்ளன. இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குப் பல்வேறு சான்றிதழ்கள் அவசியமாக உள்ளன. பொருள்களின் தரம், தடை செய்யப்பட்ட பொருள்கள், கட்டுப்பாடுகள் உள்ள பொருள்கள் இப்படி பல்வேறு காரணங்களுக்காக நாம் அனுப்பும் பொருளுக்கான சான்றிதழ்கள், இறக்குமதியாளர்களுக்கு அவசியமாக உள்ளன. அவர்களிடம் என்னென்ன சான்றிதழ்கள் தேவை என்பதைக் கேட்டு, அந்தச் சான்றிதழ்களைத் தயார் செய்து அனுப்ப வேண்டும்.

10. எந்தத் துறைமுகத்துக்குப் பொருள்கள் வர வேண்டும்?

நாம் அனுப்பும் பொருள்கள், அந்த நாட்டின் எந்தத் துறைமுகத்தைச் சேர வேண்டும் என்பதை இறக்குமதியாளரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் எளிதில் பொருள்களைப் பெற முடியும். பெரும்பாலும் இறக்குமதியாளருக்கு அருகில் உள்ள துறைமுகமாக இருக்கலாம்.
இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டால்தான் நீங்கள் புத்திசாலித்தனமான ஏற்றுமதியாளர். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னால் தான், அவர் நம்பகமான இறக்குமதியாளர். எனவே, ஏற்றுமதி ஆர்டர் கிடைத்துவிட்டது என்று நீங்களே வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காமல், சரியான விதிமுறையைப் பின்பற்றி உங்கள் ஏற்றுமதியை வெற்றிகரமாக அமைத்துக் கொள்ளுங்கள்!

(ஜெயிப்போம்)