மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்?

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்?

செல்லமுத்து குப்புசாமி

ந்தத் தொடரை ஆரம்பித்தபோது ‘‘என்றால் என்ன?’’, ‘‘எப்படி?’’ என்கிற ரீதியில் அமைந்துவிடக் கூடாது என முடிவு செய்திருந்தோம். அதாவது, ‘‘ஷேர் மார்க்கெட் என்றால் என்ன?’’, “ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?’’ மாதிரியான கேள்விகள்.

யோசித்துப் பார்க்கையில், இந்தத் தொடருக்கான நோக்கம் அந்த மாதிரியான கேள்விகளுக்கானப் பதிலைத் தேடுவதுதான். சென்ற அத்தியாயத்தில் தெரிந்தோ, தெரியாமலோ பங்குச் சந்தையையும், சென்செக்ஸையும் தொட்டுவிட்டோம்.இந்த இரண்டுக்குமான அறிமுகம் இப்போது மேலோட்ட மாகவாவது தேவைப்படுகிறது. எனவே, இந்த வாரம் ஷேர் மார்க்கெட்டைப்  பற்றிப்  பார்த்துவிடலாம். தேவைப்பட்டால் அடுத்த வாரமும்...

டீக்கடை ஒன்றில் பங்குதாரராவது குறித்து முன்பொரு வாரம் பேசினோம். நமது தெருவில் உள்ள தேநீர்க் கடையில் நாம் முதலீடு செய்தால் நாம் அதன் பங்குதாரர் ஆவோம். நாம் செலுத்தும் முதலீட்டுக்கேற்ப நமது பங்கு அந்த வியாபாரத்தில் முடிவாகும்.

ஏற்கெனவே கடையை நடத்தும் நபருக்கு ஐந்தில் நான்கு பங்கு ஷேர் என்றால், நமக்கு ஐந்தில் ஒரு பங்கு ஷேராக இருக்கும். அந்த வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் லாபம் 100 ரூபாய் என்றால், அதில் ரூ.80-யை அவர் எடுத்துக்கொள்வார். மீதி ரூ.20-தான் நமக்கு. மாறாக, டீக்கடைக்கு ஆயிரம் ரூபாய் கடன் வருகிறதென்றால், அதில் 800 ரூபாயை அவரும், மீதி 200 ரூபாயை நாமும் சுமக்க வேண்டியிருக்கும். இதுதான் அடிப்படை. இரண்டு பேர் மட்டுமே பங்குதாரராக இருக்கும் ஒரு டீக்கடையை எப்படி அணுகுகிறோமோ, அதே மாதிரிதான் பல லட்சம் அல்லது பல கோடி ஷேர்கள் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தையும் அணுக வேண்டும்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்?

ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒரு ஷேர் வைத்திருந்தாலே அம்பானியும், நாமும் பங்குதாரர் ஆகிறோம். அதேமாதிரி, விப்ரோ நிறுவனத்தில் ஒரு ஷேர் வாங்கிவிட்டாலே நாம் அஸீம் பிரேம்ஜியின் பங்காளி ஆகிறோம். இதற்காக ரிலையன்ஸ்  நிறுவனத்தின் ஒரு ஷேரை வாங்கிவிட்டு, நானும் அம்பானியும் பிசினஸ் பார்ட்னராக்கும் என்று உதார் விடக்கூடாது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்கி வைத்திருந்தாலும், நாமும்  அம்பானியும் சமப் பங்காளியா, பிசினஸில் அவர்களுக்கும் நமக்கும் சம செல்வாக்கு/ஆதிக்கம் உள்ளதா என்பது வேறு விஷயம். அதுபற்றி பிற்பாடு  பேசுவோம்.

இப்போது நாம் ரிலையன்ஸ் அல்லது விப்ரோவில் ஷேர் வாங்கி வைத்திருக்கும்போது, நாம் அந்த நிறுவனங்களின் ஷேர் ஹோல்டராக, அதாவது அந்தந்த நிறுவனங்களின் பங்குதாரராக  ஆகியிருக்கிறோம். அந்தக் குறிப்பிட்ட கம்பெனியில்தான் நாம் முதலீடு செய்திருக்கிறோமே தவிர, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யவில்லை. அடிப்படையில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்.

ஒரு பிசினஸின் சக அங்கத்தின ராக நம்மை இணைத்துக் கொள்கிறோம். அந்த பிசினஸ் நன்றாகச் செயலபட்டால், நமது முதலீடு வளரும். தொழில் சுணங்கி னால், நாம் போட்ட பணமும் சுணங்கிப் போகும். அதேநேரம், நமது ஷேரை மற்றவர்களுக்கு விற்க நினைத்தால் அதை அம்பானி யிடமோ, பிரேம்ஜியிடமோ கொண்டுபோய் விற்க முடியாது.

அவற்றை விற்பதற்கான இடம்தான் ஷேர் மார்க்கெட், அதாவது பங்குச் சந்தை. ரிலையன்ஸ் ஷேர்கள் என்ன விலைக்கு விற்கின்றன என்பதை அம்பானியும், விப்ரோ பங்குகள் விற்கும் விலையை பிரேம்ஜியும் தீர்மானிப்பதில்லை. அவர்களது கம்பெனிகளின் ஷேர்களுக்குச் சந்தையில் நிலவும் கிராக்கியே  (Demand) அதைத் தீர்மானிக்கும்.

ஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்?


சந்தை என்பது ஒரு ஷேரின் தினசரி விலையைத் தீர்மானிக்கும் காரணி மட்டுமே. ஆனால், அந்த நிறுவனத்தின் லாபமீட்டும் திறன், நிர்வாக நேர்மை, தொழிலின் எதிர்காலம் ஆகியவைதான் அந்த ஷேரின் நீண்ட கால விலையைத் தீர்மானிக்கும். சுருக்கமாக, பல கம்பெனிகளின் ஷேர்கள் விற்கும் இடமே ஷேர் மார்க்கெட். அதற்கும் விற்பனை யாகும் ஷேர்களுக்கு உரித்தான நிறுவனங்களுக்கும் நேரடியான தொடர்பு எதுவும் இல்லை. அதே நேரம், ஷேர் மார்க்கெட்டில் எல்லா நிறுவனங்களின் ஷேர்களும் விற்கப்பட வேண்டிய அவசியமில்லை. பொது மக்களிடம் ஏற்கெனவே பங்குகளை வெளியிட்டு பஃப்ளிக் லிமிடெட் கம்பெனி யாக மாறிய நிறுவனங்களின் பங்குகளை மட்டுமே ஷேர் மார்க்கெட்டில் விற்கவோ, வாங்கவோ முடியும்.

ஒரு நிறுவனம் தனது பங்குகளைப் பொதுவில் வெளியிட்டு, அனைவர் மத்தியிலும் அதன் ஷேர்கள் புழங்குமாறு செய்வதற்குப் பொதுப் பங்கு வெளியீடு (IPO -   Initial Public Offering) என்பார்கள். ஐ.பி.ஓ வந்தபிறகு ஷேர்கள் அனைவர் மத்தியிலும் புழங்கும். ஆகையால் அவற்றை விற்பதற்கான பொதுவான இடமாகப் பங்குச் சந்தையைப் பயன்படுத்துகிறார்கள். ஏற்கெனவே வெளியே புழங்கும் ஷேர்களை விற்று வாங்கும் இடம் என்பதால்தானோ என்னவோ, ஷேர் மார்க்கெட்டை ‘செகண்டரி மார்க்கெட்’  என்கிறார்கள். முதன்முதலாக ஒரு நிறுவனம் தமது பங்குகளை வெளியிடும் ஐ.பி.ஓ நிகழ்வுகளை ‘பிரைமரி மார்க்கெட்’ எனக் குறிக்கிறார்கள்.

ஆக, பங்குச் சந்தைகள் எல்லாமே செகண்டரி மார்க்கெட்கள். குறிப்பாக, இந்தியாவை எடுத்துக் கொண்டால் பி.எஸ்.இ (BSE) எனப்படும் மும்பை பங்குச் சந்தையும், என்.எஸ்.இ (NSE) எனப்படும் தேசியப் பங்குச் சந்தையும் பிரதானமானவை.  (முன்பக்கமுள்ள படம் நியூயார்க் பங்குச் சந்தை)பி.எஸ்.இ 140 ஆண்டு பாரம்பர்யம் கொண்டது;ஆசியாவின் இரண்டாவது பழமை யான பங்குச் சந்தை. என்.எஸ்.இ 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் உருவான புதிய பங்குச் சந்தை. தற்போது இவை இரண்டும் சேர்ந்து இந்தியாவின் ஒட்டுமொத்தப் பங்குச் சந்தைப் பரிவர்த்தனைகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ ஆகிய இரண்டிலுமாக மாதம் ரூ.80 லட்சம் கோடி முதல் ரூ.140 லட்சம் கோடி வரை (2017-ம் ஆண்டில்) பங்கு வியாபாரம் நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் செயல்பாட்டில் இருந்த பிராந்தியப் பங்குச் சந்தைகள் (கோவை பங்குச் சந்தை, சென்னை பங்குச் சந்தை போன்றவை) இன்று காணாமல் போயிருக்கின்றன.

ஷேர் மார்க்கெட் ஒரு நாளைக்கு எத்தனை புள்ளிகள் உயர்ந்திருக்கிறது அல்லது சரிந்திருக்கிறது என்பதை, குறிப்பிட்ட பங்கு நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையின் அளவுகோலாகவோ, பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக எப்படி இயங்குகிறது  என்பதைச் சொல்லும் ஆதாரமாகவோ எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஆயினும் அவை முக்கியமாகக் கவனிக்கவேண்டிய எண்கள்.

ஒரு குறிப்பிட்ட நாளில் நடக்கும் பங்கு வியாபாரத்தின் அளவு, வேகம் ஆகியன பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமாக, நாட்டின் வேலையின்மை விகிதம், பணவீக்கம், வட்டி விகிதம், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை, ஷேர் மார்க்கெட் தவிர்த்த ஏனைய முதலீடுகளின் நிலவரம், அந்நிய முதலீடுகள் என பல காரணிகளை மேற்கோள் காட்டலாம். எவையெல்லாம் பங்குச் சந்தையில் புழங்கும் பணத்தின் அளவை மாற்றும் வல்லமை கொண்டதோ, அவையெல்லாம் கவனிக்கத்தக்க காரணிகள். ஆனால், இவற்றில் ஒன்றுகூட அன்றைய தினத்தில் அல்லது அந்த வாரம்/மாதம் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் ஈட்டும் லாபத்தில் மாற்றத்தை உருவாக்காமல் போகலாம். எனவே, ஒரு கம்பெனியின் ஷேர் என்ன விலைக்கு விற்கிறது என்கிற செய்தி அதன் பிசினஸைப் பாதிக்காமல் போவதற்கான வாய்ப்புகளே  அதிகம். எனவே, பங்கின் விலையைவிட அந்தப் பங்கு நிறுவனத்தின் தொழில் எப்படிப் போகிறது என்பதில் கூடுதல் கவனம் தேவை.

நல்ல நிறுவனம் அல்லது தொழில் என வட்டம் போட்டுக் குறித்து வைத்துக்கொண்டால், அதன் ஷேர்களை வாங்கிவிட வேண்டியதுதான்! அப்படி வாங்கும்முன்  நாம் செய்ய வேண்டியது என்ன?

(லாபம் சம்பாதிப்போம்)

ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்தால் லாபமா?

ஐ.பி.ஓ என்று சொல்லப்படுகிற பொதுப் பங்கு வெளியீட்டில் சிலர்  ஓடிப் போய் முதலீடு செய்கிறார்கள். ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ வரும்போதே முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பது அவர்களின் எண்ணம். இந்த ஆண்டு வெளியான ஐ.பி.ஓ-க்களில் பி.எஸ்.இ 37%, அவென்யூ சூப்பர் மார்க்கெட் 175%, சங்கரா பில்டிங் 78 சதவிகிதம் லாபம் தந்திருக்கிறது. அதேசமயம், எஸ். சந்த் பங்கு 22%, சி.எல் எஜுகேட் 15% நஷ்டம் தந்திருக்கிறது. ஒரு நிறுவனத்தின் தொழில் எப்படி நடக்கிறது, இனி எப்படி நடக்கும் என்பதைப் பொறுத்துத்தான் அந்த நிறுவனம் வெளியிட்ட பங்கின் விலை நிர்ணயம் செய்யப்படும். அதை வைத்துத்தான் லாபம் கிடைக்குமா அல்லது நஷ்டம் வருமா என்பது முடிவாகும்.