நடப்பு
தொடர்கள்
Published:Updated:

திட்டமிட்டால் கனவு வீடு கைகூடும்!

திட்டமிட்டால்  கனவு வீடு கைகூடும்!
பிரீமியம் ஸ்டோரி
News
திட்டமிட்டால் கனவு வீடு கைகூடும்!

யாழ் ஸ்ரீதேவி

ம்மில் யாருக்கு இல்லை சொந்த வீடு வாங்கும் கனவு? எல்லோரிடமும் கனவு இருக்கிறது. ஆனால், தினப்படி செலவுகளும், திடீர் செலவுகளும் நம் மாதச் சம்பளம் மொத்தத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்றன. இந்தச் செலவுகளையெல்லாம் மீறிச் சொந்த வீடு வாங்குவதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்வி பலருக்கும், குறிப்பாகப் பெண்களுக்கு வருகிறதில்லையா?

‘‘இப்படிப்பட்ட அவநம்பிக்கை எல்லாம் வேண்டவே வேண்டாம். முயற்சி செய்தால் உங்களால் நிச்சயமாக ஒரு சொந்த வீடு வாங்க முடியும்’’ என்று பாசிட்டிவாக பதில் சொல்லி உற்சாகப்படுத்தினார்கள் சில குடும்பத் தலைவிகள். நாம் முதலில் சந்தித்தது தனியார் நிறுவன ஊழியரான மாலதியை.  

திட்டமிட்டால்  கனவு வீடு கைகூடும்!

  ‘‘இஎம்ஐ இருக்க பயமேன்?!”

‘‘இஎம்ஐ இருக்க பயமேன்’ என்பதே என் சக்சஸ் தத்துவம்’’ என்றபடி குதூகலமாகப் பேச ஆரம்பித்தார் மாலதி. “நான், என் கணவர், இரண்டு குழந்தைகள் என நாங்கள் மொத்தம் நாலு பேர். எனக்கு வீட்டு வாடகைக்கே மாதம் ரூ.20 ஆயிரம் செலவானது. யாரோ ஒருவருக்கு வாடகையாக இவ்வளவு பணத்தைத் தருவதற்குப்  பதிலாக மாதம் ரூ.30 ஆயிரம் இஎம்ஐ கட்டினால், வீடே நமக்குச் சொந்தமாகிடுமே என்கிற யோசனை ஒருநாள் வந்தது. கையில் இருந்த சேமிப்பிலிருந்து முன்பணம் செலுத்தி 10 ஆண்டுகளில் வீட்டுக் கடனைத் திரும்பக் கட்டியதில், இன்று எங்களுக்கே எங்களுக்கென ஒரு சொந்த வீடு கிடைத்துவிட்டது. மாதத் தவணையாகச் செலுத்தும் இ.எம்.ஐ தொகை ஒரே அளவில்தான் இருக்கும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், சம்பளம் உயரும்போது அந்தக் கஷ்டமும் காணாமல் போய்விடும். திட்டமிட்டுச் செயல்பட்டால் கடன் வாங்கினாலும் கவலை, மனதை முட்டாது” என்று தெம்பாகப் பேசி முடித்தார் மாலதி.

  ‘‘மாத இ.எம்.ஐ ரூ.75 ஆயிரம்!’’

நாம் அடுத்து சந்தித்தது, சட்டத் துறையில் பணியாற்றும் சுபாஷினியை. ஒவ்வொரு மாதமும் செலுத்தும் இ.எம்.ஐ தொகை கொஞ்சம் அதிகம் என்றாலும் மகிழ்ச்சியோடு அதைக் கட்டி வருகிறார் அவர்.

திட்டமிட்டால்  கனவு வீடு கைகூடும்!


‘‘வாடகை வீட்டில்தான் எங்கள் வாழ்க்கை  தொடங்கியது. வாடகை வீட்டுக்கேற்ப ஃபர்னிச்சர் வாங்க வேண்டும். வீட்டில் ஓர் ஆணி அடிப்பதாக இருந்தால்கூட வீட்டு ஓனரிடம் அனுமதி வாங்க வேண்டும். அடுத்தடுத்து வீடுகள் மாறும்போதும் இந்தப் பிரச்னைகள் தொடரும். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு சொந்த வீடுதான்.

ஆனால், பெரியவர்கள் சேர்த்து வைத்த சொத்துகளை விற்று வீடு வாங்க எனக்கு மனதில்லை. எனவே, வீட்டுக் கடன் வாங்க முடிவெடுத்தேன். வீட்டுக்கான கடன் தொகையை எப்படிக் கட்டலாம் என்பதை என் கணவருக்குப் புரியவைத்தேன். மாதம் ரூ.75 ஆயிரம் வரை இ.எம்.ஐ கட்டுவது போலத் திட்டமிட்டேன். இதற்கேற்ப எங்கள் வாழ்க்கை முறையை  மாற்றிக் கொண்டோம். இன்று எங்கள் கனவு நனவாகி இருக்கிறது. சொந்த வீட்டில் எனக்குப் பிடித்த மாதிரி இருக்க முடிகிறது. இந்தச் சுகத்துக்கு ஈடு இணை ஏது?’’ என்று கேட்கிறார் அவர்.

  ‘‘20 வருடக் கடனை 10 வருடங்களில் செலுத்த வேண்டும்!”

வீட்டுக் கடனில் வீட்டை வாங்கி னாலும், அந்தக் கடனை முடிந்தவரை சீக்கிரமாகவே கட்டி முடித்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் பவித்ரா ஸ்ரீனிவாசன். அவர் சொன்னார்.

‘‘என் கணவருக்குச் சொந்த ஊர் ஹைதராபாத். நான் திருமணத்துக்குப் பின் சென்னையை விட்டு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். எனவே, என் கணவரின் பெற்றோர், என் பெற்றோர் அனைவரும் சேர்ந்து இருக்கும்படியான ஒரு வீட்டை வாங்க முடிவு செய்தோம். என் பெற்றோர், அவர்களுடைய பூர்வீகச் சொத்துகளை விற்றுக் கொடுத்தார்கள். அந்தப் பணத்தை முன்பணமாகச் செலுத்தி அருமையான ஒரு வீட்டை வாங்கிவிட்டோம்.

இப்போது முதலில் வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறோம். மாதம் ரூ.1.5 லட்சம் வரை இ.எம்.ஐ கட்டுகிறோம். விரைவாகப் பணத்தைக் கட்டியதால் வட்டி விகிதமும் குறைந்துள்ளது. வீட்டுக் கடன் கட்டுவதால், வரிச்சலுகையும் கிடைக்கிறது’’ என்றார் பெருமை பொங்க.

சில பெண்கள் இப்படித் திட்டமிட்டு வீடு வாங்கியிருக்க, மற்றவர்களும் எப்படித் திட்டமிட்டு வீடு வாங்கலாம் என்பது குறித்து ஆலோசனை தந்தார் சென்னை, நவீன்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பவானி.

‘‘ஒருவர் தனது வருமானத்தில் வீட்டுக் கடனாக எவ்வளவு திரும்பச் செலுத்த முடியும் என்பதன் அடிப்படையில் வீட்டுக்கான பட்ஜெட்டை நாம் முடிவு செய்யலாம். வேலைக்குப் போகும் பெண்கள் சொந்த வீடு வாங்கும் திட்டத்தைக் குறைந்தபட்சம் 28 - 35 வயதுக்குள் தொடங்கிவிட வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் கணவருடன் கூட்டாக வீட்டுக் கடனை வாங்கலாம். இதனால் இருவருக்குமே வரிச் சலுகை  பெற வாய்ப்புண்டு. இ.எம்.ஐ  தொகையும் குறைவாக இருக்கும். வாடகை செலுத்தும் பணத்தை இ.எம்.ஐ-ஆக கட்டிவிடலாம்.

40 வயதுக்கு மேல் வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தால், நிலத்தின் விலை ஏற்றம், சொத்து மதிப்புக் கூடுதல் போன்ற காரணங்களால் பெரிய சுமை போலத் தெரியும். இளம் வயதிலேயே வீட்டை வாங்கிவிட்டால், குறுகிய காலத்திலேயே கடனிலிருந்து வெளியே வந்துவிட முடியும். வீடும் நமக்குச் சொந்தமாகிவிடும்.

பெண்கள் பெயரில் வீட்டுக் கடன் வாங்கும் போது வங்கிகள் வட்டிச் சலுகை அளிக்கின்றன. இதற்குச் சொத்தானது கணவன் - மனைவி என இருவர் பெயரிலும் இருக்க வேண்டும். அதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பானது’’ என்றார் பவானி. கொஞ்சம் முயற்சி செய்தால், சொந்த வீடு நிச்சயம் என்பது எல்லோருக்கும் சாத்தியம் என்பதை இனியாவது நம்புங்கள் பெண்களே!

படங்கள்: ப.காளிமுத்து

திருமணத்துக்குமுன் பெண்கள் வீடு வாங்கும்போது...!

*    திருமணத்துக்குமுன் பெற்றோருக்காகத்தான் நீங்கள் ஒரு  வீட்டை வாங்குகிறீர்கள் எனில், அதைப் பெற்றோர் பெயரிலேயே பதிவு செய்துவிடலாம். வீட்டுக் கடனைப் பெற்றோரும் செலுத்துவதாக இருந்தால், இதுவே சரி. 

*     பெற்றோர் பெயரில் வீட்டைப் பதிவு செய்தால், பின்நாளில் சொத்தைப் பிரிக்கும்போது எல்லோருக்கும் அதில் பங்கு தரவேண்டி இருக்கலாம். இது போன்ற சங்கடங்களைத் தவிர்க்கப் பணம் செலுத்துபவர் பெயரில் வீட்டைப் பதிவு செய்வதே சரியாக இருக்கும்.

*     திருமணத்துக்குமுன் வீடு வாங்கினால், அது தனக்காக வாங்கியதா அல்லது பெற்றோருக்காக வாங்கியதா என்பதை மணமகன் வீட்டாருக்கு ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லிவிடுவது கட்டாயம்.  

*     திருமணத்துக்குப்பின் யார் பணம் செலுத்துகிறோமோ, அவர் பெயரில் வீட்டைப் பதிவு செய்யலாம். திருமண உறவுகள் கசந்து பிரிய நேரிட்டால் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்க உதவும். ஒரு சில வீடுகளில் பெண்கள் கடன் தொகையைப் பெண்களே திரும்பக் கட்டுவதாக இருந்தாலும்கூட குடும்பத் தலைவரின் பெயரில் வீடு வாங்க வாய்ப்புள்ளது. வரிச்சலுகை பெறுவது அவசியம் எனில், பெண்கள் பெயரில் வீட்டுக் கடன் வாங்குவது அவசியம்.