மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்!

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்!

நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்

ந்த அத்தியாயத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைய வேண்டாம். என்னைத் தவறாகவும் புரிந்துகொள்ள வேண்டாம். இந்த உலகத்தில் நம் பெற்றோர்களைத் தவிர வேறு யாராலும் நமக்கான தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்ய முடியாது. நமது பிள்ளைகள் கீழே விழுந்துவிடக் கூடாது, கஷ்டப்படக்கூடாது, அவர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால்தான் ரிஸ்க் இல்லாத ஒரு வாழ்க்கையை நமக்குத் தேர்வு செய்து தருவார்கள்.

ஆனால், நம் எதிர்கால வாழ்க்கையில் நாம் பயணிக்கப்போகும் வழியை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான், அதில் நாம் சுதந்திரமாகவும், பொறுப்போடும் பயணிக்க முடியும். இதுவே வேறு யாராவது கொடுத்த யோசனையின்படி நாம் ஒரு விஷயத்தைச் செய்யும்போது, அதில் எதுவும் தவறு நடந்தால்  அதற்கானப் பழியைத் தூக்கி நாம் அவர்கள் மீது போட்டுவிடுவோம். ஆனால், நாமே அந்த வழியைத் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் தவறு நேர்ந்தால் அது நம் தலையில்தான் விழும் என்பதை மனதில் வைத்துக் கவனமாகச் செயல்படுவோம். இதனால் நாம் தவறு செய்வதற்கான வாய்ப்புக் குறையும்.

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்!

நான் முதலில் நேச்சுரல்ஸை ஆரம்பிக்கும்போது என் அம்மா அதற்கு ஒப்புக்்கொள்ளவே இல்லை. என் அண்ணன் செய்துவந்த தொழிலில் என்னையும் சேரச் சொன்னார். ஆனால், அப்போதுதான் அதிக எண்ணிக்கையில் பெண்கள் அலுவலக வேலைகளுக்குச் செல்ல ஆரம்பித்திருந்தனர். அதுவரை ஆண்கள் மட்டுமே அலுவலகத்தில் வேலை பார்த்துவந்ததால், அழகு சார்ந்த விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தவேயில்லை. ஆண்களும், பெண்களும் ஒன்றாகச் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்த பின்புதான் ஆண்களுக்கான பியூட்டி பார்லர்கள் தேவைப்பட்டன. அப்போது இருந்த சலூன்களும் முறைப்படுத்தப்படாமலும், போதிய பராமரிப்பு இல்லாமலும் இருந்தன. அதனால் எனக்கான ஒரு தொழிலைத் தொடங்க இதுதான் சரியான நேரம் என்று நினைத்து, எனக்குத் தோன்றியதைச் செய்தேன். இன்று அது மிகப் பெரிய வெற்றியைக் கண்டிருக்கிறது.

இதேபோல, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது சரியாக வரும் என நீங்கள் உறுதியாக நம்பும்பட்சத்தில், யார் என்ன சொன்னாலும் கேட்காமல் அதில்  துணிந்து இறங்குங்கள்.
 
இதற்கு ஒரு ஜாலியான உதாரணம் சொல்கிறேன். பெங்களூருவில் இருந்த ஒரு பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள். அதற்காக அந்தப் பெண், தன் அம்மா, அப்பா சொன்னபடியே, தன் புரஃபைலைத் தயார் செய்து ஆன்லைனில் பதிந்து வைத்திருந்தார். அடுத்த நாள் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள 15 வரன்கள் வந்தன. அதற்கடுத்த நாளே அந்தப் பெண், செல்ஃபி வீடியோ ஒன்றை எடுத்தார். அதில் அவருக்கு என்னென்னப் பிடிக்குமோ அவற்றையெல்லாம் சொன்னார். மழையில் நனைய ஆசை, இரவில் சினிமாவுக்குப் போக ஆசை எனத் தனக்கிருந்த சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் அதில் கூறினார்.

அது மட்டுமில்லாமல், ‘‘என் அம்மா, அப்பா கூறியதுபோல, நான் இருக்க மாட்டேன். இதுதான் நான்’’ எனவும் கூறியிருந்தார். அதற்கடுத்த நாள் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துத் தகவல் அனுப்பினார்கள்.

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்!

இது உண்மையில் நடந்த சம்பவம். இதை ஜாலியாக எடுத்துக்கொண்டாலும், தன்னுடைய  விருப்பத்தினைத் துணிச்சலோடு சொல்லும்போது, அதை மற்றவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் நல்லதோர் உதாரணம்.

பெற்றோர்களுக்கு ஆண் குழந்தைகள் மேல் இருக்கும் பயத்தைவிட, பெண் குழந்தைகள் மேல் இருக்கும் பயம் அதிகம். படிப்பு, திறமை, அழகு என எல்லாவற்றிலும் சிறந்த விளங்கும் சில பெண்கள், பெற்றோர் சொல்லும் ஒரு நல்ல, நல்ல வேலையில் இருக்கும் இளைஞனைத் திருமணம் செய்துகொள்வார்கள். அதன்பிறகுக் கணவரைவிட, மனைவி அதிகச் சம்பளம் வாங்கிவிடக்கூடாது என்கிற பயத்திலேயே பெண்களை வேலைக்கு அனுப்பாமல், வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வார்கள். இப்படியே அவர்களின் திறமை மழுங்கடிக்கப்படுகிறது.

அந்தக் காலத்தில் இந்தந்த வேலைகளை இவர்கள்தான் செய்ய வேண்டும் எனச் சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதன் அடிப்படையில் தான் மனைவிக்கு வீட்டு வேலையும், கணவருக்கு வெளியில் சென்று சம்பாதிக்கிற வேலையும் தரப்பட்டது. மனைவியைச் சம்பாதிக்கவிட்டால், அவர் கணவரைவிட அதிகம் சம்பாதிப்பார் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்!எனக்கு ஒரு ரோல் மாடலாக இருந்தவர் அனிதா ராடிக். அவரின் கணவர் ஒரு ரெஸ்டாரென்ட்டை நடத்தி வந்தார். அவர்களுக்கு  இரு பெண் குழந்தைகள் இருந்தார்கள். அனிதா ராடிக் கணவர் நடத்திய ரெஸ்டாரென்ட்டில் நஷ்டம் வர ஆரம்பித்ததால், மனைவியையும், மகள்களையும் விட்டுவிட்டு, அவர் லண்டனில் இருந்து நியூயார்க் நகரத்துக்குப் போய்விட்டார். அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அனிதா ராடிக், பாடி ஷாப் ஒன்றை ஆரம்பித்தார். அதைப் பற்றி பிற்பாடு இப்படிச் சொன்னார் அனிதா.

‘‘எனக்கு என்ன செய்யணும்னு தெரியாமல்தான் இந்த பாடி ஷாப்பை ஆரம்பித்தேன். அதுவரை நான் சில வேலைகளை ஆண்கள் பண்ணுவாங்க; சில வேலைகளைப் பெண்கள் பண்ணுவாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். என் கணவர் இல்லாததாலே எல்லா வேலையையும் நானே பண்ண ஆரம்பிச்சேன். அது ஒண்ணும் எனக்குச் சிரமமானதா தெரியலை. அதுக்கப்பறம் எனக்கு இந்த வேலை செட்டாகிடுச்சு’’ என்று சொன்னார். ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் தொழில்முனைவோர் ஆகலாம் என்பதற்குத்தான் இந்த உதாரணம்.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு, நண்பர்கள் தங்களின் நண்பர்களுக்கு, மனைவி தனது கணவருக்கு, கணவர் தனது மனைவிக்கு எப்போதும் நல்லது நடக்க வேண்டும்; அவர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், நாம் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்றால், நமது சொந்த முடிவுகளில் நம்பிக்கை வைத்து, சில ரிஸ்க்கான முடிவுகளை எடுத்து, அதிலிருந்து விலகாமல் இருக்க வேண்டும். அப்படி உறுதியாக இருந்தால் எதிர்காலத்தில் நமக்கு வெற்றி கிடைக்கும்.

நாம் எடுக்கிற முடிவுகளில் சரியான முடிவு, தவறான முடிவு என்று இந்த உலகில் எதுவும் இல்லை. முதலில் ஒரு முடிவு எடுங்கள்; பிறகு அதைச் சரியான முடிவாக மாற்றுங்கள். இதுதான் நான் கற்ற பாடம்!

தொகுப்பு: மா.பாண்டியராஜன்

(மாத்தி யோசிப்போம்)