
BIZ பாக்ஸ்

ஊபர் சி.இ.ஓ பதவியை இழந்த கலானிக்!
ஊபர் நிறுவனத்தின் சி.இ.ஓ கலானிக், முதலீட்டாளரின் நெருக்குதலைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஊபர் நிறுவனத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்மீது அந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஒரு பெண் ஊழியர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பலரும் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஊபருக்கு எதிரான கருத்துகளை பலரும் வெளியிட ஆரம்பித்தனர். #DeleteUber என்கிற ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆனது. இதைக் கவனித்த முதலீட்டாளர்கள், கலானிக் பதவியை ராஜினாமா செய்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தியதைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இப்படி பிரேக் போட்டுட்டாங்களே!

சக்தி போனார், சுபாஷ் வந்தார்!
மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் செயலாளராக இருந்த சக்திகந்த தாஸ் கடந்த மாதத்துடன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, சுபாஷ் சந்த்ர கர்க் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கர்க், இந்திய அரசுப் பணியில் 31 ஆண்டு காலம் பணிபுரிந்தவர். நிதி, கல்வி, விவசாயம், ஊரக வளர்ச்சி எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 2014 முதல், உலக வங்கியின் செயல் இயக்குநராகப் பணியாற்றி வந்த இவருக்கு பொருளாதார விவகாரத் துறை செயலாளர் பதவி தரப்பட்டிருக்கிறது. கலக்குங்க சுபாஷ்ஜி!
ரூ.4,000 கோடி - எல் அண்ட் டி நிறுவனத்தில் செய்துள்ள முதலீட்டில் இருந்து 2.5 சதவிகிதப் பங்குகளை விற்றதால் மத்திய அரசாங்கம் திரட்டிய தொகை!
ரூ.8.67 லட்சம், 37 கிராம் தங்கம், 55 கிராம் வெள்ளி, 7 வெளிநாட்டு நோட்டுகள் - நெல்லையப்பர் கோயிலின் கடந்த ஒரு மாதக் காணிக்கை.
400 மில்லியன் டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,500 கோடி) ஸ்நாப் டீல் நிறுவனத்தை வாங்குகிறது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். இதற்கான அறிவிப்பு ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

பயப்படாதீங்க, அபராதம் போட மாட்டோம்!
ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தால், எந்த வரியை எப்படிக் கட்டுவது, ஏதாவது ஒரு வரியைக் கணக்கில் காட்டாமல் விட்டால் வரித் துறையின் நடவடிக்கைக்கு ஆளாகிவிடுவோமா என்கிற பயம் எல்லா சிறு தொழில்முனைவோர்களின் மனதிலும் எழுந்துள்ளது. இந்தப் பயத்தைப் போக்குகிற மாதிரி பேசியிருக்கிறார் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். ‘’ஜி.எஸ்.டி வரி தொடர்பான வரியை முதல் இரண்டு மாதங்களுக்குத் தவறாகக் கணக்கு காட்டினால், எந்த அபராதத்தையும் விதிக்க மாட்டோம்’’ என்று சொல்லியிருக்கிறார் அவர். தேங்கஸ் மேம்!

ஸ்டாக் ஆப்ஷனை விற்ற ஆதித்யா புரி!
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் ரூ.57 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றிருக்கிறார் அதன் மேலாண்மை இயக்குநர் ஆதித்யா புரி. ஸ்டாக் ஆப்ஷன் மூலம் கிடைத்த பங்குகளில் ஒரு பகுதியைக் கடந்த நிதியாண்டில் அவர் விற்றிருப்பதாக அந்த வங்கி சொல்லியிருக்கிறது. கடந்த 2015 - 16-ம் நிதியாண்டில் ரூ.21.80 கோடி மதிப்புள்ள ஹெச்.டி.எஃப்.சி வங்கிப் பங்குகளை அவர் விற்றார். என்னங்க சார் உங்க திட்டம்?

ஜி.எஸ்.டி-யின் தூதர் அமிதாப் பச்சன்!
வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது ஜி.எஸ்.டி. இந்த வரி குறித்து வர்த்தகர்கள் இடையே பிரபலப்படுத்த இந்தி நடிகர் அமிதாப் பச்சனைத் தூதுவராக நியமித்திருக்கிறது மத்திய நிதி அமைச்சகம். ‘ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை’ என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இந்த வரியினால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என 40 வினாடிகள் ஓடும் வீடியோவில் பேசி இருக்கிறாராம் அமிதாப். அச்சா அமிதாப்ஜி!