
கே.வைத்தீஸ்வரன், வழக்கறிஞர் மற்றும் வரி நிபுணர்

கதிர், மதுரை
என் மகளின் திருமணத்துக்குத் தங்க நகை வாங்க வேண்டியுள்ளது. ஜி.எஸ்.டி வந்தபிறகு தங்கம் விலை ஏறுமா?
“தங்கத்தைப் பொறுத்தவரை, நாம் பெரும்பாலும் இறக்குமதிதான் செய்துவருகிறோம். தங்கத்துக்கான சுங்க வரி அப்படியேதான் இருக்கப்போகிறது. தங்க ஆபரணங்கள் என்று பார்த்தால், தமிழகத்தில் வாட் வரி 1%. ஒரு சில நிறுவனங்களுக்கு, ஒரு சில வியாபாரிகளுக்கு டேர்ன் ஓவரைப் பொறுத்து, கலால் வரி 1% வசூலிக்கப்படுகிறது. அதே சமயம், பெரிய வியாபாரிகள் அனைவருக்கும் 2% வரி விதிக்கப்படுகிறது. இதுவரை 2 சதவிகிதமாக இருக்கும் வரி, ஜி.எஸ்.டி-யில் 3 சதவிகிதமாக மாற்றப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை டேர்ன் ஓவர் செய்யும் நகை வியாபாரிகள் வரி செலுத்த வேண்டும். இந்தியாவில் 75 சதவிகித நிறுவனங்கள் ரூ.20 லட்சத்துக்கு மேல் டேர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்களாகவே இருக்கும். எனவே, சிலருக்கு 2 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாகவும், சிலருக்கு 1 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாகவும் வரி உயரும். எனினும், நகை வியாபாரிகளுக்குக் கூடுதலாக டாக்ஸ் கிரெடிட் (Tax Credit) கிடைக்கும்.
உதாரணத்துக்கு, ஒரு பெரிய நகை வியாபாரியின் விளம்பரச் செலவு, இன்ஷூரன்ஸ் செலவு மூலம் டாக்ஸ் கிரெடிட் கிடைக்க வாய்ப்புண்டு. இதற்குமுன் சேவை வரி எல்லாம் அதிகமாக இருந்தது. இப்போது சேவை வரிக்குப் பதிலாக, ஜி.எஸ்.டி-யில் கிரெடிட் கிடைக்கும். ஆகையால், பெரிய கடைகளில், பெரிய வித்தியாசங்கள் இருக்குமா என்பதைச் சொல்ல முடியாது. தங்கம் விலையைப் பொறுத்தவரை, அதன் சந்தைக் காரணியை அடிப்படையாக வைத்தே விலை நிர்ணயமாகும்.’’
கே.குமார், சென்னை

ஜி.எஸ்.டி உள்ளீட்டு வரி (Input Tax) என்றால் என்ன?
“ஜி.எஸ்.டி என்பது நாம் ஒரு பொருளை விநியோகம் செய்யும்போது செலுத்த வேண்டிய வரி. இதை ‘வெளிப்புற விநியோகம்’ (Outward supply) என்று சொல்வோம். உதாரணத்துக்கு, ஒருவர் ஒரு காரை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும்போது, அதாவது விநியோகம் செய்யும்போது அவர் ஜி.எஸ்.டி வரியை அவசியம் செலுத்த வேண்டும். ஆனால், அந்த காரை தயாரிக்கப் பலவிதமான பொருள்கள் மற்றும் சேவைகளை அவர் வாங்கியிருப்பார். அந்தச் சேவைகளுக்கும், பொருள்களுக்கும் உள்ள வரிதான் `Input Tax Credit’ என்கிறோம். ஏற்கெனவே கட்டிய வரியை, இனி கட்ட வேண்டிய வரியிலிருந்து கழிப்பதற்குப் பெயர்தான் `Input Tax Credit set off’ என்கிறோம்.’’
திருமுருகன், திருப்பூர்
டெக்ஸ்டைல் துறைக்கு ஜி.எஸ்.டி-யால் என்ன பாதிப்பு வரும்?
“ஜி.எஸ்.டி-யில் எல்லாவிதமான டெக்ஸ்டைலுக்கும் 5%வரி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெக்ஸ்டைலைப் பொறுத்தவரைக்கும் நிறைய ஜாப் வொர்க் வேலைகள் நடைபெறும். ஆடை தயாரிக்கும் நபர், அந்த ஆடைக்குச் சாயமிடுதல், நெசவு, தையல், முடி போடுதல், பேக்கிங் உள்ளிட்ட பல ஜாப் வொர்க் வேலைக்கு அவுட்சோர்சிங் செய்வார். இதற்கு இதுவரை எந்த வரியும் இல்லை. இப்போது டெக்ஸ்டைல் துறையில் ஜாப் வொர்க் வேலைக்கு 5% ஜி.எஸ்.டி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய வர்த்தகம் அல்லது ஜாப் வொர்க் கட்டணம் ரூ. 20 லட்சத்தைத் தாண்டியது என்றால் ஜி.எஸ்.டி-க்கு பதிவுசெய்து 5% வரியாகச் செலுத்த வேண்டும்.”
வி. கிருஷ்ணன், பாளையங்கோட்டை
ஜி.எஸ்.டி வந்தால் லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம் உயரும் என்கிறார்களே!
“இன்றையத் தேதியில், 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட சேவை செய்யும் நிறுவனங்கள் எல்லாம் ஏதாவது ஒரு மாநிலத்தில் தங்களுடைய தலைமை யகத்தை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேவை செய்துகொண்டு, ஒரே ஒரு பில்லைத் தலைமையகத்தில் இருந்து வாங்கிக் கொண்டு, மற்ற இடங்களில் விநியோகித்து வருகின்றன. ஜிஎஸ்டி வந்தபிறகு, நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் செயல்பட்டு வருகிறதோ, அந்தந்த மாநிலத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றன. ஆகையால், தொலைத்தொடர்பு நிறுவனமோ அல்லது இன்ஷூரன்ஸ் நிறுவனமோ பல மாநிலங்களில், பல அலுவலகங்களைத் திறந்து, வரிக் கணக்கு தாக்கல் செய்தால், அவர்களுடைய ‘காஸ்ட் ஆஃப் கம்ளையன்ஸ்’ (cost of compliance) அதிகரிக்கும். இதனால் இன்ஷூரன்ஸ் பிரிமீயம் உயர வாய்ப்பு இருக்கிறது. இப்போது இந்தியாவில் பல்வேறு சேவைகளுக்கான சேவை வரி 15 சதவிகிதமாக இருக்கிறது. ஜிஎஸ்டி-யில் சில சேவைகளுக்கான வரி 18 சதவிகிதமாக உயரும். 75 சதவிகித சேவைகளுக்கு 18% வரி இருக்கும். இன்ஷூரன்ஸ், தொழில்முறை சேவைகள், விளம்பரங்கள், தொலைத்தொடர்பு, இன்டர்நெட் போன்ற சேவைகள் அனைத்துக்கும் வரி 15 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயரும்.”
கண்ணப்பன், சேலம்
ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வருவதினால், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் என்ன லாபம்?
“மத்திய அரசை எடுத்துக்கொண்டால் உற்பத்தி வரி (Excise Duty) என்று சொல்லப்படும் கலால் வரியை வசூலிக்கிறது. கலால் வரி, உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது மட்டுமே விதிக்கும் வரி. உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு பொருள் விநியோகஸ்தர், டீலர், ரீடெய்லருக்கு என மாறி மாறிச் செல்லும். எந்த விநியோகத்திலும் மத்திய அரசின் மறைமுக வரி கிடையாது. அதேமாதிரி மாநில அரசை எடுத்துக்கொண்டால், ஒரு பொருளை விற்பனை செய்தால் வாட் வரி விதிக்கப்படும். ஆனால், மாநில அரசுக்குச் சேவை வரி விதிக்க அதிகாரமில்லை. மத்திய அரசு 1994-லிருந்து சேவை வரியை வசூலித்து வருகிறது. இப்போது சரக்கு மற்றும் சேவைக்கு மத்திய அரசும் வரி விதிக்கலாம்; மாநில அரசும் வரி விதிக்கலாம். உற்பத்தியாளர் ஒருவர் மத்திய அரசுக்கு சி.ஜி.எஸ்.டி, எஸ்.ஜி.எஸ்.டி கட்டி ஒரு பொருளை விற்பனை செய்தார் என்றால், அந்த விநியோகிஸ்தர் அந்தப் பொருளுக்கான டாக்ஸ் கிரெடிட் (Tax Credit)-ஐ எடுத்துக்கொண்டு, அவர் விற்பனை செய்யும் விலையில் சி.ஜி.எஸ்.டி, எஸ்.ஜி.எஸ்.டி வரி கட்டுவார். ஆக, இரண்டு அரசுக்கும் புதிய வருமானம் வரும். இதுநாள் வரை வரி செலுத்தாமல் இருந்தவர்கள் இனி வரி செலுத்துவார்கள். இதனால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்து, வருமானமும் உயரும்.”
தொகுப்பு: சோ.கார்த்திகேயன்
படம் : சொ.பாலசுப்ரமணியன்
