
கேள்வி பதில்: என்.ஆர்.இ & என்.ஆர்.ஓ கணக்குகளில் உள்ள பணத்துக்கு வருமான வரி உண்டா?

நான் தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சீட்டு கட்டி வருகிறேன். கடந்த ஏப்ரலில், 40 மாத குரூப்பில் 28-வது சீட்டை ரூ.9,600-க்குத் தள்ளுபடி செய்து எடுத்தேன். 90,400 ரூபாய்க்குப் பதிலாக 89,045 ரூபாய்தான் தந்தார்கள். ரூ 1,355 ரூபாய் டாக்குமென்ட் சார்ஜ் பிடித்தம்’ என்கிறார்கள். மேலும், 30 நாள்களுக்குள் தரவேண்டிய பணத்தை 38 நாள் கழித்துத் தந்தார்கள். அவர்கள் செய்தது சரியா?

-ஏகப்பன், புதுக்கோட்டை
அ.சிற்றரசு, செயலாளர், இன்கார்ப்பரேட்டட் சிட் ஃபண்ட்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு.
``பொதுவாக, ஒவ்வொரு நிறுவனத்திலும் குறிப்பிட்ட ஒரு தொகையை ஆவணக் கட்டணமாக வசூலிப்பார்கள். இந்தத் தொகை ரூ.500 முதல் ரூ.1,000 வரை இருக்கும். இவை அனைத்தையும் ஒப்பந்தத்தில் சொல்லியிருப்பார்கள். அப்படிச் சொல்லி இருக்கிறார்களா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள். அடுத்து, ஏலச் சீட்டில் எடுத்த பணம் 30 நாள்களுக்குள் தர வேண்டும் என்பது நிறுவனத்துக்கு நன்றாகத் தெரியும். ஆனால், ஏன் பணம் தரவில்லை என்பது தெரியவில்லை. ஒருவேளை, உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வாடிக்கையாளர் காலதாமதம் செய்திருக்கலாம். குறிப்பிட்ட நாள்களுக்குள் உங்களுடைய ஆவணங்களைச் சரியாகச் சமர்ப்பித்த பின்னும், உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தரவில்லை எனில், நீங்கள் இருக்கும் மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்மீது புகார் கொடுக்கலாம். உங்களுடைய பணம் ஏற்கெனவே தரப்பட்டுவிட்டதால், பெரிய பிரச்னை எதுவும் இல்லை. மாறாக, அந்த நிறுவனத்தின் மீதான குறைகளைத் தெரியப்படுத்தினால், எதிர்காலத்தில் எந்தத் தவறுகளும் நிகழாமல் தடுக்க வாய்ப்புண்டு.’’
என் உறவினர் ஒருவர், ஐந்து வருடங்களாகத் துபாயில் வசித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்து போவார். அவர் இந்தியாவில் என்.ஆர்.இ மற்றும் என்.ஆர்.ஓ கணக்கு வைத்துள்ளார். இந்தக் கணக்குகளில் உள்ள பணத்துக்கு அவர் வருமான வரி கட்ட வேண்டுமா?

தெளலத் பேகம், தஞ்சாவூர்
-ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோவை
“வருமான வரிச் சட்டத்தின்படி, என்.ஆர்.ஐ என்ற பிரிவின் கீழ், ஒருவர் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்துக்கு இந்தியாவில் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால், ஒருவர் என்.ஆர்.ஐ-ஆக இருந்தாலும்கூட, இந்தியாவில் சம்பாதித்த பணத்துக்கு இந்தியாவில் வரி கட்டித்தான் ஆகவேண்டும். அவர் என்.ஆர்.இ மற்றும் என்.ஆர்.ஓ கணக்கு வைத்துள்ளதாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். என்.ஆர்.இ என்பது, வெளிநாட்டு கரன்சியை நம் வங்கியில் வைத்திருப்பது. இதற்கான வட்டிக்கு வரி ஏதும் கட்டத் தேவையில்லை. ஆனால், என்.ஆர்.ஓ கணக்கு என்பது, இந்தியப் பணத்தை என்.ஆர்.ஐ வைத்திருப்பது. இதில் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டியது அவசியம்.”
ஓராண்டுக்கு முன்பு, ராம்கோ சிஸ்டம் நிறுவனத்தின் பங்கை ரூ.790-க்கு வாங்கினேன். லூபின் நிறுவனத்தின் பங்கை ரூ.1,500-க்கு வாங்கினேன். இந்தப் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கலாமா அல்லது விற்றுவிட்டு வேறு நல்ல பங்குகளை வாங்கலாமா?

செல்வம், கோவை
- ரெஜி தாமஸ், முதலீட்டு ஆலோசகர்
``நீங்கள் வைத்திருக்கும் இரண்டு பங்குகளின் வர்த்தகமும் டெக்னிக்கல் அடிப்படையில் பார்த்தால் பலவீனமாகவே உள்ளன. எனவே, இந்த இரண்டு பங்குகளையும் விற்பதே நல்லது.’’
``எனக்கு 2016-17-ம் நிதியாண்டில் வருமானம் எதுவும் இல்லை (தனியார் வேலையிலிருந்து விலகிவிட்டதால்). ஆனால், பங்கு வர்த்தகத்தில் ரூ.7,954 மற்றும் கமாடிட்டி வர்த்தகத்தில் ரூ.11,704 லாபமாகக் கிடைத்துள்ளது. இந்தத் தொகைக்கு நான் குறுகிய கால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டுமா, கட்ட வேண்டுமெனில் எப்போது கட்ட வேண்டும்? மேலும், நான் வருமான வரிக் கணக்கை எந்தப் படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்?”

சதாசிவம், கோவை
- கே.ஆர்.சத்தியநாரயணன், ஆடிட்டர்
``உங்களுக்குக் குறுகிய கால மூலதன ஆதாயம் மூலமே வருமானம் வந்துள்ளது. இது உங்களின் அடிப்படை வருமான வரி வரம்பை மீறவில்லை. ஆகையால், நீங்கள் வருமான வரி கணக்குப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. வரி செலுத்த வேண்டிய கட்டாயமும் இல்லை.”
தொகுப்பு: சோ.கார்த்திகேயன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.