நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள்... - சொல்கிறார் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் சி.ஐ.ஓ ஆனந்த் ராதாகிருஷ்ணன்!

வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள்... - சொல்கிறார் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் சி.ஐ.ஓ ஆனந்த் ராதாகிருஷ்ணன்!
பிரீமியம் ஸ்டோரி
News
வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள்... - சொல்கிறார் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் சி.ஐ.ஓ ஆனந்த் ராதாகிருஷ்ணன்!

சி.சரவணன்

ந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் எட்டாவது இடத்தில் இருக்கிறது ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன். இந்த நிறுவனம் ரூ.84,723 கோடியை நிர்வகித்து வருகிறது. இதன் ஈக்விட்டி முதன்மை முதலீட்டு அதிகாரியாக (சிஐஓ) இருக்கிறார் ஆனந்த் ராதாகிருஷ்ணன். நாணயம் விகடன் இதழுக்காக அவரைப் பேட்டி கண்டோம். நாம் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதிலைத் தெளிவாகச் சொன்னார் அவர். இனி அவர் அளித்த பேட்டி...

வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள்... - சொல்கிறார் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் சி.ஐ.ஓ ஆனந்த் ராதாகிருஷ்ணன்!

பண மதிப்பு நீக்கத்தால் மியூச்சுவல் ஃபண்ட துறைக்கு அதிக முதலீடு வந்திருப்பதாகச் சொல்கிறார்களே, உண்மையா?

‘‘பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பில் 82.5% தொகை திரும்ப வங்கிக்கு வந்திருக்கிறது. பங்குச் சந்தையின் செயல்பாடு நன்றாக இருந்ததால், பண மதிப்பு நீக்கத்துக்கு முன்பே பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு கடன் மற்றும் இன்கம் ஃபண்டுகளில் முதலீடு அதிகரித்தது. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்குப் பதிலாகக் கடன் மற்றும் இன்கம் ஃபண்டுகள் சிறந்ததாகப் பார்க்கப்படுவது அதிகரித்து வருகிறது. காரணம், எஃப்.டி வட்டி தொடர்ந்து குறைந்து வருகிறது. 

கடந்த இரு வருடங்களாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுத் தொகை 75 சதவிகிதமும், முதலீட்டாளர்களின்  எண்ணிக்கை 25 சதவிகிதமும் அதிகரித்துள்ளன. இந்த 25 சதவிகிதத்தில் 10% பேர் புது முதலீட்டாளர்கள். இவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் இதுவரைக்கும் முதலீடு செய்யாதவர்கள். இது ஓர் ஆரம்பம்தான். மியூச்சுவல் ஃபண்ட் துறை இனிவரும் காலத்தில் இன்னும் நிறைய வளர்ச்சி காணும்.’’ 

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மியூச்சுவல் ஃபண்ட் துறைக்குச் சாதகமா, பாதகமா?

‘‘தற்போது மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்களின் வருமானத்தின் மீது 15% சேவை வரி உள்ளது. இது 18 சதவிகிதமாக அதிகரிக்கும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை.

ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வருவதால், அமைப்பு ரீதியாக இல்லாத நிறுவனங்கள் இனி வரி கட்ட வேண்டிய நிலை ஏற்படும். இதனால்  அவர்களின் லாபம் குறையும். அதே நேரத்தில், அமைப்பு ரீதியாக இயங்கும் நிறுவனங்கள் ஏற்கெனவே வரி கட்டி வருவதால், அவர்களுக்குப் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. எனவே, அவர்களுக்குப் போட்டித்தன்மை குறையும். அதாவது, அமைப்பு ரீதியான, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் லாபம் மற்றும் பலம் அதிகரிக்கும். இதனால் பங்கின் விலை அதிகரித்து, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரிக்கும். மேலும், இனி வரி ஏய்ப்பு செய்வது சாத்தியம் இல்லை என்பதால், அரசின் வருமானம் அதிகரிக்கும்.’’ 

கடந்த 2012-13-ல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எஸ்ஐபி முறையிலான முதலீடு 16 சதவிகிதமாக இருந்தது. இது 2016-17-ம் ஆண்டில் 27 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி எதைக் காட்டுகிறது?

‘‘கடந்த 3-4 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட்  முதலீட்டில் உள்ள ரிஸ்க், வசதிகள், நீண்ட காலத்தில் கிடைக்கும் நல்ல லாபம் போன்ற விஷயங்களை முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வுக் கூட்டங்கள் மூலம் விளக்கிச் சொல்வது அதிகரித்துள்ளது. மேலும், மியூச்சுவல் ஃபண்டில் மொத்தமாக முதலீடு செய்வதைக் காட்டிலும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) முறையில் முதலீடு செய்வது பல வகையில் லாபகரமாக இருக்கும் என இந்தக் கூட்டங்களில் தொடர்ந்து எடுத்துச் சொல்லப்பட்டதால், முதலீட்டாளர்கள் மனதில் அது நன்கு பதிந்திருக்கிறது.

எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால் சராசரியாக அதிக யூனிட்கள் கிடைக்கும். வங்கி ஆர்.டி மாதிரிதான் எஸ்ஐபி என்பதை அதிகம் பேர் உணர்ந்திருப்பதால், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடு அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களில் எஸ்ஐபி முதலீடு இன்னும் அதிகரிக்கும்.’’ 

அடுத்த 3-4 ஆண்டுகளில் இந்தியாவில் எந்தெந்தத் துறைகள் அதிக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது?

‘‘பணவீக்க விகிதம் குறைவு, வட்டி குறைவு போன்றவை நுகர்வோர் துறைக்குச் சாதகமான அம்சங்களாக இருக்கின்றன. இதனால் வாகனம், நுகர்வோர் பொருள்கள், சுற்றுலா, வீட்டு வசதி, வங்கி மற்றும் நிதிச் சேவை (மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ்), சிறு வங்கிகள் போன்ற துறை அதிக வளர்ச்சி காணக்கூடும்.’’

வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள்... - சொல்கிறார் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் சி.ஐ.ஓ ஆனந்த் ராதாகிருஷ்ணன்!

நீங்கள் நிர்வகிக்கும் ஈக்விட்டி ஃபண்டுகளுக்கான பங்குகளை எந்தெந்த அளவுகோல்களின்படித் தேர்வு செய்கிறீர்கள்?

‘‘முக்கியமாக மூன்று விஷயங்களின்  அடிப்படையில் முதலீட்டுக்கேற்றப் பங்குகளை நாங்கள் தேர்வு செய்கிறோம். முதலில், ஒரு நிறுவனத்தின் தொழில் தரத்தினை முக்கியமாகக் கவனிப்போம். நன்கு லாபம் கிடைக்க உள்ள வாய்ப்பு, சிறுபான்மை முதலீட்டாளர்களிடம் நடந்துகொள்ளும் முறை, வெளிப்படையான தன்மை, நிறுவனத்தின் நிர்வாகத் திறமை போன்றவை தொழிலின் தரத்தில் இடம்பெறும்.

இரண்டாவதாக, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைக் கவனிப்போம். இன்னும் 10 ஆண்டுகளில் அந்த நிறுவனம் எந்த அளவுக்கு வளர்ச்சி காணும் என்பதைக் கட்டாயமாகக் கவனிப்போம். நன்கு வளர்ச்சி அடையும் துறையைத் தேர்வு செய்து, அதில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நிறுவனத்தைத் தேர்வு செய்வோம்.

மூன்றாவதாக, இந்த வளர்ச்சி நிலையானதாக இருக்குமா என்பதை அலசி ஆராய்வோம். ஒரு  நிறுவனத்தின் லாபம் நிலையான வளர்ச்சி கண்டால், அதன் பங்கின் விலையும் அதிகரிக்கும் என்கிற அடிப்படையில் நாங்கள் பங்குகளைத் தேர்வு செய்வோம்.’’

கடந்த 2015-16ம் ஆண்டைவிட 2016-17-ம் ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மீதான புகார்கள் அதிகரித்து உள்ளன. இதற்கு என்ன காரணம்?


‘‘இதற்கு முக்கியக் காரணம், முதலீட்டாளர்களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்திருப்பதுதான். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கும்  ஃபோலியோக்களின் எண்ணிக்கை 5.72 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2016-17-ம் நிதியாண்டில் மட்டும் புதிதாக 77 லட்சம் ஃபோலியோக்கள் உருவாகியுள்ளன. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அவற்றின் தொழில்நுட்ப வசதிகளை அதிகரிப்பது மூலமும் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு அடைவது மூலமும் இந்தப் புகார்களைத் தவிர்க்க மற்றும் குறைக்க முடியும்.’’

வங்கி எஃப்டி வட்டி மிகவும் குறைந்து வருகிறது. இதனைப் பெரிதும் நம்பி இருக்கும் ரிஸ்க் எடுக்காதவர்கள், மூத்த குடிமக்களுக்கு மாற்று முதலீட்டாக நீங்கள் எதைச் சொல்வீர்கள்?

‘‘ஃபிக்ஸட் இன்கம், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் இவர்கள் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகள் மூலம் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டை விட 1 அல்லது 2% கூடுதல் வருமானம் கிடைக்கும். குறைந்த அளவு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் (கடன் மற்றும் பங்குச் சந்தை முதலீடு கலந்தது) முதலீடு செய்யலாம். இதில் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு 70-80 சதவிகிதமாகவும், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு 20-30 சதவிகிதமாகவும் இருக்கும்.’’

வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகள்... - சொல்கிறார் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் சி.ஐ.ஓ ஆனந்த் ராதாகிருஷ்ணன்!

பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டில் மாதம் ஒரு நாள் (5 அல்லது 10 அல்லது 15-ம் தேதி) முதலீடு செய்வது போல் இருக்கும். இதற்குப் பதில் வாரம் ஒரு நாள் எஸ்.ஐ.பி  முறையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதா? அதாவது, 4,000 ரூபாயை மாதத்தில் ஒரு தேதியில் மொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதில் வாரத்துக்கு ரூ.1,000 வீதம் பிரித்து முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்குமா? 

‘‘ரூ.4,000 முதலீடு செய்துவிட்டு, அடுத்த நாளே ஃபண்டின் என்ஏவி இறங்கி விட்டால், மனது வருத்தப்படும். வாரம் ரூ.1,000 வீதம் முதலீடு செய்யும்போது மனநிலை சமநிலையில் இருக்கும்.

சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கும்பட்சத்தில், வார எஸ்ஐபி லாபகரமாக இருக்கக்கூடும்.   அதாவது, ஒரு மாதத்தில் நான்கு வித என்ஏவி மதிப்பில் முதலீடு செய்யும்போது ரிஸ்க் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த வார எஸ்ஐபி முறை, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்குத்தான் ஏற்றது. மாதமோ, வாரமோ ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க, எஸ்ஐபி முதலீடு உதவும். மேலும், இது முதலீட்டில் ஓர் ஒழுங்குமுறையைக் கொண்டு வரும்.’’ 

சந்தை இப்போது புதிய உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

‘‘இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி இன்னும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் சந்தை பல புதிய உச்சங்களைத் தொடும்.

கடந்த 2-3 ஆண்டுகளாக நிறுவனங்களின் லாப வளர்ச்சி 5 - 8 சதவிகிதமாக இருந்தது. இது அடுத்த 2-3 ஆண்டுகளில் 15-18 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதே சமயம், முதலீட்டாளர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இவற்றின் மதிப்பீடுகள் மிகவும் அதிகமாக, அதாவது, அவற்றின் பி/இ விகிதங்கள் அதிகமாக உள்ளன.

லார்ஜ் கேப் பங்குகளைவிட மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் விலை 25-40% அதிகரித்துள்ளது. இதனால், மிட் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளைத் தவிர்த்து, லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். 
 
அடுத்த 3-6 மாதங்களில் இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற, இறக்கங்களில் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் எஸ்ஐபி முறையில் சிறிது சிறிதாக முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். இந்த முதலீட்டைக் குறைந்தபட்சம் 3-5 ஆண்டுகளுக்கு வைத்திருந்தால் லாபமாக இருக்கும்.’’
இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாக இருக்கும் போது, நவீன முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய இன்னும் தயக்கம் ஏன்?

படங்கள்: கே.ராஜசேகரன்