
ஜெ.சரவணன்
பிரதமர் மோடி அரசின் முக்கியமான சீர்திருத்தங்களில் இந்தத் திவால் சட்டமும் ஒன்று. ஏறக்குறைய ரூ.8 லட்சம் கோடி வாராக் கடன் சுமையால் வங்கிகள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. முக்கியமாக, பொதுத்துறை வங்கிகளுக்கு வாராக் கடன் பிரச்னையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிகளின் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து வங்கிகளை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஒன்றுதான் இந்தத் திவால் சட்டம்.
அதிக அளவில் கடன் வாங்கித் திரும்பச் செலுத்த முடியாமல் திணறும் நிறுவனங்களை இந்தத் திவால் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து, அவற்றின் கடனைத் தீர்க்க என்ன வழி என்று திட்டமிட்டுச் செயல்படுத்தப்படும். மேலும், நிறுவனங்களின் பொருளாதார நிலையைச் சீர்செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாறாக, சீர்செய்ய வாய்ப்பே இல்லையெனில், அந்த நிறுவனத்தின் சொத்துகள் விற்கப்பட்டுக் கடன் அடைக்கப்படும். இதுதான் திவால் சட்டத்தின் அம்சம்.

இந்தத் திவால் சட்ட நடவடிக்கை களைச் செயல்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி ஒரு குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழு கடன் நிலுவை நிறுவனங் களின் நிதி நிலையைச் சீர்படுத்தும் நடவடிக்கை களையும், கடன்களை வசூல் செய்வதற் கான வழிமுறைகளையும் ஆராய்ந்து செயல்படுத்தும்.
முதல்கட்டமாக, இந்தத் திவால் சட்டத்தின்கீழ், கடன் வாங்கி, ரூ.5,000 கோடிக்கும் மேல் நிலுவையில் உள்ள நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. வாராக் கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களில் 60 சதவிகிதத்துக்கும் மேலானவை ரூ.5,000 கோடிக்கும் மேல் கடன் நிலுவை உள்ள நிறுவனங்களாகவே இருக்கின்றன. இவற்றில் தற்போது 12 நிறுவனங்களைத் திவால் சட்ட நடவடிக்கையின் கீழ் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பூஷன் ஸ்டீல், லான்கோ இன்ஃப்ரா டெக், எஸ்ஸார் ஸ்டீல், பூஷன் பவர், அலோக் இண்டஸ்ட்ரீஸ், ஆம்டெக் ஆட்டோ, மொன்னத் இஸ்பத் அண்ட் எனர்ஜி, எலெக்ட்ரோ ஸ்டீல், எரா இன்ஃப்ரா இன்ஜினீயரிங், ஜெய்பீ இன்ஃப்ராடெக், ஏபிஜி ஷிப்யார்ட் மற்றும் ஜோதி ஸ்ட்ரக்சர்ஸ்.
வங்கிகளுக்கு வரவேண்டிய ரூ.7 லட்சம் கோடியில் இந்த 12 நிறுவனங்கள் மட்டுமே ரூ.2 லட்சம் கோடிக்கும் மேலான கடன்களைத் திரும்பத் தராமல் இருக்கின்றன. இந்த 12 நிறுவனங்களும் பெரும்பாலும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் பவர் செக்டார் சேர்ந்தவையாக இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். கடந்த சில வருடங்களாக இந்த இரண்டு துறைகளுமே பெரும் அழுத்தத்தில் இருந்து வந்திருக்கின்றன.
இந்த 12 நிறுவனங்களில் 11 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை. இவற்றில் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் ஏற்கெனவே டீலிஸ்ட் செய்யப்பட்டு விட்டது. எரா இன்ஃப்ரா இன்ஜினீயரிங் வர்த்தகத்திலிருந்து தடை செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, இந்த நிறுவனங்கள் இந்தத் திவால் சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்தப் பங்குகளின் விலை தொடர்ந்து இறங்கி வருகின்றன.

இந்த 12 நிறுவனங்களில், திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம் லான்கோ இன்ஃப்ரா டெக். உள்கட்டமைப்புத் துறையான இந்த நிறுவனம், ரூ.43 ஆயிரம் கோடிக்கும் மேலான கடனை நிலுவையில் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஏறக்குறைய ரூ.5,000 கோடிதான். இதன் மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.45,000 கோடி. இந்த நிறுவனம் கடந்த ஆறு வருடங்களாகத் தொடர்ந்து நஷ்டமடைந்து வருகிறது. திவால் பட்டியலில் இந்த நிறுவனம் உள்ள செய்தி வெளியான மூன்று நாள்களில் மட்டும், இதன் பங்கு விலை 16% குறைந்துள்ளது.
திவால் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் பூஷன் ஸ்டீல் நிறுவனத்துக்கு மொத்தமாக ரூ.42,000 கோடி கடன் உள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.4,658 கோடி. இதன் சொத்துக்களின் மதிப்பு ரூ.48,000 கோடி. திவால் சட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இந்தப் பங்கின் விலை 10% குறைந்தது.
பிற நிறுவனங்களும் திவால் நடவடிக்கைக்குள் கொண்டுவரப்படவுள்ள தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவற்றின் முகமதிப்பு அருகில் அல்லது அதற்கும் கீழே விலை இறங்கி வர்த்தகமாகி வருகின்றன (12 நிறுவனங்களின் நிதி நிலை, கடன் அளவு மற்றும் பங்கு விலை ஆகியவை அட்டவணை யில் தரப்பட்டுள்ளன).
இந்த நிலையில், திவால் சட்ட நடவடிக்கையால் இந்த 12 நிறுவனங்களின் கடன் பிரச்னை தீருமா, இவற்றின் எதிர்காலம் எப்படியிருக்கும் எனப் பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
“இந்த 12 நிறுவனங்களும் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதால், திவால் சட்டத்தின் கீழ் கொண்டு செல்லப்படு கின்றன. திவால் சட்டத்தில் தரப்பட்டுள்ள 180 - 270 நாள்களுக்குள் இந்த நிறுவனங்களைச் சீரமைக்க முடியுமா என்பது தெரியாது. அப்படி சீரமைக்க முடியாதபட்சத்தில் திவால் சட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்களின் கடன்களை வசூலிக்க, அவற்றின் சொத்துகளை விற்க வேண்டிவரும். இந்த நிறுவனங்களின் சொத்துகளை மொத்தமாகவோ, தனித்தனியாகப் பிரித்தோ எப்படி வேண்டுமானாலும் விற்கலாம்.

சொத்துகளை விற்றுக் கடன்கள் தீர்த்தபின், பங்குதாரர்களுக்கு ஏதாவது மிச்சம் கிடைக்குமா, கிடைக்காமலே போகுமா என்பதுகூட தெரியாது. ஏனெனில் இவற்றில் பல நிறுவனங்கள் தாங்கள் வாங்கியிருக்கும் கடனைவிடக் குறைவான மதிப்பில்தான் இருக்கின்றன. அப்படியிருக்க பங்குதாரர்களுக்கு எதுவுமே கிடைக்காது என்றே சொல்லலாம். சில நிறுவனங்கள் நல்ல நிறுவனங்களாக இருக்கும்பட்சத்தில், அவற்றுக்கான மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக விலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது கடன் தொகை போக மீதமுள்ள பணம் அதன் பங்குதாரர்களுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு.
இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் ஆறு மாதங்களில் இருந்து இரண்டு வருடங்கள் வரை ஆகும் என்பதால், இப்போது அந்த விவரங்கள் பற்றி எதுவும் நம்மால் சொல்ல முடியாது. எனவே, இந்த நிறுவனங்களின் எதிர்காலம் குறித்துச் சந்தேகமான நிலைதான் இருக்கிறது. இந்த நிறுவனங்களைப் பெரும்பாலும் தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் இவை அதிக ரிஸ்க் உடையவை. தொடர்ந்து இந்த நிறுவனங்களைக் கண்காணிக்க முடிந்தவர்கள் வேண்டுமானால் இவற்றில் முதலீடு செய்யலாம். வாங்கிப்போட்டு விட்டு நிம்மதியாக இருக்க நினைப்பவர்கள், இந்தப் பங்குகளைத் தொடர்ந்து கண்காணிக்க முடியாதவர்கள், சிறிய அளவில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனங்கள் பொருத்தமானவையே அல்ல. எனவே, கட்டாயமாகத் தவிர்த்துவிடுவது நல்லது.
மேலும், இனிவரும் காலங்களில் கடன் நிறைய இருக்கும் நிறுவனங்கள் மீது உஷாராக இருக்க வேண்டும். நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனுடையவையாக இருக்கின்றனவா, அவற்றின் பிசினஸ் எப்படி இருக்கிறது என்பவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்தாலே அவை, திவால் பட்டியலுக்குள் வருமா, வராதா என்று சொல்லிவிடலாம்.
இப்போது திவால் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ள அனைத்து நிறுவனங்கள் குறித்தும் முன்பே பங்குச் சந்தை நிபுணர்கள் பல சமயங்களில் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இவற்றைப் பரிந்துரைப்பதையும் தவிர்த்து வந்திருக்கிறார்கள்.
ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த 12 நிறுவனங்களைக் காட்டிலும் அதிகக் கடன் வாங்கியிருக்கின்றன. ஆனால், அது மாதிரியான நிறுவனங்கள் ஏன் திவால் பட்டியலில் வரவில்லை என்று கேட்கலாம். ஒரு நிறுவனத்துக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்பதல்ல பிரச்னை. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் அந்த நிறுவனத்துக்கு இருக்கிறதா, நிறுவனத்தின் சொத்துகள் வருமானம் ஈட்டக்கூடியவையாக இருக்கின்றனவா என்பதுதான் பிரச்னை’’ என்று பேசி முடித்தார் அவர்.
இனிமேலாவது பங்குகளில் முதலீடு செய்பவர்கள், நிறுவனங்களுக்கு இருக்கும் கடனில் எப்போதும் ஒரு கண் வையுங்கள்!