
செல்லமுத்து குப்புசாமி
நீங்கள் ஏதேனும் வங்கியில் பாதுகாப்புப் பெட்டகச் சேவையைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் என்ன மாதிரியான பொருட்களை அதில் வைப்பீர்கள்? பொதுவாக விலையுயர்ந்த ஆபரணங்கள், பொற்காசுகள், நமது சொத்துகள் தொடர்பான பத்திரங்கள் முதலியவற்றை அந்த லாக்கரில் பூட்டி வைப்போம். யாருக்கும் தெரியாத ரகசியங்கள், பழைய காதலியுடனான புகைப்படங்கள் என்பவையெல்லாம் வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் சாத்தியங்கள்.
முக்கியமான ஆவணங்களை முறையாகப் பாதுகாத்து வைப்பது ஒரு கலை. நம் தாத்தா தாம்பரத்தில் வாங்கிய நிலப் பத்திரம், அப்பா அரக்கோணத்தில் வாங்கிய வீட்டு மனையின் பத்திரம், இருபது வருடம் கழித்துப் பணம் திரும்ப வரும் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பத்திரம் என எல்லாமுமே நம்மிடம் பத்திரமாக இருக்க வேண்டும். திடீரென ஒரு நாள் கேட்டால் நம்மால் தேடி எடுக்க முடியுமா? அப்படி எடுக்க முடியாதவர்கள் பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கலாம்.
நிலங்களின் உரிமைப் பத்திரங்கள் இப்படியென்றால் கம்பெனிகளின் உரிமைப் பத்திரங்களை எப்படி பாதுகாக்க வேண்டும்? பங்குப் பத்திரங்களைப் பற்றித்தான் பேசுகிறேன். ஒரு கம்பெனியில் நாம் ஒரேயொரு பங்குகூட வைத்திருக்கலாம் அல்லது ஆயிரக்கணக்கில் பங்குகளை வைத்திருக்கலாம். முன்பொரு காலத்தில் அவையெல்லாம் இன்ஷூரன்ஸ் பாலிசி போல இருக்கும். இப்போது டிஜிட்டல் ஆக்கி விட்டார்கள். இப்போது என்றால் அதற்கான ஆயத்தங்கள் தொடங்கி இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. கடந்த பத்தாண்டுகளில் பத்திர வடிவில் ஷேர்களைப் பார்த்திருக்கவே இயலாது என்கிற நிலைதான்.

டிஜிட்டல் வடிவிலான ஷேர்களைச் சேமித்து வைக்க டீமேட் அக்கவுன்ட் இருக்க வேண்டும். அது ஒரு டிஜிட்டல் லாக்கர். நாம் அதிலுள்ள ஷேர்களைப் பார்க்க முடியும். அல்லது நாம் அனுமதியளிக்கிற ஆள் பார்க்கலாம். ஆனால், வெறும் டீமேட் அக்கவுன்ட்டை மட்டும் வைத்துக்கொண்டு பங்குச் சந்தையில் வியாபாரம் செய்ய இயலாது. அந்த டீமேட் கணக்கில் ஷேர்களை வாங்கிச் சேகரிக்க பங்குத் தரகர் (ஷேர் புரோக்கர்) ஒருவரோடு டிரேடிங் அக்கவுன்ட் ஒன்று துவங்க வேண்டும்.
ஷேர் மார்க்கெட்டுக்குள் நாம் நுழைய முடியாது. ஷேர் புரோக்கர்கள் மட்டுமே உள்ளே போக முடியும். ஒவ்வொரு பங்குச் சந்தையிலும் ஆயிரக்கணக்கான புரோக்கர்கள் இருப்பார்கள்.
நாம் வைத்திருக்கும் பங்குகளை விற்கச் சொன்னால் நம் சார்பில் புரோக்கர் விற்பார். நாம் சொல்லும் விலைக்கு வாங்க ஆளிருந்தால் விற்கும். இல்லையென்றால், விற்காமல் திரும்பி வந்து விடும். ஏதோ ஒரு விலைக்கு விற்றுவிடுங்கள் என்றால் கேட்கிற விலைக்குத் தள்ளி விடுவார். இன்னிக்கு இவ்வளவுக்குத்தான் விற்றது என்பார்.
நாம் ஷேர்களை வாங்க விரும்பினாலும் அப்படித்தான். நாம் குறிப்பிடும் நிறுவனம், குறிப்பிடும் விலை, எல்லாமே நம் சாய்ஸ்… ஆனால், “போய் ஆயிரம் ரூபாய்க்கு அசோக் லேலாண்ட் ஷேர் வாங்கிட்டு வாங்க” என்றால் அவர் உடனே ஓடிப் போய் வாங்கி வந்து விடுவாரா என்ன? அதற்குத்தான் அவரிடம் டிரேடிங் அக்கவுன்ட் துவங்குகிறோம்.
அவரிடம் ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். அதாவது, நாம் அவரிடம் வைத்திருக்கும் டிரேடிங் கணக்கில் நாம் செலுத்தி வைத்திருக்கும் தொகை ஆயிரம் ரூபாயாவது இருந்தால் மட்டுமே நம்மால் ஆயிரம் ரூபாய்க்கு அவரை ஷேர் வாங்குமாறு கேட்க முடியும். ஆயிரம் என்பது ஓர் உதாரணத்திற்குச் சொன்னது. நாம் எவ்வளவு தொகைக்கு வாங்க விரும்புகிறோமோ அவ்வளவு தொகையை ஏற்கெனவே நாம் அவரிடம் கொடுத்து நம் டிரேடிங் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.

இப்போதெல்லாம் பங்குகள் டீமேட் வடிவில் உள்ளதால், ஷேர்களை வாங்கி டீமேட் அக்கவுன்டில் சேர்த்துவிடுவார். விற்கும்போது டீமேட் அக்கவுன்டில் இருந்து எடுத்து விற்று விடுவார். நமது டீமேட் கணக்கில் இருந்து நம் சார்பில் பங்குகளை எடுத்து விற்பதற்கு நாம் நம் தரகருக்கு முழு அனுமதி அளித்திருப்போம்.
பங்குத் தரகர் எனும் ஷேர் புரோக்கர், பங்குச் சந்தையின் உள்ளே சென்று இந்த நிறுவனத்தின் ஷேரை இந்த விலைக்கு விற்க விரும்புகிறோம், யார் வாங்குகிறீர்கள் என்று கூச்சல் போட்டு விற்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போது கம்ப்யூட்டர் திரையில் கண்டுவிடலாம்.
ஷேர் மார்க்கெட் என்பது மிகப் பெரிய சாஃப்ட்வேர் சர்வர். மும்பை பங்குச் சந்தை ஒரு சர்வர். அதேபோலத்தான் தேசிய பங்குச் சந்தையும். ஒவ்வொரு தரகர் வாயிலாக நாம் விற்க விரும்பும் விலை மற்றவர்களுக்குத் (மற்ற தரகர்கள் மூலமாக விற்று வாங்கும் ஆட்களுக்கு) தெரிய வரும்.
நாம் தரகரிடம் விவரமாக போனில் சொல்லி அனுப்புவதெல்லாம் இப்போது கிடையாது. அந்த தரகரின் வெப்சைட்டில் நாம் செய்ய விரும்பும் முதலீடு / வியாபாரத்தை உள்ளீடு செய்யலாம். கம்ப்யூட்டர் மவுஸின் ஒரு க்ளிக் மூலம் தரகர் வாயிலாக, பங்குச் சந்தையின் சர்வரில் வேறு ஏதாவது தரகர் மூலமாக இன்னொருவர், உலகின் ஏதாவதொரு மூலையிலிருந்து போடும் ஆர்டரை நாம் ஏற்றுக்கொண்டு பரிவர்த்தனையை நடத்த முடியும்.
நாம் நினைப்பதுபோல பங்குத் தரகர் ஒரு தனியாளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஒரு நிறுவனமாக இருக்கலாம். சின்ன பங்குச் சந்தைகளும், பங்குத் தரகர்களும் காணாமல் போய் விட்டனர். பெரிய சைஸ் புரோக்கர்கள் மட்டுமே நிலைக்க முடிகிறது.
வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அளிக்கும் சிம்ப்ளிஃபிகேஷன் அதற்கு முக்கியமான காரணம். டீமேட் அக்கவுன்ட், டிரேடிங் அக்கவுன்ட் எல்லாம் இப்போது எளிமையாகி விட்டன. த்ரீ இன் ஒன் கணக்குகள் இப்போது கிடைக்கின்றன. வங்கியின் சேமிப்புக் கணக்கு, டீமேட் கணக்கு, டிரேடிங் கணக்கு ஆகிய மூன்றுமே ஒரே நிறுவனம் வைத்திருந்தால் ஒரே லாகினில் எல்லாவற்றையும் செய்துவிடலாம். ஒரு க்ளிக் செய்தால் வங்கிக் கணக்கிலிருந்து டிரேடிங் கணக்கிற்குப் பணம் சென்று விடும். ஷேர் வாங்கியவுடன் டிரேடிங் கணக்கில் பணம் குறைந்து விடும். வாங்கிய ஷேர் டீமேட் கணக்கில் சேர்ந்து விடும். (விற்கும்போது இதற்கு நேரெதிர்)
ஷேர் புரோக்கர் நம் சார்பில் பங்குச் சந்தையில் நிகழ்த்தும் பரிவர்த்தனைக்கு கமிஷன் எடுத்துக் கொள்வார். ஷேர்களை விற்றாலும், வாங்கினாலும் அவர்களே கமிஷன் எடுத்துக் கொள்வார்கள். டிரேடிங் அக்கவுன்டில் உள்ள பணத்திலிருந்து கமிஷன் தானாகவே போய்விடும். அதனால்தான் நல்ல முதலீட்டாளர்கள், “அடிக்கடி விற்று வாங்கினால் முதலீட்டாளர்களாகிய நாம் பணக்காரர் ஆக மாட்டோம். நமது ஷேர் புரோக்கர் வேண்டுமானால் பணக்காரர் ஆகலாம்” என்கிறார்கள்.
(லாபம் சம்பாதிப்போம்)