
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
நான் சந்திக்கும் பல இளைஞர்கள் இன்றைய வேலைச் சூழலில் 45 வயதிலேயே ஓய்வு பெற விரும்புகிறார்கள். இன்னும் சிலர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா என்று கேட்கிறார்கள். பெண்கள் ஓரிரு குழந்தைகளுக்குத் தாயானவுடன், வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறார்கள். வெகு சிலரே, தங்களின் முழுப் பணிக்காலத்தையும் முடித்து ஓய்வு பெற விரும்புகிறார்கள்.
இன்றையச் சூழலில், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குச் சம்பளம் அதிகமாகக் கொடுப்பது என்பது உண்மைதான். அப்படி அதிகம் சம்பளம் கொடுக்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து மிக அதிகமான உழைப்பையும் எதிர்பார்க்கிறார்கள். ‘‘இந்த ‘ஜாப் பிரஷரை’ எத்தனை நாள்களுக்குத்தான் எங்களால் தாங்கிக்கொள்ள முடியும்?’’ என்று அவர்கள் கேட்பது நியாயமான கேள்விதான்.

தவிர, 45 வயதில் ஓய்வு பெற்றுவிட்டு, அவர்கள் வீட்டில் சும்மா இருக்க விரும்பவில்லை. ஓய்வு பெற்றபிறகு, தங்களுக்குப் பிடித்த மாதிரி ஏதாவது ஒரு வேலையைச் செய்ய விரும்புகிறார்கள். சிலர், விவசாயம் செய்ய விரும்புகிறார்கள்; சிலர், தொழில் செய்ய விரும்பு கிறார்கள்.
சீக்கிரமாக ஓய்வு பெற விரும்புவதில் தவறேதுமில்லை. அதற்குள் போதிய அளவு பணத்தைச் சேர்த்து வைத்திருக் கிறோமா என்று பார்க்க வேண்டும். ஒருவர் ஐம்பது வயதில் ஓய்வு பெற விரும்புகிறார் எனில், 25 வயதுக்குள் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். ஆனால், இளம் வயதிலேயே ஓய்வுக் காலத்துக்காகத் திட்டமிட்டுச் செயலாற்றுபவர்கள் எத்தனை பேர்?
22, 23 வயதில் வேலைக்குச் சேர்பவர்களுக்குப் பெரிய செலவுகள் இல்லை. ஆகவே, இந்த வயது முதல் ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்ய ஆரம்பித்தால், 45 - 50 வயதில் ஓய்வுக் காலத்துக் காகச் செய்யும் முதலீட்டை நிறுத்தி விடலாம். 58 அல்லது 60 வயதில் இருந்து பென்ஷன் தொகையைப் போல, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை எடுத்துக் கொள்ளலாம்.

ஓய்வுக் காலத்துக்காகத் திட்டமிடும்போது கவனிக்க வேண்டியவை...
இன்று பலருக்கும் உள்ள ரிஸ்க், அதிக நாள்கள் வாழும்போது செலவுகளை எப்படிச் சமாளிப்போம் என்பதுதான். நகரத்தில் வாழ்பவர்கள் பலர் 80 வயதுக்கு மேலும் வாழ்கிறார்கள். ‘நான் குறைந்த செலவுடன் என் ஓய்வுக் காலத்தைக் கழிப்பேன்’ என உறுதி எடுத்துக்கொள்பவர்கள் ஒரு பக்கம். ‘இன்று நான் வாழும் வாழ்க்கைத் தரத்தில் இம்மி அளவுகூட குறையாமல் நான் வாழ வேண்டும்’ என நினைப்பவர்கள் மறுபுறம்.
முதல் வகையில் இருப்பவர்களுக்குப் பணவீக்கம் என்பது ஒரு பொருட்டல்ல, ஏனென்றால், அவர்களுக்குச் செலவுகள் அதிகமில்லை. இரண்டாம் வகையினருக்கு, பணவீக்கம் ஒரு பெரிய விஷயமாகும். ஆகவே, இந்த வகையினருக்கு எவ்வளவு நாள்கள் வாழ்வோம் என்பதைத் தோராயமாகக் கணக்கிட வேண்டும். நம்மால் கணக்கிட முடியாதபட்சத்தில் நம் வாழ்நாளை 85 அல்லது 90 வயது என எடுத்துக்கொள்வது உசிதமாகும்.

பணவீக்கமும் ஓய்வுக் காலத் திட்டமிடலில் முக்கியப் பங்கு வகிக்கும். தற்போது பணவீக்கம் குறைவாக இருந்தாலும், இந்தியச் சூழ்நிலைக்கு ஆண்டுக்கு 6% என எடுத்துக்கொள்வது உசிதம். அதேபோல், உங்கள் ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ் எவ்வளவு வருமானத்தை ஈட்டித் தரும் என்பதும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதுவும் திட்டமிடலில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். நாம் எடுத்துக்கொள்ளும் பணவீக்கத்தைவிட 1% அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, 6% பணவீக்கம் என நாம் எடுத்துக்கொண்டால், ஓய்வுக் காலத்தில் நமக்குக் கிடைக்கப் போகும் வருமானத்தை 7% என எடுத்துக்கொள்ளலாம். பணவீக்கம் குறைந்தால், இந்த வருமானமும் குறைய வாய்ப்பு உண்டு. வேறு ஏதேனும் வகையில் பென்ஷன் பணம் உறுதியாகக் கிடைக்கும் எனில், அந்தத் தொகையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
மேற்கண்ட கணக்கின் (பணவீக்கம் 6%, ஓய்வு பெற்றபின் கார்ப்பஸில் இருந்து கிடைக்கும் வருமானம் 7%, வாழும் வருடம் 85 வயது வரை, முதலீட்டுக் காலமான 58 வயது வரை கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு 12%) அடிப்படையில், இங்கே வெவ்வேறு வயதினர் தங்களின் ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்ய வேண்டிய தொகையைத் தந்துள்ளோம்.

நாம் மேலே தந்துள்ள கணக்கு களின்படி, 85 வயது வரை உங்கள் கார்ப்பஸ் உங்களுக்குக் கை கொடுக்கும்.அதற்குமேல் வாழும்போது, ஒன்று இப்போதிருந்தே பணத்தை அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் அல்லது செலவுகளைச் சுருக்கிக்கொள்ள வேண்டும்.
இங்கே தந்துள்ள கணக்கின்படி, (அட்டவணை 6) 45 வயதுள்ள நபரின் இன்றைய செலவு ரூ.10,000 என்றால், அவரின் 58-வது வயதில் வருடத்துக்கு 6% பணவீக்கத்துடன், அது ரூ.21,330-ஆக இருக்கும். ஆக நமது கணக்கின்படி, அவரது 58 வயதில் அவருக்கு மாதம் ரூ.21,330 கிடைக்கும். அவரின் 60-ஆவது வயதில், 6% கூடுதலாக மாதம் ரூ.22,610 கிடைக்கும். இதுபோல் அவரின் 85-வது வயது வரைக்கும் ஒவ்வொரு வருடமும், சென்ற வருடத்தைவிட 6% கூடுதலான தொகை கிடைக்குமாறு கணக்கிட்டுள்ளோம்.
இந்திய மனநிலையின்படி, யாரும் வாழும் வயதைக் கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல் முதலீடு செய்வதில்லை. பெரும்பாலோரின் மனநிலை என்னவென்றால், எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வாழ்நாள் முழுவதும் வந்துகொண்டே இருக்க வேண்டும்; அசல் (முதலீடு செய்த தொகை) அப்படியே இருக்க வேண்டும். அது எந்த வகையிலும் குறைந்துவிடக் கூடாது என்பதே. அந்த மனநிலைக்கு ஏற்றாற்போல் கணக்கிட்டுத் தந்துள்ளோம்.

அட்டவணை 4-ல் தந்துள்ள கணக்கின்படி, 25 வயதுடையவர் இன்றைய தேதியில் மாதம் ரூ.10,000 செலவு செய்கிறார் என்றால், ஆண்டுக்கு 6% பணவீக்கத்தின் அடிப்படையில் அவரின் 58-வது வயதில் மாதம் ரூ.68,410 தேவைப்படும். அந்தத் தொகையைப் பெறுவதற்கு அவர் 58 வயதில் ரிட்டையர் ஆகும்போது ரூ.1,17,27,000 சேர்த்திருக்க வேண்டும். அந்தப் பணத்தைச் சேர்ப்பதற்கு, இப்போதிருந்தே அடுத்த 33 வருடங்களுக்கு மாதம் ரூ.2,855 அவர் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். (மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் ஆண்டுக்கு 12% வருமானம் தரும் என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 58 வயதில் ரிட்டையர் ஆகும்போது, அதுவரை சேர்த்த (கார்ப்பஸ்) தொகையான ரூ.1,17,27,000-த்தை மத்திய அரசாங்க பாண்டுகளில்/ ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பாண்டுகளில் அல்லது வங்கி டெபாசிட்டுகளில் அல்லது பிற பாதுகாப்பான முதலீடுகளில் ஆண்டுக்கு 7% வட்டிக்கு முதலீடு செய்வதாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.) 58-வது வயதிலிருந்து அவருக்கு மாதம் ரூ.68,410 கிடைக்கும். இந்தத் தொகை அவரின் வாழ்நாள் முழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அவருக்குப்பிறகு அவரின் வாரிசுகளுக்கு அந்த கார்ப்பஸ் தொகையான ரூ.1,17,27,000 கிடைக்கும்.
நமது இந்த கணக்குகளில் வருமான வரியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. வருமான வரியைக் கணக்கில் எடுத்துக்கொண்டோமே யானால், இன்னும் சற்று அதிகமாக ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். மேலும், நம் கணக்குக்குள்ள ரிஸ்க், 7 சதவிகிதத்தைவிட ஆண்டு வருமானம் ஓய்வுக் காலத்தில் குறைத்துக் கிடைப்பது.
பிற வயதினருக்கும் உண்டான கணக்கை அட்டவணை 5 மற்றும் 6-ல் தந்துள்ளோம். நாம் தந்துள்ள ஓய்வுக் காலத் திட்டமிடலை ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப, அவர்களின் முதலீட்டுக் காலத்தை, குறைவான அல்லது அதிகமான ரிஸ்க் கொண்ட முதலீடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், நீங்கள் ஒவ்வொருவரும் பி.எஃப், பி.பி.எஃப், தங்கம், நிலம், வீடு, இன்ஷூரன்ஸ் பாலிசிகள், டெபாசிட்டுகள் என பல முதலீடுகளை உங்கள் ஓய்வுக் கால நிதிக்காக வைத்திருப்பீர்கள்.
இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டோமேயானால், நீங்கள் மாதம் முதலீடு செய்ய வேண்டிய தொகை வெகுவாகக் குறையும்.
நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் பரவாயில்லை, சம்பாதிக்கிறீர்கள் எனில், உங்கள் ஓய்வுக் கால நிதிக்காக ஒரு தொகையை அதிக வளர்ச்சியைத் தரக்கூடிய முதலீடுகளில் மறக்காமல் முதலீடு செய்யுங்கள்!
"எனக்கு பென்ஷன் பிரச்னை இல்லை!”

தனியார் நிறுவன ஊழியரின் அசத்தல் முதலீடு
கோவையைச் சேர்ந்தவர் கோவிந்தன். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர். தனியார் நிறுவனத்தில்் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தபோதும் ஓய்வு பெற்றபிறகு பென்ஷன் பணத்துக்கு எங்கே போவது என்கிற கவலையில்லாமல் இருக்கிறார். அவருடன் தொடர்புகொண்டு பேசினோம்.
‘‘கேரள மாநிலம் கண்ணூர்தான் என் சொந்த ஊர். நான் இன்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் வேலை பார்த்தேன். 14 ஆண்டுகள் வேலை பார்த்து முடித்தபின், அதிலிருந்து விலகியபோது ரூ.1.5 லட்சம் எனக்கு பி.எஃப். பணமாகக் கிடைத்தது. இந்தப் பணம் என் மகளின் திருமணத்துக்காக வேண்டும் என்பதற்காக யூ.டி.ஐ யு.எஸ் 64 என்கிற ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தேன். ஆனால், ஹர்ஷத் மேத்தா செய்த சில குளறுபடியால் அந்த ஃபண்ட் திட்டம் பெரும் பிரச்னைக்குள்ளாகி, அதன் மதிப்பு பெருமளவில் குறைந்தது. 11 ரூபாய்க்கு நான் வாங்கிய 10 ரூபாய் பங்கு, 6 ரூபாயாகக் குறைந்துவிட்டது. நான் மலைபோல நம்பியிருந்த பணம் பறிபோய் விட்டதே என்று நினைத்து நொந்து போனேன். என்றாலும், தனியார் நிறுவனத்தில் கடுமையாக உழைத்து நிலைமையைச் சமாளித்தேன். யூ.டி.ஐ-ல் நான் போட்ட பணத்தைத் திரும்ப வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
அன்றிலிருந்து என்னிடம் யாராவது மியூச்சுவல் ஃபண்ட் என்று பேசிக்கொண்டுவந்தால், தயவு செய்து வேறு ஆளைப் பார்க்கும்படி சொல்லிவிடுவேன். வங்கி டெபாசிட், அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனம், போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு ஆகியவற்றை மட்டுமே நான் நாட ஆரம்பித்தேன்.
என்றாலும் 2004-க்குப் பிறகு ஒரு யோசனை எனக்குள் உருவானது. ‘தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நமக்கு பென்ஷன் என்று ஒன்றும் இல்லையே. பென்ஷன்போல, ஒரு வருமானம் கிடைக்க என்ன செய்யலாம்’ என்று யோசித்தேன். கண்ணூரில் ஒன்றிரண்டு கடைகளை வாடகைக்கு விட்டேன். ஆனால், அதன் மூலம் கிடைத்த வருமானம் எனக்குத் திருப்திகரமாக இல்லை. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மாதாமாதம் பென்ஷன் பெறுகிற மாதிரி நாம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் கோவையில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் அட்வைஸைர் கண்ணனைச் சந்தித்தேன். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு கார்ப்பஸை உருவாக்கி, அதிலிருந்து மாதாமாதம் பென்ஷன் பெறலாம் என்றார் அவர்.

எனக்கு அதிலெல்லாம் அப்போது சுத்தமாக நம்பிக்கை இல்லை. என்றாலும் அவரை நம்பி, 2007-ல் முதலில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தேன். நான் போட்ட பணம் வேகமாக வளர ஆரம்பித்தது. முதலில் என் ஓய்வுக் கால கார்ப்பஸ் தொகையாக ரூ.25 லட்சமாக இருந்தால் போதும் என்று நினைத்து, அதை இலக்காக வைத்து முதலீடு செய்யத் தொடங்கினேன். அந்த இலக்கினைத் தொட்டதும் ரூ.50 லட்சமாக அதை உயர்த்தினார் கண்ணன். பிற்பாடு அதை ரூ.1 கோடியாக மாற்றினார்.
இன்றைக்கு ரூ.1 கோடி என்கிற இலக்கையும் எட்டிவிட்டேன். இதிலிருந்து 50 சதவிகிதத்தை எடுத்து, பேலன்ஸ்டு ஃபண்டில் போட்டிருக்கிறேன். இதிலிருந்து எனக்குத் தேவையான தொகை பென்ஷன் போல தற்போது வந்துகொண்டிருக்கிறது. மீதமுள்ள முதலீட்டுப் பணத்தை அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். இன்னும் சில ஆண்டுகள் கழித்து இதிலிருந்து மாதாமாதம் குறிப்பிட்ட அளவு பணத்தை சிஸ்டமேட்டிக் வித்ட்ரால் திட்டத்தின் மூலம் திரும்பப் பெறப் போகிறேன்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலமாக நான் அடைந்த லாபத்தைப் பார்த்து எனக்கு அதன் மீது முழு நம்பிக்கை வந்துவிட்டது. மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலத்தில் முதலீடு செய்வதன் மூலம் 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று சொன்னால், கேரளாவில் உள்ள வங்கி மேலாளர்கள் உள்பட யாரும் நம்புகிற மாதிரி இல்லை. அவர்களுக்கு என் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை எடுத்துக் காட்டியபோது அவர்கள் அதிசயித்துப் போனார்கள்.
இன்றைக்கு எனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் அருமையைச் சொல்கிறேன். ஒரு நல்ல நிதி ஆலோசகரின் உதவியுடன் மியூச்சுவல் ஃபண்டில் எல்லோரும் முதலீடு செய்யத் தொடங்குவது அவசியம்.
குறிப்பாக, இளைஞர்கள் சம்பாதிக்கத் தொடங்கியவுடனே மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்தால், ஓய்வுக் காலத்தில் என்னைப் போல பென்ஷன் பற்றிய கவலையே இல்லாமல் இருக்கலாம். எந்தா, யான் பறைஞ்சது சரியானோ?’’ என்று கேட்டு விட்டுச் சிரிக்கிறார் கோவிந்தன்.
-ஏ.ஆர்.குமார்