
செல்லமுத்து குப்புசாமி
மாட்டுச் சந்தைக்குப் போன அனுபவம் உள்ளதா உங்களுக்கு? இல்லையேல் குறைந்தபட்சம் சினிமாவிலாவது பார்த்திருப்பீர்கள். மாடு விற்பவரும், வாங்குகிறவரும் ஒரு துண்டைப் போட்டு அதற்குக் கீழே விரல்களைப் பிடித்து விலை பேசுவார்கள். என்ன விலைக்கு மாட்டை விலை பேசுகிறார்கள் என்ற விவரம் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கவே அந்த ஏற்பாடு. சில புராஜெக்ட்களை முடிவு செய்யும் போது அரசாங்கம் டெண்டர் கோரும். அதில் எந்த நிறுவனம் எந்த விலைக்குக் கேட்கிறது என்ற விவரம் வெளிப்படையாகத் தெரியாது.
இதற்கு நேரெதிரானவை ஏலம் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள். யார் உரத்தக் குரலில் அதிகபட்ச விலையைக் கேட்கிறார்களோ, அவர்களுக்குப் பொருள் கிடைக்கும். ஒருவர் நூறு ரூபாய்க்குக் கேட்கும் பொருளை நாம் 101 ரூபாய்க்குக் கேட்கலாம். துண்டுக்கு அடியில் விரலைப் பிடித்து 300 ரூபாய்க்கு விலை வைக்க வேண்டிய சிக்கல் கிடையாது. ஏலத்தின் சிறப்பே இதுதான்.
ஷேர் மார்க்கெட் டெண்டர் முறையில் இயங்குவதில்லை. ஏலம் மூலம் நடக்கிறது. ஷேர் மார்க்கெட் என்பது மிகப் பெரிய கம்ப்யூட்டர் சர்வர் என்று கடந்த இதழில் பேசினோம். அந்த சர்வர்தான் ஏலம் நடக்கும் மெய்நிகர் திடல்.

குறிப்பிட்ட ஒரு கம்பெனியின் பெயரைத் தட்டினாலே, அது தொடர்பான விலைகள் (Quote) எல்லாவற்றையும் நம் முன்னால் கொட்டிவிடும். உதாரணத்துக்கு, நேற்று ஒரு பங்கு கடைசியாக என்ன விலைக்கு விற்றது (Previous day close), இன்றைய தினம் தொடங்கியபோது என்ன விலைக்கு வியாபாரம் ஆனது (Day open), இன்று அதிகபட்சமாக என்ன விலைக்கு விற்றது (Day high), குறைந்தபட்சமாக என்ன விலைக்கு விற்றது (Day low), இன்று இதுவரைக்கும் எவ்வளவு ஷேர்கள் விற்றுள்ளன (Day volume), கடைசியாக விற்பனையான விலையும் நேரமும் (Last traded price and time), கடந்த ஒரு வருடத்தில் குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் அதிகபட்ச விலை (52 week high), குறைந்தபட்ச விலை (52 week low), அதன் வாழ்நாள் உச்சம் (Life time high), வாழ்நாளின் குறைந்தபட்ச விலை (Life time low) எனச் சகல விஷயங்களையும் ஒரே க்ளிக்கில் காணலாம்.
இவற்றையெல்லாம்விட முக்கியமானது, தற்போது வாங்க விரும்பினால் என்ன விலைக்கு வாங்க இயலும் (Best offer price), அந்த விலைக்கு எத்தனை ஷேர்கள் கிடைக்கும் (Best offer quantity), விற்க விரும்பினால் என்ன விலைக்கு வாங்கத் தயாராக இருக்கிறார்கள் (Best bid price), எத்தனை ஷேர்களை வாங்க விரும்புகிறார்கள் (Best bid quantity) என்ற விவரம். இதன் தொடர்ச்சியாக நாம் கவனிக்க வேண்டியது BEST 5 BIDS & OFFERS என்ற தகவல். உதாரணத்துக்கு, ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (SAIL) நிறுவனத்தின் BEST 5 BIDS & OFFERS-யைப் பாருங்கள்.

நீங்கள் 200 ஷேர்களை (அல்லது 200-க்குக் குறைவாக) விற்க விரும்பினால், ரூ.58.65-க்கு வாங்க ஆளிருக்கிறது. 500 ஷேர்களை விற்க விரும்பினால், ரூ.58.65-க்கு 200-ம், ரூ.58.60-க்கு 300-ம் விற்கலாம். ஒருவேளை, நாம் 200 ஷேர்களை வாங்க விரும்பினால், ரூ.58.80-க்கு 150-ம், ரூ.58.85-க்கு 50-ம், ரூ.58.90-க்கு 10-ம் வாங்கலாம்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், நாம் ஷேர்களை வாங்கவோ, விற்கவோ விழையும்போது இரண்டு வகையில் ஆர்டரை உள்ளிடலாம். ஒன்று, மார்க்கெட் விலை. இன்னொன்று, லிமிட் விலை. இதில் லிமிட் விலை என்னவென்று முதலில் பார்த்துவிடலாம்.
நம்மிடம் ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 100 பங்குகள் உள்ளதாகக் கருதுவோம். அதை விற்க விரும்புகிறோம். யாரோ ஒருவர் 140 ஷேர்களை ரூ.58.80-க்கு விற்க விரும்புகிறார் என்பதை BEST 5 BIDS & OFFERS-ல் பார்க்கிறோம். அதைவிடக் குறைவாக நாம் விலை சொன்னால், அவரது 140 ஷேர்கள் விற்பதற்குள் நம்முடைய 100 ஷேர்கள் விற்றுவிடும். எனவே, நாம் ரூ.58.75 லிமிட் விலை என்று ஆர்டர் போடலாம். அந்த 140 ஷேர்கள் விற்பதற்குள் நம்முடையது விற்றுவிடும். ஆனால், அதற்குள் யாராவது 57 ரூபாய்க்கு 10,000 ஷேர்களை விற்கும் ஆர்டர் போட்டால் அவருடைய 10,000 ஷேர்களும் விற்ற பிறகுதான் நம்முடையது விற்கும்.

‘‘BEST 5 BIDS & OFFERS-ல் ரூ.58.80-க்கு யாரோ ஒருவர் விற்கிறார். நான் எதற்கு அதைவிடக் குறைவாக விலை சொல்ல வேண்டும். ரூ.60-க்கு வந்தால் விற்கலாம். எப்படியும் விலை ஏறி வரும். ரூ.60-க்கு லிமிட் விலையில் ஆர்டர் போட்டு வைக்கலாம். விற்றால் லாபம். விற்காவிட்டால் இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடலாம்.”
விற்பதைப் போலத்தான் வாங்குவதும். ரூ.58.65-க்கு வாங்கத் தயாராக ஆளிருக்கிறது. நாம் ரூ.58.70-க்கு ஆர்டர் போட்டால் அவருக்குமுன் நமக்கு ஷேர் கிடைத்துவிடும். இல்லையென்றால் ரூ.55-க்கு ஆர்டர் போட்டு வைத்து விலை இறங்கும் வரை காத்திருக்கலாம்.
லிமிட் விலை இப்படியென்றால், மார்க்கெட் விலையில் இந்தப் பிரச்னை எல்லாம் இல்லை. நாம் விற்கிறோமென்றால், அந்தக் கணத்தில் யார் அதிகபட்ச விலைக்குக் கேட்கிறார்களோ, அந்த விலைக்கு விற்றுவிடும். நாம் வாங்கும்போதும் offer price-ல் யார் குறைந்தபட்ச விலைக்குத் தருகிறார்களோ, அவர்கள் சொல்லும் விலைக்கு கம்ப்யூட்டர் வாங்கிவிடும். அதிக எண்ணிக்கையில் வியாபாரம் நடக்கும் ஷேர்களில் லிமிட் விலைக்கும், மார்க்கெட் விலைக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் கிடையாது.
பங்குச் சந்தை எப்போதும் ஒரே மாதிரியான நடத்தையை வெளிக்காட்டுவதில்லை. சாதுவாக இருக்கும். திடீரென்று கோரத் தாண்டவம் ஆடிவிடும். உதாரணத்துக்கு, ஒரு கம்பெனியின் ஷேர் ரூ.100-க்கு விற்பனையாகிறது. BEST 5 BIDS & OFFERS எல்லாம் பார்த்தால் பெரிய எண்ணிக்கையில் வர்த்தகம் நடப்பதாகத் தெரிகிறது. அதனால் உங்களிடமிருக்கும் ஷேரை மார்க்கெட் விலைக்கு விற்குமாறு ஆர்டர் போடுகிறீர்கள்.
நீங்கள் போட்ட ஆர்டர் நடந்தேறுவதற்குள் ஒரு செய்தி வருகிறது. அந்த நிறுவனத்தின் ஆலையில் பெரும் விபத்து என்றும், அதனால் பல நூறு கோடிகள் நஷ்டம் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. அந்தச் செய்தியின் காரணமாக அதன் ஷேர்களை வாங்குவதற்கு யாரும் புதிய ஆர்டர்களைப் போடாமல் போகலாம். BEST 5 BIDS-ல் விலைகள் தாறுமாறாகக் குறையலாம். சிலர் வந்தால் வரட்டும் என ரூ.90, ரூ.85, ரூ.80 என்று கைக்கு வந்த விலைக்கு விற்கலாம். அப்போது மார்க்கெட் விலையில் நீங்கள் போடும் ஆர்டர் ரூ.85-க்கு விற்க நேரிடலாம்.
மார்க்கெட் விலையில் ஆர்டர் போடுவதில் உள்ள சிக்கல் இதுதான். என்றாலும், இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள ஒரு வழி உண்டு.
(லாபம் சம்பாதிப்போம்)